உள்ளடக்கத்துக்குச் செல்

ம. கோ. இராமச்சந்திரனின் திரைப்பட வாழ்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாடக நடிகராக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கிய எம். ஜி. ஆர், பின் திரைப்படத் துறையில் கதாநாயகனாக நடித்து மக்கள் இதயங்களில் நீங்காத இடம் பிடித்தார். இவருடைய திரைப்படங்களின் வாயிலாக மக்களிடம் கொண்டிருந்த செல்வாக்கினால் அரசியலிலும் முக்கிய இடம் பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

நாடக வாழ்க்கை

[தொகு]

எம்.ஜி.ஆர் தனது ஏழாவது வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்கிற நாடக குழுவில் இணைந்தார். அவருடன் அண்ணன் சக்ரபாணியையும் நாடக குழுவில் இணைந்தார்.[1] மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, கிருஷ்ணன் நினைவு நாடக சபா, உறையூர் முகைதீன் நாடக கம்பெனி, எம்.ஜி.ஆர். நாடக மன்றம் போன்றவற்றில் ஏற்பாடு செய்யப்படும் நாடங்களில் நடித்தார். குறிப்பாக கதர்பக்தி, கதரின் வெற்றி, பதிபக்தி, தேசபக்தி போன்ற நாடகங்களிலும் பல வேடங்களை ஏற்றார். அதுமட்டுமன்றி அகத்தியர், மகாபாரதம், விகர்ணன், சத்ருகணன், அபிமன்யு, சத்ருகணன் போன்றவற்றையும் தவறவிடவில்லை.

திரை வாழ்க்கை

[தொகு]

எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை மட்டும் 86 படங்களாகும். ப. நீலகண்டன் அவர்கள் எம்.ஜி.ஆரின் 17 படங்களை இயக்கியுள்ளார். ஜெ. ஜெயலலிதா 28 படங்களில் நாயகியாகவும், சரோஜா தேவி 26 படங்களில் நாயகியாகவும் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளனர். நடிகை லதா 13 படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளார்.

முதல் படம்

[தொகு]

1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் எல்லிஸ் டங்கன் என்ற இயக்குனரால் எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்யப்பட்டார். இது எஸ்.எஸ்.வாசன் எழுதிய கதை ஆகும்.[2] ஆனாலும் 1947 ல் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை எம்.ஜி.ஆர்க்கு அதிகம் புகழ் கிடைக்கவில்லை.

கதாநாயகனாக முதல் படம்

[தொகு]

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் "ராஜகுமாரி". முதல் திரைப்படமான சதிலீலாவதி வந்து ஏறத்தாழ பதினொரு ஆண்டுகள் பின்பே கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் இருந்தார். முதலில் இப்படத்தில் பு. உ. சின்னப்பா அவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடானது. ஆனால் இயக்குனர் எம்.ஜி.ஆர் நடித்த முருகன் படத்தினைப் பார்த்து எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு தர எண்ணினார். அத்துடன் கருணாநிதியின் வசனமும் இப்படத்தில் இடம்பிடித்தது. இந்தப்படம் 1947 ஏப்ரல் மாதம் வெளிவந்தது. இப்படத்தில் கதாநாயகன் "எம்.ஜி.ராமசந்தர்" என்று டைட்டில் போட்டு வெளிவந்தது.

சுடப்பட்ட நிகழ்வும் திரைவாழ்க்கையும்

[தொகு]

தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. அவருடைய புதிய பாணி பேச்சினை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர். இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது.

முதல் முழு நீள வண்ணப்படம்

[தொகு]

1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமாக "மாடர்ன்" தியேட்டர்சாரின் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது.

தேசிய விருது

[தொகு]

தமிழக நடிகர்களிலேயே முதன் முதலாக நடிப்புக்கான தேசிய விருதினை ("பாரத்") பெற்றவர் எம்.ஜி.ஆர். 1971-ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிசு தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 திரையரங்குகளில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்த படம்.

இறுதி படம்

[தொகு]

முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !.[3]

நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார். சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹுக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.

1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், அண்ணா நீ என் தெய்வம். இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்துத் தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து பாக்கியராஜ் உருவாக்கிய அவசர போலிஸ் 100 வெற்றிப்படமாக விழைந்தது.

நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆர்

[தொகு]
  • 29-8-1952-ல் தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம் துவங்கியது. அப்போது எம்.ஜி.ஆர். உப தலைவர்.
  • 14-9-1952-ல் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர் மாறியது. அதற்கு எம்.ஜி.ஆர். முதல் நன்கொடையாக ரூ.501 அளித்தார். இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கமென பெயர் மாறியதற்கு எம்.ஜி.ஆரின் ஆலோசனையே காரணம்.
  • 1953-ல் உப தலைவர் பொறுப்பினை வகித்தார் எம்.ஜி.ஆர்
  • 1954-ல் பொதுச் செயலாளராக மாறினார்
  • 1955-ல் செயலாளர் பதவி கிடைத்தது.
  • மீண்டும் 1957-ல் பொதுச் செயலாளர் ஆனார்.
  • அடுத்து 1958 மற்றும் 1961-ல் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

திரையுலக புரட்சி

[தொகு]
  • விஞ்ஞான ரீதியில் முயன்று பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் "கலை அரசி".
  • தமிழ் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் 100 நாள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்" - திருவண்ணாமலை, "எங்க வீட்டுப் பிள்ளை".
  • மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிச்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி, சத்யா மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் வண்ண தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களே! (தேவர் படம் உட்பட)
  • அலிபாபாவும் நாற்பது திருடர்களும் தமிழின் முதல் வண்ண படமாகும்.
  • 'மர்மயோகி' தமிழ் திரைப்படத்தின் திகில் காட்சிகளுக்காக வயது வந்தவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் பெற்ற முதல் படம்
  • 16 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தமையால் தமிழில் அதிக எண்ணிக்கையில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.[4]

எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஆசிரியர்கள்

[தொகு]

எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் ! [3]

  1. தஞ்சை ராமையாதாசு
  2. மாயவநாதன்
  3. பாபநாசம் சிவன்
  4. கா.மு.ஷெரீப்
  5. மு.கருணாநிதி
  6. கு.சா.கிருஷ்ணமூர்த்தி
  7. ஆத்மநாதன்
  8. கே.டிசந்தானம்
  9. ராண்டார் கை
  10. உடுமலை நாராயணகவி
  11. சுரதா
  12. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  13. லட்சுமணதாஸ்
  14. கு.மா.பாலசுப்பரமணியன்
  15. அ. மருதகாசி
  16. முத்துகூத்தன்
  17. கண்ணதாசன்
  18. வாலி
  19. ஆலங்குடி சோமு
  20. அவினாசி மணி
  21. புலமைபித்தன்
  22. வித்தன்
  23. நா. காமராசன்
  24. முத்துலிங்கம்
  25. பஞ்சு அருணாசலம்

இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்

[தொகு]

எம்.ஜி.ஆர் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் பதினேழு படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

தயாரிப்பு மற்றும் இயக்கம்

[தொகு]

எம். ஜி. ஆர் பிக்சர்ஸ் என்ற தனது திரைப்பட நிறுவனத்தின் மூலம் நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார் எம்.ஜி.ஆர். மேலும் நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார். மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், அண்ணா நீ என் தெய்வம். இக்காட்சிகளை பாக்கியராஜ் தன்னுடைய அவசர போலிஸ் 100 என்ற படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.[5]

எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள்

[தொகு]
திரைத் துறையில் எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள்
பாரத் இந்திய அரசு 1971
பாரத் ரத்னா இந்திய அரசு 1971
பாரத் இந்திய அரசு 1988
கெளரவ டாக்டர் பட்டம் சென்னை பல்கலைக்கழகம் 1983
கௌரவ டாக்டர் பட்டம் அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா 1974
அண்ணா விருது தமிழக அரசு 1971
சிறந்த நடிகர் இலங்கை அரசு 1968
மலைக்கள்ளன் :சிறந்த நடிகர் முதல் பரிசு- இந்திய அரசு 1954
எங்க வீட்டுப் பிள்ளை :சிறந்த நடிகர் பிலிம் ஃபேர் விருது 1965
காவல்காரன் :சிறந்த படம், முதல் பரிசு,தமிழக அரசு 1967
குடியிருந்த கோயில் :சிறந்த படம், முதல் பரிசு,தமிழக அரசு 1968
அடிமைப்பெண் :சிறந்த படம், முதல் பரிசு,தமிழக அரசு 1969

ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல்பரிசு - சிங்கப்பூர்ரசிகர்கள் 1971 ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல் பரிசு - இந்திய அரசு 1971 அடிமைப்பெண் சிறந்த படம், முதல்பரிசு,பிலிம்ஃபேர்விருது. 1969 உலகம் சுற்றும் வாலிபன் சிறந்த படம், பிலிம் ஃபேர் விருது 1973

எம்.ஜி.ஆர். நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. எம்.ஜி.ஆர். வாழ்க்கைப்பாதை: நாடக வாழ்க்கை
  2. எஸ்.எஸ்.வாசன் எழுதிய நாவல் "சதிலீலாவதி" திரைப்படம் ஆகியது [தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 "எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்". Archived from the original on 2010-09-21. பார்க்கப்பட்ட நாள் 2011-01-27.
  4. எம்.ஜி.ஆர் படங்களுக்கு உள்ள சிறப்புகள
  5. பாக்யராஜ்

வெளி இணைப்புகள்

[தொகு]

http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_72.asp பரணிடப்பட்டது 2010-10-22 at the வந்தவழி இயந்திரம்