குறண்டி சமணப்பள்ளி
குறண்டி சமணப்பள்ளி தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், குறண்டி கிராமத்தில் அமைந்திருந்தது. இதனை மதுரையைச் சுற்றி அமைந்திருந்த எண்பெரும் குன்றுகளுள் (குகைப்பள்ளிகளுள்) ஒன்று என்று கல்வெட்டாய்வாளர் வெ.வேதாச்சலம் கருதுகிறார்.[1] முற்காலப் பாண்டியர்களின் ஆதரவில், கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினோராம் நூற்றாண்டு வரை இந்த சமணப் பள்ளி சிறந்து விளங்கியது. இதன் பின்னர் இப்பள்ளி தடம் காண இயலாத அளவிற்கு அழிந்து போனது. இன்று குறண்டி சமணப் பள்ளி குறித்த செய்திகளை கல்வெட்டுகள் மூலமே அறிய முடிகிறது.
அமைவிடம்
[தொகு]கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்காமங்கலம் வட்டத்தில் குறண்டி என்னும் ஊர் அமைந்துள்ளது. குறண்டி என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன என்றாலும், வெண்புநாட்டுக் குறண்டி என்று குறிக்கப்படும் சமணப்பள்ளியுடன் தொடர்புடையது விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டத்தில் அமைந்துள்ள குறண்டி கிராமம் மட்டுமே. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டத்தில் ஒரு பகுதி பண்டைய காலத்தில் வெண்புநாடு என்று அழைக்கப்பட்டது.[2]
குறண்டி ஆவியூரிலிருந்து 11.2 கி.மீ. தொலைவிலும், காரியாபட்டியில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருமங்கலத்திலிருந்து 25.2 கி.மீ. தொலைவிலும், கோவிலாங்குளத்திலிருந்து 28.1 கி.மீ. தொலைவிலும், விருதுநகர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து கிழக்கு நோக்கி 34 கிமீ தொலைவிலும், அருப்புக்கோட்டையிலிருந்து 35.1 கி.மீ. தொலைவிலும், பள்ளிமடத்திலிருந்து 37.2 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 626115 ஆகும்.
எண்பெருங்குன்றங்கள்
[தொகு]மதுரைப் பகுதிகளில் சமணப்பள்ளிகள் இருந்ததை
“அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளி"
என்று (15:107) சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
பரங்குன்றொருவகம் பப்பாரம் பள்ளி யருங்குன்றம் பேராந்தை யானை – இருங்குன்றம் என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச் சென்றெட்டுமோ பிறவித் தீங்கு. (சமணர் பழம்பாடல்)
அமிர்தசாகரர் எழுதிய யாப்பருங்கலம் நூலுக்கான விருத்தியுரையில் குறிப்பிடப்படும் இந்த பாடலில் எண்பெருங்குன்றங்கள் என்று மதுரையைச் சுற்றி அமைந்திருந்த ஒருவகம், பப்பாரம், பள்ளி, அருங்குன்றம், ஆந்தைமலை, ஆகிய குகைப்பள்ளிகள் எவை என அடையாளம் காண இயலவில்லை. திருப்பரங்குன்றம், சமணர் மலை (திருவுருவகம்), பெருமாள்மலை, குயில்குடி, பள்ளி (குறண்டி மலை), யானைமலை, இருங்குன்றம் (அழகர்மலை), நாகமலை (கொங்கர்புளியங்குளம் குன்று), அரிட்டாபட்டி மலை (திருப்பிணையின் மலை), கீழவளவுக் குன்று ஆகிய எட்டு மலைகளே இந்த எண்பெருங்குன்றங்கள் என்று வெ.வேதாச்சலம் கருதுகிறார்.[1]
சமணப் பள்ளி
