மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வடக்கு வழித்தடம்
மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வடக்கு வழித்தடம் (மலேசியா) North–South Expressway Northern Route Lebuhraya Utara–Selatan Jajaran Utara | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
AH2 - இன் பகுதி | |
பராமரிப்பு பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் PLUS Expressways Berhad | |
நீளம்: | 460 km (290 mi) |
பயன்பாட்டு காலம்: | 1985-தற்சமயம் – |
வரலாறு: | 1994 |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | பெட்காசம் சாலை; மலேசியா–தாய்லாந்து எல்லை; புக்கிட் காயூ ஈத்தாம், கெடா |
| |
தெற்கு முடிவு: | கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை; புக்கிட் லாஞ்சான், சிலாங்கூர் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | ஜித்ரா, அலோர் ஸ்டார், சுங்கை பட்டாணி, ஜார்ஜ் டவுன், தைப்பிங், கோலாகங்சார், ஈப்போ, கோப்பேங் தாப்பா, ரவாங், கோலாலம்பூர் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வடக்கு வழித்தடம் (ஆங்கிலம்: North–South Expressway Northern Route (E1); மலாய்: Lebuhraya Utara–Selatan Jajaran Utara (E1)) என்பது தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் வடக்குப் பகுதி வழித்தடம் ஆகும். தீபகற்ப மலேசியாவின் வடமேற்கு கடற்கரைக்கு இணையாகச் சரிசமமான நிலையில் செல்கிறது.
இந்த விரைவுச்சாலையின் நீளம் 460-கி.மீ. (290-மைல்). வடமேற்கு மாநிலங்களான கெடா, பினாங்கு, பேராக் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களின் வழியாக இந்தச் சாலை செல்கிறது.
பொது
[தொகு]இந்த விரைவுச்சாலை மலேசியா-தாய்லாந்து எல்லையில், கெடா, புக்கிட் காயூ ஈத்தாம் சோதனைச் சாவடியில் தொடங்குகிறது. பின்னர் சிலாங்கூர், புக்கிட் லஞ்சான் கிராமப்புறப் பகுதியில் முடிவடைகிறது.
அங்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையுடன் இணைகிறது. இந்த வடக்கு-தெற்கு விரைவுச்சாலை பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனத்தின் (PLUS Expressways) மூலமாக இயக்கப் படுகிறது.
இந்த நெடுஞ்சாலை, மலாயா தீபகற்பத்தின் வடமேற்கு கடற்கரைக்கு அருகில் வடக்கு-தெற்கு திசையில் செல்கிறது. அலோர் ஸ்டார், பட்டர்வொர்த், தைப்பிங், ஈப்போ மற்றும் ரவாங் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களையும் இணைக்கிறது.
அதே வேளையில் அதன் வழித்தடத்தில் பல கிராமப் புறங்களுக்கும் சாலை அணுகலை வழங்குகிறது. தீபகற்ப மலேசியாவில் இதுவே மிக நீளமான விரைவுச்சாலை ஆகும்.
முக்கிய அம்சங்கள்
[தொகு]மலேசியாவின் இரண்டாவது நீளமான பாலமான பினாங்கு பாலம், சுங்கை பேராக் பாலம் (Jambatan Sultan Azlan Shah), மெனோரா சுரங்கப்பாதை (Menora Tunnel) மற்றும் ரவாங் ஓய்வு சேவை மையத்தில் (Rawang Rest and Service Area (R&R) உள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலை நினைவுச்சின்னம் போன்றவை இந்த விரைவுச்சாலையின் முக்கிய அம்சங்களாகும்.
இந்த வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வலையமைப்பில் கோப்பேங்-தாப்பா பகுதி தான் அதிகம் செலவான பகுதியாகும். அத்துடன் அந்தப் பகுதி சற்று ஆபத்தான பகுதியாகவும் கருதப்படுகிறது.
இந்த வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் இரண்டு ஆபத்தான நீட்சிகள் உள்ளன: முதலாவது சங்காட் ஜெரிங்-ஜெலாப்பாங் (Changkat Jering-Jelapang) நீட்சி; இரண்டாவது கோப்பேங்-தாப்பா (Gopeng-Tapah) நீட்சி.
கனரக வாகனங்களுக்குத் தடை
[தொகு]இந்த வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வடக்கு வழித்தடத்தில் ரவாங் நகரில் இருந்து புக்கிட் லாஞ்சான் வரைக்கும்; வேலை நாட்கள் நேரங்களில்; ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திங்கள் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை (பொது விடுமுறை நாட்கள் தவிர) காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை, 10,000 கிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட எடையுள்ள கனரக வாகனங்கள் (பேருந்துகள் மற்றும் நீர்க் கலச்சுமையுந்துகள் (Tankers) தவிர); இந்த விரைவுச் சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவது இல்லை. விதியை மீறும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.[1]