2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் என்பது சல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நடந்த போராட்டங்களைக் குறிக்கும். இந்தப் போராட்டங்கள் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி சிறப்புப் பெயர்களால் ஊடகங்களாலும், சில அரசியல் கட்சித் தலைவர்களாலும் குறிப்பிடப்பட்டன. இது ஒரு எழுச்சிப் போராட்டமாக இருந்தமையால், தை எழுச்சி, இளைஞர்கள் புரட்சி எனவும் அறியப்படுகிறது.
அரசியல் கட்சித்தலைமைகளின் முனைப்புகள் ஏதுமின்றி, குறிப்பிடத்தக்க தலைமை அடையாளங்கள் ஏதுமின்றி, தன்னிச்சையாகவே பொதுமக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூகவலைத்தளங்களின் வழியாகவே பெருந்திரளான இளைஞர்களைத் திரட்டி அமைதி வழியில் போராட்டங்களை நடத்தினர்.[7] சமூக இணையதளங்களின் வாயிலாக ஒருங்கிணைந்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டங்களை நடத்தினர்.[8][9]
தமிழத்தில் முதல் ஏழு நாட்கள் பெரும்பாலும் அறவழியில் நடந்துவந்த போராட்டங்கள், எட்டாவது நாளில் காவல்துறை - பொதுமக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு நிறைவுக்கு வந்தன.
சனவரி 17, செவ்வாயன்று அதிகாலையில் 200 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதிவாழ் மக்களும், அண்டை ஊர் மக்களும் போராட்டத்தில் இணைந்தனர். இதனையடுத்து கைதானவர்களை காவல்துறை விடுதலை செய்தபோதிலும், சுமார் 100 பேர் அங்கிருந்து அகல மறுத்தனர்.[10] மதுரை நகர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடக்கும் பகுதிக்கு வந்தவண்ணம் இருந்தனர். போராட்டம் நடத்துவோருக்கு குடிநீரும், உணவுப் பொருட்களையும் அந்த மக்கள் வழங்கினர். மதுரையில் நடைபெற்ற போராட்டம் மற்ற மாவட்ட மக்களுக்கு உத்வேகமத்தை அளித்தது. தமிழ் கலாசாரத்தை காக்க ஒவ்வொரு மாவட்ட மக்களும் அறவழி போராட்டதை தொடங்கினர்.
சல்லிக்கட்டை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் இந்த சிற்றூருக்குச் செல்லக்கூடிய 7 சாலைகளும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், முதல்வரால் அலங்காநல்லூருக்கு செல்ல இயலவில்லை. சாலையோர மரங்களை வெட்டி, அவற்றை சாலைகளிலிட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.[15]
காலையில் போராட்டம் தொடர்ந்தபோது, போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து செல்லுமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்தது. இதனை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து, போராட்டக்காரர்கள் அனைவரும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். அப்போது தடியடியும் நடத்தப்பட்டது.
சனவரி 16 நாள் முழுவதும் சனவரி 17 அதிகாலையிலும் அலங்காநல்லூரில் நடந்த நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் கவனிக்கப்பட்டன. சனவரி 17 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் கூடிய இளைஞர்கள் இரவு முழுதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.[16] காலையில் அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம், மாலையில் பெரியளவில் தொடர்ந்தது. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே கல்லூரி மாணவர்கள் கூடினர். பீட்டா இயக்கத்துக்கு எதிராகவும், இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராகவும் அவர்கள் குரல் எழுப்பினர். மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்வகையில் குரல் எழுப்பினர். இளைஞர் குழுக்களுடன் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்காது, போராட்டம் நள்ளிரவிலும் தொடர்ந்தது.[17]
போராடுவோர் தமது போராட்டங்களை முடித்துக்கொண்டு கலைந்து செல்லுமாறு காவல்துறை அதிகாலை முதற்கொண்டு அறிவிப்புகளை செய்து வந்தனர். இடத்தைவிட்டு அகலாதோரை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் அகற்றினர்[22]. ஒரு கட்டத்தில் சென்னை மெரினா கடற்கரையில் மீதமிருந்த போராட்டக்காரர்கள் கடல்நீரை ஒட்டிய பகுதிகளில் அணிவகுத்து நின்றனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்பு கடற்கரையைச் சுற்றியுள்ள நகர்புற இடங்களில் கலவரம் மூண்டது. ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்துக்கும் அதன் முன்பிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பேசுகையில் கலவரத்திற்கு மாணவர்கள் காரணமில்லையென்றும் மாணவர் கூட்டத்தில் கலந்த சமூக விரோத சக்திகளே காரணம் என்றும் விளக்கமளித்தார்.[23]
