உள்ளடக்கத்துக்குச் செல்

மலை அரண்மனை, திரிப்பூணித்துறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலை அரண்மனை
அரண்மனையின் நுழைவாயில்
Map
நிறுவப்பட்டது1865
அமைவிடம், திரிப்பூணித்துறை, கொச்சி, இந்தியா
வகைதொல்லியல் அருங்காட்சியகம், பாரம்பரிய அருங்காட்சியகம்
உரிமையாளர்கேரள அரசு
பொது போக்குவரத்து அணுகல்சாலை, ரயில்

மலை அரண்மனை எனப்படுகின்ற ஹில் பேலஸ் (Hill Palace) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொச்சியின் திருப்பூணித்துறையில் அமைந்துள்ள மிகப் பெரிய தொல்லியல் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் கொச்சி இராச்சிய மகாராஜா அரசின் நிர்வாக அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லமாகச் செயல்பட்டு வந்தது. 1865 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை வளாகத்தில் 54 ஏக்கர்கள் (220,000 m2) பரப்பளவில் பாரம்பரிய பாணியில் கட்டபட்ட 49 கட்டிடங்கள் உள்ளன. இந்த வளாகத்தில் ஒரு தொல்லியல் அருங்காட்சியகம், ஒரு பாரம்பரிய அருங்காட்சியகம், மான் பூங்கா, வரலாற்று காலத்திற்கு முந்தைய பொருட்கள் கொண்ட பூங்கா, குழந்தைகள் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. [1] அருங்காட்சியகத்தின் வளாகத்தில் பல அரிய வகை மருத்துவத் தாவரங்கள் உள்ளன. தற்போது இந்த அரண்மனை கேரள மாநில தொல்லியல் துறையால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) தொலைவில் அமைந்துள்ளது. சாலை மற்றும் இரயில் பாதை வழியாக இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்லலாம்.

கேரள அரசின் பாரம்பரிய விவகாரங்கள் துறையால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனமான பாரம்பரிய ஆய்வு மையம் (சிஎச்எஸ்) இந்த வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. பாரம்பரிய ஆய்வு மையமானது 'கையெழுத்துப் பிரதி பாதுகாப்பு மையம்' (எம்.சி.சி) மற்றும் கையெழுத்துப் பிரதி ஆதார மையம் (எம்.ஆர்.சி) என்ற வகையில் இந்தியச் சுவடிகள் இயக்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது. [2]

வரலாறு

[தொகு]
மலை அரண்மனை அருங்காட்சியக தெற்கு பிரிவு
வடக்குப் பக்கத்திலிருந்து அரண்மனையின் தோற்றம்

மலை அரண்மனையானது 1865 ஆம் ஆண்டில் கொச்சின் மகாராஜாவால் கட்டப்பட்டது. தற்போது இது கேரளத்தின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. [3]

கொச்சி இராச்சியத்தின் அலுவல்பூர்வ தலைநகரம் முன்பு திரிச்சூரில் இருந்தது. மகாராஜாவின் அரச அலுவலகம் மற்றும் அரசவை ஆகிய அனைத்தும் நகரத்தில் அமைந்திருந்தன. இருப்பினும், சடங்கு பழக்கவழக்கங்களின்படி, கொச்சி ராணியின் இருப்பிடமே (பென்வழித்தம்புரான்) அரச அலுவலமாக நோக்கப்பட்டது. ஏனெனில் கொச்சி அரச குடும்பத்தினர் தாய்ழ்வழி சமூக மரபுகளைக் கொண்டிருந்தனர். ராணியானவர் அரசின் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். அவருடைய ஆட்சியின்கீழ் மன்னரானவர் ஆட்சி செய்தார். 1755 ஆம் ஆண்டு முதல், ராணியும் அவரது பரிவாரங்களும் திரிப்பூணித்துறையில் வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக நகரம் அலுவல்பூர்வ தலைநகராக மாறியது. அத்துடன், இளவரசர் 14ஆம் ராம வர்மா [4]திரிப்பூணித்துறையில் வளர்க்கப்பட்டார், இதன் காரணமாக மன்னராக முடிசூட்டப்பட்ட பின்னரும் அவர் திருச்சூரில் வாழ்வதற்கு பதிலாக, இங்கேயே வசிக்க விரும்பினார். இதன் காரணமாக அவரது நலனைக் கருத்தில் கொண்டு, 1865 ஆம் ஆண்டில் ஓர் அரச அலுவலகம் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இது அரச அலுவலகம், அரசவைக் கட்டிடம் மற்றும் அரச செயலாளர்கள் மற்றும் அரசவைப் பிரபுக்களின் அலுவலகங்கள் என்ற அமைப்புகளைக் கொண்டு அமைந்திருந்தது. விரைவில் மேலும் பல கட்டமைப்புகள் பல்வேறு நோக்கங்களுக்காக முதன்மை கட்டட அமைப்போடு இணைக்கப்பட்டன. விரைவில், மன்னர் மற்றும் அவரது குடும்பத்தினரின் குடியிருப்புக்காக ஒரு அரச குடுப்பத்தினருக்கான குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது. இருந்தபோதிலும், கொச்சின் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்கள் மற்றும் உத்தியோகபூர்வ குடியிருப்புகளைக் கொண்டிருந்தனர்.

