உள்ளடக்கத்துக்குச் செல்

மகாயான பௌத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மகாயானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாடுகள்
இந்தியா • இலங்கை • சீனா • சப்பான்
மியான்மர்
கம்போடியா
ஆங்காங்
தைவான்
கொரியா • வியட்நாம்
தாய்வான் • மங்கோலியா
திபேத்து • பூட்டான் • நேபாளம்
கொள்கை
போதிசத்வர் • Upāya
Samādhi • Prajñā
Śunyatā • Trikāya
மகாயான சூத்திரங்கள்
Prajñāpāramitā Sūtras
தாமரை சூத்திரம்
நிர்வாண சூத்திரம்
சுவர்ணபிரபாச சூத்திரம்
தசபூமிக சூத்திரம்

Saṃdhinirmocana Sūtra
Avataṃsaka Sūtra
ததாகதகர்ப தத்துவம்
Laṅkāvatāra Sūtra
மகாயானப் பிரிவுகள்
மத்தியமிகம்
யோகசாரம்
சௌத்திராந்திக யோகசாரம்
சுகவதி
Esoteric Buddhism
தூய நிலம் • சென் • 
தியாந்தாய் • நிச்சிரென்
வரலாறு
பட்டுப் பாதை • நாகார்ஜுனர்
போதி தருமன்அசங்கர் • 
வசுபந்து
திக்நாகர்
தர்மகீர்த்தி
Portal
போதிசத்துவர்களின் கருணைக்கு உதாரணமாக திகழ்ந்த அவலோகிதர்

மகாயானம் ( சீனம்: 大乘, Dàshèng; ஜப்பானியம்: 大乗, Daijō; கொரிய மொழி: 대승, Dae-seung; வியட்னாமிய மொழி: Đại Thừa; திபெத்திய மொழி: theg-pa chen-po; மங்கோலிய மொழி: yeke kölgen) புத்த மதத்தின் இரு பெரும்பிரிவுகளின் ஒன்றாகும்.[1] மகாயான பௌத்தம் தென்கிழக்காசிய நாடுகளில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்கிறது.[2]

சொற்பொருளாக்கம்

[தொகு]

மகாயானம் என்ற சொல் மஹா மற்றும் யானம் ஆகிய இரு சொற்களால் ஆனது. யானம் என்ற சொல்லுக்கு வழி, பாதை என பொருள்[3] கொள்ளலாம். எனவே, மகாயானம் என்பது பெரிய வழி அல்லது சிறந்த வழி என பொருள் கொள்ளலாம். பௌத்தத்தின் பல பிரிவுகளை விட இது சிறந்தது என்பதையே இந்த பெயர் குறிக்கிறது. மகாயானத்தில் பிற பிரிவுகள் ஹீனயானம் அதாவது தாழ்வான வழி அல்லது குறைபாடுள்ள வழி' என குறிப்பிடப்படுகிறது.

தோற்றம்

[தொகு]

மகாயான பௌத்தத்தின் தோற்றம் சர்ச்சைக்குரியது. ஏனெனில் மகாயான பௌத்தக் கருத்துக்கள் உண்மையில் கௌதம புத்தரின் போதனையா என்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனாலும் மகாயான பௌத்தர்கள், தங்கள் பிரிவு புத்த பகவானாலே உருவாக்கப்பட்டது என கருத்து தெரிவிக்கின்றனர். மகாயான கருத்தின்படி புத்தர் அழிவற்றவர் ஆவார். மகாயான பௌத்தர்கள், பல போதிசத்த்வர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர்.

மகாயான பௌத்தத்தின் படி, அதன் சூத்திரங்கள் புத்தர் இறந்த பிறகு 500 ஆண்டுகள் நாக லோகத்தில் பாதுகாக்கப்பட்டன. ஏனெனில் அப்போது இருந்தவர்களுக்கு அதன் தத்துவங்களை ஏற்றுக்கொள்ளப் பக்குவம் இல்லை. எனவே மனிதர்கள், அந்த பக்குவம் அடையும் வரையில் அவை நாகலோகத்தில் இருந்தன. பிறகு, நாகார்ஜுனர் அந்த சூத்திரங்களை நாக லோகத்தில் இருந்து மீட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. என்வே, மகாயான பௌத்தம், தன்னைப் புத்த பகவானால் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே கருதுகிறது.