காவல்துறையினரே பல வாகனங்களுக்குத் தீ மூட்டியதையும், வேண்டுமென்றே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வாகனங்களை சேதப்படுத்தியதையும் பெண்கள் உட்பட்ட பலரைக் கல்லெறிந்தும் அடித்தும் விரட்டியதையும் பொதுமக்கள் தங்கள் அலைபேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்கள் மூலம் பரவிவந்த காணொளிகளையும், ஊடகங்கள் பதிவு செய்த காணொளிகளையும் ஊடகங்கள் பதிவு செய்தன.[24][25] இதற்கு சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் விளக்கமளிக்கையில், "I am rather surprised to see. Because, my intelligence officers informed that there is a picture of a policeman indulging in some kind of violence. It is just rediculous. We will find out who did this and the motive for that", என்று தெரிவித்தார்.[25]
தமுக்கம் திடல், கோரிப்பாளைய சந்திப்பு என அச்சாலை முழுக்க நடந்த போராட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடத்தினர்.
சனவரி 19 அன்று, சல்லிக்கட்டிற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாது என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து தத்தனேரி - செல்லூர் அருகே வைகை ஆற்றுப்பாலத்தின் நடுவழியில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இரயில் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மாணவர் போராட்டம்.திருச்சி நீதிமன்றம் அருகே மக்கள் போராட்டம்.
நீதிமன்றம் அருகே தொடங்கப்பட்ட போராட்டத்தில் ஒரு கட்டத்தில் இலட்சம் பேர் வரை கலந்துகொண்டனர். போராட்டம் பகல், இரவு என நீடித்தது. வர்த்தகர்கள், வணிகர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்ட களத்திற்கு வந்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.
நாகர்கோவில், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கு முன்பாக இந்திய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் களம் கண்டனர். தொடர்ந்து இளைஞர்களும் தொடர் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். அவர்களுக்கு பொது மக்களும் தமிழ் ஆர்வலர்களும் உணவு அளித்து ஆதரவு அளித்தனர்.
22. சனவரி 2017 அன்று ஒசூர் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் மேம்பாலத்திற்கு அடியில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் ஒரு பகுதி
18 சனவரி 2017 அன்று சல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒசூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் செய்ய உள்ளதாக சமூக வலை தளங்களில் அறிவிப்பு வெளியாகி போராட்டம் தொடங்கியது. போராட்டம் இரவு பகலாக தொடர்ந்தது.[26] நாட்கள் செல்லச் செல்ல கூட்டம் பெருகியது. போராட்டத்துக்கு ஆதரவாக பெங்களூர் தமிழர்கள் சுமார் 2000 பேர் வந்து கலந்து கொண்டனர். இட நெருக்கடி ஏற்பட்டதால் போராட்டம் எதிரில் இருந்த தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அடியில் மாற்றப்பட்டது. 23 சனவரி அன்று காலை போலீசார் போராட்டக் காரர்களை கலைந்து செல்லுமாறு சொல்லியதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
18 சனவரி 2017 அன்று சல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம், 19 சனவரி 2017 அன்று நகராட்சி மைதானத்தில் பெரிய போரட்டமாக மாறியது. போராட்டம் இரவு பகலாக தொடர்ந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மக்களும் ஒன்றுகூடி இரவு பகலாக போராட்டம் நடத்தினர்.
கடற்கரைச் சாலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டம் நடத்தினர். மேலிருந்து நோக்கும்போது காளை உருவம் தெரியுமாறு மௌனமாகக் கூடி நின்றனர்.
