ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அப்துல் கலாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
11ஆவது இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
25 சூலை 2002 – 25 சூலை 2007
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
மன்மோகன் சிங்
Vice Presidentகிருஷண் காந்த்
பைரோன் சிங் செகாவத்
முன்னையவர்கே. ஆர். நாராயணன்
பின்னவர்பிரதிபா பாட்டீல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம்

(1931-10-15)15 அக்டோபர் 1931
இராமேசுவரம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு27 சூலை 2015(2015-07-27) (அகவை 83)
சில்லாங், மேகாலயா, இந்தியா
இளைப்பாறுமிடம்அப்துல் கலாம் தேசிய நினைவகம்
தேசியம்இந்தியர்
துணைவர்திருமணம் புரியவில்லை
முன்னாள் கல்லூரிதூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
சென்னை தொழில்நுட்ப நிறுவனம்
தொழில்வான்வெளிப் பொறியாளர்
விருதுகள்பத்ம பூசன் (1981)
பத்ம விபூசன் (1990)
பாரத் ரத்னா (1997)
ஊவர் பதக்கம் (2009)
எழுதிய நூல்(கள்)அக்னிச் சிறகுகள்
இந்தியா 2020
கையெழுத்து
இணையத்தளம்abdulkalam.com
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
துறைவான்வெளிப் பொறியியல்
பணியிடங்கள்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
இந்திய விண்வெளி ஆய்வு மையம்

ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகின்ற இவர் ஒரு இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றினார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால், இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக இவர் முக்கிய பங்காற்றினார்.

2002 ஆம் ஆண்டில், இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதான எதிர்க் கட்சியான இந்திய தேசிய காங்கிரசு கட்சிகளின் ஆதரவுடன், இலட்சுமி சாகலை தோற்கடித்து, இவர் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் "மக்கள் சனாதிபதி" என்று பரவலாகக் குறிப்பிடப்படுகின்றார். பிற்கால வாழ்வில் இவர் கல்வி, எழுத்து மற்றும் பொதுச் சேவைக்கு திரும்பினார். பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் ஆக பணியாற்றினார்.

இவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுகளுக்காகவும், இந்திய மாணவர் சமூகத்துடன் நடத்திய கலந்துரையாடல்களுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். இவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.

தொடக்க வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டில் உள்ள இராமேசுவரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆசியம்மா ஆகியோருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.[1][2][3][4] இவரது தந்தை ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையே மக்களைப் படகில் அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.[5][6] இவருக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருந்தனர்.[7][8][9] இவரது மூதாதையர்கள் வணிகர்கள் மற்றும் நில உரிமையாளர்களாக இருந்தனர்.1914 இல் பாம்பன் பாலம் திறக்கப்பட்ட பிறகு, இவர்களது படகோட்டும் தொழில் பாதிப்படைந்தது. கலாம் பிறந்த நேரத்தில் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் சிறுவனாக இருந்தபோது இவர் குடும்பத்தின் துயரைப் போக்க செய்தித்தாள்களை விற்க வேண்டியிருந்தது.[10][11]

தனது பள்ளிப் பருவத்தில், கலாம் சராசரி மாணவராக இருந்தார். ஆனால் கல்வி கற்க வேண்டும் என்ற விருப்பமுள்ள ஒரு கடின உழைப்பாளியாக விவரிக்கப்பட்டார். இவர் தனது படிப்பில், குறிப்பாக கணிதம் கற்பதில் நேரத்தைச் செலவிட்டார்.[12] இராமநாதபுரம் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வியை முடித்த கலாம், 1954 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார்.[13] கலாம் 1955 இல் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிக்க சென்றார்.[4] இவர் ஒரு மூத்த வகுப்பு திட்டத்தில் பணிபுரிந்தபோது, இவரது பங்களிப்பில் அதிருப்தி அடைந்த ​​கல்லூரியின் தலைவர், அடுத்த மூன்று நாட்களுக்குள் திட்டத்தை முடிக்காவிட்டால் இவரது உதவித்தொகையை இரத்து செய்வதாக அச்சுறுத்தினார். இந்தக் காலக்கெடுவிற்குள் இதனை முடித்த கலாம், கல்லூரி தலைவரின் நன்மதிப்பை பெற்றார். அங்கு அவர் முதுகலை பட்டம் பெற்றார்.[14] இவர் இந்திய வான்படையில் விமானி ஆவதற்கான தகுதிச் சுற்றில் நூலிழையில் வாய்ப்பைத் தவறவிட்டதனால், போர் விமானி ஆக வேண்டும் என்ற இவரது கனவு நிறைவேறாமல் போனது.[15]

அறிவியல் பணித்துறை[தொகு]

சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் 1960 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த கலாம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) வானூர்தி அபிவிருத்திப் பிரிவில் அறிவியலாளராக சேர்ந்தார். இவர் ஒரு சிறிய காற்றுமெத்தை உந்தை வடிவமைப்பதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் இவரின் பனி மீது தொடர்ந்து நம்பிக்கையில்லாமல் இருந்தார்.[16] இதன் காரணமாக, இவர் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவில் (INCOSPAR) சேர்ந்தார். அங்கு புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியான விக்ரம் சாராபாயின் கீழ் பணிபுரிந்தார்.[4] இவர் பின்னர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) தும்பா ஏவுதளத்தின் முதல் இயக்குனரான மூர்த்தியால் பணியமர்த்தப்பட்டார்.[17] 1969 ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவூர்தி (எஸ். எல். வி-III) திட்ட இயக்குநராக இருந்தார். இந்த ஏவூர்தி வெற்றிகரமாக ரோகினி என்ற செயற்கைக்கோளை சூலை 1980 இல் பூமிக்கு அருகில் இருந்த சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. 1965 ஆம் ஆண்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் ஒரு புதிய ஏவூர்தி வடிமைக்கும் திட்டத்தை கலாம் தொடங்கினார்.[18] 1969 ஆம் ஆண்டில், திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றார்.[19]

