உள்ளடக்கத்துக்குச் செல்

குணப்பிரியா தருமபத்தினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குணப்பிரியா தருமபத்தினி
Gunapriya Dharmapatni
Sang Ratu Luhur Sri Gunapriya Dharmapatni
உபுட், குனோங் காவி 11-ஆம் நூற்றாண்டு கோயிலில் குணப்பிரியா தருமபத்தினி; உதயனா வருமதேவன் சன்னதிகள்
பாலி இராச்சியம்
ஆட்சிக்காலம்10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
முன்னையவர் செரி விஜய மகாதேவி
பின்னையவர்செரி அஜனாதேவி
இணை ஆட்சியாளர்உதயனா வருமதேவன்
துணைவர்உதயனா வருமதேவன்
குழந்தைகளின்
பெயர்கள்
ஏர்லங்கா
மரகத பங்கஜன்
அனாக் உங்குஸ்
மரபுவர்மதேவ வம்சம்
மதம்இந்து சமயம்

குணப்பிரியா தருமபத்தினி அல்லது மகேந்திரதத்தா (961–1011); (ஆங்கிலம்: Gunapriya Dharmapatni அல்லது Mahendradatta; இந்தோனேசியம்: Gunapriya Dharmapatni அல்லது Sang Ratu Luhur Sri Gunapriya Dharmapatni) என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியின் அரசி ஆவார். பாலி இராச்சியத்தின் அரசர்கள் வரிசையில் இவர் ஏழாவது இடத்தில் உள்ளார். இவரின் ஆட்சிக்காலம் கிபி 989-1007.[1] இவர் ஜாவானிய மன்னர் ஏர்லங்காவின் தாயாரும் ஆவார்.[2][3]

உதயனா வருமதேவன்; குணப்பிரியா தருமபத்தினி தம்பதியினர் பாலியை இணைந்து ஆட்சி செய்தனர்; இருவரின் பெயர்களிலும் கல்வெட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.[4]

இவரின் மற்ற இளைய மகன்கள் மரகத பங்கஜன்; மற்றும் அனாக் உங்குஸ் ஆவார்கள். அவர்களில் மரகத பங்கஜன் (Marakata Pangkaja) என்பவர் உதயனா வருமதேவனின் மரணத்திற்குப் பிறகு பாலியின் மன்னரானார. மற்றொரு மகனான் அனாக் உங்குஸ் (Anak Wungsu) என்பவர் மரகத பங்கஜத்தின் மரணத்திற்குப் பிறகு அரியணை ஏறினார்.[5]

வாழ்க்கை

[தொகு]

குணப்பிரியா தருமபத்தினி 961-இல் ஜாவா தீவில் பிறந்தார்; கிழக்கு ஜாவாவின் வட்டுகலு அரண்மனையில் (Watugaluh Palace) வளர்ந்தார். கிழக்கு ஜாவானிய ஈசான வம்சத்தின் இளவரசியான குணப்பிரியா தருமபத்தினியின் தந்தை பெயர் மகுடவங்சன் (Makutawangsa). அவர் மாதரம் இராச்சியத்தின் அரசராக இருந்தவர்.[6][7][8]

குணப்பிரியா தருமபத்தினி, மாதரம் இராச்சியத்தின் மன்னர் தருமவங்சன் என்பவரின் (Dharmawangsa) சகோதரியும் ஆவார். பின்னர் அவர் பாலினிய உதயனா வருமதேவனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு, அவரின் மனைவியாக பாலி தீவுக்குச் சென்றார். அங்கு மகேந்திரதத்தா என்ற பெயரைப் பெற்றார்.[9]

மரபு

[தொகு]
விஷ்ணுவை கருடன் சுமந்து செல்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ள மன்னர் ஏர்லங்காவின் சிலை

மாதரம் இராச்சியத்தின் ஆளும் இளவரசியாக குணப்பிரியா தருமபத்தினி வகித்த சக்திவாய்ந்த பதவி தான், அவர் பாலியின் அரசியாக ஆட்சி செய்யவும் வழிவகுத்தது என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

மாதரம் இராச்சியத்தின் அடிமையாக கருதப்பட்ட பாலினிய வர்மதேவா குடும்பத்துடன், குணப்பிரியா தருமபத்தினியின் திருமணம், மாதரம் இராச்சியத்தின் ஒரு பகுதியாக பாலியை அடையாளப் படுத்துவதற்கான ஓர் அரசியல் முன் ஏற்பாடாக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

