இராஜராஜேஸ்வரி கோயில், மலேசியா
இராஜராஜேசுவரி கோயில் | |
---|---|
இராஜராஜேசுவரி கோயில், அம்பாங் மாவட்டம், மலேசியா | |
ஆள்கூறுகள்: | 3°09′45″N 101°45′10″E / 3.1624°N 101.7527°E |
அமைவிடம் | |
நாடு: | மலேசியா |
மாநிலம்: | சிலாங்கூர் |
மாவட்டம்: | அம்பாங் |
அஞ்சல் குறியீடு: | 68000 |
ஏற்றம்: | 54.27 m (178 அடி) |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
ஸ்ரீ இராஜராஜேசுவரி கோயில் என்பது மலேசியாவின் அம்பாங் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஓர் அம்மன் கோயில் ஆகும். இக்கோயிலானது, சிறிய குன்று மேல், ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது.
அமைப்பு
[தொகு]ஸ்ரீ இராஜராஜேஸ்வரி ஆலயத்தின் நுழைவாயிலில் இருபத்தைந்து படிகள் ஏறி மேலே வந்தால் பளிச்சென்று காற்றோட்டத்துடன் விசாலமான பிரார்த்தனை மண்டபம் உள்ளது. கோயிலின் அடித்தளத்தில் கல்யாண மண்டபமும் அதன் மேல் தளத்தில் ஆலயமும் அமைந்திருக்கின்றன.
மண்டபத்தின் உள்ளே ஆலயத்தின் பிரதான கருவறையின் இடப்பக்கத்தில் சித்தி விநாயகராக வீற்றிருக்கிறார் ஐந்துகரப் பெருமான். ஆலயத்தின் மற்ற திருமேனிகளைப் போலவே இந்தத் திருமேனியும் தமிழகத்தின் புகழ் பெற்ற சிற்பி தேவகோட்டை முத்துக் கருப்பரால் ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கப் பட்டதாகும்!
1977-இல் நிகழ்ந்த முதல் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவில் இத்திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தெய்வங்கள்
[தொகு]விநாயகர், முருகன் உடன் வள்ளி, தெய்வானை, தட்சணாமூர்த்தி, பைரவர், விஷ்ணுதுர்க்கை, சரஸ்வதி, பிரம்மா மற்றும் 63 நாயன்மார்கள் இங்கு அருள்பாலிக்கும் மற்ற தெய்வங்களாகும்.
பிரார்த்தனை மண்டபம்
[தொகு]சித்திவிநாயகரைச் சுற்றி வலம் வரும்போது முதலில் காட்சி அளிப்பவர் விஷ்ணு துர்க்கை என வழங்கப்படும் அன்னை துர்க்காதேவி; தொடர்ந்து வலம் வர (பிரதானக் கருவறையின் வலப்பக்கம்) இங்கு காட்சி அளிப்பவர் (பாலசுப்பிரமணியனாக அருள்பாலிக்கும்) முருகப்பெருமான் ஆவார். அடுத்து பிரார்த்தனை மண்டபத்திற்கு வரும் படிக்கட்டுகளின் எதிரே மூலஸ்தானம், வாயிலில் துவாரபாலகர்கள் (தூய வெண்கற்களில்) இருவருடனும், எதிரே ஏற்றமுடன் காட்சியளிப்பவர் பொற்றாமரையின் மேல் அமர்ந்த நிலையில் சௌந்தரவல்லியாக உலகநாயகி ஸ்ரீ இராஜராஜேஸ்வரித் தாயார் ஆவார்.
பிரார்த்தனை மண்டபத்தின் இருபுறமும் இரு சிறிய மண்டபங்கள் உள்ளன. மூலஸ்தானத்தின் இடப்புறம் உள்ள இராஜேஸ்வரி மண்டபத்தில் ஸ்ரீகணேசர், ஸ்ரீதுர்க்கை, வள்ளி, தெய்வானை சமேதரராய் ஸ்ரீ முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். வலப்புறம் உள்ள நடராஜ மண்டபத்தில் சண்டிகேஸ்வரராக சிவபெருமான், சிவகாமி சமேதரராய் நடராஜர், நாயன்மார்கள் நால்வர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். கீழே ஆலயத்தின் இடப்பக்கம் வெளிப் பிரகாரத்தில் ஆற்றின் ஓரத்தில் நவக்கிரக நாயகர்களுக்கென்று தனி சன்னதி அமைந்திருக்கிறது.
நவக்கிரகம்
[தொகு]நவக்கிரக சந்நிதிக்கும் ஆற்றுக்கும் இடையில் அரசமரம் ஒன்று ஆலயத்தின் மேல் குளு குளுவென்று தன் நிழலைப் பரப்பிக் கொண்டு கம்பீரமாக உள்ளது. ஆற்றின் இருபக்கங்களும் (கோயிலின் உள்ளே) செண்பகம், கரும்பு மரங்களும், நவக்கிரக மூலஸ்தானத்திற்கு வலப்புறம் பெரியநாவல் மரம் ஒன்று மஞ்சள் பூக்களுடன் பழங்களுடன் பசுமையாக கிளை பரப்பி நிற்கின்றன. (கொட்டிக் கிடக்கும் பழங்களைப் பொறுக்கி ஒட்டியிருக்கும் மண்ணை ஊதும் போது ஔவையும், ஆடுமேய்க்கும் முருக(சிறுவ)னும் நினைவில் வருகின்றனர்).