1963–64 இல், இவர் நாசாவின் வர்ஜீனியாவில் லாங்க்லி ஆராய்ச்சி மையம், மேரிலாந்து கிரீன்பெல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம் மற்றும் வாலோபசு வானூர்தி மையம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார்.[2][20] 1970லிருந்து 1990 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கலாம் முனைய துணைக்கோள் ஏவுகலம் மற்றும் எஸ்.எல்.வி-III திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன. கலாம் அணு ஆயுத வடிவமைப்பில் பங்கேற்காதபோதிலும், நாட்டின் முதல் அணு ஆயுத சோதனையான சிரிக்கும் புத்தர் திட்டத்தைக் காண்பதற்காக ராஜா ராமண்ணாவால் அழைக்கப்பட்டார். 1970களில், கலாம் வெற்றிகரமான ஏவூர்தி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து ஏவுகணை உற்பத்திக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வாலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார்.[21] மத்திய அமைச்சரவை ஆதரிக்காதா போதிலும், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனது சிறப்பு நிதியின் கீழ் கலாமின் விண்வெளி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினார்.[21]

இவரது ஆராய்ச்சி மற்றும் தலைமையால் இவருக்குக் கிடைத்த வெற்றியால், 1980 களில், இந்திய அரசாங்கம் இவரின் இயக்கத்தின் கீழ் ஒரு கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்கியது.[21] அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட்ராமனின் ஆலோசனையின் பேரில், திட்டமிட்ட ஏவுகணைகளை ஒன்றன் பின் ஒன்றாக வடிவமைப்பதற்கு பதிலாக ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை உருவாகும் பணியில் ஈடுபட்டார்.[22] இந்த திட்டத்திற்காக இந்திய அரசு 388 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதன் தலைவராக கலாம் நியமிக்கப்பட்டார்.[22] அக்னி மற்றும் பிரித்வி உட்பட பல ஏவுகணைகளை இந்த திட்டத்தின் கீழ் உருவாக்குவதில் கலாம் முக்கிய பங்கு வகித்தார். இவரின் நிர்வாகம் அத்துமீறிய செலவு மற்றும் கால அவகாசத்தை மீறுதல் ஆகியவற்றிற்காக விமர்சிக்கப்பட்டது.[22][23]

சூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இவர் இந்த சமயத்தில் நடந்த பொக்ரான் அணு ஆயுத சோதனையில் அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களித்தார். சோதனை கட்டத்தில் கலாம், இரா. சிதம்பரத்துடன் சேர்ந்து தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.[2][24] ஊடகங்கள் எடுத்த புகைப்படங்கள் கலாமை நாட்டின் உயர்மட்ட அணு அறிவியலாளராக உயர்த்திக்காட்டியது.[25]

1998 இல் இதய மருத்துவரான மருத்துவர் சோம ராஜுவுடன் இணைந்து ஒரு குறைந்த செலவிலான உறைகுழாயை உருவாக்கினார். இது "கலாம்-ராஜூ உறைகுழாய்" எனப் பெயரிடப்பட்டது.[26][27] 2012 இல் இவர்கள் வடிவமைத்த கைக் கணினி, "கலாம்-ராஜூ கைக் கணினி" என்று பெயரிடப்பட்டது.[28]

குடியரசுத் தலைவர் பதவி[தொகு]

10 சூன் 2002 அன்று, ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய சனநாயக கூட்டணி, கலாமை குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைப்போம் என்று அறிவித்தது.[29][30] இவர் 2002இல் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் 9,22,884 வாக்குகள் பெற்று 1,07,366 வாக்குகளைப் பெற்ற இலட்சுமி சாகலை தோற்கடித்து வெற்றி பெற்றார். இவர் 25 சூலை 2002 முதல் 25 சூலை 2007 வரை பணியாற்றினார்.[31][32] கலாம் இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராக, கே ஆர் நாராயணனுக்குப் பிறகு பணியாற்றினார்.[33] இவர் சூலை 25 அன்று குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார்.[34]

விளாடிமிர் புடின் (நடு) மற்றும் மன்மோகன் சிங் (வலது) ஆகியோருடன் கலாம்

கலாம் "மக்களின் ஜனாதிபதி" என்று அன்பாக அழைக்கப்பட்டார்.[35][36][37] இவர், ஆதாயம் தரும் பதவி மசோதாவை கையெழுத்திடுவதே தனது பதவி காலத்தில் எடுத்த கடினமான முடிவு என்று கூறுகிறார்.[38][39] இந்திய அரசியலமைப்பின் 72 வது சட்டத்தின் கீழ் மன்னிப்பு வழங்கல், இறப்பு தண்டனை வழங்கல் மற்றும் நிறுத்தல் ஆகியவற்றை செயல்படுத்த சனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலாம் தனது பதவிக் காலத்தில், தன்னிடம் வந்த 21 கருணை மனுக்களில் ஒன்றை மட்டுமே நிராகரித்தார், மற்ற மனுக்களின் மீது முடிவெடுக்காமல் இருந்தார்.[40] செப்டம்பர் 2003 இல், நாட்டின் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் பொது உரிமையியல் சட்டம் தேவை என்று கலாம் தெரிவித்தார்.[41][42][43][44]

20 சூன் 2007 ஆம் தேதியில், தனது பதவிக் காலத்தின் இறுதியில், 2007 குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வெற்றி நிச்சயமாக இருந்தால் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.[45] எனினும், இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்தார்.[46] இவருக்கு ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய சில தலைவர்கள் ஆதரவு தெரிவித்தாலும், ஆளும் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடது சாரிகளின் ஆதரவு இல்லாததால், இந்த முடிவை எடுக்க நேர்ந்தது.[47]

