உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ நாராயண ஜெயந்தி வல்லம்களி அல்லது படகுப் போட்டி என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், குமரகமில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகையின் போது நடைபெறும் ஒரு படகுப் போட்டியாகும். இப்போட்டியின்போது வெவ்வேறு அளவுகளையும், வடிவங்களையும் கொண்ட படகுகளில் 1,000 க்கும் மேற்பட்ட படகோட்டிகள் கலந்துகொள்கின்றனர். இந்தப் போட்டியில் பாம்பு படகுகள் கலந்துகொண்டாலும், இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இரட்டுகுதி படகு வகைகளுக்காகும் இதில் சுமார் 50 படகோட்டி வீரர்கள் வரிசையாக அமர்ந்திருப்பர். வெற்றிபெற்ற இரட்டுகுத்தி படகானது ஸ்ரீ நாராயண சுழல் கோப்பையை வெல்லும்.

தோற்றம்

[தொகு]

1903 ஆம் ஆண்டில் நாராயணகுரு குமரமங்களம் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமியின் சிலையை பிரதிட்டை செய்ய குமரகம் வந்தார். பின்தங்கிய கிராமத்தில் பள்ளி ஒன்றைத் துவக்க அதிக ஆர்வம் கொண்டதால், சிலையை பிரதிட்டை செய்ய அவர் ஒப்புக் கொண்டார். இறுதியில், குருவின் விருப்பப்படி பள்ளி, கோயில் என இரண்டும் தொடங்கப்பட்டன. குருவின் வருகை வேம்பநாடு ஏரிப்பகுதியில் உள்ள இந்த கிராமப்புற மக்களை ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றது. அவர்கள் துறவியை வரவேற்று அவருடன் படகுகளில் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், கடந்த பல தசாப்தங்களாக, குமரகமில் ஸ்ரீ நாராயண ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக படகு ஊர்வலத்திற்கு முன்னதாக ஒரு படகுப் போட்டி நடத்தப்படுகிறது.

கொண்டாட்டங்கள்

[தொகு]

குமரமங்கலம் கோவிலில் சிறப்பு பூசைகளுடன் இந்த நாள் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து குருமந்திரத்தில் குருபூசை மற்றும் குருபுஷ்பஞ்சலி நடக்கிறது. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கான கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் முற்பகலில் நடத்தப்படுகின்றன. குமரகம் படகுப் போட்டி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக, ஸ்ரீ நாராயண குருவின் உருவப்படத்தை சுமந்து செல்லும் நாட்டுப் படகுகளின் பிரமாண்ட ஊர்வலம் குமாரமங்கலம் கோயில் பகுதியில் உள்ள திதாம்பிலிருந்து படகுப் போட்டி நடக்கும் இடமான கோட்டத்தோடு வரை நடைபெறுகிறது. கொண்டாட்டங்களானது பொதுக் கூட்டமும் அதில் வெற்றியாளர்களுக்கு பரிசு கொடுப்பதுடன் நிறைவடைகின்றது.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]