இந்து-ஜெர்மானிய சதி
இந்து-ஜெர்மானிய சதி என்பது முதலாம் உலகப் போரின் போது (1914-17 காலகட்டத்தில்) பிரித்தானிய இந்திய அரசுக்கு எதிராக இந்திய முழுவதும் புரட்சிகளை உண்டாக்கப் பட்ட தொடர்ச்சியான திட்டங்களைக் குறிக்கிறது. “இந்து சதி”, “ஜெர்மன் சதி”, “கதர் சதி” போன்ற பெயர்களாலும் இது குறிக்கப்படுகிறது. இந்தியாவின் தேசியவாதப் புரட்சியாளர்கள், ஐக்கிய அமெரிக்காவில் கதர் கட்சி ஜெர்மனியில் இருந்த இந்திய விடுதலைக் குழு ஆகியோர் இச்சதித் திட்டங்களில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஜெர்மானிய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஐரிய குடியரசு இயக்கம் ஆகியவை முழு ஆதரவு அளித்தன. சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்த ஜெர்மானியத் தூதரகம் மற்றும் உதுமானியப் பேரரசும் இதற்கு ஆதரவளித்தன.
இச்சதியின் முக்கிய திட்டம் பிர்த்தானிய இந்திய ராணுவத்தில் ஒரு பெரும் கலகத்தை ஏற்படுத்துவதாகும். பஞ்சாப் முதல் சிங்கப்பூர் வரை பிரித்தானிய இந்திய அரசின் கீழிருந்த அனைத்து பகுதிகளிலும் ஒரே சமயத்தில் ராணுவக் கலகத்தை ஏற்படுத்த இச்சதி முயன்றது. பெப்ரவரி 1915 இல் இக்கலகத்தைத் தூண்டி காலனிய அரசை வீழ்த்த சதிகாரர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கதர் கட்சியில் ஊடுருவியிருந்த பிரித்தானிய ஒற்றர்களால் இத்திட்டம் காலனிய அரசுக்குத் தெரிந்து விட்டது. முக்கிய திட்டத்தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதால் இக்கலகம் நிகழ்வது தவிர்க்கப்பட்டது. எனினும் ஆங்காங்கே கலகங்களும் புரட்சிகளும் மூண்டன. அவை காலனிய அரசால் அடக்கப்பட்டன.
இச்சதியின் விளைவாக பல வழக்குகள் காலனிய அரசால் தொடரப்பட்டன. லாகூர் சதி வழக்கு, இந்து-ஜெர்மானிய சதி வழக்கு ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. சதியின் விளைவாக காலனிய அரசின் இந்தியக் கொள்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.
வெளி இணைப்புகள்
[தொகு]- In the Spirit of Ghadar. The Tribune, Chandigarh
- India rising a Berlin plot. த நியூயார்க் டைம்ஸ் archives.
- The Hindustan Ghadar Collection, Bancroft Library,