சூலை 2012 இல், 12 வது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலின் பதவிக் காலம் முடிவுறும் நிலையில், ஏப்ரலில் ஊடக அறிக்கைகள் இரண்டவது முறையாக கலாம் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்படலாம் என்று கூறின.[48][49][50] திரிணாமூல் காங்கிரசு மற்றும் சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, அனைத்து கட்சிகளும் ஆதரித்தால் இதை ஏற்பதாகக் கூறியது.[51][52] தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு முலாயம் சிங் யாதவ் தனது ஆதரவில் பின்வாங்கினார் மற்றும் ஆம் கட்சியான காங்கிரசு கலாமின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தது.[53] இதையடுத்து, 18 சூன் 2012 அன்று, கலாம் 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்தார்.[54]

விமர்சனங்களும், சர்ச்சைகளும்[தொகு]

போக்ரான் II இன் நம்பகமான மற்றும் உண்மை அறிக்கை பற்றிய பற்றாக்குறையால், ஒரு விஞ்ஞானியாக கலாமைச் சுற்றி சர்ச்சை உள்ளது. தள சோதனை இயக்குனர் கே. சந்தானம் வெப்ப அணு ஆற்றல் குண்டு ஒரு தோல்வியுற்ற சோதனையென்றும் கலாமின் அறிக்கை தவறானதென்றும் விமர்சித்தார். எனினும் இந்த கூற்றை கலாமும், போக்ரான் II இன் முக்கிய கூட்டாளியான ஆர். சிதம்பரமும் மறுத்தனர்.

தனிநபர் தாக்குதல்கள்[தொகு]

அணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய போதிலும், அணு அறிவியலில் கலாமிற்கு "அதிகாரம்" இல்லை என்று அவரின் பல சக பணியாளர்கள் கூறினர். ஹோமி சேத்னா என்ற இரசாயனப்பொறியாளர், அணு அறிவியல் மற்றும் அணு இயற்பியல் கட்டுரைகளை வெளியிட கலாமிற்கு எந்தப் பின்னணியும் இல்லை என்று விமர்சித்தார். கலாம் அணுப் பொறியியலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மேலும் அவரது சாதனைகளுக்காக பல பல்கலைக்கழகங்கள் வழங்கிய பட்டமும் அணுப் பொறியியலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் சேத்னா கூறினார். 1950 இல் கலாம் தனது கல்லூரிப் படிப்பில் மேம்பட்ட இயற்பியலில் தோல்வி அடைந்தார் என்றும் "அவருக்கு அணு இயற்பியல் பற்றி என்ன தெரியும்" என்றும் சேத்னா அவரது கடைசி தேசிய தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார். மேலும் அணு விஞ்ஞானி என்ற தேசிய அந்தஸ்து பெற ஜனாதிபதி பதவியை உபயோகிப்பதாகவும் கூறினார். மற்றவர்கள், இந்திய அணு சக்தி ஆலைகளில் கலாம் பணிபுரியவில்லையென்றும் ராஜா ராமண்ணா கீழ் முடிக்கப்பட்ட அணு ஆயுத வளர்ச்சியில் அவருக்கு பங்கு இல்லையென்றும் கூறினர். 1970 இல் எஸ். எல். வி திட்டத்தில் விண்வெளிப் பொறியாளராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்வதற்கு முன், 1980 முதல் திட்ட இயக்குநராகவும் இருந்தார் என்றும் சேத்னா முடித்தார். பெங்களூருவில் உள்ள பிரபல இந்திய அறிவியல் கழகம், அறிவியல் சான்றிதழ்கள் இல்லாததால் கலாமின் விண்ணப்பத்தை நிராகரித்தது.

2008 இல் ஏவுகணை திட்டத்தில் ஏவுகணை கண்டுபிடிப்புகள் பற்றிய அவரின் சொந்தப் பங்களிப்பை இந்திய ஊடகங்கள் கேள்வியாக்கியது. கலாம் அக்னி, ப்ரித்வி மற்றும் ஆகாஷ் ஏவுகணை கண்டுபிடிப்பில் தனி புகழ் பெற்றிருந்தார். மேற்கண்ட எல்லாவற்றையும் பிற விஞ்ஞானிகள் ஆராய்ந்து, வடிவமைத்து, உருவாக்கியபோது கலாம் அதற்கான நிதி மற்றும் பல ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் என்ற முறையில் கலாமிற்கு நிறைய புகழ் சென்றடைந்தன. மேம்பட்ட கணினி ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் அக்னி ஏவுகணை முன்னாள் இயக்குநரான அகர்வால் அக்னி ஏவுகணையின் வெற்றிகரமான வடிவமைப்புக்கு உண்மையான காரணமாக இருந்தார் என்று கருதப்படுகிறது. கலாம் அவரது சொந்த வாழ்க்கை வரலாற்றில், அக்னி ஏவுகணை கண்டுபிடிப்பில் முன்னாள் சென்னை தொழில்நுட்ப நிறுவன மாணவரான அகர்வாலின் முக்கியப் பங்கை புகழ்ந்து எழுதினார். பிரித்வி திட்டத்தில் சுந்தரம் என்பவரை நிழல் மூளை என்றும் திரிசூல் ஏவுகணைத் திட்டத்தில் மோகனை என்பவரையும் புகழ்ந்துள்ளார். 2006 இல் பிரபல மூத்த ஊடக நிருபர் பிரபுல் பிடவை ஒரு செய்தித்தாளில் (THE DAILY STAR), முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அங்கீகரிக்கப்பட்டு டாக்டர் அப்துல் கலாம் இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட இரண்டு விண்வெளித் திட்டங்கள் "மொத்தத் தோல்வி" என்று எழுதியிருந்தார். 1980 களில் இந்தத் திட்டங்கள் இரண்டும் இந்திய இராணுவம் கொடுத்த அழுத்தத்தினால் ரத்து செய்யப்பட்டன.

உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் கூடங்குளம் அணு சக்தி ஆலை அமைப்பதில் ஆதரவு தந்து தனது நிலைபாட்டைக் கூறிய கலாமை மக்கள் குழுவினர் குறை கூறினர். அவர்கள் கலாம் ஒரு அணு சக்தி சார்பு விஞ்ஞானி என்றும் பாதுகாப்பு பற்றிய அவரது உறுதிமொழியை ஏற்க விருப்பமில்லாமலும் அவரது வரவை விரோதமாகவும் கருதினர்.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் தனி நபர் சோதனை[தொகு]

29 செப்டம்பர் 2011 இல் நியூ யார்க்கின் கென்னெடி விமான நிலையத்தில் விமானம் ஏறும் போது தனி நபர் சோதனைக்கு உட்பட்டார். அமெரிக்கப் பாதுகாப்பு நெறி முறைகளின் கீழ் பாதுகாப்பு சோதனை நடைமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட முக்கிய பிரமுகர்கள் வகையின் கீழ் அவர் வரவில்லை என்று "தனித் திரையிடப்பட்ட" சோதனைக்குட்பட்டார். இதற்கு விமானக் குழுவிலிருந்து எதிர்ப்பு இருந்த போதிலும், "தனித் திரையிடப்பட்ட" சோதனை நிபந்தனையின் கீழ் சரி என்று கூறி, அவரது வெளிச்சட்டை மற்றும் காலணிகளை அவர் "ஏற் இந்திய" விமானம் ஏறிய பிறகு சோதனைக்கு கேட்டனர். 13 நவம்பர் 2011 வரை இச்சம்பவம் வெளி வரவில்லை. இச்சம்பவம் பொதுச் சீற்றத்தை நாட்டு மக்களிடம் உருவாக்கியுள்ளது என்றும் இதற்கு இந்தியா பதிலடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அச்சுறுத்தியது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தும், பதிலாக அமெரிக்க அரசு சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கலாமிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது என்றும் தெரிவித்தது. இதற்கு முன் 2009 இல், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தின் இந்தியாவில் பாதுகாப்பு சோதனை விலக்கு பட்டியலில் கலாம் இருந்த போதிலும், புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான மையத்தில் "காண்டினெண்டல் ஏர்லைன்ஸ்" ன் அடிப்படை பணியாளர்கள் அவரை ஒரு சாதாரண பயணியைப்போல் சோதனைக்கு உட்படுத்தினர்.

எதிர்கால இந்தியா: 2020[தொகு]

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் உரை நிகழ்த்துகிறார்

அவருடைய இந்தியா 2020 என்ற நூலில் கலாம், இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரை திட்டத்தை அறிவித்திருந்தார். எதிர்கால வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க இந்திய அணு ஆயுத திட்டத்திற்கு தனது பணியை அர்ப்பணிக்கிறார்.

அவருடைய நூல்களின் மொழி பெயர்ப்புப் பதிப்புகளுக்கு தென் கொரியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின் வேறு பல வளர்ச்சிகளிலும் கலாம் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார். உயிரி செயற்கை பதியன்கள் (BIO-IMPLANTS) வளர்ப்பதற்கான ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறார். அவர் தனியுரிமை தீர்வுகள் மீது திறந்த மூல ஆதரவாளராகவும் மற்றும் பெரிய அளவிலான இலவச மென்பொருள் பயன்படுத்துதல், பெருமளவு மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப நன்மைகளை கொண்டு வரும் என்றும் நம்புகிறார்.

அறிவியலாலோசகர் பதவியிலிருந்து 1999 இல் பதவி விலகிய பிறகு, ஒரு இலட்சம் மாணவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் கலந்துரையாட வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தார்.

அவர் அவரது சொந்த வார்த்தைகளில் "நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நிறைவாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இனிமேல் என்னுடைய பட்டறிவை பகிர்ந்து கொள்ளும் நோக்கமும் அவர்களுடைய கற்பனைத்திறனை ஊக்குவிக்கவும் இந்தியாவை வல்லரசாக மாற்றும் திட்டத்திற்கு அவர்களை தயார்படுத்தவும் வரை படம் ஏற்கனவே தயாரித்துள்ளேன்.

அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், அதற்கு பிந்தைய காலத்தில் அகமதாபாத் மற்றும் இந்தோரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் வருகை பேராசிரியராகவும், அதிபராக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும், பேராசிரியராக சென்னை அண்ணா பலகைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் பிரிவிற்கும், மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகம் மற்றும் சோமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சேர்ப்பு / வருகை ஆசிரியராகவும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதைத் தொடர்ந்து செய்து வந்தார்.

பிரபல கலாசாரம்[தொகு]

மே 2011 இல், கலாம், ஊழலைத் தோற்கடிக்க பணியை மைய கருவாக கொண்ட "நான் என்ன கொடுக்க முடியும்" என்ற திட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு தமிழ்க் கவிதை எழுதுவதிலும், கம்பியைக் கொண்டு தயாரான தென்னிந்திய இசைக் கருவியான வீணை வாசிப்பதிலும் ஆர்வம் இருந்தது.

2003 மற்றும் 2006 ஆம் வருடங்களுக்கான ஒரு சங்கீதத் தொலைக்காட்சியின் (எம்.டி.வி.) "யூத் ஐகான்" விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் வாடிய ஆனால் புத்திசாலியான "சோட்டு" என்ற பெயருள்ள ராஜஸ்தானி பையனிடம் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதாகவும், அந்தச் சிறுவன் கலாமை கௌரவிக்கும் விதமாக தன்னுடைய பெயரை கலாம் என்று கொண்டதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

காட்சியகம்[தொகு]

காட்சியகமாக மாறிய அப்துல் கலாம் பிறந்த வீடு, ராமேஸ்வரம்

ராமேஸ்வரம், மசூதி தெருவில் உள்ள அப்துல் கலாம் பிறந்த வீட்டின் முதல் மாடியில், மிஷன் ஆப் லைப் காலேரி (Mission of Life Gallery) என்ற பெயரில், அப்துல் கலாம் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் எழுதிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சியம் நாள்தோறும் காலை எட்டு மணி முதல் இரவு ஏழு மணி வரை பொது மக்கள் கட்டணமின்றி காணும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.[55]

