தம்புன்

ஆள்கூறுகள்: 4°37′0″N 101°8′0″E / 4.61667°N 101.13333°E / 4.61667; 101.13333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தம்பூன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தம்புன்
Tambun
பேராக்
Map
தம்புன் is located in மலேசியா
தம்புன்
      தம்புன்
ஆள்கூறுகள்: 4°37′0″N 101°8′0″E / 4.61667°N 101.13333°E / 4.61667; 101.13333
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்கிந்தா
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
31400
தொலைபேசி எண்கள்+6-05
போக்குவரத்துப் பதிவெண்கள்A

தம்புன் (ஆங்கிலம்: Tambun; ஜாவி: مبون; சீனம்: 打扪) என்பது மலேசியாவின் ஈப்போவில் உள்ள ஒரு புறநகரம். இது பேராக் மாநிலத்தின் கிந்தா மாவட்டத்தில் உள்ளது. ஈப்போவில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவிலும் கோலாலம்பூர் தலைநகரிலிருந்து 200 கி.மீ தொலைவிலும் உள்ளது.

1990-ஆம் ஆண்டு தம்புன் புது நகரம் உருவாக்கப் பட்டது. தம்புன் புது நகரத்திற்கு அருகில் தாமான் கேனிங், ஈப்போ கார்டன் போன்ற குடியிருப்பு பகுதிகளும், பந்தாய் புத்திரி மருத்துவமனை, ஜெயா ஜஸ்கோ, தெஸ்கோ பேரங்காடிகளும் உள்ளன.

பொது[தொகு]

மலேசிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வழியாகத் தம்புன் நகரைச் சுலபமாக அடைந்து விடலாம். தம்புன் (Tambun) மலாய்ச் சொல் பம்ப்ளிமாஸ் பழத்தைக் குறிக்கும். இங்கு அதிகமாகச் சீனர்கள் வாழ்கிறார்கள்.

இவர்கள் ஒரு நூற்றாண்டு காலமாகப் பம்ப்ளிமாஸ் பழங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பழங்களை வாங்க உள்ளூர், வெளியூர் மக்கள் அதிகமாக வருகின்றனர்.

சுண்ணாம்பு மலைகள்[தொகு]

தம்புன் பகுதியைச் சுற்றிலும் நிறைய சுண்ணக்கல் மலைகள் உள்ளன. இங்குள்ள மண் கறுப்பாகவும் இரும்பு வளம் கொண்டதாகவும் இருக்கின்றது. சரியான மண்வளம் இருந்ததால் அப்பழங்களைப் பயிர் செய்வதில் அவர்கள் வெற்றி பெற்றனர்.

காலப் போக்கில் பம்ப்ளிமாஸ் பழங்களுக்கு இப்பகுதி புகழ் பெற்றது. இது ஒரு மிதமான குளிர்ப் பகுதி. ஆகவே, பம்ப்ளிமாஸ் மரங்களை நடுவதற்கு ஏதுவாக அமைகிறது.

வரலாறு[தொகு]




2022-இல் தம்புன் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[1]

  சீனர் (20.5%)
  மலாயர் (64.7%)
  இதர இனத்தவர் (2.4%)

1900-களில் தென் சீனாவில் இருந்து ஹாக்கா இனத்தைச் சேர்ந்த சீனர்கள் மலாயா வந்தனர். அவர்கள் வரும் போது பம்பிளி மாசு பழங்களையும் கொண்டு வந்தனர். பம்பிளி மாசு பழங்கள் விட்டமின் சி நிறைந்தவை. அப்போது சீனாவில் இருந்து மலாயா வருவதற்கு ஹாக்காச் சீனர்கள் பாய்மரக் கப்பல்களைப் பயன்படுத்தினர். பயணம் நீண்ட நாட்கள் பிடித்தன.

சீனாவில் இருந்து கொண்டு வரப் படும் மற்ற வகையான பழங்கள் சீக்கிரத்தில் கெட்டுப் போயின. ஆனால் பம்பளி மாசு பழங்கள் மட்டும் கெட்டுப் போகவில்லை. நீண்ட நாட்களுக்குத் தாங்கின.

