யயாதி

யயாதி (ஆங்கிலம்: Yayati; சமஸ்கிருதம்: ययाति) அத்தினாபுரத்தை தலைநகராக கொண்டு குரு நாட்டை ஆண்ட மன்னன். இவன் சந்திர குல அரசன். இவனது தந்தை நகுசன், நூறு அசுவமேத வேள்விகளை செய்து முடித்தமையால் தேவ உலக இந்திர பதவியை அடைந்தவன். யயாதியின் கதை மகாபாரதம்,[1] பாகவத புராணம் மற்றும் பதினெண் புராணங்களில் மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.[2][3]
யயாதிக்கும்-தேவயானிக்கும் பிறந்த மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்கள் என்றும்; இரண்டாவது மகன் துர்வசுவின் வழித்தோன்றல்கள் சேர, சோழ, பாண்டியர்கள்[4][5], மேலும் இவர்களின் ஒரு கிளையினர் ஒழுக்கங்குன்றி அரேபிய தேசம் அடைந்து யவனர்கள்[6] ஆயினர் என்றும்; யயாதி-சர்மித்தைக்கு பிறந்த மூன்றாவது மகன் திரஹ்யுவின் வழித்தோன்றல்கள் போஜர்கள் என்றும், நான்காவது மகன், அனுவின் வழித்தோன்றல்கள் மிலேச்சர்கள் என்றும், ஐந்தாவது மகன் புருவின் வழித்தோன்றல்கள் பௌரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.[7]
கதையின் உள்ளடக்கம்
[தொகு]

அசுர மன்னரின் குருவான சுக்கிராச்சாரியின் மகள் தேவயானியை யயாதி திருமணம் செய்து கொள்கிறான். யயாதி -தேவயானி மூலம் யது, துர்வசு என இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கிறது.
அசுர மன்னன் விருசபர்வன் மகளும் தேவயானியின் நெருங்கிய தோழியும் சர்மிஷ்டையை யயாதி இரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான். சர்மித்தைக்கு யயாதி மூலமாக துருயு, அனு மற்றும் புரு எனும் மூன்று ஆண் குழந்தைகள் பிறக்கின்றனர்.
இச்செய்தி கேட்ட தேவயானி, யயாதி மீது கடும் கோபம் கொண்டு , தன் தந்தையும் அசுர குருவான சுக்கிராச்சாரியிடம் தனக்கு தன் கணவன் யயாதி இழைத்த அநீதி குறித்து முறையிட்டாள். செய்தி அறிந்த சுக்கிராச்சாரி, தன் மகள் மீது கொண்ட அதிக அன்பின் காரணமாக, மன்னன் யயாதிக்கு கிழட்டுத்தன்மை அடைய சாபமிட்டார். யயாதியும் அடுத்த நொடியிலே இளமை நீங்கி கிழட்டுத் தன்மை அடைந்தான். கிழட்டுத்தன்மை அடைந்த யயாதி தனது மாமனாரும், அசுர குருவும் ஆன சுக்கிராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்டு, தான் அடைந்த கிழட்டுத் தன்மை நீங்க வழி கேட்டான். அதற்கு அவர், உனது கிழத்தன்மையை உனது மகன்களில் ஒருவனுக்கு அளித்து அவனின் இளமையை நீ அடைவாய் என்று கூறினார்.
பின்னர் யயாதி தனது முதல் மனைவியான தேவயானியின் மூத்த மகன் யதுவிடம், தனது மூப்பை ஏற்று இளமையை கேட்டான். யது, தந்தை யயாதியின் வேண்டுகோளை மறுக்கவே, யயாதி தனது மூத்த மகன் யதுவுக்கு, இனி உனக்கும் உன் தலைமுறையினரும் அத்தினாபுரத்து அரச மணிமகுடம் சூட்டிக்கொள்ளத் தகுதி இல்லாமல் போகக்கடவது என்று சாபம் இட்டார்.
பின்னர் மற்ற மகன்களான துர்வசு, துருயு, அனு ஆகியோரும் தந்தை யயாதியின் கோரிக்கையை மறுத்து விட்டனர். இரண்டாம் மனைவி சர்மிஷ்டைக்கு பிறந்த கடைசி மகனான புரு மட்டுமே யயாதியின் முதுமையை ஏற்றுக்கொண்டு, தனது இளமையை கொடுத்தான். அடுத்த நொடியிலே யயாதி முதுமை நீங்கி இளமை அடைந்து ஆயிரம் ஆண்டுகள் தன் இரு மனைவிகளுடன் இன்பம் துய்த்தான்.
ஒரு நாள், தனக்கு இளமை வழங்கி, தன் முதுமையை ஏற்றுக் கொண்ட தனது கடைசி மகன் புருவின் நினைவு வரவே, புருவை அழைத்து, அவனின் இளமையை அவனிடமே திரும்ப அளித்து, தனது முதுமையை ஏற்றுக்கொண்டு, புருவை அத்தினாபுரத்து மன்னனாக முடி சூட்டிய பின் தனது மனைவியருடன் கானகம் ஏகி நற்றவம் செய்து தேவலோகம் அடைந்தான்.
தேவயானியின் முதல் மகனான யதுவின் வழித்தோன்றல்களே யாதவர்கள். கிருட்டிணன் இந்த யாதவ குலத்தில்தான் தோன்றினார். யதுவின் வழித்தோன்றல்கள் வடமதுரை, விதர்ப்பம், சேதி, குந்திதேசம், துவாரகை, சூரசேனதேசம், மகதம் போன்ற நாட்டை ஆண்ட சிற்றரசர்களான யாதவர்கள். கம்சன், கிருட்டிணன், பலராமர், சிசுபாலன், ஜராசந்தன், குந்தி, கிருதவர்மன், சாத்தியகி, உத்தவர் ஆகியோர் யது குலத்தில் பிறந்தவர்களில் சிலர்.
சர்மித்தையின் இளைய மகன் புருவின் வழித்தோன்றல்களே பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆவார்.
இதனையும் காண்க
[தொகு]மரபுரிமைப் பேறுகள்
[தொகு]வி. ச. காண்டேகர் என்பவர் யயாதியின் புராணக் கதையை, மராத்திய மொழியில் நாவலாக எழுதியுள்ளார். இதனை கா. ஸ்ரீ. ஸ்ரீ என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய யயாதி எனும் நாடகம்,[8] 1938ல் யயாதி திரைப்படமாக வெளியானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ யயாதி வரலாறு! | ஆதிபர்வம் - பகுதி 75
- ↑ Yayati
- ↑ Venkatesananda. The Concise Śrīmad Bhāgavataṁ. SUNY Press. pp. 227–229.
- ↑ நூல் பெயர்: அபிதான சிந்தாமணி, பக்கம் எண்: 1599. தலைப்பு: யயாதி வம்சம்.
- ↑ நூல் பெயர்: அபிதான கோசம், பகுப்பு: வம்சாவளி அட்டவணை, தலைப்பு: ஆயு-யயாதி-துர்வசு வரிசை
- ↑ நூல் பெயர்: அபிதான சிந்தாமணி, பக்கம் எண்: 1355. தலைப்பு: யவனர்.
- ↑ http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section95.html#sthash.XszVAyAE.dpuf
- ↑ https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0426.pdf
குறிப்புதவி நூல்கள்
[தொகு]- பாகவத புராணம்
- வியாசரின் மகாபாரதம்