உள்ளடக்கத்துக்குச் செல்

எவரிஸ்துஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித எவரிஸ்துஸ்
Saint Evaristus
5ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்கிபி சுமார் 99
ஆட்சி முடிவுகிபி சுமார் 107
முன்னிருந்தவர்புனித முதலாம் கிளமெண்ட்
பின்வந்தவர்முதலாம் அலெக்சாண்டர்
பிற தகவல்கள்
இயற்பெயர்எவரிஸ்துஸ் (அ) அரிஸ்துஸ்
பிறப்புகிபி முதலாம் நூற்றாண்டு
பெத்லகேம், யூதேயா
இறப்புகிபி சுமார் 107
உரோமை, உரோமைப் பேரரசு

புனித எவரிஸ்துஸ் (Saint Evaristus) அல்லது அரிஸ்துஸ் (Aristus) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் ஐந்தாம் திருத்தந்தையாவும், புனித முதலாம் கிளமெண்ட் என்பவருக்குப் பின் திருத்தந்தையாகப் பதவி ஏற்றவராகவும் கருதப்படுகிறார். தொடக்க காலக் கிறித்தவ அறிஞர்களான இரனேயுஸ் மற்றும் செசரேயா யூசேபியஸ் இச்செய்தியைத் தருகின்றனர்[1].

  • எவரிஸ்துஸ் என்னும் பெயர் (பண்டைக் கிரேக்கம்Evaristus) கிரேக்க மொழியில் "இனிமை மிக்கவர்" என்று பொருள்படும்.

வாழ்க்கைக் குறிப்புகள்

[தொகு]

திருத்தந்தை எவரிஸ்து என்பவரின் ஆட்சிக்காலம் குறித்து ஒத்த கருத்து இல்லை. "திருச்சபை வரலாறு" என்னும் நூலில் யூசேபியஸ் அந்த ஆட்சிக்காலம் கி.பி. 99இலிருந்து 108 வரை நீடித்தது என்கிறார். "லிபேரியன் குறிப்பேடு" என்னும் நூல் எவரிஸ்தின் பெயரை "அரிஸ்துஸ்" என்று குறிப்பிடுவதோடு, அவரது ஆட்சிக்காலம் கி.பி. 96இலிருந்து 108 வரை தொடர்ந்ததாகக் கூறுகிறது.

"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏடு தருகின்ற கீழ்வரும் செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை. அதன்படி, கிரேக்கப் பின்னணியைச் சார்ந்த எவரிஸ்துஸ், யூதத் தந்தைக்கு பெத்லகேமில் மகனாகப் பிறந்தார். மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். உரோமைத் திருச்சபையைப் பல பங்குகளாகப் பிரித்து குருக்களை நியமித்தார். 15 ஆயர்களையும் 17 குருக்களையும் 2 திருத்தொண்டர்களையும் ஏற்படுத்தினார்.

மேற்கூறிய ஏடு குறிப்பிடுவது போல, எவரிஸ்துஸ் புனித பேதுரு கல்லறையின் அருகே அடக்கம் செய்யப்பட்டார் என்று உறுதியாகத் தெரிகிறது. அவரது பணியிடம் 19 நாள்கள் வெறுமையாய் இருந்தது.

உரோமைத் கிறித்தவத் திருச்சபையின் முதல் திருத்தந்தையர்களின் பெயர்கள் திருப்பலியின் நற்கருணை மன்றாட்டில் இருக்க, எவரிஸ்துசின் பெயர் மட்டும் அங்கு காணப்படவில்லை. இதிலிருந்து, இத்திருத்தந்தை பற்றிய உறுதியான வரலாற்றுச் செய்திகள் தெரியாத நிலை திருச்சபை வரலாற்றின் முதல் நூற்றாண்டுகளிலிருந்தே நிலவிவந்துள்ளது எனத் தெரிகிறது.

புனிதராகப் போற்றப்படுதல்

[தொகு]

எவரிஸ்துஸ் எவ்வாறு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்பது பற்றியும் உறுதிப்பாடு இல்லை. கத்தோலிக்க திருச்சபை இவரை ஒரு புனிதராகப் போற்றுகிறது. இவர்தம் திருவிழா அக்டோபர் 26 ஆகும். 1969இலிருந்து இவரது பெயர் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் மறைச்சாட்சிகள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டு, இப்போது தனி நாள்காட்டியில் மட்டுமே உள்ளது.

ஆட்சிக்காலம்

[தொகு]

"திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" (Annuario Pontificio) என்னும் நூல் இவரது ஆட்சிக்காலம் 96 (அல்லது 98) - 108 ஆகும் என்னும் தகவலைத் தருகிறது.

ஆதாரங்கள்

[தொகு]
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் உரோமை ஆயர்
திருத்தந்தை

98–105
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எவரிஸ்துஸ்_(திருத்தந்தை)&oldid=3175068" இலிருந்து மீள்விக்கப்பட்டது