தமிழர் நெசவுக்கலை
வேட்டி, புடவை அல்லது துண்டு போன்ற உடைகளைத் தயாரிக்கும் கலை, நெசவுக்கலை. பருத்தியிலிருந்து தக்ளி மற்றும் ராட்டையின் மூலம் நூல் நூற்றலையும், கைத்தறியையும், தையலையும் பண்டைக்காலம் தொட்டே தமிழர் அறிந்திருந்தனர். தமிழர்கள் இத்துறையில் கொண்ட தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் தமிழர் நெசவுக்கலை குறிக்கின்றது. தட்ப வெப்ப நிலைகள் உடம்பைத் தாக்காத வண்ணம் ஆடை பாதுகாத்து வந்தது. நமது கலைச் சிறப்பையும் நுண்ணறிவையும் காட்டி வந்தது. ”ஆடையுடையான் அவைக் கஞ்சான்” ”ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்ற முதுமொழிகள் பல தோன்றின. முற்காலத்தில், மக்களின் ஆடை அதை அணியும் முறை ஆகியவற்றைக் கொண்டே அவர்களின் தகுதி நிர்ணயிக்கப்பட்டது.[1]
வரலாறு
[தொகு]தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர். இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித்துறைத் தலைவராய் இருந்த அறிஞர் சர். சான்மார்சல், இந்திய வரலாற்றுத் துறை அறிஞர் இராசு அடிகள் போன்றவர்கள், "சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் பெருங்குடி மக்கள் கிரேக்கர், உரோமர் போன்ற நாகரிக மக்களின் பொற்காலங்களையும் தாண்டியவர்களாய், மொகஞ்சதாரோவில் தலைசிறந்த நகரங்களையும் கட்டடங்களையும் முத்திரைகளையும் ஆயுதங்களையும் அணிகலன்களையும் பாத்திரங்களையும், ஆடைகளையும் செய்து நனி சிறந்த நாகரிகத்தின் உச்சிக்கொம்பை எட்டிப்பிடித்த மக்களாய் வாழ்ந்தனர்" என்று தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் கைத்தொழில் வணிக அமைச்சரால் நிறுவப்பெற்ற 'அகில இந்திய கைப்பணிக் கழகம்' வெளியிட்ட இந்திய அச்சுப் புடவைகள் என்ற நூலில் ”ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மொகஞ்சதாரோவில் காணப்படும் அழகிய ஆடைகளைக் கொண்டு, நெய்தற்கலை மிகத்தொன்மையான காலத்திலே அரும்பி மிகச்சீரும் சிறப்புமாய் வளர்ந்துள்ளது” என்று திட்டவட்டமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
ஆடை நெசவுக்கலை 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதைச் சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் காணப்படும் ஆடைகள் உணர்த்துகின்றன. வனப்பும் மென்மையும் மிகுந்த ஆடைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்ததுடன், அவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆதிச்ச நல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது[2]
பல நூற்றாண்டுக்கு முன்பிருந்தே 'காருகவினை' எனப்பட்ட நெசவுத் தொழில், நிகண்டுகளில் குறிப்பிடப்படுகிறது. செங்குந்த கைக்கோள முதலியார்[3] வகுப்பைச் சேர்ந்தவர் இப்பணியில் ஈடுபட்டனர். சங்க இலக்கியங்களில் ஓரிரு இடங்களில் காணப்படுகிற, ஆளில் பெண்டிர் தாளில் தந்த நுணங்கு நூண் பனுவல் – [4] “ஆதரவற்ற பெண்டிர் தமது சுயமுயற்சியால் நூற்ற நூல்”, ( "பருத்திப் பெண்டின் பனுவல்") [5] போன்ற குறிப்புகளாலும், தமிழகத்தில் நெசவுக்கலை சிறப்புற்றிருந்தமை புலப்படும்.[6]
கி .பி . 985-ல் தமிழகத்தில் இராஜராஜ சோழன் காலத்தில் பட்டு நெசவு செழிப்புற்று வளர்ந்தது . தஞ்சைப் பெரியகோவிலின் கோபுரத்தின் உட்புறத்தில் தீட்டப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் இராஜராஜன் தன் மனைவியருடன் பட்டாடையில், நடராஜரை வழிபடுவதான காட்சி இன்றளவும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. உறையூரில் முன்காலத்தில் நெசவுத் தொழிலுக்குச் சாயமிடும் தொட்டி காணப்பட்டதாகவும். உறையூரில் நெசவு செய்யப்பட சேலைகள் ஒரு தேங்காய் மூடியில் அடைக்கக் கூடிய அளவுக்கு மெல்லியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது [7]
இலக்கியங்களில் நெசவுக்கலை பற்றிய குறிப்புகள்
[தொகு]“ | “உடைபெயர்த் துடுத்தல்” என்றது தொல்காப்பியம் [8] | ” |
- பண்டைக் காலத்திற் பெண்கள் நூல் நூற்றமையை நக்கீரர், கபிலர், பவணந்தி முதலியோரும் கூறியுள்ளனர். 'பருத்திப் பெண்டு' என்று புறநானூறு (125, 326)இதனைக் குறிப்பிடுகிறது.
