உள்ளடக்கத்துக்குச் செல்

ம. புதுப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ம.புதுப்பட்டி
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


ம.புதுப்பட்டி (M.Pudupatti) தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஆகும்[4]. இது அர்ச்சுனா நதியின் மேற்குக்கரையில் அமைந்துள்ள கிராமம். நில வரையறைகளின்படி மங்கலம் கிராமத்தின் நில ஆளுகைக்கு உட்பட்டுள்ளது. இக்கிராமம் மங்கலம் வருவாய்துறை அலுவலகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மங்கலம் புதுப்பட்டி என்பதன் சுருக்கமே ம.புதுப்பட்டி. இந்த ஊராட்சியின் துணைக் கிராமமாக சொக்கலிங்கபுரம் இருக்கிறது. சுற்றியுள்ள கிராமங்களி மையமாக அமைந்துள்ளதாலும் அரசு அலுவலகங்கள் அமையப்பெற்றதாலும் வணிக வசதியும், வாகன வசதியும் இருப்பதாலும் ஊர் விரிவடைந்து வருகிறது.

இந்த ஊரின் விளிம்பில் அருள்மிகு கூடைமுடைய அய்யனார் சுயம்புவாக உருவான கோவில் உள்ளது. அக்கோவில் பல்வேறு சமூகத்திற்கும் குலதெய்வமாக இருக்கிறது. இத்திருக்கோவிலில் 5 ஆண்டுகட்கு ஒரு முறை இராமநாதபுர மாவட்ட 48 கிராம கோனார் இன மக்களால் கொண்டாடப்படும் விழா சிறப்புவாய்ந்தது. தற்போது தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவிலும், இக்கோவிலுக்குச் சொந்தமான இடங்களும் நிர்வகிக்கப்படுகிறது. மாசி மாதம் கொண்டாடப்படும் சிவராத்திரி இப்பகுதி மக்களிடையே பிரசித்திபெற்றது. திருவிழாவிற்கு சிறப்புப்பேருந்துகள் சிவகாசி மற்றும் திருவில்லிப்புத்தூரில் இருந்து இயக்கப்படும்.

அரசு அலுவலகங்களும், பள்ளியும்

[தொகு]
  • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
  • கு.மாரியப்பன் நினைவு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
  • அரசு உயர்நிலைப் பள்ளி
  • 24/ 7 அரசு பொது சுகாதார மையம்
  • காவல் நிலையம்
  • அஞ்சல் அலுவலகம்
  • பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை
  • ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
  • நியாயவிலை கடை

போக்குவரத்து வசதிகள்

[தொகு]

பேருந்து

  • சிவகாசி - எரிச்சநத்தம் அரசுப்பேருந்து
  • சிவகாசி - எரிச்சநத்தம் சீனிவாசாபேருந்து
  • சிவகாசி - கிருஷ்ணன்கோவில் - ம.புதுப்பட்டி வழியாக அரசுப்பேருந்து
  • மதுரை - சிவகாசி - ம.புதுப்பட்டி வழியாக ஒருநாளைக்கு 2 முறை ஜோதி பேருந்து
  • விருதுநகர் - ம.புதுப்பட்டி- மங்கலம் அரசுப் பேருந்து
  • திருவில்லிப்புத்தூர் - ம.புதுப்பட்டி அரசுப் பேருந்து
  • திருத்தங்கல் - ம.புதுப்பட்டி - நல்லுத்தேவன்பட்டி சிற்றுந்து

இரயில் சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை வரை ஓடும் பொதிகை அதிவிரைவு வண்டி, மதுரை செங்கோட்டை பயணிகள் வண்டிகள் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நிலையங்களில் நின்று செல்லும்.

  • சிவகாசி தொடர்வண்டி நிலையம் - 8 கி.மீ
  • திருத்தங்கல் தொடர்வண்டி நிலையம் - 7 கி.மீ

திருநெல்வேலி,நாகர்கோவில்,தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வழியாக ஓடும் பயணிகள் மற்றும் விரைவு,அதிவிரைவு வண்டிகள் சாத்தூரில் நின்று செல்லும்.