விந்தை
[தொகு]கருவறையின் முன்புறம் வில்வமரம் ஒன்று உயர்ந்து அடர்ந்த கிளைகளுடன் இருப்பது; கோவிலின் உட்புறம் வன்னி மரங்களும், ஆலயத்தின் இடப்பக்க நுழைவாயிலுக்கும் கோயிலின் வெளிப்பிரகாரத்துக்கும் இடையில் இரு வேப்ப மரங்களின் கிளைகள் அம்பாளின் மூலஸ்தானத்திற்கு மேல் குடைபோல் படர்ந்து இருப்பதும் அதிசயமாகக் கருதப்படுகின்றன.
கோயிலின் வரலாறு
[தொகு]ம. இ. க. அம்பாங் கிளையின் அன்றைய தலைவரும், அம்பாங் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான சுப்பையா 19.11.1956 அன்று இராஜராஜேஸ்வரி ஆலயம் எழுப்ப அம்பாங் சாலையில் நான்காம் மைலில் இருந்த நிலத்தை வழங்கக் கோரி அம்பாங் மாவட்டத் துணையதிகாரிக்கு எழுதிய கடிதம்தான் ஆலயம் உருவாகக் காரணமாக அமைந்தது. ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஆனாலும் ஒரு மாற்று நிலத்தை அடையாளங்காட்டி மூன்று வருடங்கள் விடாது தொடர்ந்து செய்த அவரின் பெருமுயற்சி வெற்றியளித்தது. 'மாநில முதல்வர் நிலம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்' என்ற செய்தி 1.6.1959 தேதியிடப்பட்டு கோலாலம்பூர் நில அலுவலகத்தில் இருந்து அனுப்பிய கடிதம் மூலம் உறுதியானது.
பேராசிரியர் கோ.சுந்தரமூர்த்தி
[தொகு]அதன் பிறகு மூன்று வருடங்களில் ஜாலான் (ரோடு) உலுகிளாங்கில் இருந்த 1/3 ஏக்கர் நிலம் 5.11.1962 அன்று முறையாகப் பதிவு செய்யப்பட்டது. அதுவே இன்று ஆலயம் அமைந்திருக்கும் நிலமாகும். அதன் பிறகு பத்து வருடங்கள் கழித்து 1972-இல் ஆலயக் கட்டடக் குழு அமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
அன்னை மாரியம்மன் பெயரில் ஆலயம் எழுப்ப 1973-இல் நிதி வசூல் செய்து, பின்னர் மலாயாப் பல்கலைக்கழக இந்தியத் துறையின் அன்றைய பேராசிரியர் கோ.சுந்தரமூர்த்தியின் ஆலோசனைக்கிணங்க ஸ்ரீ இராஜராஜேஸ்வரி ஆலயம் எனும் பெயரோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஸ்தபதி இராமசாமி தலைமையில் நிர்மாணிப்புப் பணி தொடங்கியது.
அன்றே சுற்று சூழல் அழகுற அமைய பயன்தரும் மரங்கள் பூச்செடிகள் நடப்பட்டு அவை இன்று சோலையின் நடுவே அமைந்த ஆலயமாகப் புகழ் பெற்றுவிட்டது.
முதலாவது கும்பாபிசேகம்
[தொகு]15.11.74 அன்று ம. இ. க.-வின் அன்றைய தேசியத் தலைவரும் தொழில் அமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ வே. மாணிக்கவாசகம் அடிக்கல் நாட்ட கட்டடவேலை தொடங்கி டத்தோ டாக்டர் பி. டி. அரசு, டத்தோ வி. எல். காந்தன் ஆகியோரின் முயற்சியில் சிலாங்கூர் மாநில முதல்வர்களின் நிதியுதவியாலும், பலவிதமான முயற்சிகள் எடுத்து நிதிதிரட்டி ஆலயம் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவுக்கு தயாராகி 26.6.1977 அன்று காலை முதலாவது கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.
அரசு நிலம் வழங்கி பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு சுப்பையாவின் கனவு நனவாகியது.
சீரமைப்புகள்
[தொகு]1982ல் (ஆலய வளாகத்தில் அமைந்துள்ள) நவக்கிரக சந்நிதி நிர்மாணிக்கபட்டு 9.7.1982-இல் நவக்கிரகப் பிரதிட்ட மகா கும்பாபிசேகம் நடைபெற்றது. 9.7.1989-இல் இரண்டாவது கும்பாபிசேகம் சைவத்திரு சாம்ப மூர்த்தி சிவாச்சாரியாரால் நடத்தப்பட்டது. அதுபோது ஆலய வளாகத்தினுள் மகாலட்சுமி தடாகம் ஒன்றும் நிறுவப்பட்டது.
அதன் பிறகு டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு யோசனையின் பேரில் அவர்களாலேயே செயல்வடிவம் பெற்று பல மாற்றங்களுடன், மேலும் சில சீரமைப்புகள் செய்து ஆலயத்தை அழகுற அமைத்து, பக்தர்களின் நன்கொடைகளினாலும் வங்கிக் கடன் பெற்றும் 24.12.1998-இல் ஆலயத்திற்கு அடுத்துள்ள இடத்தையும் ஒப்பந்தம் செய்து துப்புரவு செய்து நில வாஸ்து பூஜை 28.10.1999-இல் நடத்தி, மூன்றாவது கும்பாபிசேக விழாவின் யாகசாலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு 3.6.2001 அன்று கும்பாபிசேகமும் வெகு விமரிசையாகப் பெரிய விழாவாக நடத்தப்பட்டது.