பம்பளி மாசு[தொகு]

அத்துடன் அவர்கள் அந்தப் பழங்களைத் தம்புன் பகுதிகளில் பயிர் செய்து பார்த்தனர். நன்றாக வளர்ச்சி பெற்று சிறப்பான முறையில் வளர்ந்தன. அதுவே நிலைத்து அந்தப் பகுதிக்குத் தம்புன் எனும் பெயரையும் கொண்டு வந்தன.

ஓர் ஆண்டிற்கு இரண்டு முறை பம்பளி மாசு பயிர் செய்யப் பட்டது. ஆனால், சில தாவர ஆராய்ச்சிகள் செய்து ஆண்டு முழுவதும் காய்க்கும் முறையை விவசாயிகள் உருவாக்கினர். பின்னர் பம்பளி மாசு தோட்டங்களில் கூடுதல் வருமானத்திற்காகப் பன்றிகளையும் கோழி, வாத்துகளையும் வளர்த்தனர். 1999-ஆம் ஆண்டு மலேசியாவைப் பன்றிக் காய்ச்சல் கடுமையாகத் தாக்கியது.

நீர் விளையாட்டுக் கேளிக்கை மையம்[தொகு]

அதனால் பல இலட்சம் பன்றிகள் அழிக்கப் பட்டன. சீனர்கள் பலர் பல இலட்சம் ரிங்கிட்டுகளை இழந்தனர். இருப்பினும் அரசாங்கம் அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கி உதவி செய்தது. தம்புனில் கால்நடைக் கழிவுகளே விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுகின்றன. இங்கு சீக்கியர் சிலரும் உள்ளனர். இவர்கள் ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஈப்போ நகருக்கு மாட்டுப் பால், வெண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

காணாமல் போன தம்புன் உலகம் அல்லது The Lost World of Tambun எனும் புகழ்பெற்ற நீர் விளையாட்டுக் கேளிக்கை மையம் இங்குதான் உள்ளது. 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 60 மில்லியன் ரிங்கிட் செல்வில் உருவாக்கப் பட்டது. இந்த மையத்திற்கு ஓர் ஆண்டிற்கு 450,000 வருகையாளர்கள் வருகின்றனர்.

இந்த மையத்தில் பல நூறு வெப்ப மண்டலத் தாவரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டுள்ளன. இந்த நீர் விளையாட்டுக் கேளிக்கை மையத்தைப் போல சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவிலும் மற்றொரு கேளிக்கை மையம் உள்ளது. அதனை சன்வே லாகூன் என்று அழைக்கிறார்கள்.

பென்சில் வடிவ சுண்ணாம்புக் குன்று[தொகு]

ஒரு நூற்றாண்டிற்கு முன்பு தம்புன் பகுதிகளில் ஈயம் தோண்டி எடுக்கப் பட்டது. அதனால் இங்கு பல ஈயக் குட்டைகளைப் பார்க்கலாம். அந்தக் குட்டைகளில் இப்போது கலுப்பியா, சியாக்காப், தங்க மீன்கள் வளர்க்கப் படுகின்றன. சில இடங்களில் காப்பித் தோட்டங்களும் உள்ளன. இங்கு வளர்க்கப் படும் தங்க மீன்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன.

தம்புன் நகரைச் சுற்றி உள்ள கிராமப் புறங்களில் நிறைய சுண்ணாம்புக் குன்றுகளைக் காண முடியும். இவை அழகும் இயற்கையான வனப்பும் வாய்ந்தவை. இங்கு பென்சில் வடிவத்தில் ஓர் அழகிய சுண்ணாம்புக் குன்று உள்ளது. அதைக் காண பார்வையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து வருகின்றனர்.

வணிக நோக்கத்தில் இங்கு சில சுடுநீர் குளங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. அத்துடன் இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகளில் ஆவிகள் உலவி வருவதாக வதந்திகளும் உண்டு.