முதல் மகன் ஏர்லங்கா

[தொகு]

சக்திவாய்ந்த மாதரம் இராச்சியத்தின் இளவரசி எனும் நிலைப்பாடுதான், பாலினிய இராச்சியத்தின் அரசவையினர், குணப்பிரியா தருமபத்தினியிடம் கவனமாகப் பழகுவதற்கும்; அவரை மதிப்பதற்கும்; அல்லது அவரைக் கண்டு பயப்படுவதற்கும் வழிவகுத்தது என்றும் சொல்லப்படுகிறது.

குணப்பிரியா தருமபத்தினி, தன்னுடைய 30-ஆவது வயதில் தன் முதல் மகனான ஏர்லங்காவை ஈன்றெடுத்தார். 30 வயது என்பது அன்றைய ஜாவா மற்றும் பாலியில் உள்ள பெண்களுக்கு, குழந்தை பெறுவதில் மிகவும் தாமதமான வயதாகும்.[10]

வரலாற்று சர்ச்சைகள்

[தொகு]
உபுட், குனோங் காவி கோயில்; இங்குதான் குணப்பிரியா தருமபத்தினி அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்
பாலியின் வர்மதேவா அரச மரபின் வரலாறு செதுக்கப்பட்ட கல்பாறை
குணப்பிரியா தருமபத்தினியின் மகன்கள் மரகத பங்கஜன்; அனாக் உங்குசு; 1020 - 1030 ஆண்டுகளில் கட்டிய குனோங் காவி கோயில்

உதயனா வருமதேவனைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாகவே குணப்பிரியா தருமபத்தினி வேறு ஒருவரைத் திரும்ணம் செய்து கொண்டு இருக்கலாம் எனும் ஊகங்களும் உள்ளன. இதனால் ஏர்லங்கா என்பவர் உதயனா வருமதேவனின் உயிரியல் மகன் அல்ல; குணப்பிரியா தருமபத்தினியின் முந்தைய திருமணத்திலிருந்து பெறப் பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.

முந்தைய கணவரைப் பிரிந்த பிறகு (மரணம் அல்லது விவாகரத்து காரணமாக) குணப்பிரியா தருமபத்தினி பாலினிய மன்னருக்கு நிச்சயிக்கப்பட்டு; பின்னர் அவர் தன் குழந்தை ஏர்லங்காவை பாலிக்கு அழைத்துச் சென்றார் என்றும் சொல்லப்படுகிறது.

மரகத பங்கஜம்

[தொகு]

ஏர்லங்கா, குணப்பிரியா தருமபத்தினியின் மூத்த மகனாக இருந்தபோதிலும், ஏர்லங்கா, பாலியின் பட்டத்து இளவரசராகத் தேர்ந்தெடுக்கப்படவே இல்லை; அவருக்குப் பதிலாக ஆயர்லங்காவின் தம்பிகள் மரகத பங்கஜன்; அனாக் உங்குஸ் ஆகிய இருவரும் பட்டத்து இளவரசர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் பாலினிய அரியணையில் அமர்த்தப்பட்டனர்.

மேலும், ஏர்லங்காவின் பதின்ம வயதிலேயே தன் தாயார் குணப்பிரியா தருமபத்தினியால் ஜாவாவிற்குத் திருப்பி அனுப்பிப் பட்டார். அத்துடன், குணப்பிரியா தருமபத்தினியின் இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமையவில்லை. தன் கணவர்; மற்றும் பாலினிய அரசவை; ஆகிய இருபுறங்களில் இருந்தும் இணக்கமற்ற போக்கே பெரும்பாலும் நிலவியது.

துர்க்கை அம்மன் வழிப்பாடு

[தொகு]

பாலினிய மக்கள் தவிர்த்து வந்த துர்க்கை அம்மன் வழிப்பாட்டை குணப்பிரியா தருமபத்தினி பின்பற்றியதால் அவரின் இல்லற வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பண்டைய ஜாவானிய மற்றும் பாலினிய மரபுகளில், துர்க்கை என்பவர் கடுமையான தன்மையைக் கொண்டவராகச் சித்தரிக்கப் படுகிறார்.

