ஜலியான்வாலா பாக் படுகொலை
ஜலியான்வாலா பாக் படுகொலை | |
---|---|
இடம் | அமிருதசரசு, பஞ்சாப் |
ஆள்கூறுகள் | 31°37′13.87″N 74°52′49.55″E / 31.6205194°N 74.8804306°E |
நாள் | ஏப்ரல் 13, 1919 17:37 (IST) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | Crowd of nonviolent protesters, along with வைசாக்கி pilgrims, who had gathered in ஜலியான்வாலா பாக், அமிருதசரசு |
தாக்குதல் வகை | படுகொலை |
ஆயுதம் | Lee-Enfield rifles |
இறப்பு(கள்) | 379-1,600[1] |
காயமடைந்தோர் | ~ 1,100 |
தாக்கியோர் | Riflemen of the 2nd/9th Gurkha Rifles, the 54th Sikhs and the 59th Sind Rifles, Indian Army |
தாக்கியோரின் எண்ணிக்கை | 50 |
ஜலியான்வாலா பாக் படுகொலை அல்லது ஜாலியான்வாலா பாக் படுகொலைகள் (Jallianwala Bagh Massacre), அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன. பிரித்தானிய அரச மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர். ஆனாலும் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.[2],[3] காந்தியடிகளால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.[4][5]
பின்னணி பார்க்கவும்
[தொகு]பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம்ரூல்) இயக்கம், மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முனைப்புற்றன. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது.
பிரித்தானிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் போராட்ட உந்துதலையும் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர். சிட்னி ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் தொடர்புகள் பற்றி இக்குழு ஆராய்ந்தது. இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது[6][7][8][9]. ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது.
ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் பெருகின. 1919 மார்ச் 29 ஜாலியான் வாலாபாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது. மார்ச் 30 அன்று பெரும் கடையடைப்பு நடத்த முன்னேற்பாடுகள் நடந்தன. கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுமக்கள் சுயவிழிப்பின் பேரில் கலந்து கொண்டனர். இப்போக்கு ஆட்சியாளருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தில்லியிலும் கடையடைப்பு நடந்தது. அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறையினர் சுட்டதில் 8 பேர் மாண்டனர்[10].
மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்புக் கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும் பெரும் போராட்டமாகவே வளர்ச்சியடைந்தது. இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை.
ஏப்ரல் 13, 1919
[தொகு]ஏப்ரல் 13 வைசாகி நாள். அன்றுதான் குருகோவிந்த் சிங் கால்ஸா (சீக்கிய அறப்படை) இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு, அம்ரித்சரில் இந்நாள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு.
இந்நிலையில் இராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் 100 வெள்ளையின படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டான்.
திறந்திருந்த ஒரேயொரு வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். சுவர்களின் மீது ஏறிக் குதித்தனர். வேறு சிலர் சூட்டிலிருந்து தப்பிக்க திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழ்ந்தனர். இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆகும்.
அதிகாரபூர்வமாக மொத்தம் 379 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததால் காயம்பட்டவர்கள் அங்கேயே காலை வரையில் இருக்க வேண்டியதாகி விட்டது.
பஞ்சாபின் துணை ஆளுநர் சேர் மைக்கல் ஓ'ட்வையர் "ஜெனரல் டையரின் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு உடன்பாடானவையே" என டையருக்குத் தந்தி அனுப்பினார்[11].
பஞ்சாப் படுகொலைகளை விசாரிக்க ஹண்டர் என்பவர் தலைமையில் ஒரு குழுவை வைசிராய் நியமித்தார். டையர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டையர் ஜெனரல் ஸ்டாஃப் டிவிஷன் எனும் ராணுவ மேலதிகார நிலையினருக்குச் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது:
“ | நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.[12] | ” |
வின்ஸ்டன் சர்ச்சில் 1920 சூலை 8 ஆம் தேதி இங்கிலாந்தின் ஹவுஸ் ஒப் கம்மன்சில் உரையாற்றும் போது ஜெனரல் டயர்யை பணியில் இருந்து எடுத்து விடலாம் அல்லது அவருக்கு பணி ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறினார்.[சான்று தேவை]
இந்நிகழ்ச்சி நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர், பஞ்சாப் வீரர் உத்தம் சிங், லண்டன் கேக்ஸ்டன் மண்டபத்தில் வைத்து டையரை சுட்டுக் கொன்றார்.
