உள்ளடக்கத்துக்குச் செல்

அல்-உக்சுர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லக்சோர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நைலின் கிழக்குக் கரையில் இருந்து லக்சோர் கோயிலின் தோற்றம்.
3400 ஆண்டுகளுக்குப் பின்னரும் தான் தனது கடவுள்களுக்காகக் கட்டிய கோயிலைக் கவனித்துக்கொண்டிருக்கும் எகிப்திய அரசரின் சிலை.

அல்-உக்சுர் கோயில் (Al 'Uqṣur temple or Luxor temple) இன்று லக்சோர் என அழைக்கப்படும் நகரத்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள பெரிய பண்டைய எகிப்தியக் கோயில் ஆகும்.[1] இக் கோயில் அமூன், மூத், கோன்சு எனும் பண்டைய எகிப்தியர்களின் மூன்று கடவுளர்களுக்காக அமைக்கப்பட்டது. பழங்கால எகிப்தின் புது எகிப்து இராச்சியக் காலத்தில் கொண்டாடப்பட்டு வந்த ஒப்பெத் திருவிழா இக்கோயிலை மையமாகக் கொண்டே இடம்பெற்றது. இவ் விழாவில், அமூன் கடவுளின் சிலை, அருகாமையில் உள்ள கர்னாக் கோயிலிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். இங்கே அமூன், அவரது துணைவியான மூத் எனும் பெண் கடவுளுடன் தங்க வைக்கப்பட்டு, விழாக் கொண்டாடப்படும்.

இக் கோயிலுக்கான நுழைவாயில் வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நுழைவாயிலுக்குச் செல்லும் பாதையின் இரு மருங்கும் வரிசையாக ஸ்ஃபிங்ஸ் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பாதை, பிற்காலத்தில், 30 ஆவது அரச வம்சத்தின் பார்வோன் முதலாம் நெக்தனெபோவின் காலத்தில் அமைக்கப்பட்டது.

கோயிலின் நுழைவாயிலில், 24 மீட்டர் (79 அடி) உயரம் கொண்ட கோபுரம் போன்ற நுழைவாயில் உள்ளது. இது இரண்டாவது ராமேசஸினால் கட்டுவிக்கப்பட்டது. இதில் இரன்டாம் ராமேசஸின் போர் வெற்றிகள் குறித்த கட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. பிற்காலத்திலும், குறிப்பாக, நூபிய மற்றும் குஷ் மரபுகளைச் சேர்ந்த அரசர்களும் தமது வெற்றிகளை இதிலே பதிவு செய்துள்ளனர். முன்னர் இந்த நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் ராமேசஸின் மிகப் பெரிய ஆறு சிலைகள் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுள் நான்கு இருந்த நிலையிலும், இரண்டு நின்ற நிலையிலும் அமைந்திருந்தன. இன்று இவற்றுள் இருந்த நிலையிலுள்ள இரண்டு சிலைகள் மட்டுமே தப்பியுள்ளன.[2]

இளஞ்சிவப்புக் கருங்கல்லினால் அமைந்த 25 மீட்டர் (82 அடி) உயரமான தூண் (obelisk) ஒன்றும் இங்கே காணப்படுகின்றது. இவ்விடத்தில் இருந்த இதே போன்ற இன்னொரு தூண் 1835 ஆம் ஆண்டு பாரிஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குள்ள பிளேஸ் டி லா கொன்கோர்டே என்னும் சதுக்கத்தில் நிறுவப்பட்ட அது இன்றும் அங்கே காணப்படுகின்றது.

தொகுப்பு லக்சோர் கோயில்.

1: நீத் கர்ப்பமுறுவாள் என தூத் (பறவை அலகுடன் கூடிய உருவம்) அவளுக்கு அறிவித்தல்.
2: நெஃப் (Kneph) மற்றும் ஆத்தோர் இருவரும் ஆங்க் கருவி மூலம் நீத்தைக் கருவுறச் செய்தல்.
3: இரா கடவுள்.
4: The adoration of Ra by the gods and the courtiers.]] இக் கோபுர நுழைவாயில் உள்ளே அமைந்துள்ள தூண் வரிசைகளால் சூழப்பட்ட முற்றம் ஒன்றுக்கு இட்டுச் செல்கிறது. இப் பகுதியும் இரண்டாம் ராமேசஸ் காலத்தில் கட்டப்பட்டதே. இப்பகுதியும், நுழை வாயிலும் கோயிலின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபட்ட கோணத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். இம் முற்றத்துக்கு அப்பால், தூண் வரிசைகளோடு கூடிய ஊர்வலப் பாதை உள்ளது. மூன்றாம் அமென்கோதேப் என்பவனால் கட்டப்பட்ட இப்பாதை 100 மீட்டர் (328 அடி) நீளம் கொண்டது. இப்பாதை 14 வடிவப் போதிகைகளுடன் கூடிய தூண் வரிசைகளைக் கொண்டது.

சுவரில் அமைந்துள்ள அலங்காரப் பட்டிகளில் ஒப்பெட் விழாவின் பல்வேறு கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கர்னாக்கில் நடைபெறும் பலிகள், அமூன் கடவுள் லக்சோருக்கு வருதல், மீண்டும் திரும்பிச் செல்லுதல் ஆகிய காட்சிகள் இவற்றுள் அடங்கும்.

அல்-உக்சுர் நகரத்தின் முக்கிய கட்டிடங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Luxor, Egypt
  2. Luxor Temple

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-உக்சுர்_கோயில்&oldid=3074435" இலிருந்து மீள்விக்கப்பட்டது