கூத்தாய் இராச்சியம்
இந்தோனேசிய வரலாறு |
---|
![]() |
காலவரிசை |
கூத்தாய் அல்லது கூத்தாய் இராச்சியம் (Kutai; Kutai Kingdom) என்பது போர்னியோ தீவில் இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தான் மாநிலத்தில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதி; மற்றும் கூத்தாய் இராச்சியம் எனவும் அறியப்படுகிறது. இந்த இராச்சியம் ஏறக்குறைய 1680 ஆண்டுகளுக்கு முன்னர், போர்னியோ தீவின் கலிமந்தான் காடுகளின் கிழக்குக் கரையில் கி.பி. 350-ஆம் ஆண்டுகளில் மையம் கொண்ட ஓர் இராச்சியம் ஆகும்.[1]
கூத்தாய் இராச்சியம் அதன் பெயரை அங்கு வாழும் ஓராங் கூத்தாய் (Urang Kutai) எனும் கூத்தாய் இனக் குழுவுடன் பகிர்ந்து கொள்கிறது. கூத்தாய் மக்கள்தொகை சுமார் 300,00 பேர்; அவர்கள் கூத்தானிய மொழி (Kutainese language) என்று அழைக்கப்படும் கூத்தாய் மொழியைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தோனேசிய வரலாற்றில் பண்டைய இராச்சியங்களில் கூத்தாய் இராச்சியமும் ஒன்றாகும்; அதாவது இந்தோனேசியாவில் உருவான இரண்டாவது இந்திய மய இராச்சியம் என வரலாற்று அடிப்படையில் உறுதிப்படுத்தப் படுகின்றது.[1]
கூத்தாய் மார்த்திபுரா இராச்சியம்
[தொகு]

இந்தோனேசியாவில் உருவான முதலாவது அரசு சாலகநகரப் பேரரசு (Salakanagara Kingdom). மேற்கு ஜாவாவில் கி.பி. 130-ஆம் ஆண்டில் தோன்றிய அரசு. அடுத்ததாகத் தோன்றியது கூத்தாய் இராச்சியம். இதைக் கூத்தாய் மார்த்திபுரா (Kutai Martadipura) இராச்சியம் என்றும் அழைக்கிறார்கள்.[2]:52
1918-ஆம் ஆண்டு இந்தோனேசியா, கூத்தாய் மாநிலத்தில், மகாகம் நதி (Mahakam River) முகத்துவாரத்தில் ஒரு கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டது.[3] அதற்கு ஏழு கல் தூண்கள் அல்லது யாபா (Yupa) என்று பெயர். அவை பல்லவ எழுத்துகளில், சமசுகிருத மொழியில் எழுதப்பட்டு இருந்தன. கூத்தாய் இராச்சியத்தை ஆட்சி செய்த மூலவர்மன் (Mulavarman) செய்த தியாகங்களை அந்தக் கல் தூண் நினைவு கூர்கின்றது.
இந்து சமயம்
[தொகு]தொல் எழுத்து முறை அடிப்படையில், அவை 4-ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டவை. இந்து சமயம் 2-ஆம் மற்றும் 4-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இந்தியாவில் இருந்து வந்த வணிகர்கள் சுமத்திரா, ஜாவா மற்றும் சுலாவெசி தீவுகளுக்கு இந்து சமயத்தைக் கொண்டு வந்து இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.[4]
கூத்தாய் அரசின் முதல் ஆளுநர் குடுங்கன் (Kudungga). இவரின் இன்னொரு பெயர் நரேந்திரன் (Narendra). இவருடைய மகனின் பெயர் அசுவவர்மன் (Aswawarman); கூத்தாய் அரசின் இரண்டாவது அரசர். மூன்றாவதாக ஆட்சி செய்தவர் மூலவர்மன் (Mulavarman) எனும் இராஜேந்திரன். இவர் அசுவவர்மனின் மகனும் ஆவார்.[5]
மூலவர்மன் உள்ளூர் டாயாக் வம்சாவளியினருக்குத் (Dayak people) தலைவராக இருந்து உள்ளார். இவருடைய மகன் அசுவ வர்மன் தான் இந்து மத நம்பிக்கையை ஏற்றுக் கொண்டார் என்று கருதப் படுகிறது.
