உள்ளடக்கத்துக்குச் செல்

சுல்தான் அப்துல் சமாட் கட்டடம்

ஆள்கூறுகள்: 3°08′55″N 101°41′40″E / 3.14861°N 101.69444°E / 3.14861; 101.69444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான் அப்துல் சமாட் கட்டடம்
Sultan Abdul Samad Building
Bangunan Sultan Abdul Samad
சுல்தான் அப்துல் சமாட் கட்டடம் (2016)
Map
பொதுவான தகவல்கள்
வகைஅரசு அலுவலகம்
கட்டிடக்கலை பாணிஇந்தோ சரசனிக் பாணி, முகலாயக் கட்டிடக்கலை மூர் கட்டிடக்கலை
இடம்ராஜா சாலை, கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூற்று3°08′55″N 101°41′40″E / 3.14861°N 101.69444°E / 3.14861; 101.69444
கட்டுமான ஆரம்பம்3 செப்டம்பர் 1894; 130 ஆண்டுகள் முன்னர் (1894-09-03)
நிறைவுற்றது1897; 128 ஆண்டுகளுக்கு முன்னர் (1897)
துவக்கம்4 ஏப்ரல் 1897; 127 ஆண்டுகள் முன்னர் (1897-04-04)
உயரம்
கட்டிடக்கலை40 m (130 அடி)
அலைக்கம்ப கோபுரம்3 m (9.8 அடி)
கூரை37 m (121 அடி)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)ஏசி நோர்மன்; ஆர். ஏ. ஜே. பிட்வெல்; ஆர்தர் பெனிசன் அப்பேக்

சுல்தான் அப்துல் சமாட் கட்டடம் (ஆங்கிலம்: Sultan Abdul Samad Building; மலாய்: Bangunan Sultan Abdul Samad; சாவி: باڠونن سلطان عبدالصمد‎; சீனம்: 苏丹阿都沙末大厦) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு வரலாற்றுக் கட்டடம் ஆகும். மெர்டேக்கா சதுக்கம் மற்றும் அரச சிலாங்கூர் மகிழகம் (Royal Selangor Club) ஆகியவற்றுக்கு முன்புறம் ராஜா சாலையில் அமைந்துள்ளது.

இந்தக் கட்டடம் முதலில் பிரித்தானிய குடியேற்றவிய நிர்வாகத்தின் அலுவலகங்களைக் கொண்டிருந்தது; மேலும் அதன் தொடக்ககால ஆண்டுகளில் இந்தக் கட்டடம் அரசாங்க அலுவலகங்கள் (Government Offices) என்று அழைக்கப்பட்டது.

இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கிய கட்டத்தில், சிலாங்கூரின் சுல்தானாக இருந்த சுல்தான் அப்துல் சமாட் அவர்களின் நினைவாக, 1974-ஆம் ஆண்டில் சுல்தான் அப்துல் சமாட் கட்டடம் என்று மறுபெயரிடப்பட்டது. தற்போது இந்தக் கட்டடத்தில் மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு மற்றும் மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுகளும் உள்ளன.

இந்தக் கட்டடம் ஒரு காலக் கட்டத்தில் மலேசியாவின் உயர் நீதிமன்றங்களைக் கொண்டிருந்தது. மலேசிய உயர்நீதிமன்றம்; மலேசிய உச்சநீதிமன்றம்; மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகிய மூன்று நீதிமன்றங்களும் இந்தக் கட்டடத்தில் தான் செயல்பட்டன. 2000-களின் முற்பகுதியில் மலேசிய உச்சநீதிமன்றமும் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றமும் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய நீதி அரண்மனைக்கு மாற்றப்பட்டன. 2007-இல் மலாயா உயர் நீதிமன்றம்; கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு (Kuala Lumpur Courts Complex) மாற்றப்பட்டது.

வரலாறு

[தொகு]
1902-ஆம் ஆண்டில், அரசாங்க அலுவலகங்கள் என்று அழைக்கப்பட்ட சுல்தான் அப்துல் சமாட் கட்டடம்.
1907-இல் பொது அஞ்சல் அலுவலகமாக சுல்தான் அப்துல் சமாட் கட்டடம்.

பிரித்தானிய குடியேற்றவிய நிர்வாகத்தின் அரசாங்க அலுவலகங்கள் முதன்முதலில் பிளப் சாலையில் இருந்தன. அதாவ்து இன்றைய புக்கிட் அமான் சாலைப் பகுதியில், மெர்டேக்கா சதுக்கத்திற்கு எதிர்புறம் உள்ள ஒரு மலையில் அமைந்திருந்தன.

