த. பிரகாசம்
ஆந்திராகேசரி தங்குதரி பிரகாசம் | |
---|---|
![]() த. பிரகாசம் அவர்களின் உருவப்படம் பொறித்த இந்திய அஞ்சல் தலை | |
ஆந்திரா மாநில முதலமைச்சர் | |
பதவியில் அக்டோபர் 1, 1953 – நவம்பர் 15, 1954 | |
பின்னவர் | பெசவாடா கோபால ரெட்டி |
சென்னை மாகாண பிரதமர் | |
பதவியில் ஏப்ரல் 30, 1946 – மார்ச் 23, 1947 | |
ஆளுநர் | என்றி ஃபோலி நைட் ஆர்ச்சிபால்டு நை |
முன்னையவர் | ஆளுநர் ஆட்சி |
பின்னவர் | ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வினோத ராயுடு பாலம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா ![]() | ஆகத்து 23, 1872
இறப்பு | மே 20, 1957 ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம் | (அகவை 84)
தேசியம் | இந்தியர் |
பணி | வழக்கறிஞர், எழுத்தாளர், ராசதந்திரி |
தொழில் | வழக்கறிஞர் |
சமயம் | இந்து |
த. பிரகாசம் (ஆகஸ்ட் 23, 1872 – மே 20, 1957) இந்திய சுதந்தர போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் பிரதமர்[1] (முதல்வர்) ஆவார். இவர் ஆந்திர மாநிலம் உருவானபோது அதன் முதல் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
பிறப்பும் படிப்பும்
[தொகு]பிரகாசம் 1872 ஆம் ஆண்டு தற்கால ஆந்திர மாநிலம், ஒங்கோல் நகரத்தின் அருகேயுள்ள வினோத ராயுடு பாலம் என்ற கிராமத்தில் பிராமண ஜாதியில் பிறந்தார். இவரது பெற்றோர் வெங்கட நரசிம்மன் மற்றும் சுப்பம்மாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், சென்னையில் இரண்டாம் நிலை வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
சுதந்திர போராட்டத்தில்
[தொகு]1907 ஆம் ஆண்டு வங்காள தேசியவாதி பிபின் சந்திர பால், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாக ஆந்திரத்தில் கைது செய்யப் பட்டார். அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரகாசம் தன் வாதத் திறமையால் பாலின் தண்டனைக் காலத்தைக் குறைத்தார். 1921 இல் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். வழக்கறிஞர் பணியைத் துறந்து, சுராஜ்யம் என்ற தேசியவாத நாளிதழைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார். 1926 ஆம் ஆண்டு மத்திய நாடாளுமன்றத்திற்கு காங்கிரசு வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1928 இல் சைமன் கமிஷனுக்கு எதிராகச் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு தீரத்துடன் போலீஸ் அடக்குமுறைகளை எதிர் கொண்டதால், “ஆந்திர கேசரி” என்ற பட்டம் இவருக்கு வழங்கப் பட்டது. 1930 இல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]1937 இல் சென்னை மாகாணத்திற்கு மாநில சுயாட்சி முறையின் கீழ் முதல் தேர்தல் நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரசு பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரகாசம் காங்கிரசு உறுப்பினர்களின் தலைவராக இருந்தார். தமிழ் – தெலுங்கு உறுப்பினர்களிடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி தமிழரான ராஜகோபாலாச்சாரி முதல்வரானார். அடுத்த முறை தெலுங்கர் ஒருவருக்கு முதல்வர் வாய்ப்பு தரப்பட வேண்டுமென இரு குழுவினரும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். ராஜாஜியின் அமைச்சரவையில் பிரகாசம் வருவாய்த் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1939 அக்டோபரில், மற்ற அமைச்சர்களுடன் சேர்ந்து ஆங்கில அரசைக் கண்டித்து தன் பதவியை ராஜினாமா செய்தார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1945ல் விடுதலை செய்யப்ப் பட்டார்.