யாபா கல்வெட்டுகள்
[தொகு]
யாபா அல்லது யூபா (Yupa) கல்வெட்டுகளை உருவாக்கியவர் மூலவர்மன். அவரின் இரண்டு முன்னோடிகளான நரேந்திரன்; அசுவவர்மன் படையெடுப்புகள் பற்றி எதுவும் தெரியவில்லை. என்றாலும், "ராஜா" முல்லைவர்மன் தன் அண்டை நாடுகளைப் போரில் வென்றதாக யாபா கல்வெட்டில் கூறப் படுகிறது.[6]
முன்பு காலத்தில் "அசுவமேதா" (Ashvamedha) என்கிற ஓர் உள்ளூர் நிகழ்வு இருந்தது. அந்தச் சடங்கின் மூலமாக கூத்தாய் அரசின் நிலப்பரப்பை அதிகரித்ததாகவும் கூறப் படுகிறது.
அசுவமேதா என்பது ஒரு சடங்கு. ஒரு குதிரையை ஓட விட்டு, அதன் விருப்பத்தில் சுற்றித் திரியும் போது ஏற்படும் அடிச்சுவடுகள் எங்கு எல்லாம் தெரிகிறதோ அந்த நிலம் எல்லாம் கூத்தாய் அரசுக்கு சொந்தமாகிறது என்று பொருள். இந்தச் சடங்கின் மூலமாகத் தான் கூத்தாய் அரசின் நிலப்பரப்பை விரிவுபடுத்தி உள்ளார்கள்.
கூத்தாய் கர்த்தனகர அரசு
[தொகு]
அதன் பின்னர் இந்தக் கூத்தாய் பேரரசு என்ன ஆனது என்று தெரியவில்லை. அதைப் பற்றிய கல்வெட்டு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் பேரரசின் வழித்தோன்றலில் மற்றொரு அரசு உருவாகி இருக்கிறது. அதன் பெயர் கூத்தாய் கர்த்தனகர அரசு (Kutai Kartanegara Regency).
கூத்தாய் கர்த்தனகரப் அரசு 13-ஆம் நூற்றாண்டில் உருவாகி உள்ளது. இந்த அரசு கலிமந்தான் காடுகளில் தெப்பியான் பத்து (Tepian Batu) அல்லது கூத்தாய் லாமா எனும் பகுதியில் நிறுவப் பட்டது. கி.பி. 1300 முதல் கி.பி. 1325 வரை ஆட்சி நடைபெற்று உள்ளது. அதன் முதல் ஆட்சியாளர் அஜி பதாரா அகோங் தேவ சக்தி (Aji Batara Agung Dewa Sakti).
அதன் பின்னர் 1635-1650 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அஜி பாங்கேரன் சினும் பாஞ்சி மெண்டபா ( Aji Pangeran Sinum Panji Mendapa), கூத்தாய் மார்ததிபுர இராச்சியத்தை கைப்பற்றி, இரண்டு பகுதிகளையும் ஒன்றிணைத்து "கூத்தாய் கர்தநகரா இங் மர்ததிபுரா" (Kutai Kartanegara Ing Martadipura) என பெயர் மாற்றம் செய்தார்.
பூகிஸ் கோவா அரசு
[தொகு]
1667-ஆம் ஆண்டில் சுலாவெசி தீவை ஆட்சி செய்த பூகிஸ்காரர்களின் கோவா அரசை (Bugis Kingdom of Gowa) டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். பூகிஸ் கோவா அரசு வீழ்ச்சி அடைந்தது.
அங்கு இருந்த பூகிஸ் மக்களில் சிலர் அண்டை நாடான போர்னியோ கலிமந்தான் கூத்தாய் நாட்டில் குடியேறினார்கள். அந்த இடம் அப்போது கம்போங் செலிலி (Kampung Selili) என்று அழைக்கப் பட்டது. இப்போது சமரிந்தா (Samarinda) எனும் நவீன நகரமாக வளர்ச்சி அடைந்து உள்ளது.
இசுலாமியம்
[தொகு]17-ஆம் நூற்றாண்டில் இசுலாமியம் இந்தப் பகுதியில் பரவியது. பின்னர், கூத்தாய் அரசு, டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்குள் வந்தது. 1942-ஆம் ஆண்டில் ஜப்பானியர்களின் படையெடுப்பு. கூத்தாய் அரசிற்கு ’கூட்டி அரசு’ (Kooti Kingdom) என்று பெயர் வைத்தார்கள்.
