உள்ளடக்கத்துக்குச் செல்

நீலகண்ட பிரம்மச்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலகண்ட பிரம்மச்சாரி (Neekakanda Brahmachary) (திசம்பர் 4,1889 - மார்ச்சு 4 1978) 1911-ஆம் ஆண்டில் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆசு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர்.[1].

இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், 20,000 போராளிகளை ஒன்று திரட்டிப் புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்துப் போராடியவர். வாழ்வின் பெரும்பகுதியை இந்தியா, பாக்கித்தான், மியான்மர் நாட்டுச் சிறைகளில் கழித்தவர்.

வாழ்வின் பிற்பகுதியில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர் அரசில் நந்தி மலையடிவாரத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு சிரீ ஓங்காரானந்த சுவாமி என்ற பெயரில், தனது 88-ஆவது வயதில் 4 மார்ச்சு 1978-இல் காலமானவர்.

இளமை

[தொகு]

சீர்காழியை அடுத்த எருக்கூர் எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் –சுப்புத்தாயி தம்பதிகளுக்கு, டிசம்பர் 4,1889-ஆன் ஆண்டில் மூத்த மகனாகப் பிறந்தவர். சீர்காழி சபாநாயக முதலியார் இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர்.

இந்திய விடுதலை இயக்கத்தில்

[தொகு]

1905-இல் லார்டு கர்சான் வங்காளத்தை இரண்டாகப் பிரித்த போது, நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

அதே காலத்தில் நீலகண்டர், இரகசிய இயக்கமான 'அபினவ பாரத இயக்கத்தை' 1907-ஆம் ஆண்டில் தொடங்கி, இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர பங்காற்றினார். அதனால் நீலகண்டனை ஆங்கிலேயே உளவுக் காவல்துறையினர் இரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினர். இவர் தன் பெயரோடு 'பிரம்மச்சாரி' எனும் பெயரை இணைத்துக் கொண்டார். "சூர்யோதயம்" எனும் பத்திரிகையை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் உள்ள தீவிர குணம் படைத்த வ. உ. சிதம்பரம் பிள்ளை, பிபின் சந்திரபால், பாரதியார், சிங்காரவேலர் போன்றவர்களுடன் நட்பு கொண்டவர்.

ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநாதன், வனத்துறையில் வேலை பார்த்து வந்ததால் தனக்கு ஒரு மான் தோல் வேண்டும் என்று நீலகண்டன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியதால் வாஞ்சிநானுக்குத் துணை நின்றதாக நீலகண்டனும் கைது செய்யப்பட்டார். ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேர். இவர்கள் அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.[2].

சிங்காரவேலரின் தொடர்பால், "பொதுவுடமைக் கட்சியின் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்ட குற்றத்திற்காக 1922-இல் பத்து ஆண்டுகள் ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டார்.

துறவறம்

[தொகு]

சிறை வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 1931-ஆம் ஆண்டில் துறவறம் பூண்டு, டிசம்பர் 1933-இல் மைசூர் சமஸ்தானத்தில் நந்தி கிராமம் அருகே சென்னகிரியில் ஓம்கார் எனும் பெயரில் ஆசிரமம் அமைத்தார்.

எழுதிய நூல்கள்

[தொகு]
  1. மெய் ஒப்புதல்
  2. உபதேசம்
  3. தேர்ந்தெடுத்த சொற்பொழிவுகள்

மறைவு

[தொகு]

தனது 88-ஆவது வயதில் 4 மார்ச் 1978-ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் காலமானார்.

ஆதாரம்

[தொகு]
  • புரட்சி வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி, எழுதியவர், ரா. அ. பத்மநாபன், மணிவாசகர் பதிப்பகம் வெளியிடு

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://[madrasmusings.com/Vol%2019%20No%208/The_Ashe_murder_case.html The Ashe Murder Case]
  2. "The King-Emperor vs Nilakanta Alias Brahmachari And ... on 15 February, 1912". indiankanoon.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகண்ட_பிரம்மச்சாரி&oldid=4111266" இலிருந்து மீள்விக்கப்பட்டது