விவேகானந்தர் இல்லம்
விவேகானந்தர் இல்லம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ளது. இதன் பழைய பெயர் "ஐஸ் ஹவுஸ்" (Ice House) என்றாலும், தற்போதும் இப்பெயர் பொது வழக்கில் உள்ளது. இந்த இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். இப்போது இது தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.
கட்டிடம்
[தொகு]அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த தியூடர் ஐஸ் கம்பெனியின் நிறுவனரான பிரடெரிக் தியூடர் என்பவரால் 1842ல் கட்டப்பட்டது. அப்போது சென்னையில் இருந்த வெளிநாட்டவரின் தேவைக்காக "தியூடர் ஐஸ்' கம்பெனியில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட பனிக்கட்டிகளை சேமிக்கும் கிடங்காக இக்கட்டிடம் பயன்படுத்தப் பட்டது. அந்த வகையில் தான் "ஐஸ் ஹவுஸ்' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் பனிக்கட்டி தயாரிப்பது இந்தியாவிலேயே தொடங்கிய பின்னர் இந்த கட்டிடத்தை பிலிகிரி ஐயங்காருக்கு தியூடர் ஐஸ் நிறுவனம் விற்றுவிட்டது. பிலிகிரி ஐயங்கார் இந்த கட்டிடத்தை, ஏழைகள் மற்றும் கல்வியறிவில் பின்தங்கியவர்களுக்கான கருணை இல்லமாக பயன்படுத்தி வந்தார். இக்கட்டிடம் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது.
விவேகானந்தரின் வருகை
[தொகு]சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் வரலாற்று புகழ்மிக்க சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு தாயகம் திரும்பியவர் 1897ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தக் கட்டிடத்தில் தங்கியிருந்தார். இங்கு தங்கியிருந்த போது அவர் புகழ் பெற்ற ஒன்பது சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அப்போது, சுவாமி விவேகானந்தரிடம் சென்னையில் ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் ஒன்றினை தொடங்கிட வேண்டுகோள் வைக்கப்பட்டது. கொல்கத்தா திரும்பிய சுவாமி விவேகானந்தர், அங்கு ராமகிருஷ்ணர் மடத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தரை இங்கு அனுப்பிவைத்தார். சசிமகராஜ் என்றழைக்கப்பட்ட சுவாமி இராமகிருஷ்ணானந்தரின் தலைமையில் இந்த கட்டிடம் தென் இந்தியாவின் முதலாவது ராமகிருஷ்ணர் மடமாக செயல்படத் துவங்கியது.
இல்லத்தின் வரலாறு
[தொகு]1897-ஆம் ஆண்டு முதல் 1906 வரையில் சுமார் 10 ஆண்டுகள், இந்தக் கட்டிடத்தில்தான் ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தது. இக்காலகட்டத்தில் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் சீடர்களான சுவாமி நிரஞ்சனானந்தர், சுவாமி திரிகுணாதீதானந்தர், சுவாமி அபேதானந்தர் ஆகியவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தின் மூத்தத் துறவிகளான மகான்கள் பலர் இங்கு வந்திருக்கிறார்கள். சகோதரி நிவேதிதாவும் இங்கு வந்திருக்கிறார்.
1902இல் விவேகானந்தர் மகாசமாதி அடைந்த பின்னர், 1903இல் அவருக்கு முதன் முதலில் இக்கட்டிடத்தில் பிறந்தநாள் ஜயந்தி கொண்டாடப் பட்டது. 1906இல், இக்கட்டிடம் ஏலத்திற்கு வர, அதனை ஜமீன்தார் ஒருவர் வாங்கி விடுகிறார். சுவாமி ராமகிருஷ்ணானந்தர் சிலகாலம் இக்கட்டிடத்தின் அவுட்ஹவுசில் தங்கி இருந்தார். பின்னர் இராமகிருஷ்ண மடம் மயிலையில் தற்போதுள்ள தலைமை இடத்திற்கு மாற்றப்பட்டது.
