கிளிமானூர் அரண்மனை
கிளிமானூர் அரண்மனை (Kilimanoor Palace) என்பது இந்திய மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள கிளிமானூரில் அமைந்துள்ள அரண்மனையாகும். இது ஓவியர் ரவி வர்மா, மன்னர் மார்த்தாண்ட வர்மனின் தந்தை இராகவ வர்மன் ஆகியோரின் பிறப்பிடமாகும்.[1]
அரண்மனை
[தொகு]அரண்மனை வளாகம் ஆறு எக்டேர்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் கேரளாவின் பாரம்பரிய குடியிருப்பு கட்டமைப்புகளான நாலுகட்டு, சிறியதும், நடுத்தரமும் ஆன கட்டிடங்கள், இரண்டு குளங்கள், கிணறுகள், புனித தோப்புகள் (காவு) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ரவி வர்மா தனது ஓவியங்களின் வருமானத்திலிருந்து சில கட்டிடங்களை கட்டி பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. திருவிதாங்கூர் அரச இல்லம் தொடர்பான குடும்பங்கள் இங்கு தொடர்ந்து வாழ்கின்றன.
வரலாறு
[தொகு]கிளிமானூரில் உள்ள சூட்டாயில் உள்ள அரண்மனை 300 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும் பழமையான கட்டிடங்கள் மிகவும் முந்தைய காலத்திலிருந்து வந்தவை. இருப்பினும், 1753 ஆம் ஆண்டில் தான் அரண்மனை அதன் தற்போதைய வடிவத்தில் கட்டப்பட்டது.
அரண்மனையும் திருவிதாங்கூர் அரச குடும்பமும்
[தொகு]கிளிமானூரின் நிலங்கள் முதலில் பிள்ளை என்கிற ஆளும் தலைவருக்கு சொந்தமாக இருந்தது. திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மனால் இந்த நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பல கிராமங்களை உள்ளடக்கிய தோட்டம் பின்னர் 1718 ஆம் ஆண்டில் மலபாரில் பரப்பநாட்டிலிருந்து தெற்கே வந்த மன்னரின் தந்தையின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. [2]
1705 ஆம் ஆண்டில் (கொல்ல ஆண்டு 880) பரப்பநாடு அரச இல்லமான பேப்பூர் தத்தரி கோவிலகத்தைச் சேர்ந்த இத்தம்மர் ராஜாவின் மகனும் இரண்டு மகள்களும் வேணாட்டின் அரச குடும்த்தில் தத்தெடுக்கப்பட்டனர். இத்தம்மர் ராஜாவின் சகோதரியும் அவரது மகன்களான இராம வர்மன், இராகவ வர்மன் ஆகியோரும் கிளிமானூரில் குடியேறி, இப்போது தத்தெடுக்கப்பட்ட சகோதரிகளை மணந்தனர். திருவிதாங்கூர் இராச்சியத்தின் நிறுவனர் மார்த்தாண்ட வர்மர், இராகவ வர்மாவின் மகனாவார். [3], இராகவ வர்மாவின் மருமகன் இரவி வர்மா கோயி தம்புரான், மார்தாண்ட வர்மனின் சகோதரியை மணந்தார். இவர்களது மகன் தர்ம ராஜா கார்த்திகைத் திருநாள் இராம வர்மன் என்று அறியப்பட்டார்.
1740 ஆம் ஆண்டில், தேசிங்கநாடு மன்னரை ஆதரிக்கும் இடச்சு நாட்டைச் சேர்ந்த தளபதி ஆக்கர்ட் தலைமையிலான ஒரு நட்புப் படை வேணாடு மீது தாக்குதல் நடத்தியபோது, கிளிமானூரைச் சேர்ந்த ஒரு இராணுவம் எதிர்த்தது. பின்னர் அவர்களைத் தோற்கடித்தது. ஒரு சிறிய வெற்றி என்றாலும், ஒரு இந்திய இராணுவம் ஒரு ஐரோப்பிய சக்தியை தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும். [4] 1753 ஆம் ஆண்டில், இந்த சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, மார்த்தாண்ட வர்மர் கிளிமானூர் அரண்மனையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை [5] வரிகளிலிருந்து விலக்கி, அவர்களுக்கு தன்னாட்சி அந்தஸ்தை வழங்கினார். [6] தற்போதைய அரண்மனை வளாகம் இந்த காலத்தில் அய்யப்பன் கோயிலுடன் கட்டப்பட்டது. [7] இவர்கள் குடும்ப தெய்வம், சாஸ்தா அல்லது அய்யப்பன் ஆவார். [8]
தளவாய் வேலு தம்பி கிளிமானூர் அரண்மனையில் கூட்டங்களை நடத்தினார். ஆங்கிலேயருக்கு எதிரான தனது இறுதிப் போருக்குச் செல்வதற்கு முன்பு அவர் தனது வாளை அரண்மனையில் ஒப்படைத்தார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் இந்த வாளை அரண்மனையிலிருந்து பெற்றார். அது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு வாள் திருவனந்தபுரத்தின் நேப்பியர் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆளுமைகள்
[தொகு]- ராஜா ரவி வர்மா, ஓவியர்
- கரீந்திரன் தம்புரான், கவிஞர், இசையமைப்பாளர், சுவாதி திருநாளின் சிறுவயது நண்பர்
- இராஜ ராஜ வர்மன், ரவி வர்மாவின் மாமா.
- சி. ராஜா இராஜ வர்மா கோயி தம்புரான், ஓவியர், ராஜா ரவி வர்மாவின் சகோதரர்
- மாதவன் வைதியன் (கிளிமானூர் அரச மருத்துவர்)
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Mheshwari, S Uma. Thrippadidaanam. Mathrubhumi Books. pp. 41–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8265-947-6.
- ↑ (See page 4 in Madras Presidency Records, 1915, Supt, Government Press, Madras.
- ↑ Sister's son.
- ↑ The forces were from Kochi, Thekkumkoor, Deshinganad (present kollam) and Purakkad who had enmity towards Marthanda Varma
- ↑ Most of the area under the present Kilimanoor and Pazhayakunnummel panchayats.
- ↑ Although under his kingdom
- ↑ The original temple being at Nerumkaithakotta, near Kozhikode
- ↑ It is also said[யாரால்?]
வெளி இணைப்புகள்
[தொகு]- Website on Swathi Thirunal
- Kerala tourism
- Royal Ark Website
- Column in The Sunday Express by Shreekumar Varma
- Sivasankaran Nair K, VeNAadinTe pariNamam (വെണാടിന്റെ പരിണാമം), in Malayalam,Current Books, 2005.
- From the Tourist brochure by Kilimanoor Kottara Charithra Sangraham, Kilimanoor Palace.
- S.A.V.SMARAKA VAIDHYA SALA,TAZHAVA,KOLLAM[DIST]