மேலும் உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கும் நாடுகளில் (சைனா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், செக் குடியரசு, இலங்கை,கொரியா, மற்றும் பல) தங்களுடைய ஆதரவை தெரிவித்து போராட்டங்கள் நடந்தன.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறவழியில் போராட்டங்கள் நடந்தபோதிலும், மதுரை, சேலம் நகரங்களில் தொடர்வண்டி மறியலில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். மதுரை நகரத்துடனான இருப்புப் பாதை தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது[33]
சனவரி 18 அன்று, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கல்லூரிகளின் மாணவர்கள் தமது வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து கல்லூரிகள் பலவற்றிற்கு அடுத்து வரும் நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.
சனவரி 18 அன்று, சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள கல்லூரியின் மாணவர்கள் சல்லிக்கட்டை ஆதரித்து அறப்போராட்டம் இரவு பகல் பாராமல் நடத்தினர்.
தடை குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், ஒன்றிய அரசால் எதுவும் செய்ய முடியாது என சனவரி 19 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து மாநிலத்தின் பல்வேறு தரப்பிலிருந்து வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி சனவரி 20 அன்று ஆட்டோர், வாடகைக்கார், லாரி ஆகியன ஓடவில்லை. தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. கடைகள், உணவகங்கள் மூடப்பட்டன. மருந்துக் கடைகள் மூடப்பட்டன. சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் இயங்கவில்லை.[34][35]
எதிர்பாராத அளவில் விரிவடைந்த போராட்டங்களில், எந்தத் தலைவரும் இல்லாது மாணவர்கள் அவர்களாக செயற்பட்டனர். எவ்வித வன்செயல்களிலும் ஈடுபடாது, அமைதியான முறையில் தமது போராட்டங்களை நடத்தினர். தமது கோரிக்கையை குரல் எழுப்புதலின் மூலமாக தெரிவித்தனர். சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், குப்பைகளை அகற்றுதல் ஆகிய பணிகளில் இந்த இளைஞர்கள் ஈடுபட்டனர்.[36]
ஜல்லிக்கட்டு மெரீனா புரட்சிஇரவு நேரத்தில் தமது கைபேசியில் (செல்போன்) உள்ள விளக்கினை உயர்த்திக் காட்டி, அசைத்தல் [37]. விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏந்திப் போராடுவதை ஒத்ததாக இது அமைந்திருந்தது.
கல்லூரி மாணவியர், தகவல் தொழினுட்ப அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள், குடும்பத் தலைவிகள் என அனைத்துத் தரப்பு மகளிர் பெருமளவில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.[38]
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் நடைபெறும் போராட்டங்களுக்கு இடையூறு செய்யப்படுவதாக வழக்கறிஞர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது விளக்கத்தில், "ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்தச் சூழலில் உயர் நீதிமன்றமோ மாநில அரசோ எதுவும் செய்வதற்கில்லை. மேலும், மெரினா கடற்கரை போராட்டம் நடத்துவதற்கான இடமும் அல்ல. இத்தகைய சூழலில் ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை" எனத் தெரிவித்தது.[39]
சனவரி 17 - நள்ளிரவில் மெரீனா கடற்கரை போராட்டக்காரர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அடுத்த நாள் அறிக்கை விடுவார் என்றும் போராட்டத்தை இப்போது கைவிடுமாறும் இந்த அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர். போராட்டத்தை கைவிட மறுத்து, இளைஞர் குழுக்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
சனவரி 18 - முதல்வர் பன்னீர்செல்வத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது. இளைஞர் குழு ஒன்றுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் போராட்டத்தைக் கைவிட மறுத்து, இளைஞர் குழுக்கள் மெரினா கடற்கரையில் தமது போராட்டங்களைத் தொடர்ந்தனர். இந்தியப் பிரதமரை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கையை தெரிவிப்பதற்காக முதல்வர் அன்றிரவு புது தில்லி புறப்பட்டார்.[40]
சனவரி 19 - காலையில் புது தில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, பிரதமரின் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: தடை குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், ஒன்றிய அரசால் எதுவும் செய்ய முடியாது; மாநில அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு ஆதரவளிக்கும்[41] தமிழக முதல்வர் சென்னை திரும்பாமல், புது தில்லியில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்தார்.
