பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை)
பதின்மூன்றாம் கிரகோரி Pope Gregory XIII | |
---|---|
ஆட்சி துவக்கம் | மே 13, 1572 |
ஆட்சி முடிவு | ஏப்ரல் 10, 1585 |
முன்னிருந்தவர் | ஐந்தாம் பயஸ் |
பின்வந்தவர் | ஐந்தாம் சிட்ஸ்துஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ஊகோ பொண்கொம்பாக்னி |
பிறப்பு | ஜனவரி 7, 1502 |
இறப்பு | ஏப்ரல் 10, 1585 |
கிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை 13ஆம் கிறகோரி (Pope Gregory XIII, ஜனவரி 7, 1502 – ஏப்ரல் 10, 1585), திருத்தந்தையாக 1572 முதல் 1585 வரை இருந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ஊகோ பொண்கொம்பாக்னி (Ugo Boncompagni) எனும் இயற்பெயர் கொண்ட இவர் 1502 இல் இத்தாலிய பொலொக்னா (BOLOGNA) நகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது கலாநிதி பட்டப்படிப்பை பொலொக்னா பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்ததைத் தொடர்ந்து அங்கு சட்டவியல் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். இவரது 40ஆவது வயதில் உரோமபுரியில் குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டதுடன் அன்றைய வழக்கப்படி சாதாரண குடும்ப வாழ்வை மேற்கொண்டு ஒரு மகனுக்குத் தந்தையாகவும் இருந்தார். இவரது மகன் எங்கிள்ஸ்பேர்க்கின் ஆளுநர்.
3ஆவது பவுலின் கீழ் இவர் இவர் முக்கிய நீதி அலுவலராகவும், 4ஆவது பவுலின் காலத்தில் இவர் சில இராஜரீகக் கடமைகளில் ஈடுபட்டதன் பின்பு ஆயராக நியமனம் பெற்றார். ஆலயச் சட்டவிதிகளைக் கையாள்வதில் இவர் கைதேர்ந்தவராக இருந்ததால் திரியெந்தில் இடம்பெற்ற திருத்தந்தையின் சங்க அமர்வில் பங்கேற்று அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளின் இறுதி வரைவில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். 4ஆவது பயஸ் திருத்தந்தை இவரைக் கருதினாலாக நியமனம் செய்ததுடன் ஸ்பானியா நாட்டின் மறைத்தூதராகவும் அறிவித்தார். இதனால் இவர் 2ஆவது பிலிப் மன்னனின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்ததால் கருதினால்களின் ஒன்றியத்தால் திருத்தந்தையாகத் தெரிவுசெய்யப்படும் வாய்ப்பைப் பெற்றார்.
இவர் தமக்கு முன்பிருந்த திருத்தந்தையர்கள் போல் அல்லாது விட்டுக்கொடுப்புடனும் புனித கார்லோ பொறோமயோ அவர்களின் துணையுடனும் ஆழமாக திருஅவையின் கொள்கைகளில் மறுமலர்ச்சி ஏற்பட வழிசமைத்தார். திரியெந்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமுல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க கருதினால்கள் அடங்கிய குழுவொன்றினை ஏற்படுத்தி அதன் மூலம் கேள்ன், கிராஸ் மற்றும் லுசேனில் திருத்தந்தையின் பிரதிநிதிகளை இவர் நியமனம் செய்தார். ஆனால் பிரெஞ்சு கத்தோலிக்கத் திருஅவையால் திரியெந்து முடிவுகளுக்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்களை இவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பிரிந்து சென்ற சபையினரின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு அருட்பணியாளர்களுக்கு உயர்கல்வியை வழங்குவதற்காக இயேசு சபையின் உதவியோடு உரோமையில் பன்னாட்டு மாணவர்கள் கற்பதற்கான கல்லூரிக்கு புதிய உயிரோட்டம் கொடுத்தார். இது 1551 இலிருந்து இயங்கும்போதும் இவரைக் கௌரவிப்பதற்காக இக் கல்லூரி கிறகோரி சர்வகலாசாலை என அழைக்கப்படுகின்றது. இங்கு ஏற்கனவே கற்பிக்கும் வழக்கிலிருந்த யேர்மானிய மற்றும் மறோனிற்றிச மொழிவழிக்கல்வியுடன் கிரேக்கம், ஆங்கிலம், கங்கேரிய மொழிவழிக் கல்வியும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
ஐரோப்பா முழுவதும் பிரிந்து சென்ற சபையினருக்கு எதிரான கொள்கைகள் இவரால் ஆக்ரோசத்துடன் மேற்கொள்ளப்பட்டது. கத்தோலிக்கர் மற்றும் பிரிந்து சென்ற சபையினர் இடையில் ஏற்பட்ட மோதல்களில் இவர் தலையிட்டு தமது கொள்கைகளை நியாயப்படுத்துவதில் முன்நின்றார். 1572 இல் பிரெஞ்சு கத்தோலிக்க வட்டத்தால் உருவாக்கப்பட்ட கத்தோலிக்க லீகா எனும் அமைப்பிற்கு முழு ஆதரவு வழங்கி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பத்தலேமு இரவு எனப்படும் நிகழ்விற்கு ரெ டெனும் (Te Denum) எனும் ஆசியையும் வழங்கியிருந்தார்.