[தொகு]கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் என்பன, சமணச் சமயத்தின் நான்கு அறக்கொடைகள் ஆகும். சமணப் பள்ளிகள் என்பன சமணர்களின் கல்வி மையங்கள் ஆகும். அருகர், சித்தர் (அசிரி), ஆச்சாரியார், ஆசிரியர், துறவிகள் ஆகியோர் பஞ்ச பரமேட்டிகள் எனப்படுவர். இவர்களுள், ஆசிரியர்கள் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளனர். குரவரடிகளென்னும் ஆண் ஆசிரியர்களும், குரத்தியர் என்னும் பெண் ஆசிரியைகளும் இங்கே அமைந்திருக்கும் குகைப்பள்ளிகளில் தங்கி நான்கு அறக்கொடைகளை ஆற்றினர். கல்விப்பணி இவற்றுள் முன்னுரிமை பெற்றிருந்தது. சமணச் சமயத்து மாணாக்கர்களும், மாணாக்கியர்களும் இப்பள்ளிகளில் தங்கி கல்வி பயின்றதாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சமண இறையியல், தவப்பயிற்சி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம், இலக்கியம், அறநெறி ஆகியவற்றை இவர்கள் பயின்றனர். சமணப் பள்ளிகள் கல்வி புகட்டியதால், கல்விக்கூடங்கள் "பள்ளி' என்று அழைக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் சமணர்கள் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, நேமிநாதம் போன்ற தமிழ் இலக்கண நூல்களையும், சூடாமணி நிகண்டு, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு போன்ற நிகண்டுகளையும்,. சூளாமணி, வளையாபதி, யசோதர காவியம், நீலகேசி, உதயணன் கதை, மேரு மந்திரப் புராணம், திருக்கலம்பகம், திருநூற்று அந்தாதி ஆகிய இலக்கிய நூல்களையும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், அருங்கலச்செப்பு போன்ற அறநெறி நூல்களையும் உருவாக்கினர். [3]
அன்பில் - அமுதமொழிப் பெரும்பள்ளி, அனந்தமங்கலம் - ஜிணகிரிப் பெரும்பள்ளி, இருப்பைக்குடி - பெரும்பள்ளி, குன்னத்தூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - பெரியநாட்டுப் பெரும்பள்ளி, சளுக்கி (திருவண்ணாமலை மாவட்டம்) - வீரசேகரப் பெரும்பள்ளி, சிறுவாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - ஸ்ரீ ஹரணப் பெரும்பள்ளி, திருநறுங்கொண்டை (விழுப்புரம் மாவட்டம்) - நாற்பதெண்ணாயிரம் பெரும்பள்ளி, பள்ளிச்சந்தல் (விழுப்புரம் மாவட்டம்) - வாலையூர்நாட்டுப் பெரும்பள்ளி, பெருங்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - நிகராகரப் பெரும்பள்ளி, பெருமண்டூர் (விழுப்புரம் மாவட்டம்) - இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி, மருத்துவக்குடி - சேதிகுல மாணிக்கம் பெரும்பள்ளி, விளாப்பாக்கம் - பெண் துறவியர் பள்ளி, வெடால் (திருவண்ணாமலை மாவட்டம்) - பெண் துறவியர் பள்ளி ஆகிய சமணப்பள்ளிகள் திறம்படச் செயல்பட்டதை மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்.[4]
தமிழகத்தில் பெண்களுக்கு சமயக்கல்வி வழங்குவதில் சமணம் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது. குறண்டி மற்றும் வெடால் ஆகிய சமணப்பள்ளிகளில் பெண் மாணாக்கியருக்கு கல்வி புகட்டப்பட்டுள்ளது. கனகவீரக்குரத்தி என்ற பெண் துறவி வெடால் பள்ளியின் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளார்.[2]
