வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை
இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்து சமய வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்பு கட்டுரை என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.
தாங்களும் இந்து சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்பு பக்கங்களைப் பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)
காப்பகம்
[தொகு]வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/1
தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.
இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்வலிமையும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.
இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது நிறைவடைகின்றது.
வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/2
பகவத் கீதை (சமக்கிருதம்: श्रीमद् भगवद् गीता, Śrīmad bhagavad gītā) என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்படும்.
மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதையாகும். இதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனனின் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும்.
இந்நூலை பிரஸ்தான த்ரயம் என்றும் சொல்வதுண்டு. இதற்கு பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றோடு இந்நூலும் இணைந்து மூன்று அஸ்திவாரங்கள் என்று பொருள்படி இவ்வாறு கூறப்பெறுகிறது. ராஜாஜியின் கைவிளக்கு, பால கங்காதர திலகரின் கர்ம யோகம், மகாத்மா காந்தியின் அநாஸக்தி யோகம் போன்றவை பகவத் கீதை உரைகளாகும்.
வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/3
தீபாவளி (சமக்கிருதம்: दीपावली) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்பெறுகின்ற ஓர் இந்து பண்டிகையாகும்.
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். கிரெகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத மத்தியிலிருந்து நவம்பர் மாத மத்தியம் வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்தியா, நேபால், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/4
மகா புராணங்கள் என்பவை வியாசரால் தொகுப்பெற்ற பதினெட்டு புராணங்களாகும். இவை மகாபுராணங்களின் தகுதியான பேரண்டப் படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும், வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ஆகிய ஐந்தினையும் கொண்டதாக உள்ளது. இவைகளில் ஒன்றோ, இரண்டோ தகுதி குறைவாக இருப்பவை உப புராணங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. வியாசரின் சீடராக இருந்த ரோமஹர்ஷனர் என்பவர் வாயு புராணத்தினையும் இணைத்து 19 புராணங்கள் என்று கூறியதாக ஒரு செய்தியுண்டு.
வேத வியாசரின் காலத்தினை கருத்தில் கொண்டு இப்புராணங்கள் கி.மு 6 அல்லது கி.மு 7 ம் நூற்றாண்டினைச் சார்ந்தவை என்று அறியப்பெறுகின்றன. இப்புராணங்கள் தேவபாஷை என்று வழங்கப்பெறுகின்ற சமஸ்கிருக மொழியில் எழுதப்பெற்றவை. எனினும் இந்திய மொழிகள் பலவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கந்த புராணம், சிவமகா புராணம் போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மகா புராணங்களில் பிரம்மனின் பெருமைகளை கூறுபவை ராஜசிக புராணம் என்றும், திருமாலின் பெருமையைக் கூறுபவை சத்துவ புராணம் என்றும், சிவபெருமானது பெருமைகளை கூறுபவை தாமச புராணம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.
வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/5
விசுவாமித்திரர் (சமஸ்கிருதம் विश्वामित्र) பண்டைய இந்தியாவின் மிகப்பெரும் முனிவராகக் கருதப்படுபவர். குசநாபரின் மகன். கௌசிகன் என்ற பெயருடைய மன்னன். வசிட்டரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியதாக கருதப்படுகிறார். புராணங்களின் படி ஆதி முதல் 24 ரிஷிகளே முழு ஞானத்தையும் சக்தியையும் பெற்றவர்களாக இருந்தாக கூறப்படுகிறத
வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/6
திருவிளக்கு வழிபாடு என்பது இந்து மதத்தில் இடம்பெறும் ஒரு வழிபாட்டு முறையாகும். இறைவனை ஒளிவடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் வழிபாடு திருவிளக்கு வழிபாடாகும். பொதுவாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த நற்பலன்களைத் தரவல்லது என நம்பப்படுகிறது. தமிழ் மாதங்களில் 12 மாதங்களிலும் திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும். அந்தந்த மாதங்களில் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்
வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/7
நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/8
வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களில் பெண் என்பதால் ஆண்டாளையும், நம்மாழ்வாரைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் விடுத்து ஆழ்வார்கள் 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு. இவர்கள் 7 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.
வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/9
நாக வழிபாடு பண்டைய திராவிடர்களின் இயற்கை வழிபாடுகளில் ஒன்றாகவும் இந்து மற்றும் பௌத்த மதங்களில் காணப்படும் வழிபாடாகவும் இருந்து வருகின்றது. புராண இதிகாசங்களிலும் ஆதி பர்வம் முதலான பண்டைய நூல்களிலும் நாகவடிவத்தின் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகக் கால கண்டுபிடிப்புகளில் முக்காலி மீதுள்ள கிண்ணமும் அருகில் காணப்படும் நாக வடிவமும் நாக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாகும். நாக வம்சத்தினரை நாக வழிபாட்டுடன் இணைத்துக் காட்டும் செய்திகளும் உள்ளன.
வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/10
இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி (தெலுங்கு: తిరుపతి) ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் கோயிலுள்ள திருமலையும் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் கோவிலுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ்திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.
பரிந்துரைகள்
[தொகு]சில மேம்பாடுகளைச் செய்தால் கீழ்வரும் கட்டுரைகளை வலைவாசலில் இடம் பெறச் செய்யலாம்.
{{{text}}}