உள்ளடக்கத்துக்குச் செல்

கனக மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனக மூர்த்தி
2019-ல் கனக மூர்த்தி
பிறப்பு2 திசம்பர் 1942
நரசிப்பூர், மைசூர், கருநாடகம், இந்தியா
இறப்பு14 மே 2021
பெங்களூர்
தேசியம்இந்தியர்
பணிசிற்பம்
அறியப்படுவதுசிற்பம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்www.shanthamani.com

கனக மூர்த்தி (Kanaka Murthy)(2 திசம்பர் 1942 - 14 மே 2021) ஓர் இந்தியச் சிற்பி ஆவார். இவர் முதன்மையாகக் கல்லினைப் பயன்படுத்தி சிற்பங்கள் செய்தார். 2011ஆம் ஆண்டு ஜகனாச்சாரி விருது 1996-இல் இராஜ்யோத்சவா விருது உட்பட இவரது பணிக்காக இந்தியாவில் பல விருதுகளைப் பெற்றார். இவரது பல சிற்பங்கள் இந்தியாவின் பொது இடங்களில், குறிப்பாக வழிபாட்டுக்கான கோவில்களிலும், பெங்களூரு நகரத்தில் உள்ள பொது இடங்களிலும் நிறுவப்பட்டன. இந்தியக் கலை, சிற்பம் பற்றிப் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

மூர்த்தி, இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டத்தில் உள்ள திருமாகூடல் நரசிப்பூரில் திசம்பர் 2, 1942 அன்று ஒரு பிராமணக் குடும்பத்தில்[1] பிறந்தார்.[2][3] மூர்த்தி பெங்களூருவில் உள்ள கல்லூரியில் பயின்றார். இங்கு இவர் அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் கலாமந்திரா என்ற கலைக் கல்லூரியில் பயின்றார். இங்கு மூர்த்தி ஓவியம், வரைதல், சிற்பம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.[2] மேலும், உள்ளூர் பிரபலச் சிற்பியான டி. வாதிராஜாவிடம் சிற்பக்கலை பயின்றார்.[2] இவர் நாராயண மூர்த்தியை என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு ரூமி அரிசு என்ற மகன் பிறந்தார்.[4] மே 14, 2021 அன்று, தனது 79 வயதில் பெங்களூருவில் கோவிட்-19 காரணமாக இறந்தார்.[5]

தொழில்

[தொகு]

மூர்த்தி முதன்மையாகக் கல்லில் சிற்ப வேலைகளைச் செய்தார். மணற்கல், சிப்பிக் கல், கருங்கல் ஆகியவற்றைப் பயன்படுத்தினார். போசளர் கட்டிடக்கலை சிற்பக்கலை பாணியில் பயிற்சி பெற்றிருந்தாலும், இவர் மற்ற சிற்பக்கலை வடிவங்களையும் ஆராய்ந்துள்ளார்.[6] இவர் வெண்கலம், கண்ணாடியிழை, களிமண்ணிலும் சிற்பங்களைச் செய்துள்ளார். கருநாடக மாநிலத்தின் சிற்ப மரபிற்கு ஏற்ப, எளிதில் பிரிக்கக்கூடியதாக இருந்தாலும், இவர் வெவ்வேறான கனிமப் பொருள்களின் அடுக்குகளால் உருவாவதும் இயற்கையாக மெல்லிய தகடுகளாக உடைவதுமான பாறை வகை; கனிமப் படுகைப் பாறைகளைப் பயன்படுத்தியும் உள்ளார்.[7]

