உள்ளடக்கத்துக்குச் செல்

கோபாலபட்டணம்

ஆள்கூறுகள்: 9°32′52″N 78°35′07″E / 9.547686°N 78.58533°E / 9.547686; 78.58533
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபாலபட்டணம்
—  கிராமம்  —
கோபாலபட்டணம்
அமைவிடம்: கோபாலபட்டணம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°32′52″N 78°35′07″E / 9.547686°N 78.58533°E / 9.547686; 78.58533
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

கோபாலபட்டணம் என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இராதாப்புளி ஊராட்சியின்[4] கீழ் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.

கோபாலபட்டணம் கிராம விவரம்
மக்கள் தொகை 800
மொழி தமிழ்
மதம் இந்து மதம்
தொழில் விவசாயம்
ஊர் காவல் தெய்வம் தடியார் உடையார் கோவில்
நிலப்பரப்பு 50 ஏக்கர் (ஏறத்தாழ)

நில அமைப்பு மற்றும் வாழ்க்கைமுறை

[தொகு]

கோபாலபட்டணம் கிராமம் இராதாப்புளி ஊராட்சியைச் சேர்ந்த முத்துப்பட்டணம், வரவணி, காவனூர் ஆகியகுக்கிராமங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. இக்கிராம மக்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் விவசாயம் செய்கின்றனர். அதில் உணவுப்பயிர்களான நெல், கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவையும் பணப்பயிர்களாக பருத்தி, மிளகாய் மற்றும் எள் போன்றவையும் பயிரிடப்படுகின்றன. கோபாலபட்டணம் கிராம மக்கள் வறட்சி காலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு அக்கிராமத்திற்கு மேற்கில் அமைந்துள்ள இராதாப்புளி கண்மாயை பயன்படுத்திக் கொள்கின்றனர். இது தவிர ஊர் மக்கள் குடிப்பதற்காக ஊரணி என்கிற குளம் ஊருக்கு அருகிலும், குளிப்பதற்காக பூவாடை என்கிற குளம் ஊருக்கு வெளியிலும் உள்ளன. இது தவிர விவசாய மக்கள் பயன்பாட்டிற்கென விவசாய நிலங்களுக்கு நடுவில் மடைக்காந்தாவு என்னும் குளமும் உள்ளது. ஊரின் நுழைவாயிலில் சட்டிச்சாமியார் கோவிலும், ஊரணி அருகே முருகன் கோவிலும், ஊரின் நடுவே அம்மன் கோவிலும், கிழக்குத் தெருவில் இராமர் கோவிலும் அமைந்துள்ளன.

பொழுதுபோக்கு

[தொகு]

எட்டு மாத விவசாய காலங்கள் தவிர மற்ற மாதங்களில் பொழுது போக்கிற்கென பெண்கள் பல்லாங்குழி, தாயம், நொண்டி, கட்டம், கண்ணாமூச்சி போன்ற பல விளையாட்டுக்களையும், ஆண்கள் கபடி, கிட்டிப் புள்ளு, புள்ளக்கம்பு என்னும் மரம்தாவி விளையாட்டும் விளையாடுகின்றனர். இது தவிர ஆண்டுக்கு ஒருமுறை இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

திருவிழாக்கள்

[தொகு]

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊர் காவல் தெய்வமான தடியார் உடையார் கோவிலில் எருதுகட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இராதாப்புளி ஊராட்சியை சேர்ந்த அனைத்து மக்களும் கலந்து கொள்வது இதன் தனிச்சிறப்பு. எருதுகட்டு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து காளைகள் பங்கேற்கின்றன. ஆண்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாக கருதப்படும் இந்த எருதுகட்டு விழாவைக்காண பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வருகை தருகின்றனர். சட்டிச்சாமியார் கோவிலில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் குழந்தை வரம் வேண்டி மரத்தொட்டில் கட்டுவோர் குழந்தை பாக்கியம் பெறுவர் என்பது இக்கிராம மக்களின் நம்பிக்கை. அவ்வாறு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தைப்பூசத் திருநாளன்று தங்கள் குழந்தையை கரும்பில் தொட்டில் கட்டி சட்டிச்சாமியார் கோவிலை மூன்று முறை வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். தமிழ் மாதம் பங்குனியில் இவ்வூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதில் முருகனின் திருஉருவச்சிலையை மயில்வாகனத்தின் மேல் அமர்த்தி ஊர்வலமாகக் கொண்டு வந்து வழிபடுகின்றனர்.

வெளியிணைப்புக்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. Retrieved 2013-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபாலபட்டணம்&oldid=3850820" இலிருந்து மீள்விக்கப்பட்டது