முலு மலை தேசியப் பூங்கா
முலு மலை தேசியப் பூங்கா | |
---|---|
Gunung Mulu National Park | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
தொலைவில் இருந்து முலு மலை | |
அமைவிடம் | மருடி மாவட்டம், மிரி பிரிவு சரவாக் மலேசியா |
ஆள்கூறுகள் | 04°02′33″N 114°48′45″E / 4.04250°N 114.81250°E |
பரப்பளவு | 528.64 km2 (204.11 sq mi) |
நிறுவப்பட்டது | 1974 |
இயக்குபவர் |
|
வலைத்தளம் | mulupark |
அலுவல் பெயர் | முலு மலை தேசியப் பூங்கா |
வகை | Natural |
வரன்முறை | vii, viii, ix, x |
தெரியப்பட்டது | 2000 (24-ஆவது அமர்வு) |
உசாவு எண் | 1013 |
பகுதி | ஆசியா-பசிபிக் |
முலு மலை தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Gunung Mulu; ஆங்கிலம்: Gunung Mulu National Park) என்பது மலேசியா, சரவாக், மிரி பிரிவு முலு மலை பகுதியில் அமைந்து உள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா, பூமத்திய ரேகையின் வெப்பமண்டல மழைக்காடுகளின் மலைப்பகுதி சார்ந்த குகைகளையும்; மற்றும் சுண்ணாம்புக் கரடு அமைப்புகளையும் கொண்டுள்ளது.
இந்தப் பூங்கா அதன் குகைகள் மற்றும் குகைகளைச் சுற்றியுள்ள மழைக்காடுகளைப் பற்றிய ஆய்வுகளுக்கு உலக அளவில் பிரபலமானது. குறிப்பாக 1977-1978-ஆம் ஆண்டுகளில் ராயல் ஜியோகிராபிகல் சொசைட்டி (Royal Geographical Society) எனும் புவியியல் ஆய்வுக்கழகத்தின் 100-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், இங்கு 15 மாதங்கள் ஆய்வுகள் செய்ததைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இதன் பின்னர் முலு குகைகள் திட்டம் எனும் பெயரில் 20-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் இங்கு நடைபெற்றுள்ளன. சரவாக்கின் இரண்டாவது உயரமான மலையான முலு மலையின் நினைவாக இந்தத் தேசிய பூங்காவிற்குப் பெயரிடப்பட்டது
வரலாறு
[தொகு]முலு குகைகள் பற்றிய தொடக்ககாலக் குறிப்புகள், 1858-ஆம் ஆண்டில், புரூணையின் பிரித்தானியத் தூதர் இசுபென்சர் செயின்ட் ஜான் எழுதிய லைப் இன் தி பாரஸ்ட் ஆப் தி பார் ஈஸ்ட் (Life in the Forests of the Far East) என்ற நூலில் உள்ளன. அந்த நூலில் 'சுண்ணாம்புக் கற்கள் நிறைந்த குகைகள்; அதிக நீர் தேங்கிய குகைகள் மற்றும் இயற்கையான சுரங்கங்கள் கொண்ட குகைகள்' என்று முலு குகைகளைப் பற்றி இசுபென்சர் செயின்ட் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
முலு மலையில் ஏறுவதற்கான முதல் முயற்சி 19-ஆம் நூற்றாண்டில், இசுபென்சர் செயின்ட் ஜான் மற்றும் சார்லசு ஓஸ் என்பவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் முதல் முயற்சி தோல்வி கண்டது.
