கிசா பிரமிடுத் தொகுதி
கிசா பிரமிடுத் தொகுதி மெம்பிஸ் மற்றும் கீசா நெக்ரோபொலிசு | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | i, iii, vi |
உசாத்துணை | 86 |
UNESCO region | எகிப்து |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1979 (3ஆவது தொடர்) |
எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
கீசா நெக்குரோப்போலிசு எனப்படும் கிசா பிரமிடுத் தொகுதி, எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எல்லைப் பகுதியில் கீசாவின் மேட்டுநிலப் பகுதியில் அமைந்துள்ளது. பண்டைக்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இத்தொகுதி நைல் நதிக்கரையில் அமைந்துள்ள பழைய கிசா நகரத்திலிருந்து 8 கிமீ (5 மைல்) தொலைவில் உட்புறமாகப் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. இது, கெய்ரோ நகர மத்தியில் இருந்து தென்மேற்காக சுமார் 25 கிமீ (15மைல்) தொலைவில் உள்ளது. இத்தொகுதியிலுள்ள ஒரு நினைவுச் சின்னமான கிசாவின் பெரிய பிரமிடே பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருக்கும் ஒரே அதிசயமாகும்.
கீசா பிரமிடுகளின் தொகுதி
[தொகு]நடு எகிப்தில் உள்ள பண்டைய கீசா நெக்ரோபொலிசு நகரம் பல பிரமிடுகளை உள்ளடக்கியுள்ளது. பெரும் பிரமிடு எனப்படும் பார்வோன் கூபுவின் பிரமிடு, இதைவிடச் சற்றுச் சிறிய காப்ராவின் பிரமிடு, இவற்றுக்குத் தென்மேற்கே 100 மீட்டர்கள் தொலைவில் ஒப்பீட்டளவில் இடைத்தர அளவுள்ள மென்கௌரேவின் பிரமிடு, மேலும் 100 மீட்டர்கள் தென்மேற்குத் திசையில் பல சிறிய பிரமிடுகள் என்பன இவற்றுள் அடங்கியுள்ளன. "பெரிய இசுபிங்சு" (Great Sphinx) எனப்படும் மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட சிலை இத்தொகுதியின் கிழக்குப் பகுதியில் கிழக்குத் திசையைப் பார்த்திருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. தற்கால எகிப்தியலாளர்கள், இந்த இசுபிங்சின் தலை காப்ராயுடையது என நம்புகின்றனர். இந்த அரச குடும்பத்து நினைவுச் சின்னங்களுடன், பல உயர்நிலை அரச அதிகாரிகளினது சமாதிகளும், பிற்காலத்தைச் சேர்ந்த சமாதிகள் பலவும் காணப்படுகின்றன.
இங்கு காணப்படும் ஐந்து பிரமிடுகளுள் நான்காம் வம்ச மன்னர்களான மென்கௌரே பிரமிடு அதன் மினுக்கிய சுண்ணக்கற்களாலான மூடல்கள் எதுவும் இன்றி உள்ளது. மன்னர் காப்ராவின் பிரமிடு அதன் உச்சிப்பகுதியிலும், மன்னர் கூபுவின் பிரமிடு அதன் அடிப் பகுதியிலும் மினுக்கிய சுண்ணக்கல் மூடல்களைக் கொண்டுள்ளன. காஃப்ரேயின் பிரமிடு அதைக் காட்டிலும் காலத்தால் முந்திய கூஃபுவின் பிரமிட்டிலும் உயரமாகக் காட்சிதருகிறது. இது முக்கியமாக அது அமைந்துள்ள இடம் உயரமாக இருப்பதனாலும், அப்பிரமிடின் பக்கங்கள் சரிவு கூடியதாக அமைந்திருப்பதனாலும் ஆகும். உண்மையில் இது உயரத்திலும், கனவளவிலும் சிறியதே. கிமு 25 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே இப்பகுதியில் கட்டுமான வேலைகள் முனைப்பாக இடம்பெற்றன. ஹெலெனியக் காலத்தில், சிடோனின் அன்டிப்பேட்டர், இங்குள்ள பெரிய பிரமிடை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகப் பட்டியலிட்ட பின்னர் இப்பகுதி மிகவும் புகழ் பெற்றது.
பெரும்பாலும் 19-ஆம் நூற்றாண்டில் பிடிக்கப்பட்ட படங்களைக் கொண்டு வெளிநாட்டினர் இது உட்பகுதியில் பாலைவனத்தில் அமைந்துள்ளதாகக் கருதினர். ஆனால், இது எகிப்தின் மக்கள் தொகை கூடிய நகரமான கெய்ரோவின் ஒரு பகுதியாகவேயுள்ளது. நகர வளர்ச்சி, இத் தொன்மையான களங்களினது எல்லைவரை வந்துவிட்டது. இதனால், கீசா, சக்காரா, தச்சூர், அபு ரூவேய்சு (Abu Ruwaysh), அபுசிர் ஆகியவற்றை உள்ளடக்கிய மெம்பிஸ் பகுதி 1979 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.