  • சாத்தூர் தொடர்வண்டி நிலையம் - 30 கி.மீ

கோவி்ல்கள்

[தொகு]
  • அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் மற்றும் பலிபீடம்( தமிழர்களின் போர்க்கள கடவுள் கொற்றவை)
  • அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்
  • அருள்மிகு முத்தாலம்மன் கோவில் (ஊரின் மையமாக)
  • அருள்மிகு முத்தக்காள், இராமக்காள், பெரியசாமி திருக்கோவில்
  • அருள்மிகு விநாயகர் கோவில்

திருவிழாக்கள்

[தொகு]

ம.புதுப்பட்டியில் வருடத்திற்கு 3 முறை ஊர்த் திருவிழாக்கள் நடைபெறும்

  • வைகாசி மாதம் பத்திரகாளியம்மன் பொங்கல்

திருவிழாவின் ஆரம்பமாக வைகாசி மாதம் முதல் புதன்கிழமை ஊர் பெரியவர்கள் கோவில் முன்பு கூடி, பந்தல் அமைப்பு,ஒலி,ஒளி அமைப்பு, திருவிழா செலவு மற்றும் சாமி ஊர்வல செலவுகளுக்கு தலைக்கட்டு வரி நிர்ணயிக்கப்படும். திருமணமானவர்கள் ஒவ்வொருவரும் ஓரு தலைக்கட்டாக கணக்கிடப்பட்டு அந்தந்த சமுதாய தலைவர்களால் வரி வசூலிக்கப்படும். கணவனை இழந்தோர், மனைவியை இழந்தோரிடம் அரைவரி மட்டுமே வசூலிக்கப்படும். வைகாசி இரண்டாம் செவ்வாய் மாலை கரகாட்டத்துடன் திருவிழா தொடங்கும். சாமி ஊர்வலம் வரும் வீதிகளில் உள்ள முக்கிய மந்தைகளில் 3 இடங்களில் ஊரின் சலவைத்தொழிலாளி கொடுக்கும் மாத்து சேலைகளில் மந்தைகூடாரம் அமைக்கப்படும். கூடாரத்தில் ஆற்றுமணல் பரப்பி மந்தையம்மன் வைப்பதற்கு இடம் தயாராகும். இரவு 12 மணிக்குமேல் 3 மந்தைகளிலும் உள்ள பானைகள் நாட்டார் வழக்கில் கிராம பூசாரிகளாக உள்ள பண்டாரம் எனும் கோவில் ஊழியம் செய்யும் குடும்பத்தினரால் எடுக்கப்பட்டு ஆற்றில் வைத்து பானை, தேங்காய், மஞ்சள், வேப்பங்குழை ஆகியவற்றால் மந்தையம்மன் சாமி உருவாக்கப்படும்.அவற்றுக்கு பித்தளையால் ஆன கண்மலர்கள் வைக்கப்பட்டு ஊருக்குள் கொண்டு வரப்படும். அவ்வாறு கொண்டு வரப்படும் 3 மந்தையம்மன் சிலைகளும் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு மந்தைகளிலும் எழுந்தருளும். மறுநாள் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு மந்தைகளில் ஊர்மக்கள் பொங்கலிடுவர். 7 மணி அளவில் மந்தைகளில் இருந்து பண்டாரம் சமூகத்தினரால் மந்தையம்மன் பூசிக்கப்பட்டு,ஒவ்வொரு மந்தையிலும் சேவல் பலிகொடுக்கப்பட்டு ஆற்றில் கரைக்க எடுத்துச்செல்லப்படும். பித்தளை கண்மலர்கள் மட்டும் எடுக்கப்பட்டு ஆற்றங்கரையில் பூசை வைக்கப்பட்ட பின் மந்தையம்மன் ஆற்றில் கரைக்கப்படும். காலை 9 மணி அளவில் பத்ரகாளியம்மன் கோவி்ல் முன்பு பொங்கல் வைக்க மக்கள், பொங்கல் பானை, மாவிளக்குடன் ஊர்வலமாக அழைத்துவரப்படுவார்கள். பின் 11 மணி அளவில் சாமிக்கு பட்டுசேலை,பூமாலை, தேங்காய் அலங்கார பொருட்களுடன் பெண்கள் முளைப்பாரிகளுடனும், ஆடு பலிகொடுப்பவர்கள் ஆட்டுகுட்டிகளுடனும் தேரடி வீதிகளில் ஊர்வலமாக ஆழைத்து வரப்படுவர்.அலங்காரம் முடியும் வரை கும்மி பாட்டு படிக்க பெண்கள் 3 வட்டமாக நின்று கும்மி அடிப்பர். திருமணமானோர், இளம்பெண்கள் மற்றும் சிறுமகளிர் 3 வட்டமாக கூடி கும்மி அடிப்பர். பின் ஆண்கள் கும்மி அடிப்பர். இது ம.புதுப்பட்டிக்கே உண்டான சிறப்பாகும். இதைச்சுற்றியுள்ள எந்த ஊரிலும் ஆண்கள் கும்மியடிக்கும் பழக்கமில்லை.

