உள்ளடக்கத்துக்குச் செல்

காமன்வீல் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொது மக்களின் நலம் கட்சி (Commonweal party) 1951-54 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கரால் பள்ளியர் சாதியினரின் நலனுக்காகத் தொடங்கப்பட்டது. 1951ல் பள்ளிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி பள்ளியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவருகளுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த மாணிக்கவேலு பொது மக்களின் நலம் கட்சியினைத் தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட பள்ளியர்கள் எஸ். எஸ். ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் காமன்வீல் கட்சியும் ஒன்று.

மாணிக்கவேலு உட்பட 6 காமன்வீல் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1] இக்கட்சி வேட்பாளார்கள் மக்களவைக்கான தேர்தலில் மூன்று இடங்களில் வென்றனர். ஆரம்பத்தில் த. பிரகாசம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று காமன்வீல் கட்சி. அரசுக்கு மாணிக்கவேலு அளித்த ஆதரவுக்கு பிரதிபலனாக அவருக்கு ராஜாஜியின் அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. 1954இல் காமராஜர் முதல்வரான பின்னர் மாணிக்கவேலுவுக்கு விற்பனை வரித்துறையும் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டது. 1954ல் அவர் பொது மக்களின் நலம் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார்.[2]

இக்கட்சியும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் இன்றைய பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. G. G. Mirachandani (2003). 320 Million Judges. Abhinav Publications. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-061-7.
  2. John L. Varianno, Jean-Luc Racine and Viramma Josianne Racine (1997). Viramma: life of an untouchable. Verso. p. 293. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85984-817-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமன்வீல்_கட்சி&oldid=3899277" இலிருந்து மீள்விக்கப்பட்டது