குணப்பிரியா தருமபத்தினி, துர்க்கை மீதான பக்திக்கு பெயர் பெற்றவர். ஜாவாவிலிருந்து பாலிக்கு துர்கா வழிபாட்டைக் கொண்டு வந்ததாகவும் நம்பப்படுகிறது. அதனால் அவர் பலத்த எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. கி.பி 1011-இல் இறந்த பின்னர் அவர், துர்கா மகிசா சூரமர்த்தினி (Durga Mahisashuramardini) என நிலை உயர்த்தப்பட்டு தெய்வமாக்கப்பட்டார்.

புரா புக்கிட் தர்ம குத்ரி கோயில்

[தொகு]

பாலி, கியான்யார் குறுமாநிலம் (Gianyar Regency), புருவான் கிராமத்தில் அமைந்துள்ள புரா புக்கிட் தர்ம குத்ரி கோயிலில் (Pura Bukit Dharma Kutri) குணப்பிரியா தருமபத்தினியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பாலினிய கோயில் வளாகத்திற்குள், 10 முதல் 13-ஆம் நூற்றாண்டு வரையிலான பல இந்து-பௌத்த சிலைகள் உள்ளன.

மேலும், உபுட், குனோங் காவி 11-ஆம் நூற்றாண்டு கோயிலில் குணப்பிரியா தருமபத்தினி; உதயனா வருமதேவன் சன்னதிகள் உள்ளன. அந்தச் சன்னதிகளில் வழிபாடுகள் இன்றும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Marwati Djoened Poesponegoro, Nugroho Notosusanto: Sejarah nasional Indonesia: untuk SMP. Departemen Pendidikan dan Kebudayaan, 1984
  2. Hanna, p.24
  3. Joniarta, Made (2023-03-31). "Sinkretisasi Siwa-Buddha di Pura Yeh Gangga Desa Perean Tengah Kecamatan Baturiti Kabupaten Tabanan". Pangkaja: Jurnal Agama Hindu 26 (1): 66–72. doi:10.25078/pjah.v26i1.2322. பன்னாட்டுத் தர தொடர் எண்:2623-2510. 
  4. John Norman Miksic; Goh Geok Yian (2016-10-14). Ancient Southeast Asia (in ஆங்கிலம்). Taylor & Francis. p. 417. ISBN 978-1-317-27904-4.
  5. John Norman Miksic; Goh Geok Yian (2016-10-14). Ancient Southeast Asia (in ஆங்கிலம்). Taylor & Francis. p. 417. ISBN 978-1-317-27904-4.
  6. Coedès, George (1975-06-01). The Indianized States of Southeast Asia (in ஆங்கிலம்). University of Hawaii Press. p. 129. ISBN 978-0-8248-0368-1.
  7. Snodgrass, Mary Ellen (2022-11-01). Asian Women Artists: A Biographical Dictionary, 2700 BCE to Today (in ஆங்கிலம்). McFarland. ISBN 978-1-4766-8925-8.
  8. Nastiti, Titi Surti (in en-US). PERKEMBANGAN AKSARA KWADRAT DI JAWA TENGAH, JAWA TIMUR, DAN BALI: ANALISIS PALEOGRAFI | Nastiti | Forum Arkeologi. doi:10.24832/fa.v29i3.94. http://forumarkeologi.kemdikbud.go.id/index.php/fa/article/view/94. 
  9. Jaya, I. Made (1994-05-30). "Perkawinan Eksogami dan Dampaknya dalam Sejarah Bali Kuna (Sebuah Studi Kasus)". Berkala Arkeologi 14 (2): 148–152. doi:10.30883/jba.v14i2.714. பன்னாட்டுத் தர தொடர் எண்:2548-7132. https://berkalaarkeologi.kemdikbud.go.id/index.php/berkalaarkeologi/article/view/714. 
  10. Hanna, Willard A. (2012-03-10). Bali Chronicles: Fascinating People and Events in Balinese History (in ஆங்கிலம்). Tuttle Publishing. ISBN 978-1-4629-0211-8.

சான்றுகள்

[தொகு]
முன்னர் பாலி அரசர்கள்
குணப்பிரியா தருமபத்தினி
989-1007
பின்னர்

வெளி இணைப்புகள்

[தொகு]