குறண்டி சமணப்பள்ளி
[தொகு]‘பராந்தக பர்வதமாயின தென்வட்டைப் பெரும்பள்ளி’ மற்றும் ‘பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளி’ என்ற கல்வெட்டுச் சொற்றொடர்கள் வாயிலாக பராந்தகப் பர்வதம் என்ற குன்றில் இப்பள்ளி செயல்பட்டதை அறிய முடிகிறது. [5] பராந்தக என்ற சொல்லை பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையனுடன் (கி.பி. 768 - 815) தொடர்புபடுத்தலாம். குறண்டியில் அமைந்திருந்த குன்று பராந்தகப் பருவதமலை என்று பெயர் பெற்றிருந்தது போலும். இந்தப் பாண்டிய மன்னனின் மைந்தன் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லப (கி.பி. 815 - 862) இந்தச் சமணப் பள்ளிக்கு ஆதரவு நல்கியிருக்கலாம். இதனாலேயே இப்பள்ளிக்கு ஸ்ரீ வல்லபப் பள்ளி என்று பெயரிடப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர் சி.சாந்தலிங்கம் கருதுகிறார். இம்மன்னன் சடையன் மாறன் என்ற பட்டம் பூண்டிருந்தான். [6] வரலாற்று சிறப்பு மிக்க பராந்தகபர்வதம் எனும் மலையில் வெண்புநாட்டுக் குறண்டித் திருக்காட்டாம் பள்ளி என்ற பெயருடன் கி.பி. 9-10ஆம் நுற்றாண்டுகளில் இந்தச் சமணப்பள்ளி செயல்பட்டுள்ளது.
இப்பள்ளியில் பயின்ற மூன்று அல்லது நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த மாணாக்கர்களும் மாணாக்கியர்களும், திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி, கீழக்குயில்குடி, கழ்குமலை ஆகிய குகைப்பள்ளிகளில் சமணச் சிற்பங்களைச் செய்வித்து அளித்துள்ளதைக் கல்வெட்டுகள் குறிப்பிட்டுள்ளன. இப்பள்ளியில் பணியாற்றிய சமண சமய ஆசிரியர்கள், மதுரை அருகே அமைந்துள்ள கீழக்குயில்குடி மாதேவி பெரும்பள்ளி, மற்றும் கழுகுமலை ஆகிய பள்ளிகளுக்கு வருகைதரு ஆசிரியர்களாகப் பணியாற்றியுள்ளதையும் கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.[7] தற்போது குறண்டிக் கிராமத்தில் ஒரு சமணப்பள்ளி செயல்பட்டதற்கான சுவடுகள் எதுவும் காணப்படவில்லை. ‘பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளி’ குறித்த சான்றுகளாக நூல்களும் மற்றும் கல்வெட்டுகளும் மட்டுமே நமக்குக் கிடைக்கின்றன.
கல்வெட்டுகள்
[தொகு]பள்ளிமடம் பள்ளிப்படைக் கோவிலில் குறண்டித் திருக்காட்டம்பள்ளிச் சமணப்பள்ளி குறித்த கல்வெட்டுகள் மிகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளன.குணவீரப்படாரகர், அரிட்டநேமிப் பெரியார், சந்திரப் பிரபாகர், தீர்த்தப்படாரகர், அரிச்சந்திர தேவர், குணகீர்த்தி, கனக நந்திப் படாரகர், குணசேன தேவர் ஆகிய சமண ஆசிரியர்கள் இப்பள்ளியில் சமயப்பணி ஆற்றியுள்ளனர். இப்பள்ளியின் ஆசிரியர்களும், மாணாக்கர்களும் மதுரையைச் சுற்றியிருந்த ஏனைய பள்ளிகளோடு தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் பல இடங்களுக்கும் சென்று சமண திருமேனிகளைப் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கி வழிபடச் செய்தனர். [5]
