பர்தோலி சத்தியாகிரகம்
பர்தோலி சத்தியாகிரகம் பிரித்தானிய இந்தியாவில் நடந்த ஒரு உண்ணாநிலைப் போராட்டம் ஆகும். இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியான இதற்கு வல்லபாய் படேல் தலைமை தாங்கினார்.
பர்தோலி, குஜராத் மாநிலத்தின் சூரத்து அருகே உள்ள ஊர். இங்கு பஞ்சம் ஏற்பட்டதால் விவசாயிகள் காலனிய அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினைக் கட்ட முடியாது போனது. அவர்களது வரிவிலக்குக் கோரிக்கையை ஏற்காத மும்பை மாகாண அரசு அவ்வாண்டுக்கான வரியினை 30% உயர்த்தியது. பர்தோலி விவசாயிங்கள் முன்பு இதே நிலையிலிருந்த கேடா விவசாயிகளை ஒன்று திரட்டிப் போராடிய வல்லபாய் படேலை அணுகி உதவி கோரினர். படேலும் அவர்களுக்கு உதவ சம்மதித்தார். பர்தோலியில் அவரது தலைமையில் ஒரு வரிகொடாப் போராட்டம் தொடங்கியது. அரசு வரி தர மறுத்தவர்களின் நிலங்களை பற்றுகை செய்து ஏலத்தில் விற்றது. வரி கொடுக்க இணங்கியவர்களையும் மற்றும் ஏலத்தில் சொத்துக்களை வாங்கியவர்களையும் பர்தோலி மக்கள் சமூகப் புறக்கணிப்பு செய்தனர். பர்தோலி போராட்டக்காரர்களுக்கு இந்தியாவெங்கும் சட்டமன்றங்களிலும் பிற அமைப்புகளிலும் ஆதரவு பெருகியது. தனது முந்தைய நிலைப்பாட்டைத் தளர்த்திய அரசு போராட்டக்காரர்களுடன் இணக்கமான ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி பற்றுகை செய்யப்பட்டிருந்த நிலங்கள் திருப்பியளிக்கப்பட்டன, அவ்வாண்டுக்கான வரி விலக்கு செய்யப்பட்டது. மேலும் வரி விகித உயர்வு இரு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.