சின்னப்பிள்ளை
சின்னப்பிள்ளை இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாயிடமிருந்து, மகளிர் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் ” ஸ்திரீ சக்தி ”[1] எனும் உயர் விருது பெற்றவர். விருது வழங்கிய வாஜ்பாய், தன்னைவிட வயதில் இளையவரான சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார்[2][3].
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சின்னப்பிள்ளை மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்து, மதுரையிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பில்லுச்சேரி கிராமத்தில் வாழ்கிறார். பன்னிரண்டு அகவையில் சின்னப்பிள்ளைக்கும் பில்லுசேரிப் பெருமாளுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் நடந்தது. இரண்டு ஆண் குழுந்தைகள். கணவர் பெருமாள் தீராத நோயினால் வேலைக்குச் செல்ல முடியாது வீட்டிலேயே முடங்கி விட்டார். அதே காலத்தில் சின்னப்பிள்ளையின் தந்தையும் காலமானர். இதனால் சின்னப்பிள்ளை விவசாயக் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு உள்ளானார்.
இந் நிலையில்தான் இன்றளவும் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருப்பினும், கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார்[4][5]. சின்னப்பிள்ளையின் பெயர் தமிழக வரலாற்று பக்கங்களில் இடம் பெறத் தொடங்கியது.
இளமைக்கால போராட்ட வாழ்க்கை
[தொகு]நில உரிமையாளர்களைச் சந்தித்து, மொத்தமாக பத்து பதினைந்து ஏக்கர் விவசாய விளை நிலங்களில் விவசாய வேலையைக் குத்தகைக்கு எடுத்து, விவசாயக் கூலியாட்களை அணி திரட்டி, நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல் போன்ற பணிகள் செய்து, அதில் வரும் மொத்தக்கூலியை அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டு வழங்கினார். முதியவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் தனது அணியில் சேர்த்து அவர்களுக்கும் வேளாண் வேலை வழங்கி கூலி வாங்கிக் கொடுத்தார்.
களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்
[தொகு]சின்னப்பிள்ளை வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் வளர்ந்து வரும் நேரத்தில், மதுரையில் செயல்படும் தானம் அறக்கட்டளையின் தலைவர் வாசிமலை தனது குழுவினருடன் பில்லுச்சேரி கிராமத்திற்கு சென்று, மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம் குறித்து சின்னப்பிள்ளையிடம் விளக்கி கூறினார். அதன்படி தன் கிராமத்திலும், சுற்றுப்புற கிராமங்களிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்து, மகளிர் பொருளாதார முன்னேற்றத்திற்குக் காரணமாக விளங்கினார் சின்னப்பிள்ளை.
சின்னப்பிள்ளை ஏற்படுத்திய மூன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம், கிராமக் கண்மாயில் மீன் பிடிக்கும் குத்தகையை, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுச் சாதனை படைத்தனர்.
2004 இல் சுனாமி எனும் ஆழிப்பேரலை தமிழ்நாட்டை தாக்கியபோது சின்னப்பிள்ளை தலைமையில் சென்ற மீட்புப் பணியில் இருந்த மகளிர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது.
இந்தியப் பிரதமரின் ”ஸ்திரீ சக்தி விருதுடன்” கிடைத்த ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாயை மகளிர் சுய உதவிக்குழு தலைவிகளின் மருத்துவச் செலவிற்காக அறக்கட்டளை ஒன்று உருவாக்கி உள்ளார்.
கிராமப்புறத்தில் வழங்கி வந்த கந்து வட்டி முறையை, (நூறு ரூபாய் அசலுக்கு, ஒரு முட்டை நெல் வட்டி) மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒழித்துக் கட்டினார்.
ஆரம்ப காலத்தில் கிராமப்புறங்களில் மட்டுமே இயங்கி வந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள், தற்போது நகர்ப் புறங்களிலும் மகளிர் மேம்பாட்டிற்காக சிறப்பாக செயல்படுவதற்கு வித்திட்டவர் சின்னப்பிள்ளை.
வகித்த பதவிகள்
[தொகு]- மகளிர் சுய உதவிக்குழு துவக்கும் போது பதினான்கு மகளிர் கொண்ட சுய உதவிக்குழுவிற்கு தலைவியாக இருந்த சின்னப்பிள்ளை அடுத்த மூன்றாண்டுகளில் ஐந்தாயிரம் மகளிர்க்கு தலைவியானர்.
- ஏழு மாநில மகளிர் களஞ்சிய சுய உதவிக் குழுக்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார்.
