உள்ளடக்கத்துக்குச் செல்

கொச்சிக் கோட்டை பகுதி

ஆள்கூறுகள்: 9°57′40″N 76°14′35″E / 9.961°N 76.243°E / 9.961; 76.243
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொச்சிக் கோட்டை
Cochim de Baixo
கொச்சிக் கோட்டை is located in கேரளம்
கொச்சிக் கோட்டை
கொச்சிக் கோட்டை
கொச்சிக் கோட்டை is located in இந்தியா
கொச்சிக் கோட்டை
கொச்சிக் கோட்டை
கொச்சிக் கோட்டை is located in கொச்சி
கொச்சிக் கோட்டை
கொச்சிக் கோட்டை
ஆள்கூறுகள்: 9°57′40″N 76°14′35″E / 9.961°N 76.243°E / 9.961; 76.243
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
மக்கள்தொகை
 • மொத்தம்2,34,990
மொழிகள்
 • அதிகார்ப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
682001
வாகனப் பதிவுKL-43
சீன வலை (சீன மீன்பிடி வலை)

கொச்சிக் கோட்டை (Fort Kochi) என்பது இந்தியாவின் கேரளத்தின் ஒரு பகுதியான கொச்சி நகரத்தின் சுற்றுப்புறமாகும். கொச்சிக் கோட்டை என்ற பெயர் இமானுவேல் கோட்டை என்பதிலிருந்து வந்தது.[1] போர்த்துக்கீசிய பேரரசின் கட்டுப்பாட்டுக்கு இந்திய மண்ணில் முதன் முதலில் வந்த ஐரோப்பியருக்கான முதல் கோட்டை இதுவாகும்.[2] இது கொச்சியின் முதன்மை நிலப்பரப்பின் தென்மேற்கில் உள்ள ஒரு சில தீவுகள் கொண்ட ஒரு பகுதியாகும். இது ஒட்டுமொத்தமாகப் பழைய கொச்சி அல்லது மேற்கு கொச்சி என அழைக்கப்படுகிறது. இதை ஒட்டி மட்டாஞ்சேரி பகுதி உள்ளது. 1967 ஆம் ஆண்டில், இது உட்பட மூன்று நகராட்சிகளும் மற்றும் சில அண்மைப் பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு கொச்சி மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

கோட்டைக் கொச்சி பாரம்பரியமும், பண்பாடும் நிறைந்தது. இது வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில் நேஷனல் ஜியோகிராஃபிக்கின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் முதல் 25 இடங்களில் ஒன்பதாவது இடத்தை இது பிடித்தது.[3]

அறிவியல் கோட்பாடு

[தொகு]

கிமு காலத்தில், இன்று கேரளம் என்று அழைக்கப்படும் பகுதி சதுப்புநிலக் காடுகளால் சூழப்பட்டிருந்தது. கடல் மட்ட உயர்வால் புல் மற்றும் மணல் கொண்ட கரைகள் உருவாயின. அதுவே இன்று நாம் காணும் கேரளக் கடற்கரைப் பகுதிகளின் வடிவத்தை உருவாக்கியது. கொச்சி என்ற பெயரின் தோற்றம் மலையாள சொல்லான கொச்சு ஆழி என்பதிலிருந்து வந்தது என்று கருதப்படுகிறது, அதற்கு 'சிறிய குளம்' என்பது பொருளாகும். மட்டாஞ்சேரி என்பது பழமையான வரலாற்று சிறப்பு மிக்கதான கொச்சியின் நரம்பு மண்டலம் போன்ற நகரமாகும். இது பழைய மலையாளத்தின் மாடன்-சேரி, என்பதிலிருந்து வந்தது. சேரி என்றால் நகரம் என்று பொருள். மாட் அல்லது மாடு என்பது கொச்சின் அரசரின் பழைய அரச கோட்டையின் முத்திரையாகும். அவர் கி.பி 1341 இல் ஏற்பட்ட ஒரு மாபெரும் ஆழிப்பேரலையால் கொடுங்கல்லூர் அல்லது முசிறி துறைமுகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மட்டஞ்சேரியில் தனது அரண்மனையைக் கட்டினார்.  பெரும்படப்பு ஸ்வரூபம் எனப்படும் அரசரின் கோட்டையும் அரண்மனையும் கல்வதி ஆற்றின் கரையிலிருந்தது. கோழிக்கோடு சாமுத்திரி மன்னருக்கும் மேற்கத்தியக் காலனித்துவப் படைகளுக்கு இடையே அடிக்கடி நடந்த போர்கள் காரணமாக, அரசர் இந்த இடத்தை விட்டு திருப்பூணித்துறைக்குச் சென்றார். அரசர் வைணவ சமயத்தைப் பின்பற்றுபவராக இருந்தார். பசு அல்லது மாடு அவரது சின்னமாக இருந்தது.

