உள்ளடக்கத்துக்குச் செல்

தியாகராஜர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தியாகராஜ சுவாமிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்

தியாகராஜ சுவாமிகள் (1767 -1848) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராவர். இவர் தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பொ.ஊ. 18ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் திருவாரூரில் ராம பக்தரான ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது புதல்வராக இவர் பிறந்தார். இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள திருவையாறில் குடியேறினர். திருவையாறில் இவர் சமஸ்கிருத மொழியில் பயிற்சி பெற்றார். இவருக்கு 8 வது வயதிலேயே உபநயனம் நடைபெற்றது. நுட்ப புத்தியும் ராம பக்தியும் கொண்ட தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார். 18 வது வயதில் தியாகராஜருக்குத் திருமணம் நடந்தது.[1][2]

இசைப்புலமை

[தொகு]

பல அபூர்வ இராகங்களில் கீர்த்தனைகளை இயற்றியிருப்பதால் அந்த இராகங்களில் சொருபங்களையும், இலக்கணங்களையும் நாம் அறிய முடிகின்றது. ஒரே இராகத்தில் பல கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். இவர் தனது தாய் மொழியான தெலுங்கில் பல கீர்த்தனைகள் அமைத்திருந்தார்.

இவருடைய இசைத் திறமையைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய அரசு மன்னரான சரபோஜி இவரைத் தமது அரசவைக்கு அழைத்து, தம்மைப் பற்றி புகழ் பாடச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆனால் தியாகராஜர் அரசவைக்கு செல்ல மறுத்து நிதிசால சுகமா என்ற கல்யாணி இராகக் கிருதியைப் பாடினார். இராம பக்தியிலேயே அவர் தம் மனதைச் செலுத்தி வந்தமையால், மனிதர்களை துதி செய்து பொருள் சம்பாதிக்க ஆசைப்படவில்லை.

ஏலநீதயராது கிருதியே தியாகராஜர் முதன் முதலில் பாடிய உருப்படியாகும். ஆரம்ப காலத்திலேயே தியாகராஜர் செய்த உருப்படிகள் அனேகமாக திவ்யநாமக்கீர்த்தனைகளாகவும், தனிச் சரணத்தை உடைய கிருதிகளாகவுமே அமைந்தன. இவை அனேகமாகத் தோத்திரங்களாகவே இருந்தன. இவர் இயற்றிய கீர்த்தனைகள் யாவும் தெலுங்கு மற்றும் வடமொழி தவிர வேறு மொழிகளில் அமையவில்லை.

அற்புதங்கள்

[தொகு]

இசை வாழ்வில் இவர் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து இராமகிருஷ்ண யதீந்திரர் என்னும் மகான் வந்து இராம நாமத்தை 96 கோடி முறை செபிக்கும் படி தியாகராஜரிடம் கூறிச் சென்றார். இவர் அச்செயலை 21 ஆண்டுகளில் செய்து முடித்தார். சராசரியாக ஒரு நாளைக்கு 125,000 முறை இராமநாமத்தைச் செபித்து வந்தார். இதனால் பல தடவைகள் இராம தரிசனத்தைப் பெறும் பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. இம் முக்கிய சந்தர்ப்பங்களில் ஏலநீதயராது (அடாணா இராகம்) கனுகொண்டினி (பிலகரி இராகம்) ஆகிய கீர்த்திகளை இயற்றினார்.

நாரத பகவான் ஒரு சந்நியாசி வேடத்தில் இவருக்குத் தரிசனமளித்து ஸ்வரார்ணம் என்ற சங்கீதக் கிரந்தத்தை கொடுத்து விட்டுப் போனார். தமக்குக் கிடைத்த அந்தக் கிரந்தத்தை ஆதாரமாகக் கொண்டு தியாகராஜர் சங்கீத இலக்கணங்கள் அமைந்த பல கிருதிகளை இயற்றினார்.

இவர் இளமையிலேயே இராம, சீதா, லக்ஷ்மண விக்கிரகங்களை வைத்துப் பூசை செய்வதும், ராம நாமத்தை செபிப்பதும் வழக்கமாக இருந்தது. இவரது குணங்களை வெறுத்த இவரது தமையனார் ஜபேசன் ஒருநாள் இரவு இவர் பூஜித்து வந்த சீதா, ராம, லக்ஷ்மண விக்கிரகங்களைத் தூக்கி காவேரி நதியில் எறிந்து விட்டார். தமது வழிபாட்டு விக்கிரகங்களைக் காணாமல் வேதனையுற்ற தியாகராஜர் அவற்றைத் தேடி அலைந்து இறுதியில் இராமபிரான் அருளால் விக்கிரகங்கள் கிடக்குமிடத்தை அறிந்து மிக்க மகிழ்ச்சியோடு அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

இவர் பல தலங்களுக்கும் யாத்திரைகள் சென்று அங்கங்கே பல கீர்த்திகளை இயற்றி வந்தார். வழியில் ஒரு தடவை இவர் திருடர்களிடம் அகப்பட்டுக்கொள்ள நேரிட்ட போது, இராம லக்ஷ்மணர்களே சேவகர்கள் வடிவில் வந்து திருடர்களை விரட்டி விட்டார்கள். இது போன்ற பல அற்புத நிகழ்ச்சிகள் இவர் வாழ்வில் நிகழ்ந்துள்ளன.

