உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரி கீர்த்தநகரன்
Kertanagara
Sri Maharaja Kertanagara
சுராபாயா, ஜாவி கோயிலில் புத்தர் வடிவத்தில் கீர்த்தநகரன்
சிங்காசாரி அரசர்
ஆட்சிக்காலம்1268 – 1292
முன்னையவர்விசுணுவருதனா
இறப்பு1292
புதைத்த இடம்
துணைவர்பஜ்ராதேவி
குழந்தைகளின்
பெயர்கள்
பட்டப் பெயர்
Śrī Mahārājādhirāja Kṛtanagara Wikrama Dharmmottunggadewa
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பாதர சிவன் புத்தர்
மரபுராஜசா அரசமரபு (Rajasa dynasty)
தந்தைவிசுணுவருதனா
தாய்ஜெயவருதனி
மதம்சைவ சமயம்
வச்சிரயான பௌத்தம்

கீர்த்தநகரன் அல்லது செரி கீர்த்தநகர விக்கிரம தர்மதுங்கதேவன் (ஆங்கிலம்: Kertanagara அல்லது Sri Kertanagara Wikrama Dharmatunggadewa; இந்தோனேசியம்: Sri Maharaja Kertanagara; பாலி மொழி: ꦯꦿꦶꦩꦲꦴꦫꦴꦗꦏꦽꦠꦤꦴꦒꦫ) (இறப்பு: 1292) என்பவர் ஜாவா சிங்காசாரி இராச்சியத்தை1268 முதல் 1292 வரை ஆட்சி செய்த கடைசி ஆட்சியாளர்; மற்றும் மிக முக்கியமான ஆட்சியாளரும் ஆவார்.

அவருடைய ஆட்சியின் கீழ் ஜாவானிய வணிகம் கணிசமாக வளர்ச்சியடைந்தது. இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் (Indonesian archipelago) தொலைதூர இடங்கள் வரை அவரின் செல்வாக்கு அறியப்பட்டது.

பின்னணி

[தொகு]

கீர்த்தநகரன், சிங்காசாரியின் ஐந்தாவது ஆட்சியாளர்; மற்றும் முந்தைய அரசரான விசுணுவருதனாவின் (ஆட்சி: 1248–1268) மகன் ஆவார். கீர்த்தநகரன் 1254-ஆம் ஆண்டு முதல் அதிகாரத்தை மிகத் திறமையுடன் தக்க வைத்துக் கொண்டார். 1268-இல் அவரின் தந்தை காலமானார். அதன் பின்னர் கீர்த்தநகரன், அதிகாரப்பூர்வமாக ஆட்சிக்கு வந்தார்.[1]:188 கென் அரோக் என்பவர் முந்தைய கேடிரி அரசில் இருந்து தூக்கி எறியப் பட்டதைத் தொடர்ந்து சிங்காசாரி அரச மரபு ஜாவாவில் ஆட்சிக்கு வந்தது. அந்த வகையில், 1222-இல் கென் அரோக் முதல் சிங்காசாரி ஆட்சியாளர் ஆனார்.

இந்து மதம் மற்றும் பௌத்த மதத்தின் மாய தாந்திரீக ஒத்திசைவைக் கீர்த்தநகரன் பின்பற்ற்றினார். அவர் தன்னை சிவன் மற்றும் புத்தரின் தெய்வீக அவதாரமாகக் காட்டிக் கொண்டார்.[2] கீர்த்தநகரன் பல மத விழாக்களைக் கொண்டாடினார். மேலும் அவர் தன் ஆட்சிக் காலத்தில் பல சிற்பங்கள் மற்றும் பல உலோகத் தகடுகள் உருவாக்கப்படுவதற்கு காரணமாக இருந்தார்.