மகாயான பௌத்தம், கி.பி. முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மகாயான பௌத்தம் குஷன் அரசர்களால் பரப்பப்பட்டது. லோகக்ஸேமா என்ற குஷன் அரசர் தான் முதன் முதலில் ஒரு மகாயான சூத்திரத்தை சீன மொழியில் மொழிபெயர்த்தார்

"மகாயானா" என்ற சொல்லின் பயன்பாடு, முதன்முதலில் தாமரை சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த தாமரைச் சூத்திரத்தில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டிலேயே மகாயான பௌத்தம் மிகுந்த செல்வாக்குடன் திகழ ஆரம்பித்தது. மகாயான பௌத்தம் சீனா, தாய்வான், கொரியா, வியட்னாம், திபெத் முதலிய பல நாடுகளுக்கு மிக வேகமாக பரவியது.

மகாயான பௌத்தத்திலிருந்தே தந்திர பௌத்தமான வஜ்ரயான பௌத்தம் தோன்றியது. மேலும் இந்த வஜ்யான பௌத்தம் திபெத், பூட்டான், மங்கோலியா போன்ற நாடுகளுக்கு பரவியது

கொள்கைகள்

[தொகு]

மகாயான பௌத்தத்தைக் குறித்து சில விடயங்களே சொல்ல இயலும். அதன் தொடக்க கால நிலையை குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. பல விடயங்கள் தெளிவில்லாமல் உள்ளன. மகாயான என்பது பல சித்தாந்தங்கள், போதனைகளின் ஒரு தெளிவற்ற கலவையாக இருக்கின்றது. இந்த தெளிவற்ற தன்மையினாலே தன்னுள்ளேயே பல முரணான கருத்துகளை இதனுள் அடக்க முடிந்தது.

மகாயானம் ஒரு மிகப் பெரிய மத மற்றும் சித்தாந்த அமைப்பாகும். பாளி சூத்திரங்களுக்கு மேலும் பல பௌத்த சூத்திரங்களை மகாயானம் கொண்டுள்ளது. மகாயான புத்த பகவானின் தர்மத்தை மிகவும் ஆழமாக ஊடுருவக்கூடிய ஒன்றாகத் தன்னைக் கருதுகிறது. இதனாலேயே பல அடிப்படையான பௌத்தக் கருத்துகளில் அது தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. உதாரணமாக மகாபரிநிர்வாண சூத்திரத்தில் புத்தர், தன்னுடைய ஆரம்ப காலக் கருத்துகள் சிறு குழந்தைகள் போல் மன நிலைமை கொண்டவர்களுக்கே என்றும், அவர்களின் அக்கருத்துகளை ஏற்று மனம் பக்குவம் அடைந்ததும் அவர்கள் மகாயான தத்துவங்களை ஏற்றுக்கொண்ட பக்குவம் அடைந்தவர்களாக இருப்பர் என்றும் கூறுகிறார்.

தேரவாத பௌத்தம்

[தொகு]

மகாயான சித்தாந்தம், பாரம்பரிய தேரவாத பௌத்தத்தில் இருந்து பல விடயங்களில் வேறுபடுகின்றது. மகாயானத்தில் துக்க நிவாரணத்தினால் நிர்வாணம் அடைவதென்பது இரண்டாம் பட்சமானது. மகாயான சித்தாந்தத்தில் புத்தர் அழியாதவர், மாறாத்தன்மையுடையவர், எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர், மேலும் எங்கும் நிறைந்திருப்பவர். மகாயான பௌத்தத்தில் போதிசத்துவர்கள் என்றழைக்கப்படும் பல தெய்வீக-குணங்களை கொண்டவர்கள் வணங்கப்படுகிறார்கள். போதிசத்துவர்கள் தங்களை மற்ற உயிர்கள் நிர்வாணம் அடைவதற்கு உதவுவதற்காக தாங்கள் புத்தத்தன்மை அடைவதை தாமதப்படுத்துபவர்கள்.

ஸென் பௌத்தம்

[தொகு]

சென் புத்தமதம் போதிசத்துவர்களை அல்லாது தியானத்தை மையமாக கொண்ட மகாயான பௌத்த பிரிவாகும். மகாயானத்தில் புத்த பகவான் மிகவும் உச்ச நிலையில் உள்ள ஒருவர், அவர் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருப்பவர் மற்றும் போதிசத்த்வர்கள் பிறர் நலத்துக்காக தான் போதி நிலை அடையாதவர்கள்.