இசைப்பணிகள்

[தொகு]

இவர் சுமார் 2400 உருப்படிகள் செய்திருக்கிறார். கீர்த்தனைகளைத் தவிர பிரகலாத பக்தி விஜயம், நவுகா சரித்திரம்[3] முதலிய இசை நாடகங்களை இயற்றியுள்ளார். கனராக பஞ்சரத்தினம், நாரத பஞ்சரத்தினம், திருவொற்றியூர் பஞ்சரத்தினம், கோவூர் பஞ்சரத்தினம், சிறீரங்க பஞ்சரத்தினம், லால்குடி பஞ்சரத்தினம் ஆகிய கிருதிகளை இயற்றியுள்ளார். எல்லா கர்த்தா இராகங்களிலும் இவர் கிருதிகளை இயற்றியிருக்கின்றார். அவை அனைத்தும் பக்திப் பாடல்கள் ஆகும்.

இவரது உருப்படிகள் உள்ளத்தை உருக்கும் படியான பாவத்துடன் அமைந்திருக்கும். முதன் முதலில் சங்கதிகளை உருப்படிகளில் ஒழுங்கான முறையில் பிரயோகித்தவர் இவரே ஆவார். சங்கதிகள் மூலம் கிருதிகளை அழகு பெறச் செய்தார்.

சீடர்கள்

[தொகு]

தியாகராஜரின் பெருமை பரவத் தொடங்கியதும் அவரிடம் பாடம் கேட்கப் பல சீடர்கள் வந்தனர். இந்திய இசை வரலாற்றில் வேறெந்த இசைப் புலவருக்கும் இல்லாத அளவு இவருக்கே எண்ணிறைந்த சீடர்கள் சேர்ந்தனர். இச் சீடர்களும், இவர்களின் சீடர்களும் பிற்காலத்திலே சிறந்த இசைக் கலைஞர்களாகவும், இசைப் புலவர்களாகவும் திகழ்ந்தனர். அவ்ர்களில் முக்கியமான சிலர் பின்வருமாறு:

  1. தஞ்சாவூர் ராமராவ் (சீடர்களில் வயதில் மூத்தவர். தியாகராஜரின் அந்தரங்கச் செயலாளராகவும் இருந்தவர்.)
  2. வீணை குப்பய்யர்.
  3. வாலாஜாபேட்டை - வேங்கடரமண பாகவதர்
  4. வாலாஜாபேட்டை கிருஷ்ணபாகவதர். (வேங்கடரமண பாகவதரின் மகன்)
  5. உமையாள்புரம் கிருஷ்ணபாகவதர்.
  6. உமையாள்புரம் சுந்தரபாகவதர்.
  7. சித்தூர் ராதாகிருஷ்ணையார்.
  8. நெமம் சுப்பிரமணிய ஐயர்.
  9. கன்னையா பாகவதர்.
  10. கோவிந்த சிவன்.
  11. அமிர்தலிங்கம் பிள்ளை.

இறுதிக்காலம்

[தொகு]

வால்மீகி முனிவரே தியாகராஜராக அவதரித்தார் என்று கூறப்படுகின்றது. வால்மீகியானவர் 2400 சுலோகங்களில் இராமாயணத்தைச் செய்தார். இவர் 2400 கீர்த்தனைகளில் இராமாயணத்தை பாடியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

1845ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பிலே இவரின் மனைவி காலமானார். 1847ஆம் ஆண்டில் தமது 80 ஆவது வயதில் தியாகராஜர் காலமானார். அவர் சித்திநிலை எய்துவதற்கு முன் வந்த தசமி இரவில் இன்னும் 10 நாட்களில் இறைவனின் பாதார விந்தத்தைச் சேருவதாகக் கனவு கண்டார். இதனை அச்சமயத்தில் இயற்றிய கிரிபை நெல எனும் சகானா இராக கிருதியில் விவரித்துள்ளார். இவரின் பூதவுடலானது அவர்தம் சீடர்களால் தக்க மரியாதைகளுடன் காவேரி ஆற்றங்கரையில் அவரது குருவின் (சொண்டி வெங்கட ரமணய்யர்) சமாதிக்கருகில் தகனம் செய்யப்பட்டது.

தியாகராஜ சுவாமிகளின் சமாதி திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி இவருக்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர்.

