உள்ளடக்கத்துக்குச் செல்

சிலுவைப் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலுவைப் பாதையின் 12 ஆவது நிலை - இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கிறார். இந்த சிலுவைப்பாதை, அயோவாவின், டுபூக்கில் உள்ள புனித ரபாயேல் பேராலயத்தில் உள்ளது.

சிலுவைப் பாதை (Stations of the Cross) என்பது இயேசு கிறிஸ்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாள்களில் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவு கூர்கின்ற வழிபாட்டுச் செயல் ஆகும்.

இந்த வழிபாட்டுச் செயல் கத்தோலிக்கக் கிறித்தவரிடையே பரவலாக உள்ளது. லூத்தரன் மற்றும் ஆங்கிலிக்கன் சபையாரிடையே இப்பழக்கம் அதிகமாக இல்லை. அசிசி நகர் தூய பிரான்சிசு என்பவர் காலம் தொடங்கி (1181/1182-1226) சிலுவைப் பாதை கிறித்தவ கோவில்களில் நடைபெற்று வருகிறது. தவக் காலத்தின் போதும், குறிப்பாக புனித வெள்ளிக் கிழமையன்று (Good Friday) கிறித்தவர்கள் சிலுவைப் பாதை வழிபாடு செய்கிறார்கள்.

சிலுவைப் பாதையின் வரலாறும் உட்பொருளும்

[தொகு]

இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த எருசலேம் நகருக்குத் திருப்பயணம் சென்றுவர மக்கள் எப்போதுமே விரும்பியதுண்டு. இயேசு தம் தோள்மேல் சுமத்தப்பட்ட சிலுவையைச் சுமந்துகொண்டு வழிநடந்த பாதையில் கிறித்தவர்களும் நடந்துசெல்ல விழைந்தார்கள். ஆனால் எருசலேம் சென்றுவர எல்லாேருக்கும் வசதி இருக்கவில்லை. எனவே ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளில், குறிப்பாக இத்தாலி நாட்டில் சிலுவைப் பாதை அல்லது சிலுவை நிலைகள் (Way of the Cross or Stations of the Cross) என்னும் வழக்கம் உருவானது.

இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்ச்சி, அவர்மீது சிலுவை சுமத்தப்பட்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் அறையுண்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் உயிர்துறந்த நிகழ்ச்சி போன்றவற்றைப் படிமங்களாக அல்லது உருவச் சிலைகளாக வடித்து, தியானத்திற்கு உதவும் கருவிகளாகப் பயன்படுத்தினர். 18ஆம் நூற்றாண்டில் இவ்வழக்கம் கிறித்தவத் திருச்சபை முழுவதும் பரவியது. இயேசு அனுபவித்த துன்பங்களை நினைவுகூர்ந்து, தியானித்து, இறைவேண்டல் செய்ய மொத்தம் பதினான்கு நிலைகள் பயன்படும் எனவும் உறுதி செய்யப்பட்டது.

சிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகள்

[தொகு]
சிலுவைப் பாதையின் 10 ஆவது நிலை- இயேசுவின் ஆடைகளைக் களைகிறார்கள்
சந்தியாகோ பேராலயம், எசுப்பானியா.
சிலுவையின் சுமை தாங்காமல் கீழே விழும் இயேசு. ஓவியர்: நிக்கோலோ ஃபூமோ. ஆண்டு: 1698. காப்பிடம்: மாட்ரிட்
புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் மிக்கேல் அகுஸ்தீன் புனித வெள்ளியன்று சிலுவைப்பாதை நிகழ்த்துதல்
  1. இயேசுவுக்கு சிலுவை மரண தண்டனையை ஆளுநர் பிலாத்து விதிக்கிறார்.
  2. இயேசுவின் மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள்.
  3. இயேசு முதல் முறை தரையில் விழுகிறார்.
  4. இயேசு தம் தாய் மரியாவைச் சந்திக்கிறார்.
  5. சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவுகிறார்.
  6. வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் முகத்தைத் துணியால் துடைக்கிறார்.
  7. இயேசு இரண்டாம் முறை தரையில் விழுகிறார்.
  8. இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
  9. இயேசு மூன்றாம் முறை தரையில் விழுகிறார்.
  10. இயேசுவின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்துகிறார்கள்.
  11. இயேசுவை சிலுவையில் ஆணிகளால் அறைகிறார்கள்.
  12. இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்.
  13. இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கி அவர் தாய் மரியாவின் மடியில் கிடத்துகிறார்கள்.
  14. இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.

மேற்கூறிய பதினான்கு நிலைகள் மூலம் இயேசுவின் பாடுகளையும், இறப்பையும் தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நினைவுக் கூர்ந்து செபிக்கிறார்கள்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலுவைப்_பாதை&oldid=4041059" இலிருந்து மீள்விக்கப்பட்டது