பெற்ற விருதுகளும் மரியாதைகளும்[தொகு]

ஐக்கிய நாடுகள் அவையில் ஏபிஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைக்கழகங்கள் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.[56][57] இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியாற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும்,[58] 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் இந்திய அரசு வழங்கிக் கௌரவித்தது.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழினுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார்.[59]

விருது அல்லது மரியாதை பெற்ற ஆண்டு விருது அல்லது மரியாதையின் பெயர் விருது வழங்கும் அமைப்பு
2014 அறிவியல் டாக்டர் (பட்டம்) எடின்பரோ பல்கலைக்கழகம்[60]
2012 சட்டங்களின் டாக்டர் (பட்டம்) சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம்[61]
2011 IEEE கவுரவ உறுப்பினர் ஐஇஇஇ[62]
2010 பொறியியல் டாக்டர் (பட்டம்) வாட்டர்லூ பல்கலைக்கழகம்[63]
2009 ஹூவர் மெடல் ASME மணிக்கு, அமெரிக்கா[64]
2009 சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா[65]
2008 பொறியியல் டாக்டர் (பட்டம்) நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர்[66]
2007 கிங் சார்லஸ் II பதக்கம் ராயல் சொசைட்டி, இங்கிலாந்து[67][68]
2007 அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் உல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம், இங்கிலாந்து[69]
2000 ராமானுஜன் விருது ஆழ்வார்களில் ஆராய்ச்சி மையம், சென்னை[70]
1998 வீர் சவர்கார் விருது இந்திய அரசாங்கம்[4]
1997 தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது இந்திய அரசாங்கம்[70][4]
1997 பாரத ரத்னா இந்திய அரசாங்கம்[70][71]
1990 பத்ம விபூஷன் இந்திய அரசாங்கம்[70][72]
1981 பத்ம பூஷன் இந்திய அரசாங்கம்[70][72]

மறைவு[தொகு]

சூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.[73][74]

இறுதி மரியாதை[தொகு]

இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 சூலை மாதம் 30ஆம் தேதி, மேற்கொள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.[75]

மறைவுக்குப் பின்னர் பெற்ற சிறப்புகள்[தொகு]

  • பீகார் மாநிலம் பாட்னாவில் கிஷான்கஞ்சில் உள்ள வேளாண் கல்லுாரி மற்றும் அறிவியல் நகரத்துக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.
  • அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி வாசிப்பு நாளாக கொண்டாடப்படும் என்று மகாராஷ்ட்ர அரசு அறிவித்தது.
  • உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.
  • 2015-ஆம் ஆண்டு அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று தமிழ்நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை நாளான ஆகத்து 15 ஆம் தேதியன்று அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலில் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.[76]
  • புதுதில்லியில் உள்ள அவுரங்சீப் சாலைக்கு ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் சாலை எனப் பெயரிட்டு, புதுதில்லி மாநகராட்சி ஆணையிட்டது.[77]
  • ஆந்திர பிரதேச சட்டபேரவையில் இவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதன் விவேகனந்தர், 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் காந்தி அடிகள், 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம் அவர்கள் என்று புகழ் பாடப்பட்டது.[78]

கலாம் எழுதிய புத்தகங்கள்[தொகு]

  1. Turning Points; A journey through challenges 2012.[79]
  2. Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.
  3. இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை எஸ் ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.[80]
  4. Ignited Minds : Unleashing the Power Within India ; வைகிங், 2002.[81]
  5. The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.[82]
  6. Mission India (திட்டம் இந்தியா) ; ஏ.பீ.ஜே. அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ; பென்குயின் புக்ஸ், 2005.[83]
  7. Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007.[84]
  8. Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.[85]
  9. (Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.

கலாமின் முன்மொழிவுகள்[தொகு]

நான்கு செயற்களங்கள்[தொகு]

  • கடுமையாக உழைப்பதை வழக்கமாக்கிக் கொளல்
  • கற்பனைத் திறனை வளர்த்துக் கொளல்
  • ஆட்சியின் நுணுக்கங்களை அறிந்து கொளல்
  • சமுதாயக் கடமைகளை செவ்வனே செய்தல்.

உறுதிமொழி[தொகு]

  • எனது கல்வி அல்லது பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்து அதில் சிறப்பானதொரு இடத்தை அடைவேன்.
  • எழுதப் படிக்கத் தெரியாத பத்துப்பேருக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுப்பேன்.
  • மதுபானத்திற்கும், சூதாட்டத்திற்கும் அடிமையாகியுள்ள ஐந்து பேரை அதிலிருந்து விடுவிப்பேன்.
  • அல்லல்படும் எனது சகோதரர்களின் இன்னல்களைத் தீர்க்கத் தொடர்ந்து பாடுபடுவேன்.
  • குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.
  • சாதி, மதம், மொழி அடிப்படையிலான பாகுபாட்டிற்கும் வேதங்களுக்கும் ஆதரவளிக்கமாட்டேன்.
  • நேர்மையில் முன்னுதாரணமாக இருந்து ஊழலற்ற சமுதாயம் உருவாகப் பாடுபடுவேன்.
  • பெண்களை மதிப்பேன், பெண் கல்வியை ஆதரிப்பேன்
  • உடல் ஊனமுற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாக இருந்து அவர்கள் நம்மைப் போல இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்படுத்த உழைப்பேன்.
  • நாட்டின் வெற்றியையும், மக்களின் வெற்றியையும் நான் பெருமிதத்துடன் மகிழ்ந்து கொண்டாடுவேன்.