“ | “நூலினு மயிரினு நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த வறுவை வீதியும்”- சிலப்பதிகாரம்[9] |
” |
என்று இளங்கோவடிகள் கூறுவதால், பண்டைத் தமிழர் நெசவின் பெருமை விளங்கும். “மயிரினும்” என்பதற்கு “எலிமயிரினாலும்” என்று பொருள் கூறியுள்ளார் அடியார்க்குநல்லார். மயிர் நிறைந்த ஒருவகை மலையெலி பண்டைத் தமிழ் நாட்டிலிருந்ததென்பதும், அதன் மயிரால் சிறந்த கம்பளம் நெய்யப்பட்ட தென்பதும்,
“ | “புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன
பவளமே யனையன பன்மயிர்ப் பேரெலி”- சீவக சிந்தாமணி [10] |
” |
“ | “செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயி
ரந்நெ ருப்பள வாய்பொற் கம்பலம்”- சீவக சிந்தாமணி[11] |
” |
என்று சிந்தாமணி கூறுவதாலும் அறியலாம்.
பருத்திச் செடி, நூல் நூற்றல்
[தொகு]- பருத்தி வேலிச் சீறூர் மன்னன்.[12]
- பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் [13]
- கோடைப் பருத்தி வீடுநிறையப் பெய்த[14]
- வில்லெறி பஞ்சியின் வெண்மளை தவழும் [15]
நெசவு
[தொகு]- ஆளில் பெண்டிர் தாளின் செய்த நுணங்கு நுண்பனுவல் போலக் கணங்கொள.[16]
- பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து [17]
துணிகள்
[தொகு]“ | பட்டினும் மயிரினும் பருத்து நூலினுங் கட்டுனுண்வினைக் காருக ரிருக்கையும் |
” |
அக்கால ஆடை வகைகள்
[தொகு]ஆடைகளில் பல்வேறு வண்ணங்கள் மிகத்தொன்மையான காலத்திலிருந்து இடம் பெற்று வந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் பல்வேறு வண்ண ஆடைகள் இருந்து வந்தன. மகளிர் பட்டிலும், பஞ்சிலும் நெய்த பூந்துகில்கள் பல அணிந்து வந்துள்ளனர். தமிழக மக்கள் நாற்பதிற்கு மேற்பட்ட வண்ணங்களை அறிந்திருந்தனர். சித்தன்னவாசல், தஞ்சைப் பெரிய கோவில் ஆகியவற்றில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட ஓவியங்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உட்பட்டும் அதன் நிறம் மாறாது, பொலிவு குன்றாது, புத்தம் புதிய வண்ணம்போல ஒளிர் விட்டுக் கொண்டிருப்பதே தக்க எடுத்துக்காட்டாகும்.
