உள்ளடக்கத்துக்குச் செல்

பூலித்தேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூலித்தேவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூலித்தேவன் சிலை
சங்கரன்கோவில் சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவனின் படக்காட்சி

பூலித்தேவன் (1715–1767), தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், நெல்கட்டும்செவலை ஆண்ட தமிழ் பாளையக்காரர் ஆவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.

பூழி நாடு

பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அதன் தலைநகரம் நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்.[1]

பெயர்க் காரணம்

பூலித்தேவன், தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ, மேல்வாரம் தன்மையிலோ, வரி என்ற பெயரிலோ, ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் ஆவுடையாபுரம் நெற்கட்டுஞ்செவ்வல்[2] என்றாகியது.

பட்டியல்

தலைமுறை பெயர் ஆட்சியாண்டுகள்
1 வரகுண சிந்தாமணி பூலித்தேவன் 1378–1424
2 வடக்காத்தான் பூலித்தேவன் 1424–1458
3 வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன் 1513–1548
4 சமசதி பூலித்தேவன் 1548–1572
5 முதலாம் காத்தப்ப பூலித்தேவன் 1572–1600
6 இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன் 1600–1610
7 முதலாம் சித்திரபுத்திரத்தேவன் 1610–1638
8 மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் 1638–1663
9 இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் 1663–1726
10 நான்காம் காத்தப்ப பூலித்தேவன் 1726–1767

வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழி வந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவராவார். இவருக்கு பிறந்த பூலித்தேவன் என்பவரே இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த பாளையக்காரர் போர்களின் முன்னோடி.

பிறப்பு

மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு ஆறு மண்டலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதில் மதுரை, திருவில்லிப்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 18 மறவர் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு முழுமரியாதையும், தனி அதிகாரங்களும்[3] வழங்கப்பட்டன. இத்தகைய பாளையங்களில் ஒன்று நெற்கட்டுஞ்செவ்வல் பாளையம் ஆகும்.

பூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர் சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715இல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், 'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்' என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர்.[2]

சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி அளிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.

பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப்பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற அனைத்துவகையான வீரவிளையாட்டுகளிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை முடிவுசெய்வது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது. செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். செம்ம நாட்டு மறவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்தவர். மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள்.[சான்று தேவை]

வாழ்க்கை

இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடு.

அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர். காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726இல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.

பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய (அக்கா) மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார் . கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவாச்சி , சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர்.

பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது. இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன.

விடுதலைப்போராட்டத்தில் பங்கு

1750இல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றார் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.[4] பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.[5]

1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.[6]

அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.

1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றார்.[7]

1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால் பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார்.[8]

நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.

அன்னியர் எதிர்ப்பு

பூலித்தேவர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.

பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது.

ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோர் முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.

இத்தகு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின் உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர்.

பாளையக்காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல் கீரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய் படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.

மாபூஸ்கான், கர்னல் கீரானுக்குச் செய்தி அனுப்பி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது. இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.

ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.

இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர். இந்த யூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான்.

1755ஆம் ஆண்டு தொடங்கி 1767ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.

1761ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடியும் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.

அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் இரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவர் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.

ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர். 1767 மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், காப்டன் ஹார்பர் ஆகியோர் வாசுதேவ நல்லூர் கோட்டையைத் தாக்கினர். இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும் வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்துக் காத்தனர். ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச்சென்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மறைந்து கொண்டார்.[7] 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.

மறைவு

பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும், அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை இரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழ்நாட்டு அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.

நினைவு மாளிகை

தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. ஜனனி (10 திசம்பர் 2010). "பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் வைகோவின் உரை". 18 திசம்பர் 2008. www.usetamil.com. பார்க்கப்பட்ட நாள் சூலை 17, 2012.
  2. 2.0 2.1 முனைவர் ந. இராசையா, வரலாற்றாய்வாளர்-பூலித்தேவன் சிந்து-ஆய்வு-பக்கம்-39.
  3. Sathiyanatha Iyer,History the Nayakar of Madura.P.No.58
  4. விடுதலை வேள்வியில் தமிழகம். p. 40.
  5. "Work to restore 17th century palace begins". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: சனவரி 02, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. வீரத்தலைவர் பூலித்தேவர்-பேராசிரியர்- ந. சஞ்சீவி-காவியா பதிப்பகம்-சென்னை-2004
  7. 7.0 7.1 சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 72,73
  8. விடுதலைப் போரின் வீரமரபு-பக்கம்-36- பூலித்தேவன் -கீழைக்காற்று வெளியீட்டகம்-சென்னை-2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலித்தேவன்&oldid=4087604" இலிருந்து மீள்விக்கப்பட்டது