உள்ளடக்கத்துக்குச் செல்

மது லிமாயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மது லிமாயி
பிறப்பு1 மே 1922
இறப்பு8 சனவரி 1995 (அகவை 72)
பணிஎழுத்தாளர்

மது லிமாயி (Madhu Limaye) (1922-1995) சோசலிசக் கொள்கையில் பிடிப்பு கொண்ட இந்திய அரசியல்வாதியாவார். ஜார்ஜ் பெனாண்டசுடன், ராம் மனோகர் லோகியாவின் சீடராக விளங்கியவர் மதுலிமாயி. இந்திராகாந்தி அறிவித்த ஜூன் 1975 – 1977 நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடியதால், சூலை 1975 முதல் பிப்ரவரி 1977 முடிய சிறையில் தள்ளப்பட்டார்.[1] பின்னர் 1977-இல் இந்திய நடுவண் அரசின் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயின் தலைமையில் ஜனதா தளம் கட்சியின் அரசு அமையப் பாடுபட்டவர்.

மொரார்ஜி தேசாயின் கூட்டு அமைச்சரவையில் இருந்த ஜனதா கட்சியில் இணைந்து விட்ட, பாரதீய ஜன சங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்திலும் தொடர்ந்து உறுப்பினர்களாக இருக்கும் இரட்டை உறுப்பினர் நிலைக்கு எதிராக, மத்திய அமைச்சர்களான ராஜ் நாராயணன் மற்றும் கிருஷண் காந்த் ஆகியவர்களுடன் இணைந்து, மொரார்ஜி தேசாய்க்கு எதிராக குரல் கொடுத்தவர்.

இரட்டை உறுப்பினர் சர்ச்சையால் ஜன தளத்தில் இணைந்திருந்த, ஜன சங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனதா தளத்திலிருந்து வெளியேறி பாரதீய ஜனதா கட்சியை துவக்கியதாலும், ஜனதா தள கட்சியின் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டதாலும், 1979-இல் மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.[2]

இளமை

[தொகு]

இராமச்சந்திர மாதவ லிமாயிக்கு 1 மே 1922-இல் புனேயில் பிறந்தவர். புனே பெர்கூசன் கல்லூரியில் படித்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து, பின்னர் இந்திய சோசலிச கட்சியில் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் , 1940 - 1945 முடிய ஐந்தாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.

சோசலிசவாதி

[தொகு]

1947-இல் ஆண்ட்வெர்ப் நகரத்தில் நடைபெற்ற அனைத்துலக சோசலிசவாதிகளின் மாநாட்டில் கலந்து கொண்டவர். 1948-இல் நடைபெற்ற இந்திய சோசலிசக் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், 1949 – 1952-களில் சோசலிசக் கட்சியின் இணைச்செயலராகவும் பணியாற்றியவர். 1952-இல் சோசலிசக் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி மற்றும் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி என இரண்டாக பிளவுபட்ட போது, மது லிமாயி, பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் இணைச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவா விடுதலை இயக்கம்

[தொகு]

1955-இல் கோவா விடுதலை இயக்கத்தில் [3] பங்கு கொண்டதால் மது லிமாயி 12 ஆண்டு சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் இருக்கும் போது கோவா விடுதலை இயக்கமும் மது லிமாயியும் எனும் நூலை எழுதினார். இந்நூல் மது லிமாயியின் இறப்பிற்குப் பின்னர் 1996-இல் வெளியிடப்பட்டது.[4]

நாடாளுமன்ற உறுப்பினர்

[தொகு]

மது லிமாயி, 1958-1959 ஆண்டுகளில் சோசலிசக் கட்சியின் தலைவராகவும், பின்னர் 1967-1968 ஆண்டுகளில் நாடாளுமன்ற சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரகவும், 1967-இல் நான்காவது இந்திய நாடாளுமன்றத்தின் சோசலிசக் குழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக செயல்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக:

  • (i) மூன்றாவது மக்களவை, 1964—67
  • (ii) நான்காவது மக்களவை, 1967—70
  • (iii) ஐந்தாவது மக்களவை, 1973—77
  • (iv) ஆறாவது மக்களவை, 1977–79.

ஜனதா கட்சி

[தொகு]

இந்திரா காந்திக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயண் நடத்திய இயக்கத்தில் பங்கு கொண்டு, சோசலிசக் கட்சிகள், சுதந்திரா கட்சி, பாரதீய ஜனசங்கம் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்தார். பின்னர் ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலராக 1 மே 1977 முதல் 1979 முடிய பணியாற்றிவர். 1982 முதல் அரசியலிருந்து முழு ஓய்வு பெற்ற பின்னர், அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவைகள் ஆங்கிலம், மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் வெளி வந்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1] Case Studies on Human Rights and Fundamental Freedoms: A World Survey, Volume 3- 1987
  2. "In Pursuit of Lakshmi: The Political Economy of the Indian State", By Lloyd I. Rudolph and Susanne H. Rudolph, University of Chicago Press, 1987. pp 457–459.
  3. "Goa's Freedom Movement". Archived from the original on 2017-08-06. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  4. http://www.amazon.com/dp/8170189004

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மது_லிமாயி&oldid=4056763" இலிருந்து மீள்விக்கப்பட்டது