உள்ளடக்கத்துக்குச் செல்

ஓணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓணம்
ஓணம் பண்டிக்கைகான முன்னேற்பாடுகள்
அதிகாரப்பூர்வ பெயர்மலையாளம்: ഓണം
கடைப்பிடிப்போர்மலையாளிகள், தமிழர்கள்
வகைசமய கலாச்சார பிராந்திய திருவிழா
முக்கியத்துவம்இந்து தொன்மவியல் பின்புலத்துடன் கூடிய அறுவடைத் திருவிழா
அனுசரிப்புகள்சடை திருவாதிரை களி, புலிக்கலி, பூக்களம், ஓணத்தள்ளு, திருக்ககரையப்பன், ஓணத்தப்பன், தும்பி துள்ளல், ஓணவில்லு, குருவாயூரில் காட்சிக்குள, திருப்பணித்துறையில் அத்தச்சமயம், வல்லம்களி.
நாள்சிங்க(ஆவணி) மாதத்தில் வரும் திருவோன நட்சதிரம்
நிகழ்வுஆண்டு தோறும்

ஓணம் அல்லது ஆவணி திருவோணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும் கொண்டாடுகின்றனர்.[1]

வரலாறு

[தொகு]

ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமனர் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு[2][3] நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில்[4][5][6][7][8] பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

- மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)

நாலாயிர திவ்யபிரபந்தத்தில்[9][10][11] பெரியாழ்வார்[12] பரம்பரையாகத் திருமாளுக்கு தொண்டுசெய்வதையும் திருவோண நன்னாளில் நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனை அழித்தவனை நம் துன்பங்கள் போகப் பல்லாண்டு வாழ்த்துவமே

- பெரியாழ்வார் திருமொழி 6

தேவாரத்தில் சம்பந்தர் ஓணம் கபலிசரத்‌தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார்[13][14][15][16]

- திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2

இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

10 நாள் திருவிழா

[தொகு]

கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓண விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளத்தின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளத்தில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகையென (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகைபற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது. ஓணத் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளத்தின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா), ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

மன்னனுக்கான கொண்டாட்டம்

[தொகு]
மகாபலியும் திருமாலும்

மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். கொடை செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்தப் பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காகத் தனது தலையையே கொடுத்தான் பலி பேரரசன். அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை பாதாளத்திலிருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் மன்னன். அதன்படி, ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அத்தப்பூக்கோலம்

[தொகு]
பூக்கோலம்

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

சிறப்பு உணவுகள்

[தொகு]
ஓண சத்யா

கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுத்துக் கொள்வர்.

புலிக்களி

[தொகு]
"புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்களி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.

.

கைகொட்டுக்களி

[தொகு]
கைகொட்டுக்களி

ஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் "கைகொட்டுக்களி". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.

யானைத்திருவிழா

[தொகு]

ஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூத்தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.

விளையாட்டுகள்

[தொகு]
படகுப்போட்டி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகளென 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில்

[தொகு]

திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், திருமால் வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் மகாபலியை அழுத்தி அழித்த இடம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஓணம் பண்டிகை
  2. https://tamilnation.org/literature/pattuppaatu/mp071.htm
  3. http://ta.wikisource.org/s/25r[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://www.dinaithal.com/component/k2/7949-madurai-kanchi.html
  5. http://temple.dinamalar.com/news_detail.php?id=13542
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-09. Retrieved 2013-12-13.
  7. http://www.tamilhindu.com/2013/02/bharath-darshan-1/
  8. http://www.tamilvu.org/library/l1100/html/l1160101.htm
  9. http://www.divyaprabandham.org/songs/771/
  10. http://www.kamakoti.org/tamil/divya17.htm
  11. http://temple.dinamalar.com/news_detail.php?id=7423
  12. http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=52
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-14. Retrieved 2013-12-13.
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-20. Retrieved 2013-12-13.
  15. http://www.valaitamil.com/second-thirumurai-first-part_8020.html
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-09. Retrieved 2013-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓணம்&oldid=4086215" இலிருந்து மீள்விக்கப்பட்டது