அடிப்படைத் தத்துவம்

[தொகு]

எல்லா உயிர்களும் மோட்சமடைய வாய்ப்புள்ளவர்கள் என்பதே மகாயான பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவம். மேலும் பல புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் வழிபாடும், புத்தரின் அழியாத்தன்மையும் அதன் அடிப்படை தத்துவத்தினுள் அடங்கும். சில மகாயான பிரிவுகளில், மோட்சம் ஒரு புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள பக்தியினாலும் நம்பிக்கையினாலும் மட்டுமே எளிதாக அடைந்துவிடலாம். இதனால் சாதாரண மக்களை மகாயான பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது, அதன் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். சுகவதி பௌத்தத்தில் அமிதாப புத்தரின் பெயரை உச்சரிப்பதாலேயே மோட்சம் கிடைத்துவிடுவதாக நம்புகின்றனர். மேலும் மந்திரங்கள் மற்றும் தாரணிகளை உச்சரித்தல், மகாயான சூத்திரங்களைப் படித்தல் முதலிய செயல்களாம் நல்ல கர்மத்தை சம்பாதிக்கலாம் என்பது மகாயனத்தின் ஒரு கருத்து.

மகாயான பௌத்தத்தில், ஒரு மகாயான சூத்திரத்தின் மீதும் அதன் கருத்துகள் மீதும் உறுதியாய் இருத்தல் தர்மத்திற்கான ஒரு தலைசிறந்த செயலாகும். மகாயான சூத்திரங்கள் தெய்வீகத்தன்மை உடையதாக நம்பப்படுகின்றன. அதை வாசிப்பதால் ஒருவருடைய தீய கர்மங்கள் விலகி நல்ல கர்மங்கள் ஒருவருக்கு கிடைக்கின்றது.

ஆதி கால பௌத்தத்தின் தாக்கம்

[தொகு]

பல அறிஞர்களின் கூற்றுப்படி, மகாயான சித்தாந்தம் ஆதி காலப் பௌத்தத்தின் கருத்துகளை அடிப்படையக கொண்டு எழுந்த ஒரு பிரிவாகும். மகாயான பௌத்தத்திற்கும் தேரவாத பௌத்தத்திற்கும் அடிப்படை பௌத்த கருத்துகளின் வேறுபாடு இல்லை. மகாயானத்தில் வித்துகள் பழமையான தேரவாத பௌத்தத்திலும் காணப்படுகின்றன. ஜாதகக் கதைகளில் உள்ளது போல், புத்த பக்தி, போதிசத்துவம் முதலிய கருத்துகள் இரண்டு பிரிவிகளுக்கும் பொருந்தும், மகாயானம் புத்தரின் தெய்வீகத்தன்மைக்கு அதிக முக்கியவம் அளித்தது, மாறாக தேரவாதம் அவருடைய மனித இயல்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தது.

பல ஆதி கால மகாயான சூத்திரங்களில், புத்த பகவான் துஷீத லோகத்திலிருந்த அவதரித்த கதைகளும், பல தேவர்கள், நாகர்கள், காந்தர்வர்கள் முதலியவர்கள் புத்த பகவானை வணங்கிய கதைகளும் காணக்கிடைக்கின்றன. எனவே இவற்றிலிருந்தே மகாயன சூத்திரங்கள் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மகாயான பௌத்தத்தின் கூறுகள்

[தொகு]
  • 'அனைவருக்கும் மோட்சம்'
  • 'போதிசித்தம்'
  • 'கருணை'
  • 'ரட்சிப்பு'
  • 'ததாகதகர்ப தத்துவம்'

தத்துவம் சார்ந்த மகாயான பௌத்தம் முதல் மூன்று கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. மாறாக பக்தி சார்ந்த மஹயானம் இறுதி இரண்டு கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருகின்றது.

அனைவருக்கும் மோட்சம்

[தொகு]

மகாயானத்தில் அருகத்தன்மை அடைவது இறுதியான நிலையல்ல. அருக நிலைக்குப் பிறகு சம்யக்சம்புத் தன்மையை அடைவதே இறுதியான நிலையாகும். புத்தர்கள் இறக்கும் போது நிர்வாணமும், இறந்த பிறகு மகாபரிநிர்வாணமும் அடைகின்றனர். அந்த நிலையே புத்தத்தன்மை ஆகும். மகாயான கருத்துகளின் படி அனைவரும் ஒரு காலகட்டத்தில் சம்யக்சம்புத்தன்மையை அடைவர்.

