வி. என். ஜானகி
வி.என்.ஜானகி ராமச்சந்திரன் | |
---|---|
4வது தமிழ்நாடு முதலமைச்சர் | |
பதவியில் 7 சனவரி 1988 – 30 சனவரி 1988 | |
முன்னையவர் | இரா. நெடுஞ்செழியன் |
பின்னவர் | மு. கருணாநிதி |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் | |
பதவியில் 02 சனவரி 1988 – 09 பிப்ரவரி 1989 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வைக்கம், கேரளா இந்தியா | 30 நவம்பர் 1923
இறப்பு | 19 மே 1996 சென்னை, தமிழ்நாடு | (அகவை 71)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அஇஅதிமுக |
துணைவர் |
|
பிள்ளைகள் | அப்பு என்கிற சுரேந்திரன் |
பெற்றோர் | ராஜகோபால் ஐயர் நாராயணம்மா |
வேலை | நடிகை, அரசியல்வாதி |
வைக்கம் நாராயணி ஜானகி (நவம்பர் 30, 1923[1] – மே 19, 1996) (V. N. Janaki) அல்லது ஜானகி இராமச்சந்திரன் என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை , முன்னாள் தமிழ்நாடு முதல்வர் பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய ம. கோ. இராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி ஆவார்.
பிறப்பு
[தொகு]வைக்கம் நாராயணி ஜானகி கேரள மாநிலம் திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1924 செப்டம்பர் 23ஆம் நாள் பிறந்தார்.[2] இவருக்கு மணி, நாராயணன் என்னும் இரண்டு தம்பிகள் உள்ளனர்.
கும்பகோணம் வாழ்க்கை
[தொகு]முன்னோர்களின் சூதாட்டம் கேளிக்கைகளால் சொத்தை இழந்து வறுமைக்கு ஆளானது ஜானகியின் குடும்பம். எனவே ஜானகி தனது 12ஆவது வயதில், 1936 ஆம் ஆண்டில், தன் தாயாருடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார்.[2]
அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (Little Flower High School) சேர்ந்து பயின்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் பாபநாசம் சிவனின் தம்பியான இராசகோபால ஐயர் ஆவார். சிறிது காலத்திற்குள்ளவாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த இராசகோபால ஐயருக்கு துணைவி ஆனார். 1936ஆம் ஆண்டில் வெளிவந்த மெட்ராஸ் மெயில் [3] திரைப்படத்தில் பாடல்கள் எழுத இராசகோபால ஐயருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன் குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறினார். அதனால் ஜானகியும் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.[2]
திரை வாழ்க்கை
[தொகு]ஜானகி சென்னைக்கு வந்த பின்னர் திரைப்படங்களில் நடிக்க விரும்பினார். ஆனால் நாராயணி அம்மாளுக்கு அதில் விருப்பம் இல்லை. இருப்பினும் இராசகோபாலய்யரின் ஊக்குவிப்பால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த படங்கள் பின்வருமாறு:
வ.எண் | ஆண்டு | திரைப்படம் | வேடம் | குறிப்பு |
01 | 1937 | இன்பசாகரன் | நடன மாது | படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இப்படத்தின் படிகள் எரிந்து போயின.[2] இதனால் இப்படம் வெளிவரவில்லை. |
02 | 1939 | மன்மத விஜயம் | நடன மாது | |
03 | 1940 | கிருஷ்ணன் தூது | நடன மாது | |
04 | 1941 | கச்ச தேவயானி | நடன மாது | |
05 | மும்மணிகள் | நடன மாது | ||
06 | 1941 | சாவித்திரி | நடன மாது | |
07 | தெலுங்குப்படம் 1 | நடன மாது | ||
08 | தெலுங்குப்படம் 2 | நடன மாது | ||
09 | 1942 | அனந்த சயனம் | சிறு வேடம் | |
10 | 1942 | கங்காவதார் | சிறு வேடம் | |
11 | 1943 | தேவ கன்யா | சிறு வேடம் | |
12 | 1944 | ராஜா பர்த்ருஹரி | சிறு வேடம் | |
13 | 1945 | மான சாம்ரட்சனம் | சிறு வேடம் | |
14 | 1946 | பங்கஜவல்லி | சிறு வேடம் | |
15 | 1946 | சகடயோகம் | கதைத் தலைவி | |
16 | 1947 | சித்ர பகாவலி | சிறு வேடம் | |
17 | 1947 | தியாகி | சிறு வேடம் | |
18 | 1947 | ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி | கதைத் தலைவி | |
19 | 1948 | சந்திர லேகா | ஜிப்ஸி பெண் | |
20 | 1948 | ராஜ முக்தி | கதைத் தலைவி | இரண்டாவது கதைத் தலைவனாக நடித்த ம. கோ. இராமசந்திரனின் அறிமுகம் கிடைத்தது. |
21 | 1948 | மோகினி | ம.கோ.இரா.வுடன் நடித்த இரண்டாவது படம் | |
22 | 1949 | லைலா மஜ்னு | ||
23 | 1949 | வேலைக்காரி | கதைத் தலைவி | |
24 | 1950 | மருதநாட்டு இளவரசி | கதைத் தலைவி | ம. கோ. இரா. கதைத்தலைவன் |
25 | 1951 | தேவகி | ||
26 | 1953 | நாம் | கதைத் தலைவி | ம. கோ. இரா. கதைத்தலைவன் |
நடனப் பள்ளியில்
[தொகு]அனந்த சயனம் திரைப்படத்தை இயக்கிய கே. சுப்பிரமணியம் நடன கலா சேவா என்னும் நாட்டியக் குழுவை அமைத்திருந்தார். ஜானகி இக்குழுவில் 1942-ஆம் ஆண்டில் இணைந்தார். இக்குழுவில் கே. சுப்பிரமணியத்தின் மனைவியும் நடிகையுமான எஸ். டி. சுப்புலட்சுமிக்கு அடுத்த நிலையில் இருந்தார். அவரோடு இணைந்து இந்தியா முழுவதும் பயணம் செய்து இவர்கள் நாட்டிய நாடகங்களை நடத்தினர். வள்ளி திருமணம் நாடகத்தில் ஜான்கி முருகனாகவும் சுப்புலெட்சுமி வள்ளியாகவும் நடித்தனர்.[4]
மணவாழ்க்கை
[தொகு]முதல் திருமணம்
[தொகு]ஜானகி திரையுலகில் நுழைந்த சில காலத்திற்குள் நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதிபட் என்னும் கன்னடமொழிக்காரருக்கு அறிமுகம் ஆனார். அவ்வறிமுகம் காதலாக மாறி, திருமணமாக முடிந்தது இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என்னும் ஆண்குழந்தை பிறந்தது.
