நடிகர்
நடிகர் அல்லது நடிகை (ஆங்கில மொழி: Actor) என்பது ஒரு கதாபாத்திரத்தை சித்தரிக்கும் நபர் ஆகும். இவர்கள் திரைப்படத்திலோ, தொலைக்காட்சியிலோ, நாடகக்கொட்டகை, வானொலி நாடகத்திலோ பங்கு பெற்று வேடமேற்று நடிப்பார்கள்.[1] சிலநேரங்களில் அவர்கள் பாடவோ அல்லது நடனமாடவோ மட்டுமே பங்காற்றியிருப்பர்.
முன்னதாக பண்டைக் கிரேக்கம் மற்றும் பண்டைய ரோம் காலங்களில் ஆண்கள் மட்டுமே நடிகர்களாக இருந்தனர். பெண்களின் பாத்திரங்கள் பொதுவாக ஆண்கள் அல்லது சிறுவர்களால் நடித்தன.[2] பண்டைய ரோம் காலத்தில் பெண் மேடை கலைஞர்களை அனுமதித்தாலும், அவர்களில் சிறுபான்மையினருக்கு மட்டுமே பேசும் பாகங்கள் வழங்கப்பட்டன.
வரலாறு
[தொகு]மேற்கத்திய வரலாறுகளில் முதன்முதலில் நடிகர் ஒருவர் நடித்ததாகக் கருதப்படுவது கி.மு 534 ஆகும். அன்று கிரேக்க நடிகர் தெஸ்பிஸ், 'தியேட்டர் டியொனிசுஸ்' என்ற நாடகத்தில் வேடமணிந்து முதல் வார்த்தைகளை பேசியபோது நடிப்பின் துவக்கம் நிகழ்ந்ததாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். அது வரை கதை சொல்லிவந்த பழக்கத்திலிருந்து இது முக்கிய மாற்றமாக அமைந்தது. முதல் நடிகர் பெயர் தெஸ்பிஸ் என்பதாலேயே இன்றும் நடிகர்களை ஆங்கிலத்தில் தெஸ்பியன்ஸ் எனக் குறிப்பிடுகின்றனர்.
தமிழ் சூழ்நிலை
[தொகு]சங்க கால முத்தமிழில் நாடகம் ஒன்றாக அமைந்துள்ளதால் பழங்காலத்திலிருந்தே இத்துறை தமிழகத்தில் நிலை பெற்றிருந்ததை உணரலாம். கூத்து என்ற நாடகமும் நடனமும் இசையும் கலந்த வடிவத்தில் நடிகர்கள் கூத்து கட்டுபவர்கள் என அறியப் பட்டனர். இருபதாம் நூற்றாண்டில் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்றவர்கள் நாடகக்கலைக்கு புத்துயிர் ஊட்டியபோது முதன்மை நடிகர்கள் 'இராஜபார்ட்' என்றும், பெண் வேடமிட்ட ஆண் நடிகர்கள் 'ஸ்த்ரீ பார்ட்' எனவும் எதிர்மறை நாயகர்கள் 'கள்ளபார்ட்' எனவும் அழைக்கப்பட்டனர்.
பெண்ணிய நிலை
[தொகு]ஆங்கிலத்தில் நடிகைகளுக்கு 'Actress' என்று அழைக்கப்பட்டு வந்தது. இதனை பெண்ணியவாதிகள் எதிர்த்ததினால் இருபாலரையும் 'Actor' என்றே குறிப்பிடுதல் நவீன மரபாயுள்ளது. பல சமூகங்களில் பெண்கள் நடிப்பது இழிவாகக் கருதப்படுகிறது. இதனாலேயே பெண்கள் வேடங்களையும் ஆண்கள் ஏற்று நடிப்பது வழக்கமாக இருந்தது. ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் குழுவிலேயே பெண் வேடங்களை ஆண்கள் ஏற்று நடித்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Definition of actor". Archived from the original on 2016-08-26. பார்க்கப்பட்ட நாள் 2020-10-19.Hypokrites (related to our word for hypocrite) also means, less often, "to answer" the Tragedy|tragic Greek chorus|chorus. See Weimann (1978, 2); see also Csapo and Slater, who offer translations of classical source material using the term hypocrisis (acting) (1994, 257, 265–267).
- ↑ Neziroski, Lirim (2003). "narrative, lyric, drama". Theories of Media :: Keywords Glossary :: multimedia. University of Chicago. பார்க்கப்பட்ட நாள் 2009-03-14.
For example, until the late 1600s, audiences were opposed to seeing women on stage, because of the belief stage performance reduced them to the status of showgirls and prostitutes. Even Shakespeare's plays were performed by boys dressed in drag.