முற்காலத்தில் நமது நாட்டில் ஆடைகளின் வண்ணங்கள் மட்டுமல்ல; அதன் உடலும், விளிம்பும் முன்றானையும் பல்வேறு கொடிகளாலும் பூக்களாலும் பிறவற்றாலும் செய்யப்பட்டு அவைகளுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டன. ஆடையின் தன்மைக்கேற்ப துகில், பூந்துகில், புட்டகம், உடுக்கை என்று பல்வேறு பெயர்கள் உள்ள ஆடை வகைகளும் அளவிலாதிருந்தன. துகில், வெண்மை நிறம் உடையதாயும் சிவப்பு நிறம் உடையதாயும் இருக்கும். பூந்துகில், தாமரை, மல்லிகை போன்ற மலர்களின் வடிவம் பொலிவதாய் இருக்கும். அவைகளில் சிலவற்றின் பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் தரப்பட்டுள்ளன. அவை :
- ”துகில்சேர் மலர்போல் மணிநீர் நிறைந்தன்று” – பரிபாடல்
- ”புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்” – பரிபாடல்
- ”நீலக்கச்சைப் பூராடை” – புறநானூறு
- ”கோத்தன்ன தோயாப் பூந்துகில்” – பெரும்பாணாற்றுப்படை
- ”ஆவியன்ன அவிநூற் கலிங்கம்”
- ”பாம்பு பயந்தன்ன வடிவின்
காம்பின் கழைபடு சொலியின்
இழைமணி வாரா ஒண்பூங் கலிங்கம்” –புறநானூறு
- ”நோக்கு நுழை கல்லா நுண்மை யழக்கனிந்து
அரவுரி யன்ன அறுவை” – பெரும்பாணாற்றுப்படை
- ”மிப்பால் வெண்துகில் போர்க்குநர்
பூப்பால் வெண்துகில் சூழப்பக குழல் முறுக்குநர்” – பரிபாடல்
- ”புகைவிரித்தன்ன பொங்குறுகி துடிஇ” – புறநானூறு
மேற்கூறிய சங்க இலக்கியப் பாடல்களினின்று முற்காலத்தில் தமிழகத்தில் பல்வேறு விளிம்புகளும் முன்றானைகளும் உடலும் உள்ள அழகிய ஆடைகள் இருந்தன என்பது நன்கு விளங்கும். விளிம்பிலோ, முன்றானையிலோ, உடலிலோ, ஆடைகள் அழகுற்று விளங்க, தாமரை, அல்லி, மல்லிகை, பிச்சிப்பூ, மல்லிகை அரும்பு]], மாம்பிஞ்சு போன்ற உருவங்கள் எழில் பெற்று விளங்குமாறு நெய்யப் பெற்றன. இம்மலர்களும் அரும்பும், பிஞ்சும், சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள், ஊதா, பச்சை போன்ற பல்வேறு நிறங்களில் மட்டுமன்றி வெள்ளிச் சரிகை பொற்சரிகை போன்றவைகளை இணைத்து ஒளிர்விட்டு மின்னப் பட்டு நூலிலும், பஞ்சு நூலிலும் ஆடைகள் நெய்யப் பெற்றன.
பாம்பின் சட்டை போலவும் மூங்கிலில் உரித்த மெல்லிய தோல் போலவும் பால் காய்ச்சும் பொழுது எழும் ஆவி போலவும் பால் நுரை போலவும் தெளிந்து வெண்ணிறமான அருவி நீர் வீழ்ச்சியின் தோற்றம் போலவும் பண்டைய தமிழர்கள் நுண்ணிய மெல்லிய ஆடைகளை நெய்தனர். மசூலிப்பட்டினத்திலும், கலிங்கத்திலும் நெய்யப் பெற்ற ஆடைகளை விட மெல்லிய ஆடைகள் மதுரை, காஞ்சி முதலிய இடங்களில் நெய்யப்பெற்று வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப் பெற்றன.
எகிப்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த அரசர்களின் உடல்கள் பலவிதப் பொருள்களால் பதமிடப்பட்டு அழியாது கல்லறைகளில் வைத்துப் பாதுகாக்கப் பெற்றுள்ளது. அந்தப் உடல்கள் இந்திய மசுலின் துணிகளால் பொதியப் பெற்றுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முற்காலத்தில் பாண்டிய நாட்டில் நெய்யப் பெற்ற தாமரை மலர்கள் பொறித்த பட்டுத்துணிகள் உரோம், கிரேக்கம், எகிப்து, அரேபியா, இலங்கை, கடாரம், சாவகம், சமபாகம், போசகம் முதலிய பல்வேறு நாட்டு மன்னர்களின் அரண்மனைகள் அனைத்தையும் அலங்கரித்து, 19 நூற்றாண்டில் இங்கிலாந்து அரண்மனையிலும் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து இராணி எலிசபெத் அவர்களின் பள்ளியறையில் இந்திய நாட்டுப் பங்கயப்பட்டு இடம் பெற்றுள்ளது.[21]
பிறநாட்டார் சான்று
[தொகு]செருமனி நாட்டைச் சேர்ந்த மெர்லாஞ்ச் என்ற அறிஞர் ”இந்தியப் பட்டின் சாயல்” என்னும் பொருள்பற்றி இலண்டனில் உள்ள இந்தியக் கழகத்தில் 1983-ல் ஒரு சொற்பொழிவாற்றினார். அதில், ”பண்டு தொட்டு பாரத நாட்டில் பட்டு நெசவு ஒரு தனிச் சிறப்புடையதாய் விளங்கி வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆல். பில்ட்டர் என்ற பிரெஞ்சுப் பேரறிஞர், இந்தியத் துணிகள் என்ற நூலில் இந்திய நெசவுத் தொழிலின் செய்முறைகளையும் வண்ணச் சிறப்பையும் அதில் ஒளிரும் தாமரை, முல்லை, அரும்பு, மாம்பிஞ்சு போன்ற உருவங்களையும் வியந்து பாராட்டியுள்ளார்.