நன்பகல் 12 மணி அளவில் சாமிக்கு அலங்காரம் மற்றும் பூசை முடிந்தவுடன் பலிபீடத்திற்கு பூசை வைக்கப்பட்டு ஆடு, சேவல் பலியிடப்படும். அதை தொடர்ந்து இளைஞர்கள், பெரியோர், இளம்பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடுவர்.

இரவு 8 மணிக்குமேல் பத்திரகாளியம்மன் பூ,மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, விளக்கொளியில் மின்ன, சிம்ம வாகனத்தில் ஊர்சுற்றி பவனி வருவாள். பின்னால் முளைப்பாரிகள் ஆற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கரைக்கப்படும். அப்போது முளைப்பாரிகளில் சுற்றப்பட்ட மஞ்சள் நூல்களை பெண்கள் போட்டி போட்டு எடுப்பர்.பொங்கலின் அடையாளமாக ஆண்களும், பெண்களும் அந்த முளைப்பாரிக் கயிறை கைகளில் கட்டி மகிழ்வர்.

  • புரட்டாசி மாதம் முத்தாலம்மன் பொங்கல்
     அன்றே பிறந்து அன்றே அழிவாள் முத்தாலம்மன் என்று முத்தாலம்மன் வழிபாட்டை சொல்வதுண்டு. 
  • தை மாதம் முருகன் ஊர் பவனி

ஊர் நுழைவுவாயில்

[தொகு]
அர்ச்சுனா ஆற்றின் மேற்கு கரையில் உள்ள சாலை ம.புதுப்பட்டியின் நுழைவுவாயிலாக விளங்குகிறது. ஊர் மக்களை கம்பீரமாக நின்று கொண்டு கண்காணிக்கும், காவல்காக்கும் இயற்கை தெய்வமாக பல நூறு பறவைகளின் உறைவிடமாக இச்சி மரம் விளங்குகிறது. ம.புதுப்பட்டிக்குள் நுழையும் எவரையும் வரவேற்கவும், வெளியில் செல்வோரை வழியனுப்பவும் காலம் காலமாக மக்கள் பணி செய்து வருகிறது.
அதிகாலை பறவைகள் இரைதேடிச்செல்லும் முன் எழுப்பும் ஒசையும், மாலையில் கூட்டிற்குள் வந்து அடையும் பறவைகள் குஞ்சுகள், உறவுகளைக்கண்டு ஆனந்திக்கும் மகிழ்ச்சிக்குரலும் இவ்வூரை இன்னும் உயிர்ப்புள்ளதாக வைத்திருக்கிறது. இப்பறவைகளின் ஓசையையும், இம்மரத்தையும் தவிர்த்துவிட்டு இவ்வூர் வரலாற்றை சொல்லிவிடமுடியாது. இவ்வூருடன் திருமணபந்தம் கொண்டவர்கள் மறக்காமல் வைத்திருக்கும் அடையாளமாக இம்மரம் விளங்குகிறது.
இப்பறவைகளின் ஓசையின்றி நகரும் நாட்கள், பறையிசையின்றி கொண்டாடப்படும் தமிழர்விழா போன்று உற்சாகமி்ன்றி உயிரற்றதாக இருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._புதுப்பட்டி&oldid=3565881" இலிருந்து மீள்விக்கப்பட்டது