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்த அரண்மனையை கொச்சின் அரச குடும்பத்தினர் கேரள அரசிடம் ஒப்படைத்தனர். 1980 ஆம் ஆண்டில் இந்த அரண்மனையானது தொல்லியல் துறையின் வசம் வந்து பின்னர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்த அரண்மனையானது 1986 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டது. இந்த அருங்காட்சியகம் மற்றும் அதன் வளாகம் மலையாளத் திரைப்படத் துறையின் பிரபலமான படப்பிடிப்பு தளங்களில் ஒன்றாகும். குதிரை வண்டி காட்சிக்கூடம் மற்றும் ஆயுத காட்சிக்கூடங்களில் ஏராளமான வரலாற்று கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அரண்மனை வளாகமானது நகரின் பசுமைப் பகுதியாக உள்ளது. சந்தீப் வர்மா மற்றும் கோகுல் வினயன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட தோட்டங்களுக்குள் காணப்படும் விலங்கினங்களின் பட்டியலில் 'மலை அரண்மனையின் விலங்குகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. [1] என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம்

[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் கொச்சின் அரச குடும்ப ஓவியங்கள், கல் மற்றும் பளிங்கில் செதுக்கபட்ட சிற்பங்கள், ஆயுதங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் போன்ற 14 வகை காட்சிப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்புகளில் முக்கியமான பங்கினை வகிப்பவை கொச்சின் அரச குடும்பத்தால் வழங்கப்பட்டவையாகும். அவற்றுள் சில பங்களியம் தேவசம் மற்றும் தொல்லியல் துறையின் சில காட்சிப்பொருள்கள் ஆகும். இங்கு விலைமதிப்பற்ற கற்களைக் கொண்ட தங்க கிரீடம் மற்றும் பல மதிப்புமிக்க நாணயங்கள், ஆபரணங்கள், கம்பீரமான படுக்கைகள் மற்றும் கல்வெட்டு மாதிரிகள் ஆகியவை உள்ளன. மேலும் யப்பான், சீனா போன்ற நாடுகளின் 200க்கும் மேற்பட்ட மண் வேலைப் பண்டங்கள், சுடுமண் படைப்புகள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. மேலும் கற்காலக் கருவிகள், குடக்கல், தொப்பி கல் போன்ற வரலாற்று காலத்துக்கு முந்தைய சின்னங்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. மொகஞ்சதரோ, அரப்பா போன்ற இடங்களில் எடுக்கபட்ட முத்திரைகளின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. பிரபல மலையாள திரைப்படமான மணிச்சித்ரதாழ் இங்கே படமாக்கப்பட்டது.

இந்த அரண்மனை தினமும் காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மற்றும் தேசிய / மாநில விடுமுறை நாட்கள் இங்கு விடுமுறை நாட்களாகும்.

திரைப்படத் தளம்

[தொகு]

இந்த மலை அரண்மனை பல மலையாளத் திரைப்படங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனையில் படமாக்கப்பட்ட சில பிரபலமான படங்கள் [5] மூன்னாம் முரா (1988) [6], மணிச்சித்ரதாழ் (1993), பிங்காமி (1994) [7]>, கலியூஞ்சல் (1997) [8], ட்ரீம்ஸ் (2000) [9]>, சோட்டா மும்பை (2007) [10]> போன்றவை ஆகும்.

புகைப்படத்தொகுப்பு

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. The magnificent hill palace at Thripunithura (Thiruvankulam panchayat, ernakulam district of Kerala), was once the Headquarters of the illustrious Kochi Royal family பரணிடப்பட்டது 2008-10-15 at the வந்தவழி இயந்திரம்
  2. [http://www.namami.or[தொடர்பிழந்த இணைப்பு]g National Mission for Manuscripts.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-30. பார்க்கப்பட்ட நாள் 2020-01-01.
  4. "Rama Varma XIV", Wikipedia (in ஆங்கிலம்), 2017-06-16, பார்க்கப்பட்ட நாள் 2020-01-01
  5. "A dekko into past glory". The Hindu. 4 December 2011. https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/a-dekko-into-past-glory/article2686817.ece. 
  6. "Moonnam Mura", Wikipedia (in ஆங்கிலம்), 2019-10-12, பார்க்கப்பட்ட நாள் 2020-01-01
  7. "Pingami", Wikipedia (in ஆங்கிலம்), 2019-12-22, பார்க்கப்பட்ட நாள் 2020-01-01
  8. "Kaliyoonjal", Wikipedia (in ஆங்கிலம்), 2019-10-31, பார்க்கப்பட்ட நாள் 2020-01-01
  9. "Dreams (2000 film)", Wikipedia (in ஆங்கிலம்), 2019-08-16, பார்க்கப்பட்ட நாள் 2020-01-01
  10. "Chotta Mumbai", Wikipedia (in ஆங்கிலம்), 2019-12-31, பார்க்கப்பட்ட நாள் 2020-01-01

வெளி இணைப்புகள்

[தொகு]