இணைப்பு

[தொகு]

எர்ணாகுளத்தில் இருந்து சாலை மற்றும் நீர் வழிகள் மூலமாக கோட்டைக் கொச்சியை அடையலாம். தனியார் பேருந்துகளும் அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளும் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோட்டைக் கொச்சிக்குச் செல்கின்றன. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருவதால், இந்த வழித்தடத்தில் அரசு சார்பில் தாழ்தள வால்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கொச்சின் பன்னாட்டு வானூர்தி நிலையம் (CIAL), வைட்டிலா மொபிலிட்டி ஹப் மற்றும் காக்க நாடு தகவல் தொழில்நுட்பப் பூங்கா போன்ற பிரபலமான வழித்தடங்களில் இத்தகைய பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.

வரலாறு

[தொகு]

கோழிக்கோடு துறைமுகம் இடைக்கால கேரளக் கடற்கரையில் சிறந்த பொருளாதார மற்றும் அரசியல் மையமாக இருந்தது. அதே நேரத்தில் கண்ணூர், கொல்லம், கொச்சி ஆகியவை வணிக ரீதியாக முக்கியமான இரண்டாம் நிலை துறைமுகங்களாக இருந்தன. அங்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வணிகர்கள் கூடினர்.[4] கோட்டைக் கொச்சி என்பது காலனித்துவத்திற்கு முந்தைய கேரளத்திலிருந்த கொச்சி இராச்சியத்தில் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது. போர்த்துகீசியர்கள் 1498 ஆம் ஆண்டில் காப்பாடு கோழிக்கோடு வந்தடைந்தனர், இதன் மூலம் ஐரோப்பாவிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்திற்கு நேரடி கடல் வழி பாதை கண்டறியப்பட்டது.[5] கோழிக்கோட்டின் சாமூத்திரியின் படைகளுடன் போரிட அபோன்சோ டி அல்புகெர்க்கேயின் படைகள் கொச்சி அரசருக்கு உதவியதை அடுத்து, 1503 இல் கொச்சி அரசரால் போர்த்துக்கேயர்களுக்கு கோட்டைக் கொச்சி என்று அழைக்கப்படும் பிரதேசம் வழங்கப்பட்டது. அவர்கள் தங்கள் வணிக நலன்களைப் பாதுகாப்பதற்காக நீர்முனைக்கு அருகே இமானுவேல் கோட்டையைக் கட்ட அரசர் அனுமதி வழங்கினார். கோட்டைக் கொச்சி என்ற பெயரின் முதல் பகுதி டச்சுக்காரர்களால் அழிக்கப்பட்ட இந்தக் கோட்டையிலிருந்து வந்தது. போர்த்துகீசியர்கள் கோட்டைக்கு பின்னால் மரத்தால் கட்டப்பட்ட தேவாலயம் உட்பட தங்கள் குடியிருப்புகளைக் கட்டினர். இது 1516 ஆம் ஆண்டில் அவரை நிரந்தரமான கட்டடங்களாக மீண்டும் கட்டப்பட்டன. அத்தேவாலயம் இன்று புனித பிரான்சிசு தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. கோட்டைக் கொச்சி 160 ஆண்டுகள் போர்த்துகீசிய வசம் இருந்தது. 1683 இல் டச்சுக்காரர்கள் போர்த்துகீசியர்களிடமிருந்து இப் பிரதேசத்தைக் கைப்பற்றினர், குறிப்பாகக் கத்தோலிக்க கான்வென்ட்கள் உட்பட பல போர்த்துகீசிய கல்வி நிறுவனங்களை அழித்தனர். 1795 ஆம் ஆண்டு வரை டச்சுக்காரர்கள் கொச்சிக் கோட்டையை 112 ஆண்டுகள் தங்கள் வசம் வைத்திருந்தனர். அதன் பிறகு டச்சுக்காரர்களை தோற்கடித்து ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு இப்பிரதேசத்தைக் கொண்டுவந்தனர். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு கோட்டைக் கொச்சியில் வெளிநாட்டவரின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