பருத்தி நெசவு முதன்முதல் இந்தியாவில்தான் செய்யப்பட்ட தென்றும், அங்கிருந்தே மேனாடுகளுக்குப் பரவிய தென்றும் 'வயவர் சாண் மார்சல்' கூறுகிறார். பண்டைக்காலச் வரலாற்றாய்வாளர்கள், மேனாடுகள் இந்தியாவினின்றும் இறக்குமதி செய்த பொருள்களுள், துணியும் ஒன்றெனத் தவறாது குறிப்பிடுகின்றனர். 18- ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை, இந்தியாவிலிருந்தே மேனாடுகளுக்குத் துணி ஏற்றுமதியானமை, பின்வருங் குறிப்பினாலறியலாம்.
“தற்கால இந்தியாவின் வறுமைக்கு மற்றொரு பெருங்காரணம், ஐரோப்பாவில் பொறிவினைத் தோற்றத்தினாலும், திருந்திய முறைச் செய்பொருள் வினையின் பரவலினாலும் ஏற்பட்ட கைத்தொழில் தேவைக்குறைவே. ஐரோப்பா, இந்தியரின் சொந்தத் துறைகளில், இன்னும், எண்ணுக்கெட்டாத தொன்று தொட்டு எவற்றுக்கு அவர்களைச் சார்ந்திருந்தோமோ அவையும், அவர்களுக்கே விதப்பாயுரியவுமான கைத்தொழில்களிலும் செய்பொருள் வினைகளிலும், அவர்களை வெல்லக் கற்றுக் கொண்டதினால், உண்மையில் இனியொருபோதும் எதற்கும் இந்தியாவைச் சாந்திருப்பதில்லை. உண்மையில், காரியங்கள் தலைகீழாய் மாறிவிட்டன. இவ்வெளிப்பாடு இந்தியாவை முற்றிலும் கெடுத்துவிடுவதாக அச்சுறுத்துகின்றது. “ஐரோப்பாவிற்குத் திரும்புவதற்குச் சற்று முன்பே, கைத்தொழில் செய்யும் கூற்றங்களிற் சிலவற்றினூடு வழிச் சென்றேன். அங்குப் பரவியிருந்த பாழ்நிலைக்கு ஏதும் ஒப்பாகாது. வேலையறைகளெல்லாம் சாத்தப்பட்டிருந்தன. அங்கே வாழும் இலட்சக்கக்கணக்கான நெசவுத்தொழின் மக்கள் பசியால் மடிந்து கொண்டிருந்தனர். நாட்டிலுள்ள முன்றவற்றெண்ணம் (Prejudice) பற்றி, அவர்கள் அவமானப்பட்டன்றிப் பிற தொழிலையும் மேற்கொள்ள முடியாது. முந்திய காலத்தில் நூல்நூற்றுத் தங்கள் குடும்பத்தைக் காத்துவந்த, கணக்கற்ற கைம்பெண்களும் பிற பெண்டிரும் வேலையிழந்து பிழைப்பற்றிருந்ததைக் கண்டேன். யான் எங்குச் சென்றாலும் ஒரே துன்பத்தோற்றம் எனக்கு எதிரே நின்றது”
என்று 18ஆம் நூற்றாண்டில் மைசூர் நாட்டில் விடையூழியம் செய்த அப்பே டூபாய்ஸ் (Abbe Dubois) கூறுகின்றார்.[22]
ஆடைகுறித்த பழந்தமிழ் சொல் வழக்குகள்
[தொகு]பரிபாடல், புறநானூறு, பெரும்பாணாற்றுப்படை போன்ற பைந்தமிழ் நூல்களில் ஆடைகுறித்த வழக்காறுகள் காணப்படுகின்றன. 'ஆவியன்ன அவிநூற்கலிங்கம்', 'நீலக்கச்சைப் பூராடை வெண்துகில்', 'இழை மணிவாரா ஒண்பூக்கலிங்கம்' என்பன அவற்றுள் சில. பாண்டி நாட்டில் நெய்யப்பெற்ற பட்டாடைகள் உரோம், கிரேக்கம், எகிப்து, அரேபியா, கடாரம், சாவகம் முதலிய நாடுகளின் மன்னர்தம் அரண்மனைகளை அலங்கரித்தன. இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் படுக்கை அறையினை பங்கயப் பட்டு எனப்படும் பட்டு அலங்கரித்தது.[23]