ஹண்டர் ஆணைக்குழு
[தொகு]1919 அக்டோபர் 14 இல் வில்லியம் ஹன்டர் தலைமையில் ஒரு விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அதற்கு அவர் பெயரே வைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கை 1920 மார்ச் 8 அன்று வெளியிடப்படது.
அக்குழுவின் அறிக்கை விபரம் :-
- மக்கள் கலைந்து செல்ல எந்தவித அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை
- சுட்டப்பட்ட காலம் மிகவும் அதிகம் .
- டயர் நிலைமை சரிசெய்ய அவர் கையாண்ட உத்தி தவறு மற்றும் கண்டனத்துக்கு உரியது
- டயர் அவருடைய அதிகாரத்தை மீறிய செயல்களில் ஈடுபட்டார்
- பஞ்சாபில் பிரித்தானியா அரசை தூக்கி எறிவதற்கான எந்த சதி வேலைகளும் அப்போது இல்லை[13]
இவ்விசாரணைக் குழு இராணுவ அதிகாரி டயருக்கு எந்த தண்டனையும் பரிந்துரைக்கவில்லை.
ஜாலியன்வாலா பாக் நினைவிடம்
[தொகு]படிமம்:Jallianwala Bagh Memorial in Amristsar.jpg இந்த படுகொலையில் உயிரிழந்தோர் 379, குண்டுக் காயம் பட்டோர் 1337 பேர் என்று ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்திய விடுதலைப் பொன்விழா ஆண்டான 1997 இல், ஐ. கே. குஜரால் அரசால் சிவப்புக் கம்பள வரவேற்பு பெற்ற, பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தும் அவரது கணவர் எடின்பரோவும் ஜாலியன்வாலா பாக் நினைவிடம் சென்றனர்.அங்கு, எடின்பரோ பலியானோர் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்றார்.இக்கூற்று பலராலும் விமர்சிக்கப்பட்டது.[4][14]
பிரித்தானிய வருத்தம் கோரியது
[தொகு]13 ஏப்ரல் 2019 நாளன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து நூறு ஆண்டுகள் ஆன நிலையில், ஜாலியான்வாலாபாக் படுகொலைக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.[15]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1919 Jallianwalla Bagh massacre". Discover Sikhism. Archived from the original on 28 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Home Political Deposit, September, 1920, No 23, National Archives of India, New Delhi; Report of Commissioners, Vol I, New Delhi
- ↑ Report of Commissioners, Vol I, New Delhi, p 105
- ↑ 4.0 4.1 நியூயார்க் டைம்ஸ்
- ↑ ஜாலியன்வாலா பாக் படுகொலை
- ↑ Lovett 1920, ப. 94, 187-191
- ↑ Sarkar 1921, ப. 137
- ↑ Tinker 1968, ப. 92
- ↑ Popplewell 1995, ப. 175
- ↑ "ஜாலியன்வாலாபாக் ஒரு பின்னோக்கிய பயணம்". Archived from the original on 2007-08-12. பார்க்கப்பட்ட நாள் 2008-04-12.
- ↑ Disorder Inquiry Committee Report, Vol II, p 197
- ↑ 1919 ஏப்ரல் 13 படுகொலைக் கட்டம்
- ↑ Collett, Nigel (2006). The Butcher of Amritsar: General Reginald Dyer. Continuum International Publishing Group. pp. 333–334. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85285-575-4, 9781852855758.
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help); More than one of|subject=
and|last=
specified (help) - ↑ சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்;வி.வி.வி.ஆனந்தம், கங்கை புத்தக நிலையம்;பக்கம் 29
- ↑ ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன்
வெளி இணைப்புகள்
[தொகு]- A NPR interview with Bapu Shingara Singh – the last known surviving witness.
- Churchill's speech பரணிடப்பட்டது 2010-10-19 at the வந்தவழி இயந்திரம் after the incident.
- Amritsar Massacre at Jallianwala Bagh Listen to the Shaheed song of the Amritsar Massacre at Jallian Wala Bagh.
- A description of the Jallianwala Bagh Massacre பரணிடப்பட்டது 2008-06-10 at the வந்தவழி இயந்திரம்
- The Amritsar Massacre A description of the ஜலியான்வாலா பாக் Massacre.