- தற்போது தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளம், இராசசுதான், மத்தியப் பிரதேசம், ஒரிசா உள்ளிட்ட பன்னிரண்டு மாநிலங்களைச் சேர்ந்த இருநூற்று நாற்பது கூட்டமைப்புகளுக்கு இவர்தான் தலைவி. இக்கூட்டமைப்புக்குள் இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கை ஏறத்தாழ எட்டு இலட்சம் மகளிர்.
பெற்ற விருதுகள்
[தொகு]- இவரது மகளிர் மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டி, இந்திய அரசு மூன்று இலட்சம் ரூபாயுடன் கூடிய, "ஸ்திரீ சக்தி புரஸ்கார்" எனும் விருதை 1999ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வழங்கினார்.[6]
- தமிழ்நாடு அரசு ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொற்கிழி வழங்கி பாராட்டியது[6].
- தொழில் வாய்ப்பை ஏற்படுத்தியமைக்காக அளிக்கப்பட்ட பஜாஜ் ஜானகி தேவி விருதினை, மகாத்மா காந்தியின் பேத்தி சுமித்ரா குல்கர்னி இவருக்கு வழங்கினார்.[6][7].
- சிறந்த சமூக சேவைக்காக தூர்தர்ஷன் பொதிகை விருது (2007) வழங்கியது.[6].
- ஔவையார் விருது - 2018[8]
- பத்மசிறீ விருது 2019[9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nari Shakti Puraskar
- ↑ Rajachandrasekaran, Anitha (5 March 2005). "On an EQUAL footing". The Hindu இம் மூலத்தில் இருந்து 20 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131120070357/http://www.hindu.com/mp/2005/03/05/stories/2005030500910100.htm. பார்த்த நாள்: 10 March 2013.
- ↑ http://www.rediff.com/news/2001/jan/15spec.htm
- ↑ Dharmaraj, Vidyashree (23 March 2002). "Woman Achiever". The Hindu இம் மூலத்தில் இருந்து 28 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041128120312/http://www.hindu.com/thehindu/lf/2002/03/23/stories/2002032301540200.htm. பார்த்த நாள்: 9 March 2013.
- ↑ Doraisamy, Vani (24 January 2007). "Chinna Pillai to embark on a major mission". The Hindu இம் மூலத்தில் இருந்து 15 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071015130942/http://hindu.com/2007/01/24/stories/2007012416461000.htm. பார்த்த நாள்: 9 March 2013.
- ↑ 6.0 6.1 6.2 6.3 "DHAN Foundation".
- ↑ http://books.google.co.in/books?id=mqCqwOIl0cwC&pg=PA109&lpg=PA109&dq=awards+to+chinnapillai&source=bl&ots=7DLc5bIwBm&sig=oSEs1qQiBXdE_HmWhca_YucA-cQ&hl=en&sa=X&ei=1XJoU7-CD5ChugSUy4KQDQ&ved=0CE8Q6AEwBQ#v=onepage&q=awards%20to%20chinnapillai&f=false
- ↑ "அவ்வையார் விருது பெற்ற சின்னப்பிள்ளை பேட்டி". Archived from the original on 2021-09-27. பார்க்கப்பட்ட நாள் 2018-06-21.
- ↑ "மத்திய அரசின் பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன : 112 பேருக்கு பத்ம விருதுகள்". தந்தி தொலைக்காட்சி. 26 சனவரி 2019. Archived from the original on 2021-01-17. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2019.
- ↑ "பள்ளி செல்லாமல் பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப் பிள்ளை: யார் இவர்?". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-04-14.
உசாத்துணை
[தொகு]- தமிழக அரசின் செய்தி இதழ், தமிழரசு
வெளி இணைப்புகள்
[தொகு]- மகளிர் மேம்பாட்டிற்கான உயர்விருது பெறும் சின்னப்பிள்ளை பரணிடப்பட்டது 2007-10-15 at the வந்தவழி இயந்திரம்
- களஞ்சியம் சின்னப்பிள்ளை
- சின்னப்பிள்ளையின் சாதனைகள் பரணிடப்பட்டது 2013-07-20 at the வந்தவழி இயந்திரம்
- மகளிர் மேம்பாட்டிற்கான தானம் அறக்கட்டளை
- மதுரை சின்னப்பிள்ளையின் கள்ளந்திரி நினைவுகள் பரணிடப்பட்டது 2016-04-11 at the வந்தவழி இயந்திரம் - விகடன்