அனைவரும் போதி நிலையை அடையத் தகுந்தவர்கள் என்பது மகாயனத்தின் முக்கிய கருத்துகளுள் ஒன்று. மற்ற பிரிவுகளில் துறவு சார்ந்த வழியை பின்பற்றுபவர்களுக்கே போதி கிடைக்கும் என்ற கருத்து உள்ளது. அனால் மகாயனத்தில், பாமரர்களும் எளிதாகப் பல்வேறு வழிகளில் போதி நிலையை அடைய இயலும்.

போதிசத்துவம்

[தொகு]

மகாயான சூத்திரங்களின் படி, ஹீனயான பௌத்தம் மிகவும் மோட்சத்திற்கு மிகவும் குறுகலான பாதையை கொண்டது. ஏனெனில் அனைவரையும் சம்சாரத்தில் இருந்து விடுவிக்கத் தேவையான ஊக்குவிப்பு அதில் காணப்படவில்லை. மேலும் ஹீனயானத்தில் மோட்சம் அடைவதற்கான வழி துறவு சார்ந்த ஒன்றாகவும், சுய-சார்பு கொண்டதாகவும் உள்ளது. இதைப் பன்பற்றி புத்தத்தன்மை அடைந்தவர்களை மகாயான பௌத்தத்தில், ஸ்ராவகபுத்தர்கள் மற்றும் ப்ரத்யேகபுத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

மகாயான பௌத்தத்தின் முக்கியமான குறிக்கோள் போதிசித்தம். போதிசித்தம் என்பது மற்ற உயிர்கள் வீடுபேறு அடைவதற்காகப் புத்ததன்மையை அடைய நினைக்கும் நிலை ஆகும். ஒரு சிறந்த போதிசத்துவராகத் திகழ, மகா காருண்யம், பிரக்ஞை, சூன்யத் தன்மையை உணருதல் மற்றும் ததாகதகர்ப தனமையை உணரக்கூடிய ஒரு மேன்மையான மனம் தேவைப்படுகிறது. இந்த மன நிலையில் தான் ஒரு போதிசித்தத்தை உணர இயலும். போதிசத்துவத் தன்மைக்குத் தேவையான ஆறு ஒழுக்கங்கள் தானம், சீலம், சாந்தி (பொறுமை), வீர்யம், தியானம் மற்றும் பிரக்ஞை.

கருணை

[தொகு]

கருணை, என்பது மகாயனத்தின் முக்கிய கருத்துகளுள் ஒன்றாகும். கருணை என்பது போதிசித்ததிற்கு அத்தியாவசியமான ஒரு குணம். மகாயான பௌத்தத்தின் படி, கருணையினால் ஒருவருடைய நல்ல கர்மங்களை மற்றவர்களுக்கு அளிக்கலாம்.

போதிசத்துவர்கள் கருணையில் இருப்பிடமாக கருதப்படுபவர்கள். உலக உயிர்களின் நன்மைக்காக தங்களது சொந்த மோட்சத்தையே தாமதப்படுத்துபவர்கள். அதில் முக முக்கியமாக அவலோகிதேஷ்வரர், பிரபஞ்ச புத்த்ர்களின் கருணையின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்கிறார். போதித்துவர்கள் கருணையின் காரமாக மற்றா உயிர்கள் புத்தத்தன்மை அடைய உதவி செய்கின்றனர்.

மகாயானத்தில் மோக்‌ஷம் என்பது அனைவருக்கும் உரியது. எனவே ஒரு சுய துக்கத்திலிருந்து விடுபடுவதை விட, மற்றவர்களுக்கு கருணையுடன் உதவி புரிதல் முக்கியமாகும்.

உபாயம்

[தொகு]

உபாயம் என்ற சொல் முதன்முதலில் தாமரைச் சூத்திரத்தில் இடம் பெற்றது. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். 'உபாயம்' என்றால் போதி நிலை அடைவதற்காக ஏற்படுத்தப்படும் ஒரு முறை அல்லது தந்திரம். இந்த முறையினை பயன்படுத்தி ஒருவர் போதி நிலை அடைவதற்கு உதவி செய்யலாம். அதாவது ஒருவர் போதித்தன்மை அடைய எளிதாக்க பயன்படுத்தக்கூடிய ஒரு உபாயம். அனைவராலும் தர்மத்தையும், போதியையும் உணருதல் இயலாது. எனவே அவர்களும் இதை அடைய அவர்களுக்கு தகுந்தாற்போல் ஒரு உபாயத்தை நாம் கையாளவேண்டும். எந்த முறை புத்தத்தர்மத்தை உணரவைக்கிறதோ அதை உபாயம் என்று அழைக்கலாம்,

ரட்சிப்பு

[தொகு]

மகாயானத்தில், பல தேவர்களும், போதிசத்துவர்களும் வெவ்வேறு லோகங்களின் வசிக்கின்றனர். அவர்களின் உதவியோடு ஒருவர் போதி நிலையை எளிதாக அடையலாம். த்ரிகாய தத்துவம், புத்தரை கடவுள் போன்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது.

