பூரட்டாதி (பஞ்சாங்கம்)
பூரட்டாதி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 25 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது பூரட்டாதி நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் பூரட்டாதி நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" பூரட்டாதி ஆகும்.
ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்து ஐந்தாவது நட்சத்திரமாகிய பூரட்டாதி 320° 00'க்கும் 333° 20'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் பூரட்டாதி நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்களும் கும்ப இராசியிலும் நான்காவது பாதம் மீன இராசியிலும் அமைந்துள்ளன.
பெயரும் அடையாளக் குறியீடும்
[தொகு]இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி பூரட்டாதி நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் பெகாசசு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூரட்டாதியின் (α மற்றும் β பெகாசி) பெயரைத் தழுவியது. பூரட்டாதியின் சமசுக்கிருதப்பெயரான பூர்வ பத்ரபாத (Purva Bhadrapada) என்பது "முதல் ஆசீர்வதிக்கப்பட்ட பாதங்கள்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "வாள்", "கட்டிலின் இரண்டு கால்கள்", "இரண்டு முகங்கள் கொண்ட மனிதன்" என்பன.
சோதிடத்தில் பூரட்டாதி
[தொகு]இயல்புகள்
[தொகு]இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. பூரட்டாதி நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]
கோள் | வியாழன் |
தேவதை | அஜபாத |
தன்மை | உருத்திரமான |
சாதி | கள்ளர் சாதி |
கோத்திரம் | கிருது |
பால் | ஆண் |
குணம் | மனித குணம் |
இயற்கை மூலம் | ஆகாயம் |
விலங்கு | ஆண் சிங்கம் |
பறவை | உள்ளான் |
மரம் | தேமா |
நாடி | இடை |
பூரட்டாதி நட்சத்திரக்கோயில்
[தொகு]குறிப்புக்கள்
[தொகு]- ↑ Raman, B. V., 1992. பக். 40.
- ↑ வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.
- ↑ Harness, Dennis M., Masco, Maire M., The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage பரணிடப்பட்டது 2012-05-26 at the வந்தவழி இயந்திரம்.
உசாத்துணைகள்
[தொகு]- Raman, B. V., A Manual of Hindu Astrology, Raman Publications, Bangalore, 1992 (16th Edition).
- வெங்கடேச ஐயர், இ., இரகுநாத ஐயர், வெ., கரவருட வாக்கிய பஞ்சாங்கம், சோதிடப் பிரகாச யந்திரசாலை, 2012.
- Harness, Dennis M., Masco, Maire M., The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage பரணிடப்பட்டது 2012-05-26 at the வந்தவழி இயந்திரம்.