பள்ளிமடம் சுந்தர பாண்டிய ஈஸ்வரம் கல்வெட்டுகள்
[தொகு]- காலநாதசுவாமி கோயிலில் உள்ள மண்டபத்தின் வடக்குச் சுவரில் உள்ள கற்களில்.பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டுகள் தற்போது பள்ளிமடம் கோவிலில் உள்ள மண்டபத்தின் வடக்குச் சுவரில் பதிக்கப்பட்டுள்ள பலகைக் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பலகைக் கற்கள் முன்னர், அருகிலுள்ள குறண்டிக் கிராமத்திலிருந்த திருக்கட்டாம்பள்ளி என்ற சமணப் பள்ளிக்கு சொந்தமானதாகத் தெரிகிறது, மேலே குறிப்பிடப்பட்ட இறக்கை கற்களுடன் (Wing Stones) அங்கிருந்து அகற்றப்பட்டதாகத் தெரிகிறது. வெண்புநாட்டில் உள்ள குறண்டியில் உள்ள திருக்கட்டாம்பள்ளித் தேவர் கோவிலில் விளக்கு எரிப்பதற்காக, காணிக்கையாக வழங்கப்பட்ட ஆடுகள் குறித்த செய்தியினைப் பதிவு செய்துள்ளது. கல்வெட்டில் மன்னரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த கல்வெட்டுகள் மாறஞ்சடையன் (முதலாம் வரகுணன் கி.பி. 792 - 835) காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். (S.I.I. No. 34 and 35.)(A. R. No. 428-A and 428-B of 1914.) [8]
- காலநாதசுவாமி கோவில் வாசலில் உள்ள சிறகுக் கல்லில்.பொறிக்கப்பட்டுள்ளது.
மாறஞ்சடையன் (முதலாம் வரகுணன் கி.பி. 792 - 835) ஆட்சியின் 26ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இந்த வட்டெழுத்துக் கல்வெட்டு,குறண்டிக் கிராமத்தில், திருக்கட்டாம்பள்ளிக் கோவில் இறைவனுக்கு காணிக்கையாக நெய் வழங்குவதற்காக, நிலக்குடி-நாட்டில் உள்ள குன்னூரைச் சேர்ந்த சாத்தன் குணத்தான்) 100 ஆடுகளை வழங்கிய செய்தியினைப் பதிவு செய்துள்ளது. மற்ற பதிவுகளில் இருந்து, குறண்டித் திருக்கட்டாம்பள்ளி என்றழைக்கப்படும் சமணப் பள்ளி பழங்காலத்தில் செழித்து வளர்ந்ததாக அறியப்படுகிறது. இந்தக் கல், முன்னர் அந்தக் கோவிலுக்குச் சொந்தமானதாக இருக்கலாம், அந்த கோவிலில் இருந்து அகற்றப்பட்டிருக்கலாம். குறண்டி என்பது அருப்புக்கோட்டை வட்டத்தில், அதே பெயரில் உள்ள கிராமத்துடன் அடையாளம் காணப்படுகிறது. ஸ்ரீமாற-ஸ்ரீவல்லபா போரிட்ட குன்னூர், அதே உட்பிரிவில் கருநீலக்குடி-நாட்டில் அமைந்துள்ளது. (S.I.I.No. 32).(A. R. No. 430 of 1914.) [8][5]
- காலநாதசுவாமி கோவில் நுழைவாயிலில் உள்ள கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
மாறஞ்சடையனின் 35 ஆம் ஆண்டு எதிர் 6 ஆம் ஆண்டு தேதியிட்ட கல்வெட்டு வெண்புநாட்டுக் குற ண்டியின் திருக்கட்டம்பள்ளிக் கோவிலுக்கு செம்மறி ஆடுகளை வழங்கிய செய்தியினைக் குறிக்கிறது. இப்பதிவு பொறிக்கப்பட்டுள்ள சிறகுக் கல், திருக்கட்டாம்பள்ளியிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டு, S.I.I. No 32 ஆம் எண் கல்வெட்டுக் கல்லை மற்ற கல்லுடன் இணைத்து, பிற்காலத்தில் இங்குள்ள கோவிலில் செருகப்பட்டிருக்க வேண்டும். (S.I.I. No 39.) (A. R. No. 431 of 1914.) [8]