வாஸ்கோ ட காமா புதைக்கப்பட்ட புனித பிரான்சிசு தேவாலயம்
திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் கோட்டைக் கொச்சி
கொச்சியின் பொதுவான தோற்றம்
கோட்டைக் கொச்சியில், தூக்கி எறியப்பட்ட நெகிழிப் போத்தல்களால் செய்யப்பட்ட நண்டு உருவம்
கோட்டைக் கொச்சியில் தெரு ஓவியங்கள்

காலனித்துவ காலங்களில் போர்த்துக்கேயர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் போன்றோர்களால் கட்டப்பட்ட பழைய வீடுகள் கோட்டை கொச்சியின் தெருக்களில் வரிசையாக உள்ளன. புனித பிரான்சிசு தேவாலயம் 1503 இல் போர்த்துகீசியர்களால் கத்தோலிக்க தேவாலயமாகக் கட்டப்பட்டது. வாஸ்கோ ட காமா ஒரு காலத்தில் இந்த தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இது இப்போது தென்னிந்தியத் திருச்சபையின் கீழ் வருகிறது. இது தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். கொச்சின் கத்தோலிக்க மறைமாவட்டம் 1558 ஆம் ஆண்டில் போர்த்துகீசிய ஆதரவின் கீழ் கோட்டைக் கொச்சியில் அதன் தலைமையகத்துடன் அமைக்கப்பட்டது.[6] 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்ட திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோயில் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டு 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மீண்டும் கட்டப்பட்டது.[7] அந்தக் காலகட்டத்திலிருந்து பழைய துறைமுக இல்லம் போன்ற பிற குடியிருப்புக் கட்டிடங்களும் விடுதிகளும் உள்ளன. அவற்றில் சில அண்மையக் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீன வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படும் நீர்முனையில் உள்ள காலனித்துவ காலத்துக்கு முந்தைய சீன வலைகளின் தொடர் வரிசை, பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களிடையே மிகுதியான ஆர்வத்தை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாகும்.

முதல் ஆதாரங்கள்

[தொகு]

பொது சகாப்தத்தின் தொடக்கத்திலிருந்து, அரபு, சீன வணிகர்கள் கொச்சி பகுதியிலிருந்து மசாலைப் பொருட்களை, குறிப்பாக மிளகு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, சந்தன மரம் போன்றவற்றை வாங்கினர். இந்த மதிப்புமிக்க பொருட்களின் சாகுபடி, வர்த்தகம் போன்றவை பிராந்தியத்தின் வரலாற்றை வடிவமைத்தன. இன்றும் கொச்சி மசாலை ஏற்றுமதியின் முக்கிய மையமாக உள்ளது. அரபு வணிகர்கள் இந்த மசாலைப் பொருட்களைப் பற்றி முதலில் அறிந்தனர். மேலும் அவர்கள் அந்தப் பொருட்களை ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றனர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அவர்களைத் தொடர்ந்து போர்த்துகீசியர்கள் வந்தனர். பின்னர் டச்சுக்காரர்களும், பின்னர் ஆங்கிலேயர்களும் வந்தனர்.