1945-ஆம் ஆண்டில் கூத்தாய் அரசு கிழக்கு கலிமந்தான் கூட்டமைப்பில் சேர்ந்தது. 1949-ஆம் ஆண்டில் இந்தோனேசியா குடியரசின் ஒரு பகுதியாக மாறியது.
தற்போதைய நிலை
[தொகு]
கூத்தாய் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்களின் வாரிசுகள் இன்றும் போர்னியோ தீவில் உள்ளார்கள். தலைமுறை தலைமுறைகளாகத் தங்களை மன்னர் மூலவர்மனின் வாரிசுகள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
அண்மையில் ஒரு முடிசூட்டு விழா நடைபெற்றது. 2020 சூன் மாதம் 6-ஆம் தேதி அந்த முடிசூட்டு விழா நடைபெற்றது. கூத்தாய் மூலவர்மன் அரசாங்கம் (Kerajaan Mulawarman) என்று ஒரு புதிய அரசாங்கத்தையும் தோற்றுவித்தார்கள்.
மன்னர் மூலவர்மனின் வாரிசுகள்
[தொகு]முடிசூட்டிக் கொண்டவரின் பெயர் இயான்சா ரெக்சா (Iansyahrechza). தன்னை இராஜா லாபோக்; இராஜா கூத்தாய் மூலவர்மன் என்றும் அறிவிப்பு செய்து கொண்டார். கூத்தாய் இராச்சியத்தின் பாரம்பரிய கலாசார பழக்க வழக்கங்களைப் பாதுகாப்பதே முக்கிய நோக்கம் என்று இயான்சா ரெக்சா சொல்கிறார். (Iansyahrechza atau disapa Raja Labok, Raja Kutai Mulawarman, di Muara Kaman, Kabupaten Kutai Kertanegara, Kalimantan Timur)[7]
இந்த நிகழ்ச்சி சற்று மாறுபாடான; சற்று முரண்பாடான நிகழ்ச்சியாகச் சில தரப்பினர் கருதுகிறார்கள். இந்தோனேசிய அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பற்றியும்; இந்தக் குழுவினர் இருக்கும் இடத்தைப் பற்றியும் விசாரித்து வருவதாக இந்தோனேசியக் காவல்துறை கூறி உள்ளது.[8]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Bhwana, Petir Garda (5 December 2024). "The Kutai Kingdom is known as the oldest Hindu kingdom in Indonesia. This kingdom even has a long history as the beginning of the birth of other kingdoms in Indonesia". Tempo (in ஆங்கிலம்). Retrieved 23 December 2024.
- ↑ Coedès, George (1968). Vella, Walter F. (ed.). The Indianized States of Southeast Asia. Translated by Brown Cowing, Susan. University of Hawaiʻi Press. ISBN 978-0-8248-0368-1.
- ↑ Kutai Kingdom பரணிடப்பட்டது 3 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம் on Melayu Online
- ↑ "The Period of Hindu Kingdoms". Embassy of Republic of Indonesia at Bangkok, Thailand. 2006. Archived from the original on 7 நவம்பர் 2006. Retrieved 17 அக்டோபர் 2006.
- ↑ "Silsilah Kemashuran Sang Maharaja Kutai Mulawarman". Warta Ekspress. 2016. Retrieved 27 September 2017.
- ↑ Marwati Djoened Poesponegoro & nugroho notosusanto, 1993. Sejarah nasional Indonesia II. Balai pustaka:Jakarta
- ↑ Media, Kompas Cyber (5 February 2020). "The Kutai Mulawarman Kingdom Association in Kutai Kertanegara, East Kalimantan, has finally spoken out after being widely referred to as a new kingdom, similar to the Sunda Empire and King of The King". KOMPAS.com. Retrieved 23 December 2024.
- ↑ "Kutai Mulawarman Kingdom Reveals Kemenkumham Decree Issue, Does Not Want to be Compared to King of The King". Banjarmasinpost.co.id. Retrieved 23 December 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Kutai தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Kutai Martadipura
- Vogel, J.Ph. 1918 The yūpa inscriptions of King Mūlavarman from Koetei (East Borneo). Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 74:216–218.
- Chhabra, B.Ch. 1965 Expansion of Indo-Aryan culture during Pallava rule (as evidenced by inscriptions). Delhi: Munshi Ram Manohar Lal. 50–52, 85–92;
- Casparis, J.G. de 1975 Indonesian palaeography: a history of writing in Indonesia from the beginning to c. A.D. 1500. Leiden: E.J. Brill. 14–18