பலவகைத் துணிகள் பண்டைத் தமிழ்நாட்டில் நெய்யப்பட்டமை, துகில் (ஆடை):
- கோசிகம்
- பீதகம்
- பச்சிலை
- அரத்தம்
- நுண்டுகில்
- சுண்ணம்
- வடகம்
- பஞ்சு
- இரட்ட
- பாடகம்
- கோங்கலர்
- கோபம்
- சித்திரக்கம்மி
- குருதி
- கரியல்
- பேடகம்
- பரியட்டக்காசு
- வேதங்கம்
- புங்கர்க்காழகம்
- சில்லிகை
- தூரியம்
- பங்கம்
- தத்தியம்
- வண்ணடை
- கவற்றுமடி
- நூல் யாப்பு
- திருக்கு
- தேவாங்கு
- பொன்னெழுத்து
- குச்சரி
- தேவகிரி
- காத்தூலம்
- இறஞ்சி
- வெண்பொத்தி
- செம்பொத்தி
- பணிப்பொத்தி
[24] என 36 வகையென்று அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.[25]
அக்காலத்தில் பாலாடைக்கும் பஞ்சாடைக்கும் ஆடை என்னும் பொதுப்பெயர் வழங்கி வந்துள்ளது. இக்காலத்திற் சூழ்ச்சியப்பொறியால் நெய்யும் சிறந்த ஆடை வகைகள் போன்றே, அக்காலத்திற் கைத்தறியால் தமிழர் நெய்து வந்தனர் என்பதை அறியலாம்.
நெசவு குறித்த தமிழ்ச் சொற்கள் மேலை ஆரிய மொழிகளில்
[தொகு]நெசவுபற்றிய சில தமிழ்ச்சொற்கள் சில மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன.
- பன்னல் = பருத்தி. = இலத்தீன். punnus, cotton,= இத்தாலி. panno, cloth.
- கொட்டை = பஞ்சு. == Ar. qutun, = இத்தாலி. cotone,= பிரெஞ்சு. coton, ஆங்கிலம் cotton. (கொட்டை நூற்றல் என்னும் வழக்கம் உண்டு. பருத்திக் காயினின்று கொட்டுவது கொட்டை.)
- வேட்டி = ஆடை. இலத்தீன். vestis, சமஸ்கிருதம். வஸ்த்ர, ஆங்கிலம். vesture.
(நீளமாக நெய்து வெட்டுவது வேட்டி. துணிப்பது துணி. “தடுக்கப் பழையவொரு வேட்டி யுண்டு” என்று பட்டினத்தார் கூறுவதால் அறியலாம்.[26])
- சேலை = (சீலை) நீண்ட அல்லது அகன்ற துணி. A.S. segel, ஆங்கிலம். sail.
- தச்சு = இலத்தீன். texo, ஆங்கிலம். texture, anything woven.
(தை + சு = தைச்சு - தச்சு. தச்சு = தைப்பு. தச்சு என்னும் பெயர் சரியானபடி நெசவுக்குரியதேனும், தற்போது மரவேலைக்கு வழங்கிவருகின்றது,[27])
பட்டு நெசவு
[தொகு]பருத்தியும் பட்டும் ஆடைக்கான அடிப்படை மூலப்பொருட்களாகும். தமிழகத்தின் பாரம்பரிய உடைகளில் முக்கியமானது பட்டுச்சேலைகள். திருமணம், புதுமனைப் புகுதல் போன்ற நிகழ்ச்சிகளின் போது, பட்டுச் சேலைகள் உடுத்துவதை பெண்கள் பெருமையாகக் கருதுகின்றனர். உலக அளவில் பட்டின் தாயகமாகச் சீனா கருதப்படுகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, ஏறக்குறைய 3000 மூன்றாயிரம் ஆண்டுகளாகச் சீனர்கள் பட்டு ஆடைகளை நெய்து, உடுத்தி வருகின்றனர். அவர்களுக்கு இணையாக, தொல் பழங்காலத்திலேயே தமிழர்கள் பட்டுத்துணிகளை நெய்வதுடன், உரோமாபுரி உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்குப் பட்டு ஏற்றுமதியும் செய்து வந்தனர் என்பதற்குச் சான்று ஆவணங்கள் உள்ளன.