சுமார் கி.பி. 600

[தொகு]

மலபார் கடற்கரையைப் பற்றிய எழுதப்பட்ட ஆவணங்கள், இப்பகுதியில் இந்துக்கள், கிறித்தவர்கள், யூத சிறுபான்மையினர் இருந்ததைக் காட்டுகின்றன.[8]

சுமார் கி.பி 1341

[தொகு]

கொடுங்கல்லூர் துறைமுகம் அழியக் காரணமான வெள்ளம் கொச்சி இயற்கை துறைமுகத்தை உருவாக்கியது. அதன்பிறகு, இந்த நகரம் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக வளர்ந்தது. இது சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் மசாலை வர்த்தகத்தில் கவனம் செலுத்தியது.

சுமார் 1500

[தொகு]

இந்தக் காலகட்டத்தில், கோழிக்கோடு சாமுத்திரி மன்னரின் ஆட்சியின் கீழும், கொச்சி கொச்சி மன்னரின் கீழும் ஆளப்பட்டது. மலபார் கடற்கரையில் முதல் போர்த்துகீசிய கப்பல்கள் வந்த காலம் இதுவே: கோழிக்கோட்டில் வாஸ்கோ ட காமாவும், கொச்சியில் பெட்ரோ அல்வாரெஸ் கப்ராலும். நங்கூரம் பாய்ச்சினர். கொச்சி மன்னர், கோழிக்கோடு சாமூத்திரி மன்னரால் தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக உணர்ந்தார். மேலும் அவர் கோழிக்கோடு போன்ற அண்டை மன்னரிடமிருந்து தங்களைப் பாதுகாக்க போர்த்துகீசியர்கள் உதவுவார்கள் என்று நம்பினார். இதனால் மகாராஜா போர்த்துகீசியர்களை வரவேற்றார், அவர்கள் கொச்சியில் தங்கள் முதல் வர்த்தக மையத்தை நிறுவினர். இருப்பினும், கொச்சி மகாராஜா போகப் போகத் தனது அதிகாரத்தை பெருமளவில் இழந்தார். மேலும் கொச்சி இந்தியாவின் முதல் ஐரோப்பிய காலனியாக மாறியது.  போர்த்துகீசியர்கள் கேரளத்தில் வாழும் சிறிய யூத சமூகத்தின் மீது சமய ரீதியிலான அழுத்தம் கொடுத்தனர், மேலும் நெஸ்டோரியக் கொள்கையைக் கடைப்பிடித்த அவர்கள் சிரியன் கிறித்தவர்களுக்கு கூட அழுத்தம் கொடுத்தனர். போர்த்துகீசியர்கள் சிரியன் கிறித்தவ தேவாலயத்தை லத்தீன் திருச்சபையுடன் இணைக்க முயன்றனர். பெரும்பாலான சிரியன் கிறித்தவர்கள் கிழக்கின் பல்வேறு தேவாலயங்களுடன் தொடர்புடையவர்கள். மேலும் போப் மற்றும் லத்தீன் திருச்சபையின் அதிகாரத்தை நிராகரித்ததால் இது மோதலை உருவாக்கியது. பிரான்சிஸ் சேவியர் பல ஆயிரம் பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார், இது கொச்சியில் கத்தோலிக்க மக்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.[9]

சுமார் 1663

[தொகு]

கொச்சி அரச குடும்பத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இளவரசர் மற்றும் கொச்சியின் பரம்பரை தலைமை அமைச்சரான பாலியத் அச்சனின் அழைப்பின் பேரில், டச்சுக்காரர்கள் கொச்சிக்கு வந்து 1663 இல் கொச்சியைக் கைப்பற்றினர். அதன் பிறகு இந்த நகரம் டச்சு மலபாரின் தலைநகரமாக மாறியது. மேலும் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் உலகளாவிய வர்த்தக வலையமைப்போடு இணைந்ததது. கொச்சியிலிருந்த பல கத்தோலிக்க கல்வி நிறுவனங்களையும் டச்சுக்காரர்கள் அழித்தனர்.[10]

