யானைமலை, மதுரை
யானைமலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஒத்தக்கடை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மதுரைக்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
அமைப்பும், பெயர் காரணமும்
[தொகு]யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, அதாவது 4000 மீட்டர் நீளம்,1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போல தோன்றுவதால் இம்மலை யானை மலை என பெயர் பெற்றுள்ளது.[1] யானை மலையை நரசிங்கமங்கலம் என்றும் அழைப்பர்.
மலையின் வரலாறு
[தொகு]சமணர் கல்படுக்கைகள்
[தொகு]யானை மலையின் உச்சியில் குகை தளம் காணப்படுகிறது. இக்குகை தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகை தளத்தில் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் " இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்" என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. "இவ" என்பது "இபம்" என்கிற வடமொழிச் சொல்லின் மறு வடிவம். இதன் பொருள் "யானை" என்பதாகும். குன்றம் என்றால் மலை. இதில் "இவ குன்றம்" என்றால் யானைமலை என்று பொருள். பா' என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் "தங்குவதற்கான கற்படுக்கை" என பொருள் படும். "ஏரிஆரிதன்", "அத்துவாயி அரட்டக்காயிபன்" ஆகிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செழித்துக்கிடந்த இப்பகுதியில், சமணத் துறவியர் இருவரும் மலை உச்சியில் கற்படுக்கை அமைத்து தவம் மேற்கொண்டிருந்தனர் என்பது இக்கல்வெட்டு சொல்லும் செய்தியாகும்.
குடைவரை கோயில்கள்
[தொகு]பொ.ஊ. 770 ஆம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்டவன் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஆவார். மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக பதவி வகித்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே நரசிங்கப் பெருமாளுக்கு குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, பூர்வாங்க வேலைகளை தொடங்கினார். குடை வரை கோவில் நிறைவு பெரும் தருவாயில் இவர் நோய்வாய் பட்டு இறந்துபோகவே, இவருடைய தம்பி பாண்டா மங்கல விசைய அதையன் ஆகிய மாறன் எயினன் என்னும் பெயர் கொண்டவர் மந்திரியாக பதவி ஏற்று, இக்கோவில் திருப்பணியை செய்து குடமுழுக்கும் செய்தார் என இங்கு காணப்படும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. .இதனை தொடர்ந்து யானைமலையை நரசிங்கமங்கலம் என அழைத்தனர். இக் குடைவரைக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் என் கூறுகிறது.
லாடன் கோயில் எனும் முருகன் குடைவரை கோவில்
[தொகு]யானைமலையில் முருகன் பெருமானுக்கு லாடன் கோயில் எனும் குடைவரை கோவில் உள்ளது.[3] இங்கு காணப்படும் தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். இக்கல்வெட்டில் ""நம்பிரான் பட்டசோமாசி பரிவிராஜகர்"" என்பவர் வட்டகுறிச்சி என்ற ஊரை சேர்ந்த இவர் இக்குடைவரை கோயிலை புதுப்பித்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது.
புடைப்புச் சிற்பங்கள்
[தொகு]பொ.ஊ. 9–10 நூற்றாண்டுகளில், சமண சமயத் துறவியான அச்சணந்தி என்பவரால், தீர்த்தங்கரர்களில் மகாவீரர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் யானைமலையில் செதுக்கப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படுகிறது.
-
சமண சிற்பங்களின் அறிவிப்புப் பலகை
-
சமண சமய தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்
-
சிற்பங்கள் பற்றிய அறிவிப்பு பலகை
-
லாடன் கோயில்[4]
விஜயநகர மன்னர்கள் காலம்
[தொகு]மதுரையை ஆண்ட விஜயநகர மன்னர்கள் கால கல்வெட்டில் யானைமலையை "கஜகிரி" என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் இலக்கியங்களில்
[தொகு]- பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில் யானைமலையில் சமணப்பள்ளி இருந்ததாக திருஞானசம்பந்தர் எழுதிய மதுரைப்பதிகம் என்னும் நூல் கூறுகிறது.
- மதுரையை தாக்க வந்த யானையை சொக்கேசர் நரசிங்கர் கணை தொடுத்துக் கட்டிப் போட்டிருக்கிறார் என பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் யானைமலையை பற்றிய ஒரு குறிப்பு உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://dinamani.com/edition/story.aspx?SectionName=Sunday%20Kondattam&artid=604050&SectionID=144&MainSectionID=144&SEO=%3C&Title=[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.hindu.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201690600.htm பரணிடப்பட்டது 2004-01-17 at the வந்தவழி இயந்திரம் The cave temple at Yanaimalai
- ↑ லாடன்கோயில்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-30. Retrieved 2015-06-09.