அந்நாள்களில் பட்டு கிடைத்தற்கரிய, பொருளாக, மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருந்தது. எனவே, தெய்வ வழிபாட்டுக்கும், மன்னர்களின் குடும்பத்தினருமே பட்டை பயன்படுத்தி வந்தனர். இன்றைக்கும், வளமான வாழ்க்கைக்கு அடையாளமாகப் பட்டு ஆடைகள் திகழ்கின்றன. மங்கல நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் பட்டு முதன்மை பெறுகிறது.
இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள், பட்டு நெசவில் முன்னிலை பெற்று உள்ளன. அண்மைக்காலமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டை மேலை நாட்டின் விரும்பி வாங்குகின்றனர். அந்த அளவுக்கு இந்தியத் தொழினுட்பம் வளர்ந்து உள்ளது. இந்தியாவில் மட்டும்தான் மல்பரி, முகா, டாசர், ஏரி ஆகிய நான்கு வகையான பட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இதில் மல்பரி பட்டு 87 விழுக்காடு தயாரிக்கப்படுகிறது.
பட்டுச் சேலை தயாரிப்பிற்கு முக்கியமானது, 'கோறா' என அழைக்கப்படும், பட்டு நூல் மற்றும் தூய சரிகை. தங்கம், வெள்ளி ஆகியவற்றை பயன்படுத்தி சரிகை தயாரிக்கப்படுகிறது.[28]
நெசவு நடைபெறும் இடங்கள்
[தொகு]தமிழகத்தில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், சேலம்,கோவை, திருநெல்வேலி, கடலூர் மாவட்டங்களில், பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மாநிலம் முழுவதும், 88 பட்டுக் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இவற்றில் 43 ஆயிரத்து 741 பேர், உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கங்களில், 2009 -10ம் ஆண்டு, 176 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதுதவிர, இலட்சக்கணக்கான தனியார் நெசவாளர்கள் உள்ளனர். இவர்களில் சிலர், தங்கள் வீடுகளில் சொந்தமாக தறி வைத்து, நெசவு செய்கின்றனர். சிலர், பட்டுச் சேலை உற்பத்தியாளர்களிடம் பணிபுரிகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள களங்காணி கிராமத்தில் கைத்தறி கோர்வை ரகம் வேட்டி நெசவு செய்யப்படுகின்றன.
காஞ்சிபுரம் மற்றும் ஆரணி நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சி மற்றும் ஆரணி பட்டுப் புடவைகள் மிகவும் சிறப்புப் பெயர் பெற்றவை. பாரம்பரியமாகப் பட்டுப்புடைவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் பட்டு நெசவு தாராசுரம், திருப்புவனம், அம்மாப்பேட்டை, முதலிய இடங்களில் பெருமளவு செய்யப்படுகிறது. பட்டு உற்பத்தியில் குடந்தைதான் முன் நிற்கிறது. ஆண்டுக்கு ரூ.150 கோடி மதிப்புடைய 7.5 இலட்சம் பட்டுப்புடவைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு இதன் மூலம் 25,000 தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். சுமார் 7.5 லட்சம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பக்க விளிம்பு என்பதே குடந்தை பட்டின் தனித்தன்மை.[29]
திருப்புவனத்தில் நெசவாளர்கள் கணிசமாக வசிக்கின்ற காரணத்தால் பட்டு நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்குகிறது. பல கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்து அரசு பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து சங்கத்தின் மூலமே விற்பனை செய்தும் வருகிறது. இங்கு உள்ள திகோ சில்க்ஸ் என்றழைக்கப்படும் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் தான் இந்தியாவிலேயே அதிக விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கமாகும். .[30]