கிளர்ச்சிகள்

[தொகு]

கீர்த்தநகரனின் ஆட்சியின் போது சிங்காசாரி அதன் அதிகாரத்தின் உச்சத்தை அடைந்தது. சுமாத்திரா, மலாய் தீபகற்பம் மற்றும் பாலி வரை அதன் விரிவாக்கம் இருந்தது. மசாலா பொருள் வணிகத்தில், ஜாவானியர்களின் ஈடுபாட்டை மலுக்கு தீவுகள் வரை விரிவுபடுத்தினார். 1270-இல் கயராஜா பயராஜா (Cayaraja Bhayaraja) என்பவர் ஜாவாவில் நடத்திய ஒரு கிளர்ச்சியையும், 1280-இல் மகிசா ரங்கா (Mahisha Rangkah) என்பவரின் மற்றொரு கிளர்ச்சியையும் கீர்த்தநகரன் அடக்கினார்.[3][1]:198[2]

கீர்த்தநகரன் என்பவர் பிராந்திய இலட்சியங்களைக் கொண்ட முதல் ஜாவானிய ஆட்சியாளர் ஆவார். அவர் ஜாவா தீவுக்கு அப்பாலும் தன் ஆளுமையை விரிவுபடுத்தினார். 1284-ஆம் ஆண்டில், அவர் அருகிலுள்ள பாலி தீவை அடிமைப்படுத்தினார். தென்கிழக்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த மற்றோர் இராச்சியமான சம்பா இராச்சியத்துடன் கீர்த்தநகரன் ஒரு கூட்டணியையும் உருவாக்க முடிந்தது.[4]

பாமலாயு போர்ப் பயணம்

[தொகு]

அவருடைய ஆட்சியின் பிற்பகுதியில், பாமலாயு போர்ப் பயணத்திற்கு (Pamalayu Expedition) தலைமை தாங்கினார். கிழக்கு சுமாத்திராவில் உள்ள மெலாயு இராச்சியத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதில் வெற்றி பெற்றார். மேலும் அவர் [[சுண்டா இராச்சியம்]சுண்டா இராச்சியத்தின்]] மீதான கட்டுப்பாட்டையும் பெற்றார். பின்னர் அவர் மலாக்கா நீரிணையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.[2] அதன் பின்னர் மதுரா தீவு மற்றும் போர்னியோவில் உள்ள பிற பகுதிகள் கீர்த்தநகரனிடம் பணிந்து போயின.[3]

மங்கோலியர்களுடன் மோதல்

[தொகு]

சீனாவில் சொங் அரசமரபு ஆட்சிக்கு வந்த பிறகு, மங்கோலிய யுவான் அரசமரபு தென்கிழக்கு ஆசியாவில் தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது. 1289-ஆம் ஆண்டில், செங்கிஸ் கானின் பேரனான குப்லாய் கான், தனது தூதர்களை ஜாவாவிற்கு அனுப்பி, மரியாதை நிமித்தம் யுவான் அரசமரபிற்கு அடிபணியுமாறு கோரினார். கீர்த்தநகரன் இந்தக் கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். சீனத் தூதர்களைக் கைது செய்து அவர்களின் முகங்களில் முத்திரை குத்தி; காதுகளை வெட்டி; சிதைந்த முகங்களுடன் அவர்களைச் சீனாவிற்குத் திருப்பி அனுப்பினார்.[4]

மங்கோலியர்கள் தன்னைத் தண்டிக்க ஓர் இராணுவப் படையை அனுப்புவார்கள் என்பதை உணர்ந்து கொண்ட கீர்த்தநகரன் தனது அதிகாரத்தை வலுப்படுத்த முயன்றார். 1292-ஆம் ஆண்டு கீர்த்தநகரனைத் தண்டிக்க, தொலைதூர பூமத்திய ரேகை தீவுகளுக்கு எதிராக ஒரு வலுவான கடற்படை பயணத்தை தொடங்க குப்லாய் கான் உத்தரவிட்டார்.[1]:198

ஜெயகாதவன் கிளர்ச்சி

[தொகு]

இதற்கிடையில், கீர்த்தநகரன் ஜாவா முழுவதையும் தன் முழு ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்துவிட்டார். ஆனாலும் மங்கோலிய கடற்படைகள் வருவதற்கு முன்பு, சிங்காசாரியில் எதிர்பாராத ஓர் அரசியல் திருப்பம் ஏற்பட்டது. கேடிரி இராச்சியத்தின் இளவரசரும், சிங்காசாரியின் மிகவும் சக்தி வாய்ந்த அடிமை ஆட்சியாளர்களில் ஒருவருமான ஜெயகாதவன் (Jayakatwang) தன் தலைவர் கீர்த்தநகரனுக்கு எதிராகக் கலகம் செய்தார்.

