பதினைந்தாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)
பதினைந்தாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்) கௌரவர், பாண்டவர் ஆகியவர்களின் படைக்கலப் பயிற்றுனர், போர்க் கலையின் குரு துரோணரின் மரணம் குறித்த தகவல்களையும், போரில் வெற்றியை நிலைநாட்டக் கிருட்டிணன் செய்த சூழ்ச்சிகளையும் விவரிக்கிறது.[1]
கிருட்டிணனின் சதி
[தொகு]பதினான்காம் நாள் போரின் முடிவில் ஜயத்திரதன் கொல்லப்பட்டதும் பாண்டவர் போர்விதியை மீறியதாகக் கோபங்கொண்டு சூரியன் மறைவிற்குப் பிறகும் போரைத் தொடரும்படி படைகளுக்குக் கட்டளையிட்டார். துரோணரின் உக்கிரமான போரினால் சோர்ந்து போயிருந்த பாண்டவர் படையினர் துரோணரை வீழ்த்த ஆழ்ந்த யோசனையிலிருந்தனர். துரோணரை தோற்கடித்தால் மட்டுமே கௌரவப்படையை வெல்ல முடியும்,துரோணரின் பலமே அவரது மகன் அசுவத்தாமன் தான். அவன் மீது அதீதமான பாசம் வைத்திருந்தார். அந்தப் பாசத்தை அவரிடமிருந்து பிரித்தால் அவரை வீழ்த்துவது எளிது என முடிவு செய்து அசுவத்தாமன் இறந்து விட்டான் என்று பாண்டவர்களைச் சொல்ல வைத்தார் கிருட்டிணன். துரோணர் இதை நம்ப மறுத்தார். உத்தமர் யதிஷ்டிரனைப் பார்த்து இது உண்மையா? என்று கேட்டார். யுதிஷ்டிரன் கிருட்டிணனைப் பார்த்தார். தருமர்|தருமரின்]] எண்ண ஓட்டத்தை அறிந்த கிருட்டிணன் புன்னகை புரிந்தார். துரோணருக்கு விடுதலை தருவதாகிய நன்மைக்குப் பொய் சொல்வதில் தவறில்லை எனப் பலவித நியாயங்களைத் தருமனுக்கு போதித்தார். கனத்த மனதுடன் "அஸ்வத்தாமா ஹதா குஞ்சரகா" என்று சொல்லும்போது குஞ்சரகா என்ற கடைசி வார்த்தையைத் துரோணரின் காதில் விழாதவாறு கிருட்டிணன் தனது சங்கை எடுத்து ஊதினார். "அஸ்வத்தாமா ஹதா" என்ற சொல் மட்டும் துரோணரின் காதில் விழுந்தது [2] கிருட்டிணனின் ஆணைப்படி பீமன் அசுவத்தாமன் என்ற யானையைக் கொன்றிருந்தான், கிருட்டிணனின் அந்த சதி நல்ல பலன் தந்தது, துரோணர் சோர்ந்து போய்த் தேரைவிட்டுக் கீழே இறங்கி ஆயுதத்தைப் போட்டுவிட்டு இறக்கத் தயாரான மாதிரித் தரையில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கிவிட்டார்.[1]
துரோணர் மரணம்
[தொகு]தரையில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருந்த துரோணரைக் கொன்றுவிடு எனக் கூறினார் கிருட்டிணன்,ஆனால் அருச்சுனன் "அவர் எனது ஆசான், ஒரு பிராமணர், அவரைக் கொல்வது மிகக் கொடியசெயல்"(பிரமஹத்தி தோசம்)என்றான்."அவர் ஒரு பிராமணரின் மகனாகப் பிறந்தார், அவ்வளவுதான். அவர் சுகபோக வாழ்க்கைக்கும், அதிகாரத்துக்காகவும், பழி தீர்த்துக் கொள்வதற்கும் ஒரு சத்திரியனாகவே வாழ்ந்தார். அவர் போர்க்களத்தில் ஒரு சத்திரியன் போன்றே சாகட்டும்" என்று கிருட்டிணன் கூறினார். ஆனால் பாண்டவர் படைத்தளபதிகளில் ஒருவரான துருபதனின் மகன் திருஷ்டத்யும்னன் தனது வாளால் ஒரே வீச்சில் துரோணரின் தலையை வெட்டி எடுத்தான். ஆயுதத்தை கீழே போட்டுவிட்ட தனது தந்தையின் தலை வெட்டப்படுவதைக் கண்ட அசுவத்தாமன் அதிர்ந்து போய்த் தன்னிடமிருந்த நாராயண ஆயுதத்தை (நாராயண அஸ்திரம்) எடுத்து எய்தான், அந்த ஆயுதம் "நம் அனைவரையும் அழித்துவிடும்" என்று அலறினார் தருமர். கிருட்டிணன் பாண்டவரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்,அந்த ஆயுதத்தை எதிர்க்காமல் உங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுத் தேரிலிருந்து கீழே இறங்கி அதை வணங்கினால் ஒன்றும் செய்யாது என்றார். பீமனைத் தவிர அனைவரும் அப்படியே செய்தனர். பீமன் துரோணரின் மகனை நோக்கித் தனது தேரைச் செலுத்தினான், தனது கதையை வேகமாகச் சுழற்றினான், நாராயண ஆயுதம் அவனை சூழ்ந்து கொள்ள அருச்சுனனும்,கிருட்டிணனும் பீமனை வலுக்கட்டாயமாகத் தேரிலிருந்து கீழே இறக்கி, ஆயுதங்களைக் கீழே போட வைத்து அவனைக் காப்பாற்றினர்.[1]