மூர்த்தி தனது செதுக்கப்பட்ட கல் உருவச்சிலைகளுக்கு, முதன்மையாக மார்பளவு சிலைகளுக்குப் பெயர் பெற்றவர். கங்குபாய் ஹங்கல், துரைசாமி ஐயங்கார், டி. சௌடையா, மல்லிகார்ச்சுன் மன்சூர், பீம்சென் சோசி உள்ளிட்ட பல பாரம்பரியக் கருநாடக இந்துத்தானி இசைக்கலைஞர்களின் மார்பளவு சிலைகளை உருவாக்கியுள்ளார். கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள பொது இடங்களில் இவர் உருவாக்கிய மார்பளவு கற்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் லால் பாக் பூங்காவின் மேற்கு வாயிலில் அமைந்துள்ள கவிஞரும் எழுத்தாளருமான குவெம்புவின் மார்பளவு சிலை, விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் உள்ள ரைட் சகோதரர்களின் கண்ணாடியிழை சிலை ஆகியவை அடங்கும்.[5] மொத்தத்தில், இவரது 200 சிற்பங்கள் இந்தியாவில் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் செலுத்தி வந்த சிற்பத் தொழிலில் ஒரு பெண் ஈடுபடும் போது ஏற்படும் சவால்கள் குறித்து மூர்த்தி பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.[5] கருநாடகாவில் கோயில்களில் மத வழிபாட்டிற்காகச் சிற்பங்களை உருவாக்கிய சில பெண்களில் இவரும் ஒருவர்.[4] மைசூரில் உள்ள மதச் சிற்பங்களைக் கொண்ட கோயில்களுக்குச் சென்றதிலிருந்து தான் சிற்பக்கலையைத் தொடங்க உத்வேகம் கிடைத்ததாகவும் மூர்த்தி கூறியுள்ளார்.[8] புட்டபர்த்தியில் ஆன்மீகத் தலைவர் சத்ய சாய் பாபாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மத அறக்கட்டளைக்காக நியமிக்கப்பட்ட எட்டு அடி உயர இந்துக் கடவுளான விநாயகரின் சிலை உட்பட, இவரது பல இந்து சிலைகளின் சிற்பங்கள் வழிபாட்டுத் தலங்களில் நிறுவப்பட்டுள்ளன.[6]

இவர் ஒரு சுயசரிதை உட்பட நான்கு புத்தகங்களையும் எழுதினார். சில்ப ரேகா என்ற தலைப்பில் ஒரு புத்தகம், கருநாடகாவில் உள்ள பாரம்பரியக் கோட்டு வரைபடங்களைப் பற்றிய ஒரு விவரணையாகும்.[5] இவர் தனது குரு தேவலகுண்ட வாதிராஜின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

கௌரவங்களும் விருதுகளும்

[தொகு]

கருநாடக ஜகனாச்சாரி விருது, மாநில சில்பகலா அகாதமி விருது (1999), இராஜ்யோத்சவா விருது (1996) சுவர்ண கருநாடக விருது உட்படப் பல மாநில விருதுகளை மூர்த்தி தனது பணிக்காகப் பெற்றுள்ளார்.[5][9] ஜனகாச்சாரி விருதைப் பெற்ற ஒரே பெண்மணி இவர்தான்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'People refused to believe in my talent since I am a woman': Sculptor Kanaka Murthy". The News Minute (in ஆங்கிலம்). 20 May 2018. Retrieved 23 April 2022.
  2. 2.0 2.1 2.2 "Kanaka Murthy was a pioneer: Former UNESCO ambassador Chiranjiv Singh". 15 May 2021. https://www.newindianexpress.com/lifestyle/fashion/2021/may/15/kanaka-murthy-was-a-pioneer-former-unesco-ambassadorchiranjiv-singh-2302621.html. 
  3. "What you see when you see: Kanakamurthy: A sculptor between tradition and modernity". 23 January 2017. https://bangaloremirror.indiatimes.com/bangalore/others/what-you-see-when-you-see-kanakamurthy-a-sculptor-between-tradition-and-modernity/articleshow/56722972.cms. 
  4. 4.0 4.1 Harish, Rumi (22 May 2021). "How Kanaka Murthy chiselled a daring life". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 29 November 2021.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Renowned sculptor Kanaka Murthy dies of COVID-19 in Bengaluru". The News Minute (in ஆங்கிலம்). 13 May 2021. Retrieved 29 November 2021.
  6. 6.0 6.1 6.2 V, Ram Rakshith. "A spirited sculptress". nsoj.in (in ஆங்கிலம்). Archived from the original on 12 June 2021. Retrieved 29 November 2021.
  7. Srinivasaraju, Sugatha (2022-02-03). "Kannada Schist, Tamil Granite". Outlook India (in ஆங்கிலம்). Retrieved 2022-11-01.
  8. "'People refused to believe in my talent since I am a woman': Sculptor Kanaka Murthy". The News Minute (in ஆங்கிலம்). 20 May 2018. Retrieved 29 November 2021.
  9. "Sculptor Kanaka Murthy passes away". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 14 May 2021. Retrieved 29 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனக_மூர்த்தி&oldid=4204857" இலிருந்து மீள்விக்கப்பட்டது