1920-களில் தான், தாமா நிலோங் என்ற பெரவான் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த காண்டாமிருக வேட்டைக்காரர், முலு மலையின் அருகே தென்மேற்கு முகடுகளைக் கண்டுபிடித்தார். அந்த முகடு முலு மலையின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வுக்குழு
[தொகு]1932-ஆம் ஆண்டில், தாமா நிலோங் எனும் சரவாக் பழங்குடியினர், லார்ட் செக்லெட்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பயணக் குழுவினரையும் முலு மலையின் உச்சிக்குக் கொண்டு சென்றார்.[2]
1961-இல், பிரித்தானிய போர்னியோ புவியியல் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஜி.இ. வில்போர்ட் என்பவர், முலு குகைகளுக்குச் சென்றார். அவர் மான் குகை மற்றும் காற்று குகை ஆகிய குகைகளை ஆய்வு செய்தார். எதிர்காலத்தில் மேலும் பல குகைகள் கண்டுபிடிக்கப்படலாம் என்றும் அவர் கணித்துள்ளார்.[3]
அறிவியல் சுற்றாய்வுகள்
[தொகு]1974-ஆம் ஆண்டில், முலு மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தேசிய பூங்காவாக சரவாக் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டில், முலு தேசிய பூங்காவில் ஓர் அறிவியல் சுற்றாய்வுப் பயணத்திற்கு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்தது. இதுவே ஐக்கிய இராச்சியத்திலிருந்து அனுப்பப்பட்ட மிகப்பெரிய சுற்றாய்வுக் குழுவாகும்.[4]
இந்தச் சுற்றாய்வுப் பயணம் 15 மாதங்கள் வரை நீடித்தது. அந்த ஆய்வுக் குழுவின் ஒரு சிறிய துணைக்குழு 50 கிமீ (31 மைல்) வரையில் குகைகளை ஆராய்ந்து ஆய்வுகள் செய்தது. அந்த ஆய்வுகளில் கிளியர்வாட்டர் குகை , கிரீன் குகை, ஓண்டர் குகை மற்றும் பிரிடிக்சன் குகை ஆகியவை அடங்கும்.[3]
லோங் பாலா முகாம்
[தொகு]அந்தக் காலக்கட்டத்தில், முலு நகரில் வானூர்தி நிலையம்; மற்றும் சாலை வசதிகள் எதுவும் இல்லை. அதனால் லோங் பாலா கிராமத்தில் அடிப்படை வசதிகளுக்கான ஒரு முகாம் நிறுவப்பட்டது. இந்த முகாம் மிரி நகரிலிருந்து மூன்று நாள் பயணத் தொலைவில் இருந்தது.[5] இவ்வாறு அப்பி மலையின் மேற்குப் பகுதியில் உள்ள குகைகளின் மீதான ஆய்வுகள் தொடங்கின.
டிசம்பர் 1980-இல், மற்றொரு பிரித்தானிய ஆய்வுக் குழு முலு குகைகளுக்கு 4 மாதங்களுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் சுற்றாய்வுப் பயணத்தில், நாசிப் பாகுஸ் குகையில் அமைந்துள்ள சரவாக் நிலவறை கண்டுபிடிக்கப்பட்டது.[3] 1984-இல், முலு மலையின் சுற்றுப் பகுதிகள், ஆசியான் பாரம்பரியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டன .[6] இதன் தொடர்ச்சியாக, 1985-இல், முலு மலை தேசியப் பூங்கா பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.[3]
பிரித்தானிய ஆய்வுக் குழுவினர்
[தொகு]1988-ஆம் ஆண்டு பிரித்தானிய ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட சுற்றாய்வுகளின் போது, கிளியர்வாட்டர் குகை (Clearwater Cave) மற்றும் காற்று குகை (Cave of the Winds) ஆகிய இரு குகைகளுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாதை நிறுவப்பட்டது. இந்த இணைப்புப் பாதை, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக நீளமான குகைப் பாதை என்று கூறப்படுகிறது. இந்தச் சுற்றாய்வுகளின் போதுதான் பிளாக்ராக் குகையும் (Blackrock Cave) கண்டுபிடிக்கப்பட்டது.[7]
1991-ஆம் ஆண்டில், பிளாக்ராக் குகைக்கும் கிளியர்வாட்டர் குகைக்கும் இடையே 102 கிமீ (63 மைல்) நீளமுள்ள ஓர் இணைப்புப் பாதை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு, கிளியர்வாட்டர் குகைப் பாதையை, உலகின் 7-வது நீளமான குகைப் பாதையாக மாற்றியது.[3] 1993 - 2000-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், பிரித்தானிய ஆய்வுக்குழுக்கள் முலு மலை பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியை ஆய்வு செய்தனர்.[3]
புடா மலை தேசியப் பூங்கா
[தொகு]1995 - 2000-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், அமெரிக்காவின் தேசிய குகை ஆய்வியல் கழகம் (National Speleological Society) புடா மலையை (Mount Buda) ஆய்வு செய்தது.[8] இந்த ஆய்வுப் பயணங்களின் போதுதான், டெலிவரன்ஸ் குகை (Deliverance Cave) கண்டுபிடிக்கப்பட்டது.[3] 2000-ஆம் ஆண்டில், முலு மலை தேசியப் பூங்காவை, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவித்தது .