இரண்டாவது திருமணம்
[தொகு]ஜானகி இராஜ முக்தி படத்தில் கதைத் தலைவியாக நடித்தபொழுது, இரண்டாவது கதைத் தலைவனாக ம. கே. ரா. என்னும் ம. கோ. இராமசந்திரன் நடித்தார். ம. கோ. இரா.வுக்கு முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலின் ஜானகி இருந்ததால், ம. கோ. இரா.வுக்கு இவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.[5] அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950-ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் ஜானகியும் ம. கோ. இரா.வும் காதலிக்கத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகிக்கு முதற்கணவரான கண்பதிபட்டின் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரை தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம.கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.[6] இத்திருமணத்தை ம. கோ. இரா.வுக்கு அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும் குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உடல்நலமில்லாமல் இருந்ததால் அவரை இவர்கள் இருவரும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டனர். 12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் 1962 சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தை பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து கிளம்பி இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.[4]
குழந்தைகள்
[தொகு]ஜானகிக்கு அப்பு என்கிற சுரேந்திரனைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை. எனவே தன் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா, கீதா, சுதா. ஜானு, தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.[4]
அரசியல் வாழ்க்கை
[தொகு]முதலமைச்சர்
[தொகு]ஜானகி தன் கணவர் ம. கோ. இரா. மும்முரமாக அரசியலில் ஈடுபட்டிருந்த காலங்களில் அதன் நிழல்கூட தன்மீது படாத அளவிற்கு விலகி இருந்தார். ம. கோ. இரா. 1984 ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்ட பின்னர் அவருக்குத் துணையாக அவரோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். ம. கோ. இரா. 1987 திசம்பர் 24 ஆம் நாள் மரணமடைந்த பின்னர் 1988 சனவரி 7 தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராகவும் ஆனார். ஆனால் சட்டமன்றத்தில் தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 சனவரி 30 ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார்.
தேர்தலில் போட்டி
[தொகு]ம. கோ. இரா.வின் மறைவிற்குப் பின்னர் அவரைப் பொதுச்செயலாளராக கொண்டு இயங்கிய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது.ஜானகி செயலலிதா இருவரும் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்டிபட்டித் தொகுதியில் ஜானகி போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அ. இ. அ. தி. மு. க. இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டதால் தமிழகத்தை ஆளும் வாய்ப்பை இழந்தது. எனவே அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெருமுயற்சி செய்து ஜானகி,ஜெயலலிதா தலைமையிலான அணிகளை இணைத்தனர். ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார்.ஜானகி அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகினார்.
மறைவு
[தொகு]ஜானகி அரசியலில் இருந்து விலகி ம.கோ.இரா.வின் இராமாவரம் தோட்டத்தில் தன் மகனோடும் வளர்ப்புப் பிள்ளைகளோடும் வாழ்ந்தார். ம.கோ.இரா உருவாக்கிய காதுகேளாதோர் பள்ளியின் நிர்வாகத்தினைக் கவனித்தபடி, தனது இறுதிக் காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், 1996 ஆம் ஆண்டு, மே மாதம் 19-ஆம் தேதி, தனது 73-வது வயதில் காலமானார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வழக்கறிஞர் சி.பி.சரவணன் (21 செப்டம்பர் 2017). எம்ஜிஆரைச் சூழ்ந்திருந்த பெண் சக்திகள். தினமணி.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.4
- ↑ காண்டீபன்; சினிமா டைரி 1962; சுதர்ஸன் பப்ளிகேஷன்ஸ், மைலாப்பூர், சென்னை; பக்.30
- ↑ 4.0 4.1 4.2 எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.5
- ↑ http://cinema.maalaimalar.com/2009/11/10110341/mgr.html
- ↑ எம்.ஜி.ஆர்.; நான் ஏன் பிறந்தேன்; ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
- ↑ http://www.vikatan.com/news/coverstory/73844-vnjanaki-birthday-anniversary-special-article.html தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் வி.என். ஜானகி...பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!