திருப்பரங்குன்றம் கல்வெட்டு
[தொகு]திருப்பரங்குன்றம், பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ள மலையடிவாரத்தினருகே, அமைந்துள்ள சுனையை ஒட்டி, அமைந்துள்ள பாறையில் செதுக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பக் கோட்டத்தின் மூலையில் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுத் தி ருக்குறண்டி அந ந்த வீரியப்பணி
வெண்புநாட்டு திருக்குறண்டியைச் சேர்ந்த அனந்த வீரியன் செய்வித்த சிற்பம்
முத்துப்பட்டி கல்வெட்டு
[தொகு]முத்துப்பட்டி மலைக்குகையின் வெளிப்புறத்தில் செதுக்கப்பட்ட மகாவீரர் உள்ளிட்ட மூன்று தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களுக்குக் கீழே இரண்டு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
"ஸ்வஸ்திஸ்ரீ பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரர் மாணக்கர் மகாணந்தி பெரியார் நாட்டாற்றுப்புறத்து நாட்டார்பேரால் செய்விச்ச திருமேனி‘
’ஸ்வஸ்திஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டி அஷ்டோப வாஸி படாரர் மாணாக்கர் குணசேனதேவர் மாணாக்கர் கனகவீரப் பெரியடிகள் நாட்டாற்றுப்புறத்து அமிர்த பராக்கிரம நல்லூராயின குயிற்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி பள்ளிச் சிவிகையார் ரக்ஷ‘
கீழக்குயில்குடி கல்வெட்டு
[தொகு]மகாவீரர் சிற்பத்தை செய்தளித்தவர் குறித்த வட்டெழுத்துக் கல்வெட்டில்: "வெண்பு நாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக னந்திப்ப டாரர் அபினந்தபடாரர் அவர் மாணாக்கர் அரிமண்டலப் படாரர் அபினந்தனப்படாரர் செய்வித்த திருமேனி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரையை அடுத்த கீழக்குயில்குடி செட்டிப்புடவு குகைப்பள்ளியின் உட்பகுதியின் மேல்புறத்தில் ஐந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஐந்து சிற்பங்களுள், முதல் மற்றும் கடைசியில் இரண்டு இயக்கியர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. நடுவில் இருக்கும் மூன்று சிற்பங்களில் இடம்பெற்றுள்ள தீர்த்தங்கரர்களின் தலைக்கு மேலே முக்குடை காட்டப்பட்டுள்ளது. இந்த சிற்பத் தொகுதியின் ஐந்து சிற்பங்களின் அடியில், இவற்றை செய்வித்துக் கொடுத்தவர்களின் பெயர்கள் வட்டெழுத்துப் பொறிப்புப் பெற்றுள்ளன.
“ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகுணசேன தேவர் சட்டன் தெய்வ பலதேவர் செய்விச்ச திருமேனி“,
“ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டித் திருக்காட்டாம்பள்ளிக் குணசேனதேவர் மாணாக்கர் வர்தமானப் பண்டிதர் மாணாக்கர் குணசேனப் பெரியடிகள் செய்வித்த திருமேனி“,
“ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்கின்ற குணசேனதேவர் சட்டன் அந்தலையான் களக்குடி தன்னைச் சார்த்தி செய்வித்த திருமேனி”
வெண்பு நாட்டுக் குறண்டித் திருக்காட்டாம்பள்ளியைச் சேர்ந்த குணசேனப் பெரியடிகள் செய்தளித்த சிற்பம்.