முலு மலை தேசியப் பூங்கா, 52,864 எக்டர் (528.64 சதுர கி.மீ. ; 130,630 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டது. இதுவே சரவாக் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்ட மிகப்பெரிய தேசியப் பூங்காவாகும்.[9] 2001-இல், புடா மலை தேசியப் பூங்கா (Gunung Buda National Park), சரவாக் அரசாங்கத்தின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
2003-ஆம் ஆண்டில், அப்பி மலையில் ஒயிட்ராக் குகை எனும் ஒரு புதிய குகை கண்டுபிடிக்கப்பட்டது. 2005-ஆம் ஆண்டில், ஒயிட்ராக் குகை, கிளியர்வாட்டர் குகை அமைப்புடன் இணைக்கப்பட்டது. மேலும் அந்த இணைப்பு, ஒயிட்ராக் குகை அமைப்பை 129.4 கிமீ (80.4 மைல்) வரை நீட்டிக்கச் செய்தது. அப்பி நிலவறையும் அதே 2005-ஆம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.[10] அடுத்தடுத்த ஆய்வுகள் ஒயிட்ராக் குகையில் மேலும் மறைந்த நிலையில் இருந்த குகை நிலவறைகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தின. 2017-இல், ஒயிட்ராக் குகை 100 கிமீ (62 மைல்) ஆகவும், கிளியர்வாட்டர் குகை 226.3 கிமீ (140.6 மைல்) ஆகவும் அளவிடப்பட்டது.[3]
நிலவியல்
[தொகு]முலு மலை தேசியப் பூங்கா உலகில் அதிகம் ஆய்வு செய்யப்பட்ட வெப்பமண்டல சுண்ணாம்புக் கரடு பகுதி ஆகும். இந்தப் பூங்கா 295 கிலோமீட்டர் நீளத்திற்கு குகைகளைக் கொண்டுள்ளது. இதில் மில்லியன் கணக்கான வெளவால்கள்; மற்றும் கூட்டு உழவாரன் பறவைகள் உள்ளன; புரூணையில் இருந்து 100 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[11]
முலு மலை தேசியப் பூங்காவின் நிலப்பரப்பு பொதுவாகவே, கரடுமுரடான சிகரங்கள், செங்குத்தான முகடுகள், மலைப் பாதைகள், பாறைகள், அகன்ற பள்ளத்தாக்குகள், சுண்ணாம்புக் கரடுகளைக் கொண்ட பாறைக் கோபுரங்கள், குகைகள், வெந்நீர் ஊற்றுகள், வெள்ளப்பெருக்குச் சமவெளிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[6]
பொது
[தொகு]முலு மலை தேசியப் பூங்காவில் மூன்று மலைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன: முலு மலை (2,376 மீ - 7,795 அடி)]; அப்பி மலை (1,750 மீ - 5,740 அடி) மற்றும் பெனாரட் மலை (1,858 மீ - 6,096 அடி). [14] முலு மலை ஒரு மணற்கல் மலை; அபி மலை மற்றும் பெனாரத் மலை ஆகியவை சுண்ணாம்பு மலைகள். முலு மலையின் உச்சி பாசி காடுகளால் மூடப்பட்டுள்ளது; அதே சமயத்தில் அபி மலையின் உச்சியில் சுண்ணாம்புக் கற்கள் காணப்படுகின்றன.[12]
பூங்காவின் மூன்று முக்கியமான குகைகள்
- சரவாக் நிலவறை - உலகின் மிகப்பெரிய நிலத்தடி அறைகளில் ஒன்றாகும்; 600 மீ (2,000 அடி) நீளம், 415 மீ (1,362 அடி) அகலம்; குறைந்த பட்ச உயரம் 80 மீ (260 அடி) [6][2][11]
- மான் குகை - உலகின் மிகப்பெரிய குகைப் பாதை; 120 மீ (390 அடி) முதல் 150 மீ (490 அடி) வரையிலான சுற்றளவு[13]
- கிளியர்வாட்டர் குகை - தென்கிழக்கு ஆசியாவின் மிக நீளமான குகை; 227.2 கிமீ வரையிலான நீளத்தைக் கொண்டது[14][15][16]
விலங்கினங்கள்
[தொகு]20,000 வகையான முதுகெலும்பிலிகள், 81 வகையான பாலூட்டிகள், 270 வகையான பறவைகள், 55 வகையான ஊர்வன, 76 வகையான நிலநீர் வாழிகள் மற்றும் 48 வகையான மீன்கள்; 25 வகையான பாம்புகள்; இந்தப் பூங்கா பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.[11][6] அத்துடன் எட்டு வகையான மரத்தலையன் பறவைகள் (Hornbills); 28 வகையான வெளவால்கள் காணப்பட்டுள்ளன. மூன்று மில்லியன் வெளவால்கள் (Cherephon plicatus) இங்கு வாழ்கின்றன.[6]
ஒவ்வொரு நாளும் மாலை வேளையில், மில்லியன் கணக்கான வெளவால்கள் உணவைத் தேடி குகையை விட்டு வெளியேறுகின்றன. அதே நேரத்தில் தகைவிலான் குருவிகள் மற்றும் கூட்டு உழவாரன் பறவைகள் (Swiftlets) குகைக்குள் நுழைகின்றன. மறுநாள் காலையில், இவற்றின் இடம்பெயரும் பாணி தலைகீழாக மாறுகிறது.[6]
தாவரங்கள்
[தொகு]முலு தேசிய பூங்காவில் உள்ள 17 வகையான தாவர மண்டலங்களில் இலட்சக் கணக்கான தாவர இனங்கள் உள்ளன. இதில் 3,500 வகையான கலன்றாவரம் தாவரங்கள், மற்றும் 1,500 வகையான பூக்கும் தாவரங்கள்;[11] 20 வகையான பனைகளில் 109 இனங்கள் உள்ளன.