போதிசத்துவர்களும் புத்தர்களும் வாழும் உலகில் மறுபிறயெடுக்க ஒரு குறிப்பிட்ட புத்தரையோ, போதிசத்துவரின் மீதோ பக்தி செலுத்துகின்றனர். அவர்களின் இந்த பக்தியின் காரணமாக அந்த புத்த உலகத்திலேயோ அல்லது போதிசத்துவ உல்கத்திலேயோ மறுபிறவி கிடைக்கும் என எண்ணுகின்றனர். ஏனெனில் இந்த உலகங்களில், போதி நிலை அடைவது மிகவும் எளிது. உதாரணமாக சுகவதி பௌத்தத்தில், அமிதாப புத்தரை 'நமோ அமிதாப புத்தா' என்ற மந்திரத்தால் போற்றினால், அமிதாப புத்தருடைய உலகமான சுகவதியில் மறுபிறவி நடக்கும் எனபது நம்பிக்கை.

எனவே போதி நிலை, தன் சொந்த முயற்சியால் அல்லாது பல்வேறு புத்தர்களினாலும் போதிசத்துவர்களினாலும் கிடைக்கும் என்பது மகாயானத்தின் தத்துவம்.

ததாகதகர்ப தத்துவம்

[தொகு]

ததாகதகர்ப தத்துவத்தின் படி, அனைவருள்ளும் புத்தத்தன்மை உள்ளர்ந்த நிலையில் இயற்கையாக உள்ளது.இதன் கருத்து என்னவென்றால், அனைவருக்கும் போதி நிலையுடன் ஒரு உள்ளார்ந்த தொடர்பு உள்ளது. ஒருவர் அதை உணர்ந்து புத்தத்தன்மை அடைவதும் அடையாததும் ஒருவரின் முயற்சியை பொருத்தது. புத்ததாது அழிக்கமுடியாத ஒன்று, அனைத்து உயிர்களிடத்தும் காணப்படுவது.

இந்த புத்ததாது(बुद्धधातु) அல்லது ததாகதகர்பம் அனைத்து உயிர்களின் ஒரு பகுதியாகத் திகழ்வது. இதை குறித்த கருத்துகள் ததாகதகர்ப சூத்திரங்களில் விரிவாக உள்ளன. இந்த ததாகதகர்பம் இயற்றப்படாத மற்றும் அழிவற்ற ஒன்று ஆகும். ஒருவர் இடத்தில் உள்ள தீய எண்ணங்கள் விலகி, ஆசைகளை அழிக்கும் போது, மனத்திரை விலக்கப்பட்டு இந்த புத்ததாது ஒருவரை புத்தராக உருமாற்றுகிறது. எனவே அனைவரிடத்திலும் புத்தத்தன்மை அடங்கியுள்ளதால் அனைவருமே போதி நிலையை அடையத் தகுந்தவர்கள்

மகாயான சூத்திரங்கள்

[தொகு]

தேரவாத பௌத்ததை போல், மகாயான பௌத்தமும் தனது கருத்துகளை சூத்திரங்களில் பதிவு செய்துள்ளது. தேரவாத பாலி சூத்திரங்களுடன் சேர்ந்து பல்வேறு கூடுதலான சூத்திரங்களை தன்பால் கொண்டுள்ளது. மகாயான நூல்கள் கி.பி முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இயற்றாப்பட்டு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

இவற்றுள் முக்கியமான சூத்திரங்களாவன, தாம்ரை சூத்திரம், பிரக்ஞா-பாரமித சூத்திரம், அவதம்சக சூத்திரம், விமல கீர்த்தி சூத்திரம் மற்றும் நிர்வான சூத்திரம்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mahayana Portal". www.wisdomlib.org. பார்க்கப்பட்ட நாள் 2023-04-12.
  2. "Buddhists in South Asia | Encyclopedia.com". www.encyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-12.
  3. MW சமஸ்கிருத மின்னகராதி சோதனை பதிப்பு 1.5


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாயான_பௌத்தம்&oldid=3694333" இலிருந்து மீள்விக்கப்பட்டது