இவர் அன்றைய இங்கிலாந்து அரசி எலிசபேத்திற்கு எதிராக ஸ்பானிய அரசாட்சி மேற்கொண்ட பதவிக் கவிழ்ப்பு முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கியதுடன் அந்த அரசி படுகொலை செய்யப்படவும் தனது உதவிகளை வழங்கியிருந்தார். யேர்மனியில் ஏற்பட்ட பிரிவினைச் சபையின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக பிரத்தியேகமான கருதினால்களின் குழுவொன்றை ஏற்படுத்தியதன் மூலம் அவர்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டதுடன் ஏற்கனவே பிரிவினைச் சபையின் ஆதிக்கத்தில் இருந்த யேர்மனியின் சில பகுதிகள் மீண்டும் கத்தோலிக்க மயமாகியது. அத்துடன் போலந்து நாடும் கத்தோலிக்கத்திற்கு மீண்டும் மாறிக் கொண்டது. ஆனால் சுவீடன் ஆட்சியாளர் குருக்களின் திருமண அனுமதி மற்றும் இரு நற்கருணைகள் வழங்குமாறு விடுத்த வேண்டுகோள் இவரால் நிராகரிக்கப்பட்டது.
இயேசு சபையினால் கிழக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மறை அறிவிப்பிற்கு இவர் தனது முழு ஆதரவை வழங்கினார். பிலிப்பு நேரியின் சபையை இவர் ஏற்று உறுதிப்படுத்தியதுடன், பாதணிகள் அணியாமல் வெறுங்காலுடன் பணியாற்றிய அவிலா புனித திரேசாளின் காமலீற்றா சபையினரையும் மறுமலர்ச்சி பெறச் செய்தார்.
நாட்காட்டி அறிமுகம்
[தொகு]இவரது பெயர் யூலியஸ் நாட்காட்டியின் மறுமலர்ச்சியுடன் இன்றும் நிலைத்துள்ளது. இந்நாட்காட்டியிலிருந்து 1582 ஆம் ஆண்டில் பத்து நாட்களை இவர் இல்லாது செய்தார். (ஒக்டோபர் 5 முதல் 14 வரை). புதிய விதிகளை ஏற்படுத்தி நெட்டாண்டு முறைப்படி வருடங்களைக் கணிப்பிடுமாறு அறிமுகம் செய்தவர் இவரே. இந்த மாற்றம் செய்யப்பட்ட நாட்காட்டி, இவரது பெயராலேயே கிரெகொரியின் நாட்காட்டி என அழைக்கப்படுகின்றது. இவரது இம் மாற்றத்தை கத்தோலிக்க நாடுகள் உடனடியாகவே அமுல்படுத்தியபோதும் பிரிவினைச்சபையின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருந்த நாடுகள் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பின்பாகவே அமுல்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கொள்கைகளில் ஏற்படுத்திய மாற்றங்கள் போன்று பல கலையம்சங்களையும் விட்டுச்சென்றுள்ளார். முக்கியமாக இவர் இயேசு சபையினரின் உதவியுடன் இல் யேசு என அழைக்கப்படும் பேராலயத்தைக் கட்டி முடித்ததுடன் திருத்தந்தையின் கோடைவிடுமுறை விடுதியைக் கட்டுவதற்கு ஆரம்பித்திருந்தார். இந்த முன்னெடுப்புகளால் திருஅவையின் கையிருப்புகள் வெறுமையானது. இதற்காக மேலதிக வரிகளை விதிக்காமல் நாடுகளுக்கு வழங்கியிருந்த உதவிகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
மறைவு
[தொகு]தமது 83ஆவது வயதில் 10.04.1585இல் இறைவனடி சேர்ந்த இவரது கல்லறை வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தினுள் அமைந்துள்ளது.