முதல்வராக
[தொகு]மாநில சுயாட்சியின் கீழ் 1946 இல் நடைபெற்ற இரண்டாம் தேர்தலில் காங்கிரசு மீண்டும் வெற்றி பெற்றது. யார் சென்னை மாகாணத்தின் பிரதமராவது என்று தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியது. காந்தி, நேரு போன்ற தேசியத் தலைவர்கள் ராஜகோபாலாச்சாரி பிரதமராக வேண்டுமென விரும்பினார். முத்துரங்க முதலியாரை முதல்வராக்க காமராஜர் முயன்றார். ஆனால் தெலுங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரகாசம் ஏப்ரல் 30, 1946 இல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரது அமைச்சரவையில் வி. வி. கிரி, பக்தவத்சலம், அவிநாசிலிங்கம் செட்டியார், பாஷ்யம் அய்யங்கார், குமாரசாமி ராஜா, டேனியல் தாமஸ், ருக்மணி லட்சுமிபதி, கே. ஆர். கரந்த், கோட்டி ரெட்டி, வேமுல குர்மய்யா, வீராசாமி, ராகவ மேனன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
பிரகாசத்தின் ஆட்சிக் காலத்தில், கம்யூனிஸ்டுகள் தெலுங்கானா மலபார், தஞ்சைப் பகுதிகளில், ஆயுதப்புரட்சியைத் தொடங்கினர். பிரகாசம் அப்புரட்சியை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார். பதவியேற்ற ஓராண்டிற்குள் காமாராஜருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காமராஜர், பிரகாசத்துக்குப் பதிலாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை பிரதமராக்க முயன்றார். கால வெங்கட ராவ், நீலம் சஞ்சீவ ரெட்டி போன்ற ஆந்திர தலைவர்களின் ஆதரவுடன், பிரகாசத்தைக் காங்கிரசு சட்டமன்றத் தலைவர் தேர்தலில் ஓமந்தூரார் தோற்கடித்தார். மார்ச் 23, 1947 இல் பிரகாசம் பிரதமர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார்.
காங்கிரசு எதிர்ப்பு
[தொகு]1951 இல், பிரகாசம் காங்கிரசிலிருந்து விலகி ஹைதராபாத் பிரஜா கட்சி என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். பின்னர் ஆசார்யா கிருபாளினி தொடங்கிய கிசான் மசுதூர் பிரஜா கட்சியில் தன் கட்சியை இணைத்துக் கொண்டார். 1952 தேர்தலில் போட்டியிட்டு பிரகாசம் கட்சி 35 இடங்களில் வென்றது. இத்தேர்தலில் எக்கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கம்யூனிஸ்ட் உட்பட்ட எதிர்கட்சிகள் பிரகாசம் தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரின. ஆனால் சென்னை ஆளுனர் ஸ்ரீ பிரகாசா அவர்களை ஆட்சியமைக்க அழைக்க மறுத்து மாறாக ராஜகோபாலச்சாரியை ஆட்சியமைக்க அழைத்து விட்டார். பின்பு கிசான் மசுதூர் கட்சி பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சியுடன் இணைந்தது.
ஆந்திர மாநில முதல்வர்
[தொகு]அக்டோபர் 1953 இல் தனி ஆந்திர மாநிலம் உருவானபோது, பிரகாசம் அம்மாநிலத்தின் முதல் முதலமைச்சரானார். ஆனால் அவரது ஆட்சி கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியால் ஒரே ஆண்டில் கவிழ்ந்தது.
மரணம்
[தொகு]பிரகாசம் 1955 ஆம் ஆண்டு அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். 1957 ஆம் ஆண்டு ஒங்கோல் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது வெயில் வெப்பத்தாக்குதலால் பாதிக்கப்பட்டு மே 20, 1957 இல் மரணமடைந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நடராசன் புகழுடம்பு எய்திய கதை". Hindu Tamil Thisai. Retrieved 2022-02-01.