உள்ளடக்கத்துக்குச் செல்

கூர்ம அவதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிருந்தாவனம் கோயிலில் உள்ள ஒரு தூணில் காணப்படும் கூர்ம உருவச் செதுக்கல்

கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி விஷ்ணு எடுத்த இரண்டாவது அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).

சமுத்திர மந்தனம் என்பது தேவர்களாலும், அசுரர்களாலும் பாற்கடல் கடையப்பட்ட நிகழ்வாகும். அசுரரும் தேவரும் மேரு மலையை மத்தாக வைத்து, வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு, திருப்பாற்கடலைக் கடைகையில், விஷ்ணு, ஆமை உரு எடுத்து மேரு மலைக்கு பிடிமானமாக இருந்தார். இந்தக் காட்சி, பல வைணவக் கோயில்களின் மேற்கூரைகளில் சுவர் சிற்பங்களாகவோ, ஓவியங்களாவோ உள்ளது.[1][2] கூர்ம அவதாரத்தைப் பற்றிய மிகவும் பழமையான குறிப்பு (யசுர் வேதத்தில்) சதபத பிராமணம் எனும் நூலில் காணப்படுகிறது. இந்து புராணங்களில் கூறப்படுவது போல, பாற்கடலை, மேரு மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி கடைந்த போது, வெளிப்பட்ட அமுதத்துடன், வெளிவந்த நச்சு, அமுதத்தில் கலந்து விடாமல் இருப்பதற்காக, சிவன் அதை எடுத்துப் பருகியதாகவும், பார்வதி தேவி அதைத் தடுக்கும் பொருட்டு சிவனின் கழுத்தில் அழுத்த, விடமானது, அத்தோடு நின்று விட்டதாகவும், அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு. இந்து புராணங்களின் படி, கூர்ம அவதாரமானது, தொடர்ச்சியாக 'மோகினி அவதாரம்' எடுத்து அரக்கர்களை மயக்கியதாகவும் கதை உண்டு. அமிர்தத்தை தேவர்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்தற்காகவும், அசுரர்களுக்கு இறப்பில்லாத் தன்மை கிடைத்தால் அது ஆபத்தானதாகி விடும் என்பதாலும், அதை அசுரர்களுக்குக் கொடுக்காமல் இருப்பதற்காக, விஷ்ணு, 'மோகினி அவதாரம்' எடுத்து அசுரர்களை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.[3][4]

விவரிப்பு

[தொகு]
கூர்ம அவதாரமும் மேரு மலையும்
இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் சியர்சோல் ராஜ்பரியின் பித்தளை தேரில் குர்மா அவதார்

கூர்ம அவதாரம் பற்றிய முழுமையான தகவல்கள் வேத கால நூல்களில் யசுர் வேதத்தின் பகுதியான சதபத பிராமணம் என்பதில் காணப்படுகிறது.[5][6][7][8][7] கூர்ம அவதாரம் மற்றும் மச்ச அவதாரம் ஆகிய இரண்டு அவதாரங்களுமே மகாவிஷ்ணுவுடன் தெளிவான தொடர்பைக் கொண்டவை ஆகும்.[7]

வேத கால நூல்களில் கூர்ம அவதாரம் என்பது இயலுலகத் தோற்றம் பற்றிய ஒரு தொன்மத்தின் குறியீடு ஆகும். இந்த அவதாரம், எந்த ஒரு நீடித்த படைப்புச் செயலுக்கும் சில அடிப்படையான கொள்கைகளும், ஆதாரங்களும் வேண்டும் என்பதைக் குறிப்பதாகவே, அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. கூர்ம அவதாரம் மழைக்கடவுளான வருணனின் குறியீடாகவும் கருதப்படுகிறது. தொடக்க கால இந்து புராணங்களில் வருணனும், பூமித்தாயும் கணவன் மனைவியாகவே கருதப்படுகிறார்கள். இந்த இணை, ஒருவரை ஒருவர் சார்ந்து பலதரப்பட்ட, எண்ணற்ற, வளமையான உயிர் வடிவங்களைத் தோற்றுவித்ததாகவும் ஒரு கருத்து உண்டு. வேத இலக்கியங்களில் கூர்ம அவதாரத்திற்கு காஷ்யபா, காச்சப்பா போன்ற வேறு பல பெயர்களும் உண்டு. புத்த மனத்தின் புராணங்களான புத்த ஜாதக கதைகள் மற்றும் ஜைன மத நுால்களும் இந்த உருவம் பற்றி குறிப்பிடுகின்றன.[7][9][10]

புராணக் கதை

[தொகு]

இந்து தொன்மவியலில் பாற்கடல் கடைதல் பெரும் நிகழ்ச்சியாகும். அமுதத்திற்காக வேண்டி, பாற்கடலை கடைய, தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக, மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென, அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாகக் கூறி, அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலை கடையத் தொடங்கினார்கள்.

மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்கத் தொடங்கியது. எனவே, திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையை தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும், மீண்டும் பாற்கடலைக் கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக, வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினை கக்கியது. அவ்விசம் தேவர்களையும், அசுரர்களையும் துரத்தியது. எனவே அதனைக் கண்டு பயம் கொண்டு, சிவபெருமான் இருக்கும் கைலாயத்திற்குச் சென்றாரகள். சிவபெருமான் அந்த ஆலகால விசத்தினை உண்டார். அவருடைய வயி்ற்றுக்குள் இருக்கும் உலக உயிர்களை விசம் அழிக்காமல் இருக்க, பார்வதி தேவி, சிவபெருமானது கண்டத்தைப் பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது. அதன் பின், மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். அமிர்தத்தை தேவர்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்தற்காகவும், அசுரர்களுக்கு இறப்பில்லாத் தன்மை கிடைத்தால் அது ஆபத்தானதாகி விடும் என்பதாலும், அதை அசுரர்களுக்குக் கொடுக்காமல் இருப்பதற்காக, விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

கோவில்கள்

[தொகு]

விஷ்ணுவின் கூர்ம அவதாரத்திற்காக இந்தியாவில் நான்கு ஆலயங்கள் அமைந்துள்ளன: ஆந்திரப் பிரதேசம்சித்தூர் மாவட்டத்தில் கூர்மை, ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கூர்மம், கருநாடகம் சித்ரதுங்கா மாவட்டத்தில் உள்ள காவிரங்காபூர் மற்றும் மேற்கு வங்காளம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கோகாட் கிராமத்தில் உள்ள சுவரூப்நாராயண் ஆகியவை ஆகும். மேலே குறிப்பிட்டுள்ள ஊர்களில் கூர்மை என்ற பெயர் விஷ்ணுவின் கூர்மாவதாரத்தைக் குறிப்பிடும் கூர்ம வரதராஜ சுவாமி ஆலயத்தின் காரணமாக ஏற்பட்டதேயாகும்.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dallapiccola, A.L. (1997). "Ceiling Paintings in the Virupaksha Temple, Hampi". South Asian Studies (Taylor & Francis) 13 (1): 55–66. doi:10.1080/02666030.1997.9628525. 
  2. Prabhat Mukherjee (1981). The History of Medieval Vaishnavism in Orissa. Asian Educational Services. pp. 26–28, 49. ISBN 978-81-206-0229-8.
  3. James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: N-Z. The Rosen Publishing Group. pp. 705–706. ISBN 978-0-8239-3180-4.
  4. Cornelia Dimmitt; JAB van Buitenen (2012). Classical Hindu Mythology: A Reader in the Sanskrit Puranas. Temple University Press. pp. 74–75. ISBN 978-1-4399-0464-0.
  5. Roshen Dalal (2010). Hinduism: An Alphabetical Guide. Penguin Books. p. 217. ISBN 978-0-14-341421-6.
  6. Roshen Dalal 2010, ப. 217.
  7. 7.0 7.1 7.2 7.3 J. L. Brockington 1998, ப. 279-281.
  8. Nanditha Krishna 2010, ப. 241-242.
  9. V. Fausboll (101). Buddhist Birth Stories: or, Jataka Tales, Vol – 1. Prabaht Prakashan. pp. 9–10.
  10. Piotr Balcerowicz (2015). Early Asceticism in India: Ājīvikism and Jainism. Routledge. pp. 24–26 with footnote 38. ISBN 978-1-317-53853-0.
  11. Nagendra Kr Singh (1997). Encyclopaedia of Hinduism. Vol. 1. Centre for International Religious Studies. p. 774. ISBN 978-81-7488-168-7. Retrieved 5 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூர்ம_அவதாரம்&oldid=3608371" இலிருந்து மீள்விக்கப்பட்டது