இந்த உறுதிமொழிகளை ஏற்று இளைஞர்கள் தளராத உறுதியோடு வளமான, மகிழ்ச்சியான பாதுகாப்பான இந்தியாவுக்காக உழைக்கும் போது வளர்ந்த இந்தியா மலர்வது திண்ணம். - A.P.J. அப்துல்கலாம்.

கலாம் குறித்த வாழ்க்கை சரிதங்கள்[தொகு]

  1. Eternal Quest: Life and Times of Dr. Kalam எஸ். சந்திரா; பென்டகன் பதிப்பகம், 2002.[86]
  2. ஆர்.கே. ப்ருதி மூலம் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்; அன்மோல் பப்ளிகேஷன்ஸ், 2002.[87]
  3. A. P. J. Abdul Kalam: The Visionary of India கே. பூஷன், ஜி காட்யால் ; APH பப். கார்ப், 2002.[88]
  4. பி தனாபால் A Little Dream (ஒரு சிறிய கனவு ) (ஆவணப்படம்); மின்வெளி மீடியா பிரைவேட் லிமிடெட், 2008 இயக்கியது.[89]
  5. The Kalam Effect: My Years with the President பீ.எம். நாயர்; ஹார்ப்பர் காலின்ஸ், 2008.[90]
  6. Fr.AK ஜார்ஜ் மூலம் My Days With Mahatma Abdul Kalam (மகாத்மா அப்துல் கலாமுடன் என் நாட்கள்) ; நாவல் கழகம், 2009.[91]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "APJ Abdul Kalam speaks to Editorial Director M.J. Akbar about presidential elections 2012". India Today. Archived from the original on 31 July 2015.
  2. 2.0 2.1 2.2 Kalam, Avul Pakir Jainulabdeen Abdul; Tiwari, Arun (1999). Wings of Fire: An Autobiography. Universities Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7371-146-6. Archived from the original on 13 October 2013.
  3. Jai, Janak Raj (2003). Presidents of India, 1950–2003. Regency Publications. p. 296. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87498-65-0. Archived from the original on 12 October 2013.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Bio-data: Avul Pakir Jainulabdeen Abdul Kalam". Press Information Bureau, Government of India. 1 March 2012. Archived from the original on 8 June 2010. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
  5. "APJ Abdul Kalam, the unconventional President who learnt the art of the political". Archived from the original on 29 July 2015.
  6. "The greatest student India ever had". Archived from the original on 30 July 2015.
  7. "Brother awaits Kalam last trip". Archived from the original on 29 July 2015.
  8. "How two orthodox Brahmins played a crucial role in APJ Abdul Kalam's childhood". 28 July 2015. Archived from the original on 29 July 2015.
  9. "Day before death, Kalam enquired about elder brother's health". Archived from the original on 30 July 2015.
  10. "Not aware of any will left by Kalam: nephew". The Times of India. 31 July 2015. Archived from the original on 3 August 2015. பார்க்கப்பட்ட நாள் 31 July 2015.
  11. Sharma, Mahesh; Das, P.K.; Bhalla, P. (2004). Pride of the Nation: Dr. A.P.J Abdul Kalam. Diamond Pocket Books (P) Ltd. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-288-0806-7. Archived from the original on 13 October 2013.
  12. Bhushan, K.; Katyal, G. (2002). A.P.J. Abdul Kalam: The Visionary of India. New Delhi: A.P.H. Publishing Corporation. pp. 1–10, 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-380-3. Archived from the original on 25 July 2023. பார்க்கப்பட்ட நாள் 10 August 2019.
  13. K. Raju; S. Annamalai (24 September 2006). "Kalam meets the teacher who moulded him". The Hindu. Chennai, India. Archived from the original on 28 September 2013. பார்க்கப்பட்ட நாள் 29 June 2012.
  14. Dixit, Sumita Vaid (18 March 2010). "The boy from Rameswaram who became a President". Rediff.com. Archived from the original on 2 July 2012. பார்க்கப்பட்ட நாள் 4 July 2012.
  15. "Failed in my dream of becoming a pilot : Abdul Kalam in new book". The Hindu. Chennai, India. 18 August 2013. Archived from the original on 18 August 2013. பார்க்கப்பட்ட நாள் 18 August 2013.
  16. Gopalakrishnan, Karthika (23 June 2009). "Kalam tells students to follow their heart". The Times of India. Chennai, India. Archived from the original on 23 May 2013. பார்க்கப்பட்ட நாள் 4 July 2012.
  17. Pawar, Ashwini (29 July 2015). "I'm proud that I recommended him for ISRO: EV Chitnis". DNA India. Archived from the original on 9 July 2021. பார்க்கப்பட்ட நாள் 30 December 2022.
  18. Ramchandani (2000). Dale Hoiberg (ed.). A to C (Abd Allah ibn al-Abbas to Cypress). New Delhi: Encyclopædia Britannica (India). p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85229-760-5. Archived from the original on 29 August 2016. பார்க்கப்பட்ட நாள் 10 August 2019.
  19. "Avul Pakir Jainulabdeen Abdul Kalam". National Informatics Centre. Archived from the original on 9 March 2007. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
  20. "Bulletin of the Atomic Scientists". Bulletin of the Atomic Scientists: Science and Public Affairs (Educational Foundation for Nuclear Science): 32. November 1989. பன்னாட்டுத் தர தொடர் எண்:0096-3402. https://books.google.com/books?id=6AUAAAAAMBAJ&pg=PA32. பார்த்த நாள்: 9 October 2015. 
  21. 21.0 21.1 21.2 "Missile Chronology, 1971–1979" (PDF). James Martin Center for Nonproliferation Studies at Monterey Institute of International Studies, Nuclear Threat Initiative. July 2003. Archived (PDF) from the original on 20 November 2012. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
  22. 22.0 22.1 22.2 "The prime motivator". Frontline. 5 July 2002. Archived from the original on 21 October 2006. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012.
  23. Pandit, Rajat (9 January 2008). "Missile plan: Some hits, misses". The Times of India. TNN. Archived from the original on 18 November 2011. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
  24. Jerome M. Conley (2001). Indo-Russian military and nuclear cooperation: lessons and options for U.S. policy in South Asia. Lexington Books. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7391-0217-6. Archived from the original on 25 April 2016. பார்க்கப்பட்ட நாள் 9 October 2015.