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நெய்யப்படும் சின்னாளபட்டி சேலைகள் புகழ் மிக்கவை. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்தச் சேலைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆறு கெஜம், எட்டு கெஜம் என்று பல அளவுகளில், கண்ணைக் கவரும் வேலைப்பாடுகளில் தயாரிக்கப்பட்ட செயற்கைப் பட்டுச் சேலைகளை பெண்கள் மிகவும் விரும்பி அணிந்து வந்தனர். இங்கு நெய்யப்படும் சுங்குடிச் சேலைகளும் புகழ்பெற்றவை.[31]
நெசவாளர்கள்( தொழிலில் ஈடுபடுவோர்)
[தொகு]பல தலை முறைகளாகத் தொடரும் இந்தக் கைவினைக் கலைத் தொழில் முன்னாட்களில் தமிழ் பேசும் செங்குந்த கைக்கோள முதலியார், சௌராஷ்ட்ரர்கள் மற்றும் தெலுங்கு பத்ம சாலியர்களால்[சான்று தேவை] மேற்கொள்ளப்பட்டு கால ஓட்டத்தால் இன்று பல இனத்தவர்களும் பங்கு கொள்ளும் நிலையினை எட்டியுள்ளது. தமிழகக் கிராமங்களில் குடிசைத் தொழிலாக நடைபெறும் இக்கலையில் ஆண்களோடு பெண்களும் ஈடுபடுகின்றனர். புடவை ஒன்றினை நெய்து முடிக்க மூவரின் உழைப்பு தேவைப்படுகிறது.
நெசவுத் தொழில் செய்வோர் இல்லங்களில், நெசவுத் தொழிலை ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவியுடன் செய்வார்கள், பண்டைய காலம் தொட்டு உள்ள இதனை,
“ | வையகத்தில் சீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக் |
” |
என்று செங்குந்தர் துகில்விடு தூது நூலில் பரமானந்த நாவலர் எடுத்துக் கூறுகிறார்.
தறிகள்
[தொகு]நெசவுத் தொழில் ஏறக்குறைய ஒரு குடிசைத் தொழில்போல நடைபெறுகிறது. நெசவாளர்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது ஒட்டு மொத்தமாகக் கூட்டுறவு நிறுவனத்திலோ தறிகளை நிறுவி நெசவு செய்தல் நடைமுறையில் உள்ளது. தறிகள் கைத்தறிகளாகவோ விசைத்தறிகளாகவோ அமைக்கப்படுகின்றன. எளிமையான கட்டுத்தறி முதல் நிலைத்த தரைக் கட்டுத்தறிவரை பல வகைகள் உள்ளன. நெசவுத் தறி பல்வேறு கூறுகளைக் கொண்டிருக்கும். அவை:
- நூல் அடை
- அச்சு
- தறிப்பலகை
- நாடா
- கைப்பலகை
- சுங்கு
- தோணை
- நடுகல்
- சுத்துக்கட்டு
- தார்க்கட்டை
- சல்லடை
- முட்டாத்திரி
- பருவட்டம்
- ராட்டினம்
- சப்பூரி
- ஊடு
- பட்டுக்கட்டை
- வடிவமைப்பு அட்டை
இவைபோன்ற இன்னும் பல உட்கூறுகள் இருக்கும். தரையில் பள்ளம் தோண்டி அமர்ந்தபடி அதனுள் கால்களை விட்டுக்கொள்ளும் இடத்திற்கு 'தோணை' என்று பெயர்.[32]
நெசவுத்தொழில் பணிகள்
[தொகு]ஒன்றன்பின் ஒன்றாக நெசவுக்கான பணிகள் அமைகின்றன.
- சாயம் போடுதல்
- பாவு சரிசெய்தல்
- இழைச் சிக்கெடுத்தல்
- கஞ்சி போடுதல்
- தெம்பேற்றுதல்
- மழைக்காலமாயின் அணல் காட்டுதல்
- தறியேற்றுதல்
- சரிகை வடிவமைப்புச் செய்தல் (புடவை,வேட்டி)
- நெய்தல்
- மடித்தல்
- விற்பனை செய்தல்
என இம்முறைகள் அமையும்.[32]
வேலைப்பாடுகள்
[தொகு]வேட்டிகள் வண்ண விளிம்புகள் அல்லது சரிகை விளிம்புகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. புடவைகளில் உருவங்கள், கிளிகள், மாம்பழம், பூக்கள், மயில், அன்னப்பறவை, கோபுரம், ஓவியங்கள், பெயர்கள் முதலியன சேர்த்து நெய்தல் வழக்கம். காலச் சூழலுக்கு ஏற்ப கணினி வடிவமைப்பு நுட்பங்களையும், கற்கள் பதித்தல், சிகினா வேலைப்பாடுகள் போன்றவற்றையும் கடைப்பிடிக்கின்றனர்.[32]
வணிகம்
[தொகு]தமிழகத்தில் தயாரிக்கப்படும் பட்டு மற்றும் கைத்தறி ஆடைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், பிரான்சு, கனடா, மலேசியா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.