மரபுரிமை பேறுகள்

[தொகு]
  • ஆண்டு தோறும் தியாகராஜர் பிறந்த நாளில் திருவையாற்றில் அனைத்து கர்நாடக இசைக் கலைஞர்கள் கூடி, தியாகராஜருக்கு ஆராதனை செய்வர்.[4][5][6]
  • தியாகராஜர் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து தெலுங்கு மொழி திரைப்படம் 1981ல் வெளிவந்துள்ளது.[7]
  • திருவாரூர் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சங்கீத மும்மூர்த்திகளின் விழாவின் போது, தியாகராஜ சுவாமிகளும் சிறப்பிக்கப்படுகிறார்.[8]

தியாகராஜர் கையாண்ட அபூர்வ இராகங்கள்

[தொகு]
  1. சிறீமணி (2)
  2. ரசாளி (4)
  3. மனோரஞ்சனி (5)
  4. தேச்யதோடி (8)
  5. சுத்தசீமந்தினி (8)
  6. கண்டா (8)
  7. வர்த்தனி (9)
  8. கலகண்டி (13)
  9. கலகடா (13)
  10. ஜூஜாஹூளி (13)
  11. வசந்த பைரவி (14)
  12. ஆகிரி (14)
  13. சிந்துராமக்கிரியா (15)
  14. குர்ஜரி (15)
  15. ரேவகுப்தி (15)
  16. குண்டக்கிரியா (15)
  17. கௌரி (15)
  18. கௌளிபந்து (15)
  19. பிந்துமாலினி (15)
  20. கலாவதி (16)
  21. வேகவாகினி (16)
  22. சுப்ரதீபம் (17)
  23. பைரவி (17)
  24. பூர்ணலலித (19)
  25. சுத்ததேசி (20)
  26. ஜிங்களா (20)
  27. ஹிந்தோளவசந்தம் (20)
  28. மார்க்கஹிந்தோளம் (20)
  29. ஜயந்தசிறீ (20)
  30. வசந்தவராளி (20)
  31. அமிர்தவாஹினி (20)
  32. கோகிலவராளி (20)
  33. உதயரவிச்சந்திரிக்கா (20)
  34. கிரணாவளி (21)
  35. சித்தரஞ்சனி (22)
  36. ஆபேரி (22)
  37. தேவாம்ருதவர்ஷினி (22)
  38. சாலகபைரவி (22)
  39. கன்னடகௌளை (22)
  40. ருத்ரப்பிரியா (22)
  41. நாயகி (22)
  42. உசேனி (22)
  43. மனோகரி (22)
  44. தேவமனோகரி (22)
  45. ஜெயமனோகரி (22)
  46. மஞ்சரி (22)
  47. பலமஞ்சரி (22)
  48. ஜெயந்தசேனா (22)
  49. சுத்தபங்காள (22)
  50. கலாநிதி (22)
  51. ஜெயநாராயணி (22)
  52. சுபூஷணி (22)
  53. வீரவசந்தம் (24)
  54. கமலாமனோகரி (27)
  55. சிம்மவாகினி (27)
  56. நளினகாந்தி(27)
  57. கர்னாடக பியாக் (28)
  58. நாராயணகௌளை (28)
  59. சிந்துகன்னடம் (28)
  60. சாமா (28)
  61. பலஹம்ச (28)
  62. குந்தளவராளி (28)
  63. சரஸ்வதிமனோகரி (28)
  64. உமாபரணம் (28)
  65. ஈசமனோகரி (28)
  66. ஆந்தாளி (28)
  67. ஆந்தோளிகா (28)
  68. நவரசகன்னடம் (28)
  69. நாராயணி (28)
  70. காபிநாராயணி (28)
  71. சாயாதரங்கிணி (28)
  72. பங்காள (28)
  73. பகுதாரி (28)
  74. கோகிலத்வனி (28)
  75. சுராவளி (28)
  76. நாகஸ்வராளி (28)
  77. ராகபஞ்சரம் (28)
  78. மாளவி (28)
  79. சுபோஷிணி (28)
  80. ரவிச்சந்திரிகா (28)
  81. பிரதாபவராளி (28)
  82. ஜஞ்ஜோடி (28)
  83. கருடத்வனி (28)
  84. டக்கா (29)
  85. கன்னடா (29)
  86. கோலாகலம் (29)
  87. பூரணசந்திரிகா (29)
  88. ஜனரஞ்சனி (29)
  89. விவர்த்தனி (29)
  90. சாயாநாட்டை (34)
  91. கானவாரிதி (35)
  92. விஜயசிறீ (39)
  93. நபோமணி(40)
  94. சந்திரஜோதி (41)
  95. தீவிரவாஹினி (46)
  96. துந்துபிப்பிரியா (48)
  97. மந்தாரி (50)
  98. தீபகம் (51)
  99. ரமாமனோகரி (52)
  100. பூர்விகல்யாணி (53)
  101. விஜயவசந்தம் (54)
  102. ரஞ்சனி (59)
  103. கைகவசி (60)
  104. ஹம்சநாதம் (60)
  105. சுருதிரஞ்சனி (61)
  106. பூஷாவளி (64)
  107. சரஸ்வதி (64)
  108. யமுனாகல்யாணி (65)
  109. அமீர்கல்யாணி (65)

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகராஜர்&oldid=4037107" இலிருந்து மீள்விக்கப்பட்டது