சுமார் 1760

[தொகு]

பிராந்திய சக்திகளுக்கு இடையிலான பிரச்சனைகளால் கொச்சிக்கு அமைதியற்ற காலங்கள் வந்தன. கொச்சி ஐதர் அலியால் அழிக்கப்பட்டது, பின்னர் அவரது மகன் திப்பு சுல்தானால் அழிக்கப்பட்டது. திப்பு சுல்தான் இந்த நகரத்தை தற்காலிகமாக மைசூர் இராச்சியத்திற்கு கீழ்ப்படுத்தினார்.

சுமார் 1790

[தொகு]

இந்தக் காலகட்டத்தில் கொச்சி ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. 1814 ஆம் ஆண்டில், கொச்சி மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது, பிரித்தானிய இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. ஆங்கிலேயர்கள் 20 ஆம் நூற்றாண்டு வரை நாட்டை வடிவமைத்தனர். கொச்சி எப்போதும் ஒரு முக்கியமான துறைமுகமாகவும், வணிக மையமாகவும் இருந்து வருகிறது.

1860 வாக்கில்

[தொகு]

பிரித்தானிய இந்தியப் பேரரசின் 1865 ஆம் ஆண்டய மதராஸ் சட்டம் 10 இன் படி (நகரங்களை மேம்படுத்துவதற்கான திருத்தம் 1850) 1866 ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளன்று கோட்டைக் கொச்சி நகராட்சியாக உருவாக்கப்பட்டது.[11][12][13][14] அப்போது கோழிக்கோடு, கண்ணூர், தலச்சேரி பாலக்காடு நகராட்சிகள், மலபார் மாவட்டத்தின் ஒரு பகுதியாக, நவீன கேரள மாநிலத்தின் முதல் நவீன நகராட்சிகளாக மாற்றப்பட்டன.

முக்கிய சுற்றுலா இடங்கள்

[தொகு]
கோட்டைக் கொச்சியில் உள்ள சைனக் கோயில்
கோட்டைக் கொச்சி கடற்கரையில் பழைய நீராவி கொதிகலன்கள்

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Fort Kochi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "About Fort Cochin | Vasco House Fort Cochin | Homestay Fort Cochin | Heritage House". Archived from the original on 12 December 2019.
  2. "THE MELTING POT OF CULTURES".
  3. "Here's where you should book a trip in 2020".
  4. The Portuguese, Indian Ocean and European Bridgeheads 1500–1800. Festschrift in Honour of Prof. K. S. Mathew (2001). Edited by: Pius Malekandathil and T. Jamal Mohammed. Fundacoa Oriente. Institute for Research in Social Sciences and Humanities of MESHAR (Kerala)
  5. DC Books, Kottayam (2007), A. Sreedhara Menon, A Survey of Kerala History
  6. "Diocese of Cochin" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-27.
  7. "Santa Cruz Cathedral Basilica Fort Kochi – History, Architecture" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-27.
  8. Slapak, Orpa (2003). The Jews of India: A Story of Three Communities. Jerusalem: The Israel Museum. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 965-278-179-7.
  9. "Cochin History". Cochin.org. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
  10. "Fort Kochi". Travel India. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
  11. "CHRONOLOGICAL LIST OF CENTRAL ACTS (Updated up to 17-10-2014)". Archived from the original on 2018-01-07. பார்க்கப்பட்ட நாள் 2016-08-07.
  12. Imperial Census of 1881 Operations and Results in the Presidency of Madras. பார்க்கப்பட்ட நாள் 5 December 2020.
  13. Madras District Gazetteers, Statistical Appendix For Malabar District. பார்க்கப்பட்ட நாள் 2 December 2020.
  14. Imperial Gazetteer of India. பார்க்கப்பட்ட நாள் 2 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சிக்_கோட்டை_பகுதி&oldid=4108560" இலிருந்து மீள்விக்கப்பட்டது