  25. ANI (8 November 2011). "Koodankulam nuclear plant: A. P. J. Abdul Kalam's safety review has failed to satisfy nuke plant protestors, expert laments". The Economic Times. Chennai, India. Archived from the original on 10 April 2020. பார்க்கப்பட்ட நாள் 20 June 2012.
  26. "Story of indigenous stents". The Hindu-Businessline. India. 15 August 2001. Archived from the original on 28 May 2012.
  27. "The stent man". Rediff-News. India. 19 December 1998. Archived from the original on 18 May 2013.
  28. Gopal, M. Sai (22 March 2012). "Now, 'Kalam-Raju tablet' for healthcare workers". The Hindu. India. Archived from the original on 25 April 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2012.
  29. Times News Network (11 June 2002). "NDA's smart missile: President Kalam". The Economic Times இம் மூலத்தில் இருந்து 23 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130523202053/http://articles.economictimes.indiatimes.com/2002-06-11/news/27348497_1_nda-alliance-nda-today-president-kalam. 
  30. "With him at the helm, there is hope that things might change". Archived from the original on 29 July 2015.
  31. "Former Presidents, Rashtrapati Bhavan". பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.
  32. Ved, Mahendra (26 July 2002). "Kalam is 11th President in 12th term". The Times of India. Archived from the original on 30 May 2013. பார்க்கப்பட்ட நாள் 4 July 2012.
  33. "Narayanan opts out, field clear for Kalam". Rediff. 11 June 2002. Archived from the original on 18 May 2013. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
  34. "Abdul Kalam elected President". The Hindu. Chennai, India. 18 July 2002. Archived from the original on 13 November 2013. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
  35. Tyagi, Kavita; Misra, Padma (23 May 2011). Basic Technical Communication. PHI Learning Pvt. Ltd. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-203-4238-5. Archived from the original on 3 June 2016. பார்க்கப்பட்ட நாள் 9 October 2015.
  36. "APJ Abdul Kalam is people's president: Mamata Banerjee". CNN-IBN. 19 June 2012. Archived from the original on 20 June 2012. பார்க்கப்பட்ட நாள் 4 July 2012.
  37. Perappadan, Bindu Shajan (14 April 2007). "The people's President does it again". The Hindu. Chennai, India. Archived from the original on 25 January 2012. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
  38. "how a 110 years old became friend of APJ Kalam". Archived from the original on 19 August 2016.
  39. "Signing office of profit bill was toughest decision: A P J Kalam". The Economic Times. Coimbatore. 18 July 2010. Archived from the original on 11 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2 May 2012.
  40. "The journey of a mercy plea". The New Indian Express. 21 May 2010 இம் மூலத்தில் இருந்து 28 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121128051841/http://www.indianexpress.com/news/the-journey-of-a-mercy-plea/621586/0. 
  41. "President Kalam votes for uniform civil code". The Times of India. 29 September 2003 இம் மூலத்தில் இருந்து 30 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150730204431/http://timesofindia.indiatimes.com/india/President-Kalam-votes-for-uniform-civil-code/articleshow/208444.cms. 
  42. "Kalam calls for uniform civil code". Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 1 January 2020.
  43. "Uniform Civil Code essential: Kalam". Archived from the original on 28 September 2015.
  44. "Puri seer rallies for uniform civil code". Archived from the original on 9 October 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2018.
  45. "Kalam not to contest presidential poll". Rediff. 22 June 2007. Archived from the original on 18 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2 March 2012.
  46. "Kalam not to contest Presidential polls". The Times of India. 22 June 2007. Archived from the original on 23 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2 March 2012.
  47. "Talks under way on Presidential election". The Hindu. Chennai, India. 10 May 2007. Archived from the original on 17 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2 March 2012.
  48. Prafulla Marapakwar (23 April 2012). "Next President should be apolitical: Pawar". The Times of India. Archived from the original on 16 June 2012. பார்க்கப்பட்ட நாள் 23 April 2012.
  49. Raj, Rohit (23 April 2012). "Virtual world seeks second term for Abdul Kalam". Deccan Chronicle. Archived from the original on 23 April 2012. பார்க்கப்பட்ட நாள் 23 April 2012.
  50. "Race for Rashtrapati Bhawan: APJ Abdul Kalam a good choice, says SP; backs Pawar". NDTV. Archived from the original on 24 April 2012. பார்க்கப்பட்ட நாள் 23 April 2012.
  51. "President poll: BJP rejects Pranab Mukherjee, Hamid Ansari, may back Kalam". CNN-IBN. New Delhi. 30 April 2012. Archived from the original on 8 December 2013. பார்க்கப்பட்ட நாள் 30 April 2012.
  52. "Presidential polls: We will not support Pranab Mukherjee, BJP says". The Times of India. 30 April 2012. Archived from the original on 17 May 2012. பார்க்கப்பட்ட நாள் 30 April 2012.
  53. Benedict, Kay (14 June 2012). "Congress opposes APJ Abdul Kalam's name for President". India Today. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  54. Karthick S (18 June 2012). "Abdul Kalam not to contest presidential poll 2012". The Times of India. Chennai, India. Archived from the original on 22 June 2012. பார்க்கப்பட்ட நாள் 18 June 2012.
  55. "கண்காட்சியகமான கலாம் வீடு". தினமலர்
  56. "Dr.Kalam's Page". abdulKalam.com. Archived from the original on 24 April 2012. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
  57. Dayekh, Ribal (16 April 2011). "Dr Abdul Kalam former President of India arrives to Dubai". Zawya. Archived from the original on 4 June 2016. பார்க்கப்பட்ட நாள் 17 March 2012.