அந்த நேரத்தில் கீர்த்தநகரனின் துருப்புக்கள் சுமாத்திராவில் ஜம்பி சுல்தானகத்திற்கு எதிராகப் போரில் ஈடுபட்டு இருந்தன. கீர்த்தநகர இராணுவத்தின் பெரும்பகுதி சுமாத்திராவில் இருந்ததால் சிங்காசாரியின் பாதுகாப்பு பலவீனம் அடைந்த நிலையில் இருந்தது. ஜெயகாதவன் அந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு கீர்த்தநகரனுக்கு எதிராக ஓர் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடங்கினார்.[4]

ஜெயகாதவன் முதற்கட்டமாக ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கினார். சிங்காசாரியின் தலைநகர் குடராஜா பாதுகாப்பற்ற நிலையில் சிக்கிக் கொண்டது. மலைப்பாங்கான தெற்குப் பகுதியிலிருந்து ஜெயகாதவன் தலைநகரைத் தாக்கினார்.[5] 1292 மே அல்லது சூன் மாதத்தில் சிங்காசாரியில் உள்ள கீர்த்தநகரனின் அரண்மனையில் பல அரசவை உறுப்பினர்களுடன் கீர்த்தநகரனும் கொல்லப்பட்டார். பின்னர் ஜெயகாதவன் தன்னை ஜாவாவின் ஆட்சியாளராகவும், மீட்டெடுக்கப்பட்ட கேடிரி இராச்சியத்தின் மன்னராகவும் அறிவித்துக் கொண்டார்.[1]:199

ராதன் விஜயன்

[தொகு]

உயிர் பிழைத்த கீர்த்தநகரனின் உறவினர்களில் அவருடைய மருமகன் ராதன் விஜயன் என்பவரும் ஒருவர் ஆவார். ராதன் விஜயன் மதுரா தீவுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவர் அதன் ஆட்சியாளரான ஆரிய வீரராஜாவிடம் அடைக்கலம் பெற்றார். பின்னர் ராதன் விஜயன் கீழ் பிரந்தாஸ் கழிமுகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அங்கு அவர் ஒரு புதிய குடியேற்றத்தை உருவாக்கினார். அந்தக் குடியேற்றம் படிப்படியாக வளர்ச்சி பெற்று, பின்னர் காலத்தில் மஜபாகித் எனும் வலிமையான பேரரசாக மாறியது.[1]:199–200

குப்லாய் கான் படையெடுப்பு

[தொகு]

கிழக்கு யாவாக்கு 1292 இல் படையெடுத்து வந்த குப்லாய் கானின் மொங்கோலியப் படையுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட விஜயன், செயகாதவாங்கனின் ஆட்சியின் கீழிருந்த சிங்கசாரி அரசை முற்றுகையிட்டான். 1293 இல் செயகாதவாங்கன் தோல்வியுற்று வீழ்ந்தபோது, எதிர்பாராதவிதமாக விஜயன் மொங்கோலியப் படையைத் தாக்கலானான்.

தம் நாட்டுக்கொவ்வாத காலநிலையாலும், கொள்ளை நோய்களாலும் ஏற்கனவே பலமிழந்துபோயிருந்த மொங்கோலியப் படைகள் சாவகத்திலிருந்து பின்வாங்க வேண்டியதாயிற்று..[6] இதன்பின்னர், "கர்த்தராயச செயவர்த்தனன்" எனும் பெயருடன் மயபாகித் எனும் புதிய பேரரசின் சக்கரவர்த்தியாக, தன்னை முடிசூடிக் கொண்டான் ராடன் விஜயன்.[1]:201,232-233

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. ISBN 9780824803681.
  2. 2.0 2.1 2.2 Kinney, Klokke & Kieven 2003.
  3. 3.0 3.1 Southeast Asia: a historical encyclopedia, from Angkor Wat to East Timor, Volume 2. ABC-CLIO. 2004. ISBN 978-1-57607-770-2.
  4. 4.0 4.1 4.2 Rossabi, Morris (1988). Khubilai Khan: His Life and Times. University of California Press. ISBN 978-0-520-06740-0.
  5. Irapta 2005, ப. 87.
  6. "Beginning of the Mongol Collapse," Columbia University, [Asian Topics Online http://afe.easia.columbia.edu/mongols/china/china4_a.htm].

சான்றுகள்

[தொகு]
முன்னர் பாலி அரசர்கள்
ஏர்லங்கா
 ? – 1042
பின்னர்

வெளி இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:சிங்காசாரி அரசர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி&oldid=4214539" இலிருந்து மீள்விக்கப்பட்டது