டத்தோ பாங்லிமா கிந்தா[தொகு]

1903ல் கிந்தா மாவட்டத்தின் ஆளுநர் டத்தோ பாங்லிமா கிந்தா முகமட் யூசோப் என்பவர் இந்தப் பகுதியில் திடீரென்று மாயமாய் மறைந்து போனார். அவர் என்ன ஆனார் என்பது இது வரைக்கும் தெரியவில்லை. இவர் 1884 ஆம் ஆண்டில் இருந்து 1903 ஆம் ஆண்டு வரை கிந்தா மாவட்டத்தின் ஆளுநராக இருந்தார்.

ஈப்போ நகரின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர். சீனாவில் இருந்து ஆயிரக் கணக்கான சீனர்களை வரவழைத்தவர். காணாமல் போன டத்தோ பாங்லிமா கிந்தா முகமட் யூசோப் அவர்களின் ஆவி தான் இங்கு உலவுவதாகச் சொல்கிறார்கள். அந்த வதந்திகளைப் பொது மக்கள் பெரிதாகக் கருதவில்லை.

இயற்கைச் சூழலில் பல விலை உயர்ந்த வீடுகள் இங்கு உருவாக்கப் பட்டுள்ளன. ஒரு பங்களா வீடு அரை கோடி ரிங்கிட்டிற்கும் மேலாக் விற்கப் படுகிறது. சிங்கப்பூரியர்கள் பலர் அந்த வீடுகளை வாங்கியுள்ளனர். அரை கோடி ரிங்கிட்டிற்கு வாங்கிய வீடுகளை சில ஆண்டுகள் கழித்து ஒரு கோடி ரிங்கிட்டிற்கு விற்கின்றனர். வணிக நோக்கம் மேலோங்கி நிற்கிறது.

அரசியல்[தொகு]

தம்புன் நாடாளுமன்றத் தொகுதியின் 65,219 வாக்காளர்கள் விவரம்

  • மலாய்க்காரர்கள் 63.34%
  • சீனர்கள் 23.46%
  • இந்தியர்கள் 11.73%
  • மற்றவர்கள் 01.49%

தம்புன் தொகுதியின் இரு சட்டமன்றத் தொகுதிகள்

சிறப்புகள்[தொகு]

தென் கிழக்கு ஆசியாவில் மிகப் பெரிய கால்நடை ஆய்வுக் கழகம் (Institut Penyelidikan Haiwan) தம்புனில் இருக்கிறது. ஆசியான் நாடுகளுக்கான கோழிகள் ஆய்வுக் கழகமும் (Pusat Latihan dan Penyelidikan Penyakit Ayam ASEAN), மலேசியப் புவியியல் அரும் காட்சியகமும் இங்குதான் இருக்கின்றன.

இங்குள்ள தம்புன் குகையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆதி குகைவாசிகள் வரைந்த ஓவியங்கள் உள்ளன. இதே போல ஓவியங்கள் லெங்கோங்கிலும் கண்டுபிடிக்கப் பட்டன. பொது மக்கள் பார்வைக்கு தம்புன் குகை ஓவியங்கள் குகை இன்னும் திறந்து விடப் படவில்லை. இருப்பினும், வரலாற்று ஆய்வாளர்கள் அரசு அனுமதியுடன் ஆய்வு செய்ய அனுமதிக்கப் படுகின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://ipoh.ws/tambun.htm தம்பூன்
  2. http://blog.tourism.gov.my/a-steamy-affair-in-tambun/ பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்
  3. http://www.sunway.com.my/lostworldoftambun/ பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் சன்வே நிறுவனம்
  4. en:Tambun விக்கிப்பீடியா
  5. http://www.tambunfarmstay.org/ பரணிடப்பட்டது 2011-09-26 at the வந்தவழி இயந்திரம் தம்பூன் பண்ணை விடுதி
  6. http://thestar.com.my/news/story.asp?file=/2011/1/25/nation/7865270&sec=nation பரணிடப்பட்டது 2012-05-04 at the வந்தவழி இயந்திரம் தி ஸ்டார் நாளேடு

மேற்கோள்கள்[தொகு]

  1. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்புன்&oldid=3994262" இலிருந்து மீள்விக்கப்பட்டது