இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | |
---|---|
வகை | மாநிலங்கள் |
அமைவிடம் | இந்தியக் குடியரசு |
எண்ணிக்கை | 28 மாநிலங்கள் 8 ஒன்றியப் பகுதிகள் |
மக்கள்தொகை | மாநிலங்கள்: சிக்கிம் - 610,577 (குறைவு) உத்தரப் பிரதேசம் - 199,812,341 (அதிகம்) ஒன்றியப் பகுதிகள்: இலட்சத்தீவுகள் - 64,473 (குறைவு) தில்லி - 16,787,941 (அதிகம்) |
பரப்புகள் | மாநிலங்கள்: கோவா - 3,702 km2 (1,429 sq mi) (சிறியது) இராசத்தான் - 342,269 km2 (132,151 sq mi) (பெரியது) ஒன்றியப் பகுதிகள்: இலட்சத்தீவுகள் - 32 km2 (12 sq mi) (சிறியது) லடாக் - 59,146 km2 (22,836 sq mi) (பெரியது) |
அரசு | மாநில அரசுகள் ஒன்றிய அரசாங்கங்கள் (ஒன்றியப் பகுதிகள்) |
உட்பிரிவுகள் | பிரிவுகள் மாவட்டங்கள் |
இந்தியாவில் 28 மாநிலங்களும், தில்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, சம்மு காசுமீர், தில்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், மாவட்டங்கள் என்ற சிறிய நிருவாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுமை பகுதிகள்
[தொகு]மாநிலங்கள்:
ஒன்றியப் பகுதிகள்:
மாநிலங்களும் அவற்றின் தலைநகரங்களும்
[தொகு]# | பெயர் | மக்கள் தொகை | மொழி | தலைநகரம் | மிகப்பெரிய நகரம் (தலைநகரமல்லாதவை) |
---|---|---|---|---|---|
A | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 356,152 | வங்காளம், தமிழ், தெலுங்கு, இந்தி | போர்ட் பிளேர் | |
B | சண்டிகர் | 900,635 | இந்தி & பஞ்சாபி | சண்டிகர் | |
C | தாத்ரா & நகர் அவேலி மற்றும் தாமன் & தியூ | 3,78,510 | குசராத்தி | தமன் | |
D | சம்மு காசுமீர் | 10,143,700 | கசுமீரியம் | சிறிநகர் (கோடைகாலம்) சம்மு (குளிர்காலம்) |
|
E | இலட்சத்தீவுகள் | 60,595 | மலையாளம் | கவரத்தி | |
F | தேசிய தலைநகர் பகுதி | 13,782,976 | இந்தி | புது தில்லி | |
G | புதுச்சேரி | 973,829 | தமிழ், பிரான்சியம் | புதுச்சேரி | |
H | லடாக் | 260,000 | லடாக்கி | லே |
இந்திய மாநிலங்களின் உருவாக்கம்
[தொகு]தற்போதைய இந்தியா, பாகித்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரித்தானிய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைசிராயினால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. சம்மு காசுமீர் இராச்சியம், ஐதராபாத் இராச்சியம் போன்ற 526 சமசுதானங்கள், பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன.
பிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: அச்சுமேர்-மேர்வாரா, அசாம், பலூசித்தான், வங்காள மாகாணம், பிகார் மாநிலம், பம்பாய், மத்திய மாகாணம், கூர்க், தில்லி, மதராசு, வடமேற்கு எல்லை, ஒரிசா, பஞ்சாப், சிந்து, மற்றும் ஐக்கிய மாகாணங்கள். பிரித்தானிய இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன.
இவற்றுள், ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட ஐதராபாத் தொடக்கம், மிகச் சிறிய சமசுதானங்கள் வரை அடங்கி இருந்தன. இவற்றை விட வேறு இரு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் சில நிலப்பகுதிகளை ஆண்டு வந்தன. போத்துக்கீச இந்தியா, கோவா, தமனும் தியுவும், தட்ராவும் நாகர் அவேலியும் ஆகிய கரையோரப் நிலப்பகுதிகளையும், பிரெஞ்சு இந்தியா, சண்டர்நகர், ஏனாம், பாண்டிச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய ஐந்து நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன.
1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமசுதானங்களும், இரு நாடுகளுக்கும் இடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இசுலாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார் என்றாலும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. சம்மு காசுமீருக்கு இரு நாடுகளுமே உரிமை கோரின. பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்களாக இருந்தார்கள். இந்துவாக இருந்த சம்மு காசுமீரின் ஆட்சியாளர் நாட்டை இந்தியாவுடன் இணைத்தார்.
1950ல், இந்திய அரசியல் சட்டம் நடப்புக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
முன்னர் மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், ஆளுனராலும், தெரிவு செய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன. இந்தப் பிரிவில் அடங்கிய ஒன்பது மாநிலங்களாவன: அசாம், மேற்கு வங்காளம், பிகார், பம்பாய் மாகாணம், மத்தியப் பிரதேசம் (முன்னர் மத்திய மாகாணங்களும், பெராரும்), மதராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் (முன்னாள் ஐக்கிய மாகாணங்கள்).
சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
அதே ஆண்டில் பாசல் அலி என்பவரைத் தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின் படி 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் 14 மாநிலங்கள் நிறுவப்பட்டது.
இதே அடிப்படையில் மகாராட்டிராவில் இருந்து குசராத்து (1960) பிரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்கள் உருவாயின. 1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர், 1975ல் சிக்கிம், 1987ல் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2000 ஆவது ஆண்டில் சத்தீசுகர், உத்தராகண்டம் மற்றும் சார்க்கண்டு என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2014 ஆவது ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகும்.
5 ஆகத்து 2019 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில் சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டது. அதன்படி சம்மு காசுமீர் மாநிலத்தைப் பிரித்து சம்மு காசுமீர் மற்றும் லடாக் என இரு ஒன்றியப் பகுதிகளை 31 அக்டோபர் 2019 முதல் நிறுவப்பட்டது. எனவே தற்போது மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது.[2]ஒன்றியங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேங்சகளும் - காணொலி - பகுதி 1 (தமிழில்)
- இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேங்சகளும் - காணொலி - பகுதி 2 (தமிழில்)
- இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேங்சகளும் - காணொலி - பகுதி 3 (தமிழில்)
- வேல்டு-கெஸெடர்.கொம் இணையதளத்தில் இந்திய வரைபடம் (ஆங்கில மொழியில்)
- மேப்ஸ் ஆஃப் இந்தியா. கொம் இணையதளத்தில் இந்திய வரைபடம் (ஆங்கில மொழியில்)
- ↑ "Population of Telangana" (pdf). Telangana government portal. p. 34. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.
- ↑ "Jammu and Kashmir Reorganisation Bill (No. XXIX of) 2019" (PDF). Parliament of India. 5 August 2019. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.