1,700-க்கும் மேற்பட்ட பாசிகள் மற்றும் ஈரல் புழுக்கள்,[6] 8,000 வகையான பூஞ்சைகள் மற்றும் 442 வகையான வித்து உற்பத்தி செய்யும் பன்னத்தாவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[11]
பூங்கா வாழ் மக்கள்
[தொகு]பூங்காவைச் சுற்றியுள்ள உள்ளூர் மக்கள் ஒராங் உலு , கிப்புட் மக்கள், கென்னியா மக்கள், காயான் மக்கள், மூலுட் மக்கள், மற்றும் பெனான் பழங்குடியினர் ஆகும்.
பெனான் மக்கள் முதலில் ஓரிடத்தில் நிரந்தரமாக வசிக்காமல் நாடோடி வாழ்க்கை முறையைப் பின்பற்றி வந்தனர். ஆனால் அவர்கள் இப்போது முலு பூங்காவின் தென்மேற்கு பகுதியான பத்து பூங்கான் மற்றும் லோங் இமான் ஆகிய இடங்களில் குடியேறியுள்ளனர். அவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையினர் பூங்காவின் கிழக்குப் பகுதிக்கு அருகிலும் குடியேறியுள்ளனர். மற்றும் அவர்களில் 300 பேர் வரையறுக்கப்பட்ட வேட்டைக் களங்களில் பன்றிகள்; மற்றும் மான்களை வேட்டையாடும் உரிமையைப் பெற்றுள்ளனர்.
காற்று குகையில் அகழ்வாராய்ச்சி
[தொகு]பெரவான் மக்களும் இப்பகுதியில் வேட்டையாடும் உரிமையைப் பெற்றுள்ளனர். இங்குள்ள சரவாக் பழங்குடியினர் வழக்கமாக பாரம்பரிய இறகு தொப்பிகளை அணிகிறார்கள். கைகள், மார்பு மற்றும் கழுத்தில் பச்சை குத்திக் கொள்கிறாகள். பெண்கள் சிலர் தங்களின் உடலில் சிறிய வடிவங்களில் பச்சை குத்திக் கொள்கிறார்கள்; மற்றும் தங்களின் தோள்களில் காது மடல்களையும் மாட்டித் தொங்கவிட்டுக் கொள்கிறார்கள்.[6]
2003-ஆம் ஆண்டுகளில், முலு பூங்காவில் உள்ள காற்று குகையில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில், 500 முதல் 3,000 ஆண்டுகள் பழைமையான கலைப் பொருட்களும்; மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.[6]
சர்ச்சைகள்
[தொகு]முலு தேசிய பூங்காவிற்கு அருகில் பெனான் மற்றும் பெரவான் பூர்வீக மக்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். 2019-ஆம் ஆண்டில், காட்டு மரங்களை வெட்டுதல் மற்றும் செம்பனை தோட்டங்களை உருவாக்குதல்; போன்ற தனியார்ச் செயல்பாடுகள் பரிணமித்தன. அந்தச் செயல்பாடுகளினால் பூர்வீக மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஒரு மரம் வெட்டும் நிறுவனத்திற்கு எதிராக பெனான், பெரவான் பூர்வீக மக்கள் முற்றுகை நடத்தினர்.[17]
இருப்பினும் மரம் வெட்டும் நடவடிக்கைகள் முலு தேசியப் பூங்காவின் சூழலியலைப் பாதிக்காது என்று சரவாக் அரசாங்கம் மறுத்தது.[18] இதன் தொடர்ச்சியாக, 15 மார்ச் 2019 அன்று, முலு மலைப் பூங்காவின் பூர்வீக மக்கள் யுனெஸ்கோவிடம் அதிகாரப்பூர்வமாக ஒரு குற்றச்சாட்டைப் பதிவு செய்தனர்.[19]
காட்சியகம்
[தொகு]-
2003-ஆம் ஆண்டில் முகாம் 5
-
கிளியர்வாட்டர் குகையின் நீரூற்று
-
இயற்கைச் சூழல்
-
முலு பூங்கா சுண்ணாம்பு மலை
-
அழகிய முலு பூங்கா
-
சூரியன் மறையும் காட்சி
-
முலு பூங்காவின் பச்சைக் காடுகள்
-
முலு பூங்காவின் லாகாங் குகை
-
முலு பூங்காவின் லாங் குகை நுழைவாயில்
-
முலு பூங்காவின் மான் குகை
-
கிளியர்வாட்டர் குகையின் உட்பாகம்
மேலும் காண்க
[தொகு]- நியா தேசிய பூங்கா
- பத்தாங் ஆய் தேசியப் பூங்கா
- முலு மலை
- மிரி பிரிவு
- மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mulu National Park". Sarawak Forestry Corporation. Archived from the original on 11 July 2018. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
- ↑ 2.0 2.1 "Treks and Trails in Mulu". Gunung Mulu National Park. Archived from the original on 22 August 2018. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "Exploration history". Archived from the original on 29 October 2018. பார்க்கப்பட்ட நாள் 28 October 2018.