சனவரி 20 - காலையில் முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்: சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின்படி மத்திய அரசின் மிருக வதை தடைச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. நேற்றிரவே ஜல்லிக்கட்டு தொடர்பாக வரைவு அவசரச் சட்டம் தயார் செய்யப்பட்டது. இந்த வரைவு அவசரச் சட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பி உள்துறை வாயிலாக குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு ஒப்புதல் பெற்ற பிறகு மாநில ஆளுநர் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவசரச் சட்டத்தை பிறப்பிப்பார். சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி தயாரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு வரைவு அவசரச் சட்டம் மத்திய உள்துறைக்கு இன்று காலை அனுப்பப்பட்டுவிட்டது. மத்திய அரசு மாநில அரசின் முடிவுக்கு துணை நிற்கும். எனவே, இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என நான் உறுதியளிக்கிறேன். ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறவிருக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களும், மாணவர்களும், பொதுமக்களும் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.[42]
சனவரி 21 - ஆளுநர் வித்யா சாகர் ராவ் சல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தார். சல்லிக்கட்டினை நடத்துவதற்கான தடை நீங்கியது என்றும், சல்லிக்கட்டினை அலங்காநல்லூரில் சனவரி 22 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தான் தொடங்கி வைக்கவிருப்பதாகவும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.[43] எனினும் நிரந்தரச் சட்டம் ஏற்படுத்தப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அறிவித்தனர்.[44]
சனவரி 22 – சல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு என்றழைக்கப்படும் மனு தாக்கல் செய்யப்பட்டது. யார் வழக்கு தொடர்ந்தாலும், தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்; மேலும், தமிழக அரசு தரப்பின் கருத்தைக் கேட்காமல் சல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது என்பது இந்த மனுவின் மூலமாக வைக்கப்பட்ட கோரிக்கையாகும்.[45]
சனவரி 20 – சல்லிக்கட்டு குறித்தான வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பு வழங்கக்கூடாது என மத்திய அரசின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.[46]
சனவரி 21 - இந்தியப் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது: தமிழ் மக்களின் கலாச்சார இலட்சியங்களை பூர்த்தி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்.[47]
பீட்டா இயக்கத்தின் ஆதரவாளரான ராதா ராஜன் எனும் பெண்மணி பிபிசி தமிழோசைக்கு சனவரி 20 அன்று தந்த செவ்வியில் இவ்விதம் தெரிவித்தார்: இப்ப வந்து … தனித் தமிழ்நாடு வேண்டும் எனக் கேட்டால், கண்டிப்பா ஒரு 25000 பேர் வருவாங்களா? வருவாங்க. Free Sex'ன்னு ஒரு topic வச்சிருந்தோம்னா, அந்த குரூப்புக்கு வருமா ஒரு 50000 பேரு....[48] இந்தக் கருத்துகள் கண்டனங்களுக்கு உள்ளானது.[49]
அவசரச் சட்டத்தின் அடிப்படையில் அரசு முன்னின்று நடத்திய சல்லிக்கட்டுகள்
திருச்சி மாவட்டத்தில், மணப்பாறைக்கு அருகேயுள்ள புதுப்பட்டி சிற்றூரில் 2000 பார்வையாளர்கள் கலந்துகொண்ட சல்லிக்கட்டு நடந்தது.
புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராப்பூசல் சிற்றூரில் சல்லிக்கட்டு நடந்தது. இந்த நிகழ்வின்போது மாடு அடக்கும் வீரர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் மாடுகள் முட்டியதில் உயிரிழந்தனர்.[50]
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இந்தப் போராட்டங்களை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தினைப் பதிந்தார். இதனைத் தமிழில் பதிந்திருந்தார்.[52]
கிரிக்கெட் வீரர்கள் இரவிந்திர ஜடேஜா, தமிழக வீரர் அஸ்வின், முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆகியோர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு அளித்து ஒரு நாள் தன்னுடைய வீட்டில் உண்ணாவிரதம் இருந்தார்.[1]
நடிகர் விஜய் இளைஞர்களுக்கு ஆதரவாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்தார்.[53]