கழுகுமலை கல்வெட்டுகள்
[தொகு]கழுகுமலைச் சமண சமய தீர்த்தங்கரர்கள் மற்றும் சாசன தேவதைகள் ஆகியோரின் திறந்த வெளிப் புடைப்புச் சிற்பங்கள் (Open Air Bas Relief Sculptures) கி.பி. 8 ஆம் நூற்றாண்டில், பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி. 768-800) ஆட்சிக் காலத்தில் செதுக்கப்பட்டது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கழுகுமலையில் ஒரு சமணக் குகைப்பள்ளியும், ஒரு சமண மடாலயமும் இயங்கி வந்துள்ளன. இங்குள்ள பாறையில் சுமார் 120 தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் வழக்கமான வரிசையில் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றைச் செதுக்கியவர்கள் தங்கள் ஆசிரியர்கள், மாணாக்கர்கள், மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் நினைவாக இந்தச் சிற்பங்களை செய்வித்து அளித்துள்ளனர். குறண்டி தீர்த்தபடாரர், குறண்டி தோரி படாரர், குறண்டி கனகநந்திப் படாரர், ஆகிய ஆசிரியர்கள் பெயர்கள் இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன:
- ஸ்ரீ குறண்டி தீர்த்தப்படாரர் மாணாக்கர் கனகநந்தி பெரியார் ;செய்வித்த திருமேனி (SII V No.345)
- ஸ்ரீ குறண்டி..தோரி படாரர் மாணாக்கர் சிறு படாரர் செய்வித்த திருமேனி (SII V No.323)
- ஸ்ரீ குறண்டி காவிதி காவிதி செய்வித்த திருமேணி
- ஸ்ரீ குறண்டி தீர்த்தபடாரர் மாணாக்கிகள் இளநெற்சுரத்துக் குரத்திகள்(SII V No.369)
- ஸ்ரீ குறண்டி கனகநந்தி படாரர் மாணாக்கர் பூர்ண சந்திரன் செய்வித்த திருமேனி (SIIV No.359)
ஆகிய மாணாக்கர்கள் கழுகுமலையில் சமணத் திருமேனிகளை செய்வித்து அளித்துள்ளனர். குறண்டியைச் சேர்ந்த சிராவணப் பெருமக்களான (இல்லறத்தார்):
- ஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டி இயக்கங்காடி செய்வித்த திருமேனி
- ஸ்ரீ வெண்பி நாட்டுக் குறண்டி சாத்தன் சாத்திய செயல்
- ஸ்ரீ வெண்பி நாட்டுக் குறண்டி நாகங்காலன் செய்தவித்த திருமேனி
ஆகியோர் கழுகுமலையில் சிற்பம் செய்வித்து அளித்துள்ளனர்.[9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 எண்பெருங்குன்றங்கள். வெ.வேதாச்சலம். மதுரை. 2000
- ↑ 2.0 2.1 காமராஜர் மாவட்டத்துச் சமணச் சான்றுகள். எ.ஏகாம்பரநாதன். In காமராஜர் மாவட்ட வரலாற்றுக்கருத்தரங்கு 12 - 13, மார்ச்சு 1994. சிறீ லட்சுமி மகால், இராஜபாளையம். பக். 4 - 10
- ↑ தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டு! இரா.பானுகுமார். தமிழகத்தில் சமணம் September 11, 2017
- ↑ மயிலை.சீனி.வேங்கடசாமி, சமணமும் தமிழும். கழக வெளியீடு. சென்னை.திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1954. பக். 104 - 200
- ↑ 5.0 5.1 5.2 குறண்டி in விருதுநகர் மாவட்ட வரலாறு மா.செந்தில் செல்வகுமரன் மற்றும் சொ.சந்திரவாணன் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, சென்னை. 2001. பக். 25 - 26
- ↑ Preserving the past S.S.Kavitha. The Hindu February 03, 2010
- ↑ Aviyur hosted a Shiva temple and Kurandi a famous Jain school S.S.Kavitha. The Hindu December 05, 2012
- ↑ 8.0 8.1 8.2 Pandya Inscriptions: Inscriptions of Early Padyas South Indian Inscriptions Vol. XIV Nos 32, 34, 35, 39
- ↑ கழுகுமலைச் சமணப்பள்ளியில் பெண்கல்வியும் இருபாலர் கல்விமுறையும் இரா.இலக்குவன் வல்லமை
- ↑ தென்னிந்தியாவில் சமணர்க்கோயில்கள் திண்ணை சனவரி 19, 2015