- ↑ Robin Hanbury-Tenison (1980). Mulu, the Rain Forest.
- ↑ "RGS Expedition 1977-78". The Mulu Caves Project. Archived from the original on 24 March 2018. பார்க்கப்பட்ட நாள் 28 October 2018.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 6.8 Yi Chuan, Shi (2010). "Gunung Mulu National Park". World Heritage Datasheet. Archived from the original on 27 October 2018. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
- ↑ "Mulu Caves '88". The Mulu Caves Project. Archived from the original on 24 March 2018. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
- ↑ "The Caves of Gunung Buda 1997". National Speleological Society. Archived from the original on 29 October 2018. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
- ↑ "National Parks in Sarawak". Archived from the original on 28 January 2021. பார்க்கப்பட்ட நாள் 17 December 2020.
- ↑ "Benarat 2005". The Mulu Caves Project. Archived from the original on 24 March 2018. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
- ↑ 11.0 11.1 11.2 11.3 11.4 "Gunung Mulu National Park". UNESCO. Archived from the original on 17 October 2018. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
- ↑ "Gunung Mulu National Park – A UNESCO World Heritage". Sarawak Tourism Board. Archived from the original on 30 June 2017. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
- ↑ "Deer Cave and Lang's Cave". Mulu National Park. Archived from the original on 12 July 2015. பார்க்கப்பட்ட நாள் 27 December 2015.
- ↑ "Clearwater cave and Wind Cave". Gunung Mulu National Park. Archived from the original on 12 July 2015. பார்க்கப்பட்ட நாள் 27 December 2015.
- ↑ "Gunung Mulu National Park". Malaysia Tourism Promotion Board. Archived from the original on 17 October 2015. பார்க்கப்பட்ட நாள் 27 December 2015.
- ↑ "The Clearwater Cave System". The Mulu Caves project. Archived from the original on 29 October 2018. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
- ↑ "Logging near Mulu Unesco heritage site still rampant, group claims". Malaysiakini. 16 March 2019 இம் மூலத்தில் இருந்து 16 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190316130137/https://www.malaysiakini.com/news/468259.
- ↑ Larissa, Lumandan (22 February 2019). "Sarawak asst minister: Oil palm project no threat to Mulu National Park". Free Malaysia Today இம் மூலத்தில் இருந்து 1 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190301125423/https://www.freemalaysiatoday.com/category/nation/2019/02/22/sarawak-asst-minister-oil-palm-project-no-threat-to-mulu-national-park/.
- ↑ "Sarawak natives bringing Mulu forest dispute to Unesco's attention". MSN news. 14 March 2019 இம் மூலத்தில் இருந்து 16 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190316213707/https://www.thestar.com.my/news/nation/2019/03/14/swak-natives-bringing-mulu-forest-dispute-to-unescos-attention/.
- Hans P. Hazebroek and Abang Kashim bin Abang Morshidi National Parks of Sarawak, 2000, Perpustakaan Negara Malaysia, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-812-032-4
- David W Gill. "The Gunung Mulu National Park Nomination for World Natural Heritage Listing. Sarawak, Malaysia". 1999. Sarawak Forest Department.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Gunung Mulu National Park தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: முலு மலை தேசியப் பூங்கா
- Sarawak Forestry | Mulu National Park
- Gunung Mulu National Park UNESCO collection on Google Arts and Culture
- Mulu Caves Project