ஒரு காலக்கட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கு கூடுதலான இடங்கள் தேவைப் பட்டன; மலையில் ஏறி இறங்க வேண்டிய சிரமங்கள் குறித்து பொதுமக்களின் புகார்கள் போன்ற காரணங்களினால் அரசாங்க அலுவலகங்களை வேறு ஒரு புதிய இடத்திற்கு மற்றலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர், சிலாங்கூர் பொதுப்பணித் துறையின் மாநிலப் பொறியாளர் சார்லஸ் எட்வின் இஸ்பூனர் (Charles Edwin Spooner), கிள்ளான் ஆற்றின் அருகே உள்ள சமவெளிப் பகுதியில் அரசு அலுவலகங்களைக் கட்டலாம் என முன்மொழிந்தார்.[1]

அந்த முன்மொழிவு, செலவுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டது. ஆனாலும், சிலாங்கூரின் பிரித்தானிய அரசப் பிரதிநிதி (British Resident) வில்லியம் எட்வர்ட் மேக்ஸ்வெல் (William Edward Maxwell) என்பவர் குறைந்த செலவிலான இரண்டாவது திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.[1]

இரண்டு தளங்களைக் கொண்டுள்ள இந்தக் கட்டிடத்தின் முகப்பு மெர்டேக்கா சதுக்கத்தை எதிர்நோக்கி உள்ளது; மற்றும் ராஜா சாலை வழியாக 137.2 மீட்டர் (450 அடி) வரை நீண்டுள்ளது. அந்த நேரத்தில் இந்தக் கட்டடம்தான் மலாயாவின் மிகப் பெரிய கட்டடமாக அறியப்பட்டது. இந்தக் கட்டடத்தின் இரு தளங்களிலும் 3.5 மீட்டர் (11 அடி) அகலமான தாழ்வாரங்கள் உள்ளன.[1] இதன் மைய மணிக்கூண்டுக் கோபுரம் 41 மீட்டர் (135 அடி) உயரம் கொண்டது.

கட்டுமானம்

[தொகு]
2005-ஆம் ஆண்டு தேசிய தினத்தின் இரவில் சுல்தான் அப்துல் சமாத் கட்டடம்.

இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் செப்டம்பர் 1894-இல் தொடங்கி 1897-இல் நிறைவடைந்தன. இதற்கான அடிக்கல் 1894 அக்டோபர் 6-ஆம் தேதி நீரிணைக் குடியேற்றங்களின் ஆளுநர் சர் சார்லஸ் மிட்செல் (Sir Charles Mitchell) அவர்களால் நாட்டப்பட்டது.[2] இந்தக் கட்டடம் 1.034 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.

கட்டடத்தின் தரை 4,208.5 சதுர மீட்டர் (45,300 சதுர அடி) பரப்பளவைக் கொண்டுள்ளது.[3] இந்தக் கட்டடத்தின் கட்டுமானத்தில் 4 மில்லியன் செங்கற்கள், 2,500 பீப்பாய்கள் சீமைக்காரை, 18,000 பீக்கள் (Picul) சுண்ணாம்பு, 5,000 பவுண்டுகள் தாமிரம், 50 டன் எஃகு, இரும்பு; மற்றும் சுமார் 30,000 கன அடி தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டன.[1]

இந்தக் கட்டடம் கட்டப்படுவதற்கு முன்னர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் கட்டடக் கட்டுமானத்திற்கு ஏற்ற உயர்தர செங்கற்கள், ஓடுகள் மற்றும் பிற கட்டடப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக ஒரு தொழிற்சாலையை நிறுவினார்கள். இந்தக் கட்டடத்தின் கட்டுமானச் செலவு 152,000 நீரிணை டாலர்கள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Gullick, J.M. (1992). "The Bangunan Sultan Abdul Samad". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society 65 (1): 27–38. 
  2. Lam Seng Fatt (15 March 2011). Insider's Kuala Lumpur (3rd Edn): Is No Ordinary Travel Guide. Open Your Eyes to the Soul of the City (Not Just the Twin Towers) (3rd Revised ed.). Marshall Cavendish International Asia Pte Ltd. p. 69–70. ISBN 9789814435390.
  3. Zain Abdullah (June 23, 2014). "Sultan Abdul Samad Building's Architectural Highlights". Virtual Malaysia.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]