தற்கால நிலை
[தொகு]இத்தகைய பெருமைக்குரிய பட்டு நெசவுத் தொழில் கச்சாப் பொருட்களின் விலை ஏற்றத்தாலும், மூலப் பொருட்களின் தட்டுப்பாட்டாலும், இணையதள வணிகச் சூதாட்டங்களாலும், கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி, மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது. பங்குச்சந்தை வணிகர்கள், பட்டு மூலப்பொருட்களைப் பதுக்கி, கொள்ளை இலாபத்துக்கு விற்கிற நிலைமை ஏற்பட்டு உள்ளது. பட்டுச் சேலை தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் சரிகை விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால், பட்டுச் சேலை உற்பத்தியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களிலும், விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், வேலையின்றி தவிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.[28]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சாத்தன்குளம் அ. இராகவன், 'தமிழ் நாட்டு ஆடைகள்'". Archived from the original on 2012-07-06. பார்க்கப்பட்ட நாள் 2012-05-28.
- ↑ சண்முகநாதன், 'தமிழனின் வரலாறு - 10,000 ஆண்டுகளுக்கு முன்'[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Cenkai Mavatta Varalarruk Karuttaranku
- ↑ நற்றிணை 335,
- ↑ புறநானூறு. 125
- ↑ வேளாளர்களின் வரலாறு: சில ஆய்வுச் சிக்கல்களுக்கு விடைதேடும் முயற்சி (பகுதி 5)எஸ். இராமச்சந்திரன்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ஆ சீனிவாசன். தமிழ்ச் சமூக வரலாறு". Archived from the original on 2012-06-02. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
- ↑ மெய்ப்பாட்டியல், நூற்பா 14.
- ↑ சிலப்பதிகாரம் 14 : 205-7
- ↑ சீவக சிந்தாமணி பா.1898
- ↑ சீவக சிந்தாமணி பா.2686
- ↑ புறநானூறு: 299-1)
- ↑ புறநானூறு: 324-7
- ↑ புறநானூறு: 393-12
- ↑ அகநானூறு: 133-6
- ↑ நற்றிணை: 353-1
- ↑ புறநானூறு: 326 - 5
- ↑ மலைபடுகடாம் 565
- ↑ வியக்க வைக்கும் தமிழர் அறிவிய நூலில் இருந்து
- ↑ சிலப்பதிகாரம்
- ↑ 2-வது உலகத் தமிழ்நாட்டு கலைக் காட்சி கையேடு….
- ↑ Hindu Manners, Customs and Ceremonies, Ch. VI.
- ↑ எழிலன், "பட்டு நெசவு - ஒரு பார்வை!" பிளாக்ஹோல் மீடியா வெளியீடு. பக்.159.
- ↑ சிலப்பதிகாரம் பக். 379.
- ↑ களப்பணி ஆய்வு, சாத்தன்குளம் அ. இராகவன். ஆய்வுக்குறிப்புகள்
- ↑ திருத்தில்லை, பா.17
- ↑ தமிழ் இணைய பல்கலைக்கழகம்
- ↑ 28.0 28.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2012-05-28.
- ↑ http://munaskhan.spaces.live.com/blog/cns!EE547136DF10B8CB!895.entry[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-01-13. பார்க்கப்பட்ட நாள் 2012-05-28.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-12. பார்க்கப்பட்ட நாள் 2012-05-31.
- ↑ 32.0 32.1 32.2 "தமிழகத்தின் மரபுக்கலைகள்" (in தமிழ்). பிளாக்ஹோல் மீடியா. pp. 158-162.
வெளி இணைப்புகள்
[தொகு]- நெசவுத் தொழிலும் வனைதற் தொழிலும் கலைச்சொற்கள் - நூலகத் திட்டம் - (தமிழில்)
- அழியும் பாரம்பரியம்! பரணிடப்பட்டது 2012-10-17 at the வந்தவழி இயந்திரம் - (தமிழில்)