சமீகர்
சமீகர் குரு நாட்டின் எல்லையில் உள்ள காட்டில் தனது மகன் சிருங்கியுடன் தவ வாழ்க்கை வாழ்பவர். ஒரு நாள் குரு நாட்டின் மன்னரும், அருச்சனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான பரிட்சித்து மன்னர் காட்டில் மான் வேட்டையாடி களைத்துப் போய், தாகம் கொண்டிருந்தார். அவ்வமயம் கலி யுகம் தோன்றியதால், கலி புருசன் பரிட்சித்தின் மனதில் புகுந்தார். காட்டில் குடில் அமைத்து தியானத்தில் இருந்த சமீகர் எனும் முனிவரைக் கண்டு, தாகத்திற்கு நீர் கேட்டான் பரிட்சித்து. ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்த சமீகருக்கு, மன்னர் பரிட்சித்து கூறியது காதில் விழவில்லை. எனவே ஆத்திரம் கொண்ட பரிட்சித்து இறந்த பாம்பை சமீகர் முனிவரின் கழுத்தில் இட்டுச் சென்றான்..[1]
இதனை அறிந்த சமீகரின் மகன் சிருங்கி முனிவர், சமீகரின் கழுத்தில் இறந்த பாம்பைப் போட்டுச் சென்றவன், இன்று முதல் ஏழாவது நாளில் நாகர்களின் தலைவன் தட்சகன் எனும் பாம்பு தீண்டி மாள்வான் எனச்சாபமிட்டார். இச்செய்தியை தியானத்திலிருந்து மீண்ட சமீகர், தனது மகன் சிருங்கி இட்ட சாபம் குறித்து, மன்னர் பரிட்சித்துவிடம் தெரிவித்தார்.
உடனே பரிட்சித்து தனது மகன் ஜனமேஜயனை அரச பட்டம் சூட்டி, அரியணையில் அமர வைத்தார். பின்னர் காட்டிற்குச் சென்று, சுகப் பிரம்மத்தை அணுகி, பாகவத புராணம் கேட்டான். முனிவர் சமீகரின் மகன் சிருங்கியின் சாபத்தின்படி, ஏழாவது நாளில் நாகர்களின் தலைவர் தட்சகன், பரிட்சித்தை தீண்டினான். இதனால் மரணமடைந்த பரிட்சித்து மன்னர் வைகுந்தம் அடைந்தார்.