இந்துக் காலக் கணிப்பு முறை
இந்துக் காலக் கணிப்பு முறை சூரியமானம், சந்திரமானம் என்னும் இரு முறைகளையும் தழுவி அமைந்துள்ளது. சூரிய மானம் என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும். சந்திரமானம் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பண்டைக்கால இந்திய வானியல் அறிவைப் பயன்படுத்தி உருவான இந்துக் காலக் கணிப்பு முறை இந்தியாவில் மட்டுமன்றிப் பல அயல் நாடுகளிலும் புழக்கத்திலிருக்கும் மரபுவழிக் காலக் கணிப்பு முறைகளுக்கு மூலமாக உள்ளது. இந்துக் காலக் கணிப்பு முறை என்ற ஒரே தொடரால் குறிக்கப்பட்டாலும் இது உண்மையில் ஒரே அடிப்படையையும் அவை புழக்கத்திலுள்ள பகுதிகளின் பண்பாடுகளுக்கு ஏற்பத் தனித்துவமான கூறுகளையும் கொண்ட பல முறைகளின் தொகுப்பு ஆகும்.
தோற்றம்
[தொகு]அடிப்படைகள்
[தொகு]இந்தியக் காலக்கணிப்பு முறை சுழல்முறைக் காலக் கருத்துருவை (Concept) அடிப்படையாகக் கொண்டது. சுழல்முறைக் காலம் என்பது மேனாட்டு முறையில் மாதங்கள் ஜனவரியில் தொடங்கி டிசம்பரில் முடிந்து மீண்டும் ஜனவரியில் தொடங்கிச் சுற்றிச் சுற்றி வருவதுபோல எல்லா மட்டங்களிலும் காலம் ஒரிடத்தில் தொடங்கி அதேயிடத்துக்குத் திரும்பிவந்து மீண்டும் அதே சுற்றில் தொடர்வதாகும். தற்காலத்தில் உலகெங்கும் பரவலாகப் புழக்கத்திலுள்ள மேனாட்டு முறையில் நாள், வாரம் மற்றும் மாதங்களாகிய காலப் பிரிவுகள் சுழல் முறையில் அமைந்திருந்தாலும் ஆண்டுகள் தொடக்கம் காலம் நேர்கோட்டு முறையில் அமைந்துள்ளது. அதாவது கால ஓட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியிருந்து இறந்தகாலத் திசையிலும், எதிர்காலத் திசையிலும் காலக் கணக்குத் தொடர் எண் வரிசைப்படி கணக்கிடப்படுகின்றது.
கால அலகுகள்
[தொகு]சாதாரணமாகப் பயன்பாட்டிலுள்ள ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நாடி, விநாடி போன்ற கால அலகுகளுக்குப் (Units) புறம்பாக மிகப் பெரிய கால அளவுகளையும், அதே நேரம் மிக நுண்ணிய கால அளவுகளையும் அளப்பதற்கான கால அலகுகள் பண்டைக்கால இந்திய வானியல் நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.
மேற் சொன்ன கால அலகுகளைக் குறிக்கும் காலக் கணித வாய்ப்பாடு கீழே தரப்பட்டுள்ளது:
1 | கற்பம் | 1000 | சதுர் யுகம் |
1 | மனுவந்தரம் | 71 | சதுர் யுகம் |
1 | சதுர் யுகம் | 4 | யுகங்கள் |
1 | யுகம் | 720 | ஆண்டு வட்டம் (4,32,000 ஆண்டு) |
கிருத யுகம் = 4 X 4,32,000 | 17,28,000 | ஆண்டு | |
திரேதா யுகம் = 3 X 4,32,000 | 12,96,000 | ஆண்டு | |
துவாபர யுகம் = 2 X 4,32,000 | 8,64,000 | ஆண்டு | |
கலியுகம் = 1 X 4,32,000 | 4,32,000 | ஆண்டு | |
1 | ஆண்டு வட்டம் | 60 | ஆண்டு |
1 | ஆண்டு | 12 | மாதம் = 365 நாள், 15 நாடி, 31 விநாடி, 15 தற்பரை |
1 | மாதம் | 29 - 32 | நாள் |
1 | வாரம் | 7 | நாள் |
1 | நாள் | 60 | நாடி (அல்லது 24 மணி) |
1 | நாடி | 60 | விநாடி |
1 | விநாடி | 60 | தற்பரை |
வேறுபாடுகள்
[தொகு]முன்னர் கூறியபடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புழக்கத்திலுள்ள காலக்கணிப்பு முறைகளில் சில அம்சங்களில் வேறுபடுகள் காணப்படுகின்றன. பொதுவாகப் பின்வருவன வேறுபாடுகள் காணப்படும் அம்சங்களில் முக்கியமானவை.
- அடிப்படை முறை - சூரியமானம்,சந்திரமானம் அல்லது இரண்டும் இணைந்த முறைகள்
- புத்தாண்டுத் தொடக்கம்
- மாதத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கை
- பெயரிடல் மரபுகள்
- பயன்படுத்தப்படும் சகாப்தம்
மேற்கண்ட அம்சங்களிற் கண்ட வேறுபாடுகளின் அடிப்படையில் புழக்கத்திலுள்ள மரபு வழி இந்துக் காலக் கணிப்பு முறைகளில் பின்வரும் முக்கியாமான வெவ்வேறு முறைகளை அடையாளம் காண முடியும்.
- தெற்கு அமாந்த முறை
- மேற்கு அமாந்த முறை
- பூர்ணிமாந்த முறை
- மலையாள முறை
- தமிழ் முறை
- வங்காள முறை
- ஒரியா முறை
கீழேயுள்ள அட்டவணை காலக்கணிப்பின் அடிப்படைகள், பல்வேறு முறைகள் என்பவற்றுக்கிடையிலான தொடர்புகளையும், அவை பயன்பாட்டிலுள்ல இடங்களையும் காட்டுகிறது.
அடிப்படை | முறைகள் | வழக்கிலுள்ள இடங்கள் | |
---|---|---|---|
சூரியமானம் |
தமிழ் முறை | - | தமிழ் நாடு, இலங்கை |
மலையாள முறை | - | கேரளா | |
வங்காள முறை | - | மேற்கு வங்காளம் | |
ஒரியா முறை | - | ஒரிஸ்ஸா | |
சந்திரமானம் |
- | - | - |
- | - | - | |
- | - | - | |
- | - | - | |
சந்திர-சூரியமானம் |
அமாந்த முறை |
தெற்கு அமாந்த முறை | ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா. |
மேற்கு அமாந்த முறை | குஜராத் | ||
பூர்ணிமாந்த முறை | - | வட இந்திய மாநிலங்கள் (1) |
(1)பீகார், இமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், உத்தராஞ்சல், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- Regulagedda Akshay, Panchanga- Tantra: The Magic of the Indian Calendar System, The National University of Singapore
- B. V. Raman, A Manual of Hindu AstrologyUBS Publishers' Distributers Ltd., New Delhi. 1992.
- C. Brito, Apendix in The Yalppaana Vaipava Malai, Asian Educational Service, New Delhi. 1999. (First published in Jaffna, 1879)