  58. "Kalam receives honorary doctorate from Queen's University Belfast". Oneindia. 11 June 2009. Archived from the original on 15 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
  59. "Bharat Ratna conferred on Dr Abdul Kalam". ரெடிப்.காம். 26 November 1997. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
  60. "Ex-President of India Abdul Kalam visits the Forum". எடின்பரோ பல்கலைக்கழகம். Archived from the original on 2014-05-28. பார்க்கப்பட்ட நாள் மே 27, 2014.
  61. "Honorary Degrees – Convocation – Simon Fraser University". சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2012.
  62. "IEEE Honorary Membership Recipients" (PDF). IEEE. Archived from the original (PDF) on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகத்து 2011.
  63. "Yet another honorary doctorate for Kalam". ரெடிப்.காம். 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
  64. "Former President Kalam chosen for Hoover Medal". New York: Indiatimes. 27 March 2009. http://timesofindia.indiatimes.com/India/Kalam-chosen-for-Hoover-Medal/articleshow/4321760.cms. பார்த்த நாள்: 30 October 2010. 
  65. "Caltech GALCIT International von Kármán Wings Award". galcit.caltech.edu. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
  66. "Dr Abdul Kalam, former President of India, receives NTU Honorary Degree of Doctor of Engineering". Nanyang Technological University. 26 ஆகத்து 2008. Archived from the original on 2011-08-23. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகத்து 2011.
  67. "King Charles II Medal for President". The Hindu. 12 July 2007 இம் மூலத்தில் இருந்து 13 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131113191656/http://www.hindu.com/2007/07/12/stories/2007071253391300.htm. பார்த்த நாள்: 1 March 2012. 
  68. "King Charles II Medal for Kalam". The Economic Times (India). 11 July 2007. http://articles.economictimes.indiatimes.com/2007-07-11/news/27675690_1_president-kalam-p-j-abdul-kalam-road-map. பார்த்த நாள்: 1 March 2012. 
  69. "Kalam conferred Honorary Doctorate of Science". The Economic Times (India). 23 October 2007 இம் மூலத்தில் இருந்து 13 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131113185701/http://articles.timesofindia.indiatimes.com/2007-10-23/uk/27960584_1_p-j-abdul-kalam-wolverhampton-creative-leadership. பார்த்த நாள்: 1 March 2012. 
  70. 70.0 70.1 70.2 70.3 70.4 "Dr. Abdul Kalam's Diverse Interests: Prizes/Awards". இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை. Archived from the original on 28 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
  71. "List of recipients of Bharat Ratna" (PDF). உள்துறை அமைச்சகம் (இந்தியா), Government of India. Archived from the original (PDF) on 3 February 2013. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
  72. 72.0 72.1 "Bharat Ratna conferred on Dr Abdul Kalam". ரெடிப்.காம். 26 November 1997. http://www.rediff.com/news/nov/26kal.htm. பார்த்த நாள்: 1 March 2012. 
  73. "அப்துல் கலாம் காலமானார்".
  74. "அப்துல் கலாம் மறைவு - இந்து பத்திரிகை".
  75. "அப்துல்கலாம் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்". Archived from the original on 2019-08-21. பார்க்கப்பட்ட நாள் 2019-08-21. NS7 (சூலை 30, 2015)
  76. அக்டோபர், 15 இளைஞர் எழுச்சி நாள்; தமிழக அரசு அறிவிப்பு
  77. http://www.dinamalar.com/news_detail.asp?id=1329072
  78. 21-ம் நூற்றாண்டின் மாமனிதர் அப்துல் கலாம்: ஆந்திர சட்டப் பேரவையில் புகழாரம் தி இந்து தமிழ் 01 செப்டம்பர் 2015
  79. "Turning Points:A journey through challenges". Harper Collins India.
  80. Kalam, A.P.J. Abdul; Y.S., Rajan (1998). India 2020: A Vision for the New Millennium. New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-88271-7.
  81. Kalam, A.P.J. Abdul (2002). Ignited minds: unleashing the power within India. Viking.
  82. Kalam, A.P.J. Abdul (2004). The luminous sparks : a biography in verse and colours. Bangalore: Punya Pub. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-901897-8-1.
  83. Rajan, A.P.J. Abdul Kalam with Y.S. (2005). Mission India : a vision for Indian youth. New Delhi, India: Puffin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-333499-6.
  84. Kalam, A.P.J. Abdul (2007). Inspiring thoughts. Delhi: Rajpal & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7028-684-4.
  85. "Developments in Fluid Mechanics and Space Technology". தேசியத் தகவல் மையம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
  86. Rohde, David (19 July 2002). "Nuclear Scientist, 70, a Folk Hero, Is Elected India's President". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2002/07/19/world/nuclear-scientist-70-a-folk-hero-is-elected-india-s-president.html. பார்த்த நாள்: 29 June 2012. 
  87. Pruthi, Raj (2003). President Apj Abdul Kalam. Anmol Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-261-1344-6.
  88. Bhushan, K.; Katyal, G. (2002). A.P.J. Abdul Kalam: The Visionary of India. APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-380-3.
  89. "Documentary on Kalam released". The Hindu (Chennai, India). 12 January 2008 இம் மூலத்தில் இருந்து 11 மே 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090511012413/http://www.hindu.com/2008/01/25/stories/2008012550520200.htm. பார்த்த நாள்: 27 March 2009. 
  90. Nair, P. M. (2008). The Kalam Effect: My Years with the President. HarperCollins Publishers, a joint venture with the India Today Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7223-736-3.
  91. Fr A K George (2009). My Days with Mahatma Abdul Kalam. Novel Corp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-904529-5-3.

வெளி இணைப்புகள்[தொகு]

அப்துல் கலாம் எழுதி பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள்[தொகு]

அப்துல் கலாம் குறித்தான கட்டுரைகள்[தொகு]

பிற[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._ப._ஜெ._அப்துல்_கலாம்&oldid=3956579" இலிருந்து மீள்விக்கப்பட்டது