விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஆய்வாளர்கள்
தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் சிறப்பாகப் பங்களித்து வரும் ஆய்வாளர்கள் சிலரைப் பற்றிய அறிமுகம்.
செல்வராசு
[தொகு]இரா. செல்வராசு, ஈரோட்டைச் சேர்ந்த வேதிப்பொறிஞர். அழகப்பர் நுட்பியல் கல்லூரியிலும் அமெரிக்காவில் உள்ள லூயிவில் பல்கலைக்கழகத்திலும் வேதிப்பொறியியல் துறையில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது, அமெரிக்காவில் உள்ள ஒரு பன்னாட்டுப் பாறைநெய் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். சூன் 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம், உரை திருத்தம் முதலிய பங்களிப்புகளை நல்கி வருகிறார். அறிவியல், பொறியியல் மற்றும் கணிதம் பற்றிய கட்டுரைகளிலும், குறிப்பாக வேதிப்பொறியியல், ஆற்றல் தொடர்பான கட்டுரைகளிலும் ஆர்வம் கொண்டவர். இவர் தொடங்கிய குறிப்பிடத்தக்க கட்டுரைகளில் சில: பாறைநெய் தூய்விப்பாலை, இயற்கை எரிவளி, களிப்பாறை வளிமம், பிசுக்குமை, ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி, நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பு.
கார்த்திக்
[தொகு]கார்த்திக், தமிழகத்தில் உள்ள இராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்தவர். பெங்களுரின் இந்திய அறிவியல் கழகம் மற்றும் மைசூர் பல்கலைகழகத்தில், முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, தற்போது ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில இருகலப்பாசிகளைப் பற்றிய ஆய்வுகளைச் செய்து வருகிறார். பறவைகள், உயிரியல் தொடர்பாக ஆர்வமுள்ள இவர், மே 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். ஆகாயத்தாமரை, கடமா, பறவைகளின் தமிழ்ப் பெயர்கள், கழுதைப்புலி, புல்வாய், வரையாடு, கேழல்மூக்கன், சலீம் அலி ஆகியன இவர் முதன்மைப் பங்களித்த கட்டுரைகளில் சில.
நந்தகுமார்
[தொகு]நந்தகுமார் தமிழ்நாட்டின் ஆம்பூரைச் சேர்ந்தவர். தற்பொழுது பேராசிரியராக சதர்ன் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (குவாங்சௌ, சீனா) பணியாற்றி வருகிறார். கரோலின்ஸ்கா மையம், சுவீடனில் இணை பேராசிரியராகவும் உள்ளார். முன்பு லுண்ட் பல்கலைக்கழகம், உயிரணு மற்றும் மூலக்கூற்று உயிரியல் மையம் ஆகியவற்றில் ஆராய்ச்சியாளராக இருந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் லுண்ட் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றவர். தமிழ் விக்கிப்பீடியாவில் 2011 ஜனவரி முதல் பங்களித்து வருகிறார்; ஏறத்தாழ 200 உயிரிவேதியியல் மற்றும் மருத்துவத் துறைசார் கட்டுரைகள் எழுதியுள்ளார். அஃப்ளாடாக்சின், அகநச்சு, அமினோ அமிலம் (புரதமாக்குபவை), கரோலின்ஸ்கா மையம், கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா, கிளைசின், சிட்ரிக் அமில சுழற்சி, நோய் மாதிரி, யூரியா சுழற்சி ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில. தமிழ் விக்சனரியிலும் உயிர்வேதியியல் கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்து வருகிறார்.
மகிழ்நன்
[தொகு]மகிழ்நன் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகிலுள்ள மேலக்கால் எனும் ஊரில் பிறந்து வளர்ந்த இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உயிர்தொழில் நுட்பவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்காவில் விசுகோன்சின் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் வெண்டை மஞ்சள் நரம்பு தீ நுண்மத்தில் ஆய்வுப் பட்டமும், இசுரேல், பெட்-தேகன், வல்கானி மையத்தில் தக்காளி இலை சுருட்டு தீ நுண்மத்தில் ஆய்வும், இசுரேல், ரேகொவாட், வைசுமன் மையத்தில் மூளை புற்றுநோய் குருத்தணுக்கள் குறித்த ஆய்வும் செய்துள்ளார். தற்பொழுது மூளையில் காயங்களினால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் மூலக்கூற்று உயிரியல், மரபியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல ஆழ்ந்த கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். கணிமி, டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி, பக்டிரியல் படிவாக்கம், செமினிவிரிடீ, வெசுட்டர்ன் படிவு ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.
தானியல் பாண்டியன்
[தொகு]தானியல் பாண்டியன் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பங்களாச்சுரண்டையைச் சேர்ந்தவர். தற்போது, சிகாகோ நகரில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்கி முழுமையாக்குவதில் ஆர்வம் உடையவர். நீர் மின் ஆற்றல், மனித மூளை, கொல்கத்தா, சூரியன், சிகாகோ, இந்தியத் தரைப்படை, நீர்மூழ்கிக் கப்பல் முதலிய இவர் உருவாக்கிய கட்டுரைகளில் சில.
கலை
[தொகு]கலையரசி, நோர்வேயில் வாழும் ஈழத் தமிழர். பேர்கன் மருத்துவமனையில் நோயியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுகிறார். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை, கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு, தமிழ் விக்கி ஊடகப் போட்டி முதலிய திட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார். மூச்சுத்தடை நோய், காச நோய், தொற்றுநோய், நோய்க்காரணி, கருச்சிதைவு, மலட்டுத்தன்மை சிகிச்சை, வெளிச் சோதனை முறை கருக்கட்டல், தாய்ப்பாலூட்டல், ஏபிஓ குருதி குழு முறைமை, பூச்சி, வாழ்க்கை வட்டம், பல்லுருத்தோற்றம், ஒன்றிய வாழ்வு, வித்து, வளர்ப்பூடகம், இழையம், வடமுனை ஒளி முதலிய தலைப்புகளில் எழுதியுள்ளார்.
செல்வா
[தொகு]செல்வா என்று அழைக்கப்படும் செ. இரா. செல்வக்குமார், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பின்னர் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின்னியல் மற்றும் கணினியியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருடைய ஆய்வுத்துறை குறைக்கடத்திக் கருவிகள் நுட்பம் பற்றியது. மே 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களித்து வருகின்றார். விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம் (இதுவரை ஏறத்தாழ 800 கட்டுரைகள்), உரைதிருத்தம், படங்கள் உருவாக்குதல், இணைத்தல், தமிழ்விக்கி கொள்கை, நடை பற்றிய உரையாடல்களில் பங்களித்தல் முதலான பணிகளில் ஈடுபட்டுவருகின்றார். கலைச்சொற்கள் ஆக்கித் தருவதிலும், விக்கிப்பீடியர்களுக்கு ஊக்கம் தந்து உதவுவதிலும் ஆர்வம் காட்டுகின்றார். கனடாவில் விக்கிப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல், பொதுவாக இணைய உலகில் விக்கிப்பீடியாவின் திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்தல் முதலான பணிகளிலும் ஈடுபடுகின்றார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்த தமிழ் இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக தமிழ்நாடு அரசு நடத்திய விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டியை உருவாக்குவதற்கும், நடுவர்கள் தேர்வுக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.