பிற்காலத்தில் சாரதா வித்யாலயாவின் முன்னோடியாம் சகோதரி சுப்புலக்ஷ்மி இக்கட்டிடத்தில் விதவைப் பெண்களுக்கான விடுதி ஒன்றை துவக்கினார். 1917இல், இக்கட்டிடம் அரசால் வாங்கப்பட்டது என்றாலும், 1922 வரை இக்கட்டிடம் பெண்களுக்கான இல்லமாக செயல்பட்டு வந்தது.
1922 முதல் 1941 வரை ஆசிரியர்கள் விடுதியாகவும், 1941 முதல் 1993 வரை ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கும் விடுதியாகவும் செயல்பட்டு வந்தது.
1963இல், விவேகானந்தரின் பிறந்தநாள் நூற்றாண்டு விமர்சையாக சென்னையில் கொண்டாடப்பட்டது. அப்போது நடந்த விழாவில், அப்போதைய தமிழக நிதி அமைச்சரான பக்தவச்சலம் அவர்கள், இவ்வில்லத்திற்கு 'விவேகனந்தர் இல்லம்' எனப் பெயர் சூட்ட அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
1964 ஜூலை 12இல், இக்கட்டிடத்தின் முன் பகுதியில், பத்து அடி உயர விவேகானந்தரின் வெண்கல உருவச்சிலை, அப்போதைய குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
2012 இல் இதற்கு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் குத்தகைக்காலம் 99 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.[1]
தற்போதைய இல்லம்
[தொகு]தற்போது இக்கட்டிடம் விவேகானந்தர் நினைவிடமாக செய்லபடுகிறது. இந்த கட்டிடத்தின் மூன்று தளங்களுமே சுவாமி விவேகானந்தரின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் உள்ளது. அடித்தளம் இந்த கட்டிடம் ஐஸ் ஹவுசில் இருந்து விவேகானந்தர் இல்லமாக மாறிய வரையிலான கதையைச் சொல்கிறது. முதல் தளம் இந்திய கலாச்சாரத்தை விவரிக்கிறது. இரண்டாவது தளம் விவேகானந்தரின் புகைப்படக்கண்காட்சி இடம் பெற்றுள்ளது விவேகானந்தர் தங்கியிருந்த அறை தியான மண்டபமாக விளங்குகிறது. புத்தக விற்பனை நிலையம் உள்ளது. இப்போது இங்கு புதிய வரவாக இந்தியாவிலே முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள பார்க்க பரவசமூட்டும் முப்பரிமாண (3டி) காட்சிக்கூடம் உள்ளது. இதே போல முப்பரிமாண கண்ணாடிகூடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
மிக சுத்தமான பராமரிப்பு, புன்னகை தவழ உதவும் தொண்டர்கள், அமைதியான சூழல், அற்புதமான புகைப்படங்கள் மற்றும் ஒவியங்களுடன் ஒரு அரிய காலப்பெட்டகமாகவும், விவேகானந்தரின் முழுப்பரிமாணத்தையும் காட்டும் இந்த விவேகானந்தர் இல்லம் அனைவரும் பார்க்கவேண்டிய இடமாகும்.
கலாச்சார (பண்பாட்டு) மையம்
[தொகு]விவேகானந்தர் இல்லத்தின் அருகில் இருந்த இடத்தில் கட்டப்பட்ட ’விவேகானந்தர் பண்பாட்டு மையம்’ (VCC) தமிழக முதல்வரால் ஜூலை 8, 2014 இல் திறந்து வைக்கப்பட்டது. இந்த பண்பாட்டு மையத்தில் யோகா வகுப்புகள் ஆண்களுக்கு திங்களிலிருந்து வெள்ளி வரையிலும், பெண்களுக்கு சனி,ஞாயிறு கிழமைகளிலும் அதிகாலை 6.30 am – 7.30 am அளவில் ஆகஸ்டு 10, 2014 லிருந்து ஆரம்பிக்கப்பட உள்ளன.[2]
இதையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-04. பார்க்கப்பட்ட நாள் 2014